Thursday, 18 May 2017

ஆதங்கம்!

10 நாட்களுக்கு முன் என் நெருங்கிய சினேகிதியின் பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு!

என் சினேகிதி பள்ளிக்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பில் எப்போதும் இருக்கிறார். எப்போதும் நான் துபாயிலிருந்து வரும்போதும் திரும்பவும் அங்கு செல்லும்போதும் தஞ்சை வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து செல்வது எப்போதுமே வழக்கம்! ஆனால் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் தொடங்கி ஜூன் தொடக்க‌ம் வரை எப்போதும் அவரின் இரு பெண்கள், பேரன்களுடன் மிகவும் பிஸியாகி விடுவார். இந்த வருடமும் ஜூன் மாதம் எல்லோரும் அவரவர் ஊருக்குச் சென்றதும் தஞ்சைக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்.

இப்போது அவரின் இரண்டாவது பெண்ணிடமிருந்து அழைப்பு! சாதாரணமாக எப்போதும்போல தொலைபேசி அழைப்பு என்று நினைத்து பேச ஆரம்பித்த எனக்கு தொலைபேசியில் குண்டு வெடித்ததைப்போல இருந்தது.

என் சினேகிதியின் மூத்த மகளின் மூத்த பேரன் [ முதல் பேரன்] பாட்டி வீட்டுக்கு வந்த இடத்தில் திடீரென உலகை விட்டு மறைந்து விட்டாரென்று சொன்னதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதினேழு வயது தான். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு நுழையும் ஆர்வத்தில் இருந்தவன். பெற்றோர் இவனைத்தான் மலை போல நம்பியிருந்தார்கள். கண்ணீருடன் அரற்றிய என் சினேகிதியிடமோ, அவரின் பெண்களிடமோ என்னால் எதுவுமே பேச முடியவில்லை. அவரின் சின்ன மகள் தான் எனக்கு மிகவும் பழக்கம். அவர்தான் அழுகையுடன் நடந்ததை விவரித்தார்.

முதல் நாள் எல்லா குழந்தைகளும் பானி பூரி வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள். அடுத்த நாள் எல்லோருக்கும் மூத்தவனான இந்தப்பையன் மட்டிலும் தொடர்ந்து வயிற்றுப்போக்கால் அவதியுற்றிருக்கிறான். தொடர்ந்து வயிற்றுப்போக்கு, வாந்தி, ஜுரம் என்று அவதியுற்று, மருத்துவரிடமும் சென்று அதற்கான மருந்துகளையும் எடுத்திருக்கிறான்.  ஐந்தாம் நாள் இரவு எனக்கு என்னென்னவோ செய்கிறது. மருத்துவமனை செல்லலாமா என்று நள்ளிரவு அவன் கேட்டதும் பயந்து போய் அவனைத்தொட்டுப் பார்க்கையில் உடம்பு முழுவதும் வியர்த்துக்கொட்டி, முழுவதுமாக சில்லிட்டும் போயிருந்திருக்கிறது. ஆனால் தெம்புடனேயே அவன் ஆட்டோவில் அமர்ந்து சென்றிருக்கிறான். ஆனால் அவனை அட்மிட் செய்ததுமே அவன் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாகவும் பல்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாமே தாழ்நிலைக்குப்போய் விட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவனைக் காப்பாற்ற முடியாமல் மறு நாள் காலை அவன் இறந்தும் போய் விட்டான்.

இறந்து போகிற வயதா இது? அவனையே நம்பியிருந்த பெற்றோர் ஒரு பக்கம் நிலை குலைந்து போக, மறு பக்கம் பாட்டியான என் சினேகிதி அதிர்ச்சி தாங்காமல் தளர்ந்து போக, வீடே ஆறுதலுக்கு அப்பாற்பட்ட நிலைக்குப்போய் விட்டது.

எதனால் இந்த மரணம் என்பதை மருத்துவமனையால் சொல்ல முடியவில்லையாம். ஒரு வேளை இது FOOD POISONஆக இருக்கலாம் என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. இது பற்றி என் உறவினரிடம் பேசிக்கொண்டிருந்த போது, இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற என் சந்தேகத்தை சொன்னேன். அதற்கு அவர் இது FOOD POISON போலத்தான் இருக்கிறது என்று சொன்னார். சில நாட்களுக்கு முன் காலால் மிதித்து பானி பூரிக்கான மாவு பிசையப்படுவதாகவும் சாலையில் விற்கும் பானி பூரியை வாங்கி சாப்பிடாதீர்கள் என்றும் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தகவல் வந்ததாகச் சொன்னார். தனக்குத்தெரிந்த சிறு வயது கல்லூரி மாணவர்கள் சிலர் திடீரென்று வயிற்றுப்போக்கு, வாந்தி, ஜுரம் என்று வந்து அன்று மாலையே இறந்ததாகவும் காரணம் விசாரித்த போது சாலையோரக்கடை ஒன்றில் பொரித்த கோழி வருவல் சாப்பிட்டதாகவும் தெரிந்தது என்றும் தெரிவித்தார்.



சுகாதாரமற்ற சிறு உணவுக்கடைகள் சாலையெங்கும் முளைத்திருக்கிறது. எந்தக் கடையில் பழைய, வீணான பொருள்களை விற்கிறார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

இது மட்டுமல்ல, காய்கறிகளைக்கூட, அவை உரம் போட்டு வளர்க்கப்பட்டிருப்பதால் நன்கு கழுவி, அலசி அதன் பிறகே சமைக்க பல சமயங்களில் அறிவுறுத்தப்படுகிறது. இதை எழுதும்போது பழைய சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது.

ஒரு நரம்பியல் மருத்துவர், அறுவை சிகிச்சையில் புகழ் பெற்றவர், தான் செய்த ஒரு அறுவை சிகிச்சையைப்பற்றி ஒரு பெண்கள் இதழில் விவரித்திருந்தார்.

ஒரு வயதான் அம்மாவுக்கு தலையில் பொறுக்க முடியாத வலி என்று அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது அந்த அம்மாவின் மூளையிலிருந்து இரத்தக்குழாய் வழியாக கண்களுக்குள் புழுக்கள் வந்திருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார். அவற்றை நீக்கி சரி செய்து அவரை குணப்படுத்தி அதன் பின் அந்த அம்மாவிடம் அவரது உணவுப் பழக்க வழக்கங்களை விசாரித்த போது அவர் கொல்லைப்புறத்தில் பன்றிகள் மேயும் இடங்களில் வளர்ந்து கிடந்த கத்தரிக்காய்களை அடிக்கடி உண்டிருக்கிறார் என்று தெரிய வந்ததாம். கத்தரிக்காய்களில் பாவாடை என்னும் பகுதியில் அந்த பன்றியின் மலத்திலிருந்து வெளி வந்த புழுக்களின் முட்டைகள் ஒட்டியிருந்திருக்கின்றன. அந்தப்பாவாடையுடன் கத்தரிக்காய்களை சமைத்து உண்ணும்போது, உணவுக்கான அதிக பட்ச வெப்ப நிலையில்கூட அந்த முட்டைகள் அழியாமல் அது அவரின் உடலுக்குள் சென்று மூளையை அடைந்திருக்கிறது. அங்கேயே முட்டைகள் பொரித்து, புழுக்கள் உண்டாகி கண்ணுக்குள்ளும் வந்திருக்கின்றன. இந்த உண்மை சம்பவத்தை எழுதிய அந்த மருத்துவர், ' நான் பெண்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து காய்கறிகளை பல முறை கழுவி சுத்தம் செய்து சமையுங்கள்.' என்று வேண்டுகோள் விடுத்து முடித்திருந்தார்!

துபாய் போன்ற அரேபிய நாடுகளில் கடுமையான சட்ட திட்டங்கள் அமுலில் இருக்கின்றன. அவற்றிற்கு உடன்பட்டே ஒவ்வொரு உணவகமும் நடத்தப்பட வேண்டும். ஒரு உணவகத்தை 25 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்தியவர் என் கணவர். அத்தனை கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றுவதால்தான் அங்கே உணவகங்களில் தைரியமாக அமர்ந்து உண்ண முடிகிறது.

இங்கே....?

குழந்தைகளுக்கு வெளியில் பலகாரங்களையும் கோழி வறுவல் போன்றவைகளையும் பெரியவர்கள் தான் வாங்கிக்கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள். வீட்டில் வறுத்த எண்ணெயையே இரண்டாம் முறை வேறு எதுவும் பொரிப்பதற்கு உபயோகப்படுத்தக்கூடாது என்ற அறிவுரைகள் அவ்வப்போது தொலைக்காட்சி, மீடியாக்களில் வருகின்றன. எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பொரித்த எண்ணெயிலேயே கடைகளில் மீண்டும் மீண்டும் வடை, போண்டா போன்றவற்றை பொரித்துக்கொடுக்கிறார்கள். அதை உண்ணுபவர்கள் பலருக்கு கான்ஸரும் வருகிறது. இப்படி எத்தனையோ பாதிப்புகள். புகழ் பெற்ற கடைகளில் விற்கும் பலகாரங்கள்கூட கெட்டுப்போயிருப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. முதலில் பெரியவர்களுக்குத்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

முடிந்த வரையில் நாம் தாம் நம் நாக்கிற்கு கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தை நம்பிப் பயனில்லை.

31 comments:

  1. இதிலுள்ள சம்பவங்கள் சிலவற்றைக் கேட்கவே மிகவும் வேதனையாக உள்ளன.

    உட்கொள்ளும் ஒவ்வொரு ஆகாரத்திலும் மிகவும் கவனம் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

    மிகவும் நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிகள்.

    //முடிந்த வரையில் நாம் தாம் நம் நாக்கிற்கு கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தை நம்பிப் பயனில்லை.//

    அருமையாகச் சொல்லி முடித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  2. அதிர்ச்சிதரும் செய்தியாய் இருக்கிறது
    எச்சரிக்கைப் பதிவாக விரிவாக எழுதி
    அனைவரும் அறியத் தந்தமைக்கும்
    வாழ்த்துக்கள்

    உங்கள் தோழிக்கு
    ஏற்பட்டுள்ள இழப்பு நிச்சயம்தாங்க முடியாததே
    காலம்தான் ஆறுதல் அளிக்கவேண்டும்

    ReplyDelete
  3. அருமையான உளநல வழிகாட்டல்
    உண்ணும் உணவுகளில் கவனம் தேவை!

    ReplyDelete
  4. மிகவும் வேதனையாக இருக்கிறது அம்மா...

    திருந்த வேண்டியது முதலில் பெற்றோர்கள்...

    ReplyDelete
  5. சிறு வயதில் மரணம் அதிர்ச்சியான விஷயம். அந்தக் குடும்பத்துக்கு எங்கள் அனுதாபங்கள். எங்கள் வீட்டிலும் இது மாதிரி சம்பவங்கள் இரண்டு உண்டு. காரணம்தான் வேறு. இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அந்த உணவகத்தில் சாப்பிட்ட எல்லோருக்குமே இதுபோல நேரவில்லை. என்னவோ போங்க... என்ன சமாதானம் சொன்னாலும் மனதை நெருடும் சம்பவங்கள்.

    ReplyDelete
  6. உங்கள் ஆதங்கம் உண்மையானது!! பகிர்ந்து கொண்ட தகவல்கள் பயனுள்ளவை.. நன்றி

    ReplyDelete
  7. இளவயது மரணம் என்பது வேதனையும் வருத்தம் தரும் விஷயம் .அந்த குடும்பத்தாருக்கு இறைவன் ஆறுதலை தரட்டும் ..
    அக்கா நீங்கள் குறிப்பிட்ட உணவு மற்றும் துரித உணவகங்கள் பற்றிய அனைத்தும் உண்மையே ..பலர் கவர்ச்சியான பளீரிடும் நிறங்களையும் எண்ணெயில் குளித்த பொருட்களையும் சுவை என்று நம்பி ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறாரகள் ..
    .பெற்றோரே பலர் வார இறுதி அதனால் வெளியே உண்போம் என பிள்ளைங்களை கெடுக்கிறாரகள் ..நம் வீட்டில் செய்யும்போது ஒவ்வொன்றையும் கவனிப்போம் ..ஆனால் வெளியிடங்களில் அதற்கு சாத்தியமில்லை ..எங்க வீட்ல மெகடனல்ட்ஸ் பக்கம் கூட செல்வதில்லை .

    ReplyDelete
  8. இளவயது மரணம்,குடும்பத்திற்கு ஈடு செய்ய இயலாத்துயரைத் தரும்
    உணவகங்கள் உயிர் கொல்லிகளாய் மாறிப் போவது வேதனை
    நாம்தான் முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டும்

    ReplyDelete
  9. தரமற்ற உணவுகளின்மூலம் எதிர்பாராத வியாதிகள் வருவது கண்கூடு. சென்னையில் முருகனின் பெயர்கொண்டதும், ஜெயிலுக்குப் போனவரை உரிமையாளராகக் கொண்டதும், பெரும்பாலான ஓட்டல்களை விடத் தரமானதுமான 'அந்த' ஓட்டலில் கூட, குருமா சாப்பிட்டவுடன் வயிற்றுபோக்கு வருவது அன்றாட நிகழ்ச்சியல்லவா? பெங்களூரில் 'முருகன் இடலிக்கடை' ஆரம்பித்த புதிதில், நம்ம ஊர்க் கடை ஆயிற்றே என்று சாப்பிட்டதில், எப்போது அவர்களின் சட்டினி சாப்பிட்டாலும் வயிறு கடகடக்க் ஆரம்பித்துவிடும்.

    ஆகவே, வெளியில் சாப்பிடாமல் இருப்பதே நல்ல முடிவாகும். ஆனால் எல்லா நேரமும் தவிர்க்கமுடிவதில்லையே!

    மின்சாரம் விட்டுவிட்டு வருவதால், குளிர்பெட்டியில் வைத்த எந்த உணவையும் நம்பிச் சாப்பிடமுடிவதில்லையே!

    டாக்டர்களை நம்பிப் பயனில்லை. நம்மை விட அவர்கள்தான் ஓட்டல் உணவுக்குப் பழகிவிடுகிறார்கள்.

    படிக்கும் பருவத்து சிறுவர்களை வெளியில் சமைத்த உணவை உண்ணாதே என்று கட்டுப்படுத்திவைப்பதே நல்ல பழக்கம்.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  10. பானி பூரி இளைஞன் ஒருவனை சாகடிக்குமா? எனும் கேள்விக்கு சாகடிக்கக் கூடும் எனலாம். மகனை இழந்த தாய்க்கும் பேரனை இழந்த பாட்டிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ஸஃபயர் ரெஸ்ட்டாரெண்ட் உங்களுடையதா?

    ReplyDelete
  11. பாணி பூரி ஒரு கொலை உணவா ?
    திகில்தரும் பதிவு

    ReplyDelete
  12. வேதனை. தோழியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள்.

    அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  13. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  14. கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி! என் சினேகிதி 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அழுது கொண்டு தானிருக்கிறார். மகளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு தன் இல்லத்துக்கு திரும்பி வந்து விட்டாலும் அங்கு இறந்து போன பேரனின் நினைவு தினமும் அவரை அழச்செய்கிறது.

    ReplyDelete
  15. பாராட்டிற்கு அன்பு ந‌ன்றி சகோதரர் யாழ்ப்பாவணன்!

    ReplyDelete
  16. வருகைக்கும் என் வேதனையை பகிர்ந்து கொண்டதற்கும் அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  17. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்! பொதுவாய் எல்லோருக்கும் immunity system நன்றாக இருக்கிறது. சிலருக்கும் மட்டுமே அது மோசமாக இருக்கிறது. ஏதாவது ஒத்துக்கொள்ளாததை வெளியில் சாப்பிட்டால் என் கணவருக்கு எதுவும் செய்யாது. எனக்குத்தான் வயிற்றுப்போக்கு ஏற்படும்!

    ReplyDelete
  18. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மாதவி!

    ReplyDelete
  19. நீண்ட பின்னூட்டத்திற்கும் என் வேதனையை பகிர்ந்து கொண்டதற்கும் அன்பு நன்றி ஏஞ்சலின்!

    என் சினேகிதி தன் வீட்டுக்கு வந்த இடத்தில் இப்படி நடந்து விட்டதே என்ற ஆதங்கத்தில் இன்னும் அழுது கொண்டு தானிருக்கிறார்.

    துபாயிலுள்ள கடுமையான சட்ட திட்டங்களிலும்கூட நாங்களெல்லாம் KFC பக்கம்கூட செல்வதில்லை! இங்கே, தமிழ்நாட்டில் வெளியில் சாப்பிட பொதுவாக‌ தைரியம் வரமாட்டேனென்கிறது!


    ReplyDelete
  20. உங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் எனக்குமே ஆறுதலாக இருந்தது ஜமீல்! அவசியம் என் சினேகிதி குடும்பத்திற்கு தெரிவிக்கிறேன்.

    சஃபையர் ரெஸ்டாரன்ட் மூன்று வருடம் முன்பு வரை எங்களுடையதாக இருந்தது. 2013ல் அதை விற்று விட்டோம்.

    ReplyDelete
  21. ' படிக்கும் பருவத்து சிறுவர்களை வெளியில் சமைத்த உணவை உண்ணாதே என்று கட்டுப்படுத்திவைப்பதே நல்ல பழக்கம்.' இந்தக்கருத்தைத்தான் நானும் வலியுறுத்துகிறேன் சகோதரர் செல்லப்பா யக்யஸ்வாமி! ஹோட்டலில் வார இறுதியில் அனைவரும் சாப்பிடுவதும் அல்லது வெளியிலிருந்து பார்சல் வாங்கி வருவதும் இப்போது நடுத்தர குடும்பத்தினரிடையே பழக்கமாகி விட்டது. அதுவாவது பரவாயில்லை. நீண்ட நெடும் பயணங்களில் வழியோரம் தென்ப‌டும் கடைகளில் சூடாக பஜ்ஜி, போண்டா சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் நிறைய பேர்!

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மது! பானி பூரி பற்றி நான் தமிழ்நாடு வந்து இப்போது தான் கேள்விப்படுகிறேன். என் உறவினர் சொன்னதற்கப்புறம் நிறைய பேர் ' நாங்களும் வாட்ஸ் அப்பில் படித்தோம்' என்கிறார்கள்! ஏற்கனவே பழனி பஞ்சாமிர்தம் பற்றி இப்படித்தான் சொன்னார்கள்!

    ReplyDelete
  23. உங்கள் பிரார்த்தனைகள் மனதுக்கு ஆறுதல் தந்தது ராமலக்ஷ்மி! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  24. தங்க்கள் தோழியின் பேரன் இறந்தது மிக வருத்தம்.
    சிறுவயதில் மரணம் அதிர்ச்சி தரும் அனைவருக்கும்.
    இறைவன் அவர் குடும்பத்தினர்களுக்கு ஆறுதலையும், தேறுதலையும் தர வேண்டும்.

    ReplyDelete
  25. இங்கே குவைத்தில் கூட உணவகங்கள் பல்பொருள் விற்பனையகங்கள் இவற்றுக்காக கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன..

    ஆனால் நடப்பதோ வேறு.. Catering நிறுவனத்தில் பணி புரிவதால் என்னால் உறுதியாகக் கூற முடியும்..

    மிகவும் பரிதாபம்.. அந்த சிறுவனின் ஆன்மா அமைதியுறுவதாக..

    வெகு நாட்களுக்குப் பிறகு தங்களுடைய தளத்தில் கருத்துரையிட முடிகின்றது..

    ReplyDelete
  26. பதிவின் ஆரம்பச் செய்தி துக்கத்தைத் தந்தாலும் பதிவின் மூலக்கரு மிக முக்கியமான ஒன்று. இன்றைய இளைஞர் சமுதாயம் அறிய வேண்டிய ஒன்று. அதிலும் இந்தப் பானிபூரி சாப்பிடவே கூடாத ஒன்று.

    ReplyDelete
  27. தங்களின் கருத்துரைக்கும் ஆறுதல் வார்த்தைகளுக்கும் என் அன்பு நன்றி கோமதி!

    ReplyDelete
  28. வெகு நாட்களுக்குப்பின் வந்து கருத்துரையிட்டதற்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

    ReplyDelete
  29. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!!

    ReplyDelete
  30. aiyo padithathum ennavo polagivittathu. ithai relatives kku copy paste seithum link m anupi iruken. Mano Mam

    ReplyDelete
  31. நல்ல விழிப்புணர்வு பதிவு! இப்போதெல்லாம் வெளியில் உணவு உண்ண பயமாகத்தான் இருக்கிறது. அதுவும் ரயிலில் ரொம்பவே பயமாக இருக்கிறது...

    ReplyDelete