Tuesday, 2 October 2018

முத்துக்குவியல்-52!!!

தன்னம்பிக்கை முத்து:

மாளவிகா ஐயர்! இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில் வாழ்ந்திருந்த இவரின் பள்ளிப்பருவம் ஒன்பதாம் வகுப்பு வரை இனிமையாக கழிந்திருக்கிறது.



அன்று தான் அந்த பதிமூன்று வயது சிறுமியின் வாழ்வில் விதி விளையாடியது. அன்று அவள் அணிந்திருந்த ஜீன்ஸில் சின்னதாக ஒரு கிழிசல் இருந்தது. ஃபெவிகால் வைத்து அந்தக் கிழிசலை ஒட்டிய மாளவிகாவுக்கு ஒரு கனமான இரும்பால் அதைத் தட்டி சமன்படுத்தினால் ஒட்டியது தெரியாது என்று தோன்றியது. கனமாக ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டே சென்ற போது தெருவில் ஒரு இரும்புக் குண்டு போல ஏதோ தெரிந்திருக்கிறது. அந்தக் குண்டு வெடிகுண்டு என்று மாளவிகாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பகுதியில் இயங்கி வந்த வெடிகுண்டுக் கிடங்கு ஒன்று சில காலத்திற்கு முன் தீக்கிரையாகி அதன் பொருள்கள் அந்தப் பகுதியெங்கும் சிதறிக் கிடந்தன. அவை செயலிழந்தவை என்று கருதியதால் அப்பகுதி மக்கள் அவற்றிற்குப் பெரிய முக்கியத்துவம் தரவில்லை.
மாளவிகா எடுத்த வெடிகுண்டு செயலிழக்காத வெடிகுண்டு. அவள் அதை எடுத்து ஒட்டிய ஜீன்ஸில் பலமாகத் தட்டிய போது அது வெடித்தது. அந்த இடத்திலேயே மாளவிகா தன் இரண்டு கைகளையும் இழந்தாள். அவளுடைய கால்கள் இரண்டும் பலத்த சேதத்திற்கு உள்ளாயின. வெளியே ஓடி வந்த அவளுடைய தாய் “என் குழந்தையின் கைகள் எங்கே?” என்று கதறியது தான் அவள் மயக்கம் அடைவதற்கு முன் கேட்ட கடைசி வார்த்தைகள்.
அதிகமாய் ரத்தம் வெளியேறி இருந்த, கைகள் இல்லாத, கால்கள் உடலில் இருந்து அறுபடும் நிலையில் உள்ள அந்தச் சிறுமி பிழைப்பாளா என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு இருந்தது. பிழைத்தாலும் ஒரு காய்கறியைப் போல தான் அசைவற்று முடங்கி இருக்க வேண்டி இருக்கும் என்று பார்த்தவர்கள் நினைத்தார்கள்.
அடுத்ததாக செயற்கை உயிர் மின்சாரக் கைகள் (Bio-Electric Hands) அவளுக்கு சென்னையில் பொருத்தப்பட்டன. அவற்றையும் பயிற்சிகள் மூலமாகவே அவளால் பயன்படுத்த முடியும் என்கிற நிலை. அதையும் சலிக்காமல் செய்த மாளவிகா அந்தக் கைகளைக் கொண்டு மெல்ல எழுதவும் கற்றுக் கொண்டாள். ஆரம்பத்தில் மிகப் பெரியதாகத் தான் அவளால் எழுத்துக்களை எழுத முடிந்தது.



இதற்குள் இரண்டாண்டு காலம் ஓடி விட்டது. மகள் தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறாளே என்று பெற்றோர் ஆறுதல் அடைந்தனர். ஆனால் மாளவிகா அதில் திருப்தி அடையவில்லை. அவளுக்கு அவளுடைய பள்ளித் தோழி ஒருத்தியின் தொடர்பு போன் மூலம் இருந்து கொண்டே இருந்தது. பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால் அதற்கு மும்முரமாகப் படித்துக் கொண்டிருப்பதாக அந்தத் தோழி தெரிவித்தாள்.
மாளவிகாவுக்கு தானும் அந்தப் பொதுத் தேர்வை எழுத வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. அதை அவள் தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருந்த மகள், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புப் பாடங்களை இது வரை தவற விட்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு மூன்று மாதங்களில் தயாராக முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தாலும் மகளின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போட அவர்கள் விரும்பவில்லை.
இது போல் உடல் ஊனமுற்றவர்கள் சொல்லச் சொல்ல எழுத அரசு ஆட்களை நியமித்து தேர்வு எழுத அனுமதிப்பதால் அவளை அவளால் முடிந்த வரை படிக்க மட்டும் சொன்னார்கள். மூன்று மாதங்கள் தனியார் பயிற்சி நிறுவனத்தில் மாளவிகா படித்தாள். வீடு வந்த பிறகும் மாலையும் இரவும் விடாப்பிடியாகப் படித்தாள்.
மாளவிகா தேர்வு எழுதினாள். எட்டாம் வகுப்பு வரை சாதாரண மாணவியாக இருந்த மாளவிகா இத்தனை குறைபாடுகளுக்கு மத்தியில் தேர்வெழுதி மாநில அளவில் ரேங்க் வாங்கியது தான் தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி. கணிதம் மற்றும் அறிவியலில் சதமடித்த அவள் ஹிந்தித் தேர்வில் 97% எடுத்து மாநிலத்தில் ஹிந்தியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள். பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சியாளர்கள் எல்லாம் அவள் வீட்டுக்கு ஓடி வந்த போது மாளவிகா பெருமகிழ்ச்சி அடைந்தாள் என்றாலும் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எல்லாம் முடிந்தது என்று ஊர் நினைத்த வேளையில் தங்கள் மகள் சாதித்துக் காட்டியதில் அவர்கள் மனம் நிறைந்து போனது. அதன் பின் மாளவிகா ஒன்றன் பின் ஒன்றாகப் பல சாதனைகள் புரிந்தாள்.
அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது மாளவிகாவை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வரவழைத்து பாராட்டி இருக்கிறார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற மாளவிகா யார் உதவியும் இல்லாமல் தானே பயணங்கள் செய்கிறார். இன்று உலகநாடுகள் பலவற்றிற்குச் சென்று பேசும் அளவு உயர்ந்திருக்கிறார். பல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் நடனம் கூட ஆடி பார்வையாளர்களை பிரமிக்கவும் வைத்திருக்கிறார். அழகாக உடைகள் உடுத்துவதில் ஆர்வம் உள்ள அவர் உடல் ஊனமுற்றவர்களுக்கான ஆடைகள் விளம்பரத்திலும் இன்று மிளிர்கிறார்.
இன்று உடல் ஊனமுற்ற குழந்தைகள் பலருக்கும் ஒரு மகத்தான வழிகாட்டியாக நாட்டில் வலம் வரும் அவர் அது போன்ற எத்தனையோ குழந்தைகளிடம் தானும் நிறைய கற்க இருப்பதாக உணர்ந்து கற்று வருவதாகவும் பணிவாகச் சொல்கிறார்.

அசத்தும் முத்து:

புற்று நோய் மற்றும் கொடிய நோய்களால் தாக்கப்பட்டு, அதற்கான மருத்துவ செலவுகளை செய்ய இயலாது தவிக்கும் நோயாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது மிலாப் என்னும் கூட்டு நிதி திரட்டும் தளம். [https://milaap.org/ ] பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கு உதவும் ஆன் லைன் திட்டம் இது. நோயாளிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நன்கொடைக்கான இன்ஷூரன்ஸ் உருவாக்குவது, ஆன்லைனில் க்ரவுட் ஃஃபண்டிங் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, டிஜிட்டல் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு அவர்கள் சார்பாக நிதி திரட்ட ஆட்களை நியமித்தல் போன்ற முயற்சிகளையும் மிலாப் மேற்கொள்ளுகிறது.
இதுவரை மிலாப் தளத்தில் மட்டுமே மருத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்காக 150 கோடி திரட்டப்பட்டுள்ளது.

தகவல் முத்து:

வெளியூர் சென்றிருக்கும் உங்கள் உறவினர் தன் பர்ஸ் ஏ.டி.எம் கார்டு உள்பட அல்லது கைப்பையைத் தொலைத்து விட்டால் சாப்பிடவோ, தங்கவோ, பயணிக்கவோ வழியில்லாத நிலையில் அவர் எப்படியாவது அருகிலுள்ள ஒரு பெரிய போஸ்ட் ஆபீஸ் சென்று உங்களுக்கு ஃபோன் செய்தால் போதும், நீங்கள் அவருக்கு உதவி செய்ய முடியும்.

நீங்களும் உங்கள் பகுதியிலுள்ள பெரிய போஸ்ட் ஆபீஸிற்கு செல்ல வேண்டும். அங்குள்ள இ.எம்.ஒ என்ற ஃபாரத்தை வாங்கி எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதை எழுதி பூர்த்தி செய்து, அந்த பணத்தை அங்கே செலுத்தினால் உங்களிடன் சீல் செய்யப்பட்ட ஒரு கவரை தருவார்கள். அதில் ஒரு டிஜிட்டல் எண் இருக்கும். அதை வெளியூரில் தவித்துக்கொண்டிருக்கும் உங்கள் உறவினருக்கு மெஸேஜ் செய்தால் போதும். அவர் அந்த எண்ணை அந்த போஸ்ட் ஆபீஸில் சொல்லி தன் ஃபோடோ ஐ.டி ஐ காண்பித்து பணத்தைப்பெற்றுக்கொள்ள முடியும். பெரும்பாலோனோர் தங்கள் மொபைலில் போட்டோ ஐ.டி யை வைத்துக்கொள்வதல் பிரச்சினை இல்லை.

சங்கீத முத்து:

காலஞ்சென்ற பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது குரலில் ஒலித்த ' மரணத்தை எண்ணி' பாடலையும் ' உள்ளத்தில் நல்ல உள்ளம் ' பாடலையும் கேட்டு ரசிக்காதவர்கள் மிகவும் குறைவு. அந்தப்பாடலை இன்றைய பாடகர் முகேஷ் தன் கம்பீரக்குரலில் இங்கு பாடுகிறார்! கண்கலங்கி கண்ணீர் வழிய அனைவரும் ரசிக்கும் காட்சி நம்மையும் நெகிழ வைக்கிறது. நீங்களும் பார்த்து, கேட்டு ரசியுங்கள்!!

26 comments:

  1. சுவையான முத்துக் குவியல். முதல் முத்து சிறப்பு.

    ReplyDelete
  2. சிறப்பான, மகிழ்வான தகவல்கள்.​​ முதல் இரண்டு செய்திகளையும் எங்கள் 'பாஸிட்டிவ் செய்திகளி'ல் பகிர்கிறேன். நன்றி.

    ReplyDelete
  3. போற்றுதலுக்கு உரிய முத்துக் குவியல்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. உணர்ச்சி மயமான பதிவு...
    உள்ளத்தை உருக்குகின்றது..

    ReplyDelete

  5. ஒவ்வொரு முத்தும் மிக சிறப்பு..

    மாளவிகா ஐயர் தன்னம்பிக்கை நட்சத்திரம்..

    ReplyDelete
  6. சிறப்பான முத்துக்கள் மனோ அக்கா. மாளவிகாவின் கதை மனதை உருக்குகிறது.. பாடல் கேட்கிறேன்.

    ReplyDelete
  7. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  8. கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  9. அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

    ReplyDelete
  10. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!

    ReplyDelete
  11. அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி அதிரா!!

    ReplyDelete
  12. முத்துக்குவியல் அருமை அம்மா...

    ReplyDelete
  13. பிரமிக்க வைக்கிறார் மாளவிகா ஐயர்.

    பிற தகவல்கள் மற்றும் பகிர்வுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  14. அனைத்து முத்துகளும் அருமை.

    தன்னம்பிக்கை முத்து பிரமிப்பு பாடல் ரொம்ப அருமை யா பாடுகிறார்...

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  15. அருமையான முத்துக்குவியல் மனோ அக்கா. மாளவிகாவின் கதை மனதை பாதித்தது. உண்மையில் முகேஷ் ந் குரல் கம்பீரம். கேட்டிருக்கேன் பாடலை. திரும்ப கேட்க தூண்டும் பாடல்.

    ReplyDelete
  16. முத்துக்குவியலை ரசித்தேன்.

    ReplyDelete
  17. நல்ல பல செய்திகளைத் தந்தீர்கள். வாழ்த்துக்கள்!

    -இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  18. முதல் முத்து திகைக்க வைத்தது. கொஞ்சம் அதிர்ச்சியும் கூட.

    ReplyDelete
  19. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  20. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  21. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  22. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி துளசிதரன்/கீதா!!

    ReplyDelete
  23. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி பிரியசகி!!

    ReplyDelete
  24. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!!

    ReplyDelete
  25. இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் செல்லப்பா!!

    ReplyDelete
  26. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தேனம்மை!!

    ReplyDelete