Friday, 15 March 2019

கம்போடியா இரண்டாம் நாள் தொடர்ச்சி!

இன்றுடன் வலைத்தளம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் முடிகிறது. 374 பதிவுகள் தான் எழுத முடிந்திருக்கிறது. ஆனாலும் நிறைய வேலைகள், அலைச்சல்கள், தொடர் பிரயாணங்கள், உடல்நலக்குறைவுகள் இடையே இந்த அளவு பதிவுகள் எழுத முடிந்ததே ஆச்சரியமாகத்தானிருக்கிறது. இனி வரும் தினங்களில் இன்னும் அதிகமாக பதிவுகள் எழுத வேண்டுமென்று நினைத்துக்கொண்டே இந்தப்பதிவை ஆரம்பிக்கிறேன். என்னுடன் கூடவே பயணித்து இத்தனை வருடங்கள் அருமையான பின்னூட்டங்கள் தந்து என்னை ஊக்குவித்த, உற்சாகப்படுத்திய அன்பு உள்ளங்களுக்கு என் இதயங்கைந்த நன்றி!!
கம்போடியா இரண்டாம் நாள் தொடர்ச்சி!

அங்கோர் வாட் சுற்றி முடிந்ததும் பயோன் கோவிலுக்குப்புறப்பட்டோம்.

 கிபி 1181இலிருந்து 1220 வரை வாழ்ந்த ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது பயோன். இது அங்கோர் தோமில் உள்ளது. அங்கோர் தோம் (பெரும் நகரம்), இப்போது கோயில்களை மட்டும் கொண்டிருக்கிறது. சுற்றிலும் காடுகள் நிரம்பியுள்ளன. இதன் தெற்கு வாயில் அழகானது. அகழியால் சூழப்பெற்றது. பாலத்தின் இரு பக்கங்களிலும் ஏழுதலை நாகத்தை வைத்து அசுரர்கள் கடைவதைப் பார்க்கலாம். திருபாற்கடலைக் கடையும் சிற்பங்களை அங்கோரில் பல இடங்களிலும் காண முடிகிறது.



இந்த தெற்கு வாயிலில் இறங்கி புகைப்படம் எடுக்க முடியவில்லை. அனுமதியில்லை என்று வழிகாட்டி சொன்னார். காரிலிருந்த படியே தான் புகைப்படம் எடுத்தோம். பார்த்த சில வினாடிகளில் முகங்கள் கோபுரத்தின் நான்கு பக்கங்களிலும் அமைதியாய் மோன் தவம் செய்கிற காட்சி பிர்மிக்க வித்தது. 





அதன் வழியே உள்ளே நெடுந்தூரம் சென்றால் பயோன் கோவில் காட்சி தருகிறது. அடர்ந்த காட்டுக்குள்ளே இருக்கிறது. கோவில் முழுவதும் வெளி நாட்டினர் உலவிக்கொண்டிருந்தார்கள். 






அங்கோர் தோமில் சிகரம் வைத்தாற்போல் காணப்படுவது பயோன் கோயில். ஏழாம் ஜெயவர்மனால் தொடங்கப்பட்டு எட்டாம் ஜெயவர்மனால் முடிக்கப்பட்டது. ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தவர் என்பதால் லோகேஸ்வரரின் உருவங்கள் கோபுரங்களில் இருப்பதாக ஒரு சாரார் எண்ணுகின்றனர். ஆனால் அவை ஏழாம் ஜெயவர்மனின் உருவங்களாகக்கூட இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. 






அங்கோர் வாட்டைப் போன்று இதுவும் மூன்று அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆனால் அதற்குள் வட்ட வடிவத்தில் கோவிலின் உட்புறம் படிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கையும் அடையப் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மொத்தம் முப்பத்தியேழு கோபுரங்கள். 



பெரும்பாலான கோபுரங்களின் நான்கு பக்கங்களிலும் முகங்கள். அவற்றின் அழகைச் சொல்ல வார்த்தைகளில்லை. அவற்றைத் தவிரவும் பல்வேறு மூலைகளிலும்  முகங்கள் ஏராளமாகச் செதுக்கப்பட்டுள்ளன.  அதன் உட்புற வாயில்கள் வழியே நுழைந்துவருவது ஒரு விசித்திரமான அனுபவம். 




படை வீரர்கள் ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டும் யானைகள் மீதேறியும் போர்க்களம் நோக்கிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் காணப்படுகின்றன.




இச்சிற்பங்களில் இராமன் மாயமானை விரட்டிக் கொண்டு போதல். வாலி சுக்ரீவன் போர், சீதை தீயினை வளர்த்து அதனுள் இறங்குதல் முதலிய இராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுளளன.  


பயோன் சிலைகள் முற்றாக கட்டி முடிக்கப்படாத சிலைகள் என்று ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள்.



அழகிற்சிற‌ந்த இந்தக்கோவிலை விட்டு வெளியே வ‌ந்தோம்.

 

19 comments:

  1. பதிவுலகில் ஒன்பது ஆண்டுகள் நிறைவுக்கு வாழ்த்துகள். மென்மேலும் உடல்நலத்துடன், மென்மேலும் பதிவுகள் தர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. கோபுரத்திலேயே முகங்கள்... பிரமிப்பு. (புடைப்புச்) சிற்பங்கள் என்ன காட்சியைத் தருகின்றன என்று கண்டுகொள்வது சிரமமாயிருக்கிறது. வாழ்வில் ஒருமுறையாவது செல்லவேண்டிய இடம்.

    ReplyDelete
  3. //இன்றுடன் வலைத்தளம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் முடிகிறது. 374 பதிவுகள் தான் எழுத முடிந்திருக்கிறது..

    பத்தாம் ஆண்டு அருமையான ஆண்டாக அமையட்டும்.
    உங்கள் எண்ணம் போல் நிறைய எழுத வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
    தொடர் பதிவை படிக்க வேண்டும், படிக்கிறேன்.
    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  4. சிற்பங்கள் அசர வைக்கிறது...

    இந்த ஆண்டு மேலும் சிறப்புடன் பகிர்ந்து கொள்ள வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
  5. படங்களும் பகிர்வும் அருமை

    ReplyDelete
  6. வலையுலகில் ஒன்பது ஆண்டுகள் நிறைவு பெற்றமைக்கு வாழ்த்துகள் சகோதரியாரே
    எழுத்துப் பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  7. கோபுரங்களில் முகங்கள், சிற்பங்கள் என அனைத்தும் அசத்தலாக இருக்கிறது. இந்தக் கோவில்களை அமைத்தவர்கள் எத்தனை உழைத்திருப்பார்கள் என நினைக்கும்போதே பிரமிப்பு.

    உங்கள் பதிவு மூலம் நாங்களும் அங்கே சென்று வர முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  8. மேலும் பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் அக்கா.
    கோவில் தகவல்கள் படங்கள் எல்லாமே அருமை. செல்லவேண்டும் எனும் ஆவலை தூண்டுகிறது.

    ReplyDelete
  9. ஒன்பது ஆண்டுகள் என்பது மாபெரும் சாதனை
    வாழ்த்துகள்
    படங்கள்
    பயணம்
    அற்புதம்

    ReplyDelete
  10. ஒளிப்படக் கலைஞர்கள் மிகவும் விரும்பும் இடம். அற்புதமான சிற்பங்கலை. படங்களுக்கும் விரிவான பகிர்வுக்கும் நன்றி.

    முத்துச்சிதறல் வலைப்பூவின் ஒன்பதாம் ஆண்டு நிறைவுக்கு நல்வாழ்த்துகள். பயனுள்ள பல பதிவுகளைத் தரும் பயணம் இனியும் தொடரட்டும் சிறப்பாக!

    ReplyDelete
  11. இனிய வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோத்ரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  12. இனிய பாராட்டிற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி கோமதி அர்சு!

    ReplyDelete
  13. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி தனபால‌ன்!

    ReplyDelete
  14. இனிய பாராட்டிற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் கரந்தை ஜெயக்குமார்!

    ReplyDelete
  15. அழகிய, இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  16. அன்பு வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி பிரியசகி!

    ReplyDelete
  17. இனிய பாராட்டிற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி கஸ்தூரி ரங்கன்!!

    ReplyDelete
  18. அன்பான நல்வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி!!

    ReplyDelete
  19. ஒன்பது ஆண்டுகள் நிறைவுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். ...

    உங்களின் அழகிய பதிவுகள் இன்னும் மென்மேலும் தொடரட்டும் ..


    முக அமைப்பில் கோபுரங்கள் முதல் முறை காணுகிறேன் ...மிக அழகு ...

    37 கோபுரங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன ...

    ReplyDelete