Wednesday, 14 December 2016

ஒரு சாதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது!!!

ஒரு சாதனை,சகாப்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது போகும் வழியெங்கும் இனிமையை நம் செவிகளிலும் நிறைவை நம் மனங்களிலும் நிரப்பிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது. அது தான்
 ஸ்ரீபதி பண்டிதராதையுல பாலசுப்ரமணியம் என்றறியப்படும் பின்னணி இசைப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலிசை!

ஆந்திராவின் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தற்போது 70 வயது முடிந்திருக்கிறது! ஆனால் இன்னும் அவரின் இனிமையான குரலுக்கு வயதாகவில்லை. கம்பீரமும் குறையவில்லை!




பாடகர் என்பதோடு இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர் என்று பல அவதாரங்கள் அவர் எடுத்திருக்கிறார். அதிக பாட்டுக்கள் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றிருக்கிறார். இந்திய அரசாங்க  பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் 25 முறை ஆந்திராவின் ந்ந்தி விருதுகளும் நான்கு முறை தமிழக அரசு விருதுகளும் மூன்று முறை கர்நாடகா அரசு விருதுகளும் பெற்றவர்.

தமிழக, கர்நாடக, தெலுங்கு அரசு விருதுகள், இந்த மூன்று மாநில 'டாக்டர்' விருதுகள்,  ஆறு முறைகள் தேசீய விருதுகள் இன்னும் பல நூற்றுக்கணக்கான விருதுகளை வாங்கி இவர் குவித்திருக்கிறார். 1966ல் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்கு படத்தில் பாடகாரத் தொடங்கிய இவரின் இசைப்பயணம் தமிழில் பயணிக்க ஆரம்பித்தபோது எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படத்தில் பாடியதன் மூலம் புகழேணியில் ஏற ஆரம்பித்தது. இதுவரை 40000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை ஏற்படுத்தியுள்ள ஒரே ஆண் பாடகர். [பெண் பாடகரில் அந்த சாதனை ஏற்படுத்தியவர் லதா மங்கேஷ்கர்.] ஒரே நாளில் கன்னட இசை அமைப்பாளர் உபேந்திர குமாரிடம் 21 பாடல்கள் பதிவு செய்திருக்கிறார். இது ஒரு இசை சாதனையாக கருதப்படுகிறது. தமிழில் அதிக பட்சம் ஒரே நாளில் 19 பாடல்களை பதிவு செய்திருக்கிறார்.




சென்ற 9ந்தேதி இவரின் இசைக்கச்சேரி துபாயின் மிகப்பெரிய அரங்கொன்றில் நடைபெற்றது. இதற்கு முன்னே இவர் இங்கே பல முறைகள் இசை விருந்தளிக்க வந்திருக்கிறாரென்றாலும் இந்த முறை வந்த காரணம் வித்தியாசமானது. இசையுலகில் இவரின் பயணம் 50 வருடங்களை முடித்திருக்கிற வகையில் உலக நாடுகள் பலவற்றுக்கு இவர் சுற்றுப்பயணம் செய்து இசை விருந்து அளித்துக்கொன்டிருக்கிறார். இந்த இசை விருந்து எட்டு முப்பதுக்கு ஆரம்பித்து நள்ளிரவைத்தாண்டி சென்றது. இந்த இசைத்தேனை நானும் சுவைத்து அனுபவித்தேன். "என்னை இத்தனை ஆண்டுகள் ரசித்து இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் என் ரசிகர்களுக்கு அவர்களைத்தேடிச் சென்று நன்றி சொல்லவே இந்தப்பயணம் "என்றார்




இவர். இணைந்து பாடிய எஸ்.பி.ஷைலஜா, சித்ரா, ஸ்வேதா மோகன், எஸ்.பி.சரண், கார்த்திக் அனைவரும் அந்த இரவு நேரத்தை மிகவும் இனிமையடையச் செய்தார்கள்! முதல் பாடல் ஆரம்பிக்கையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எல்லோரையும் எழுந்து நின்று இரங்கல் தெரிவிக்கச் சொன்னார். ஜெயலலிதா பாடிய நான்கு பாடல்களில் மூன்று இவருடன் பாடியதாகச் சொல்லி அதில் ஒன்றை இவர் தேர்ந்தெடுத்துப் பாடி அவருக்கு முதல் வணக்கத்தைத் தெரிவித்தது எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மீது அதிக மரியாதையைத் தோற்றுவித்தது.

இளம் வயதில் இவரின் குரலோடு தான் நிறைய பேர் பயணம் செய்திருப்பார்கள். இவரின் எந்தப்பாடல் மிக இனிமை என்ற கேள்விக்கு என்றுமே பதில் இல்லை. இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்த இவரது சில பாடல்களை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.







16 comments:

  1. மிகச்சிறந்ததோர் சாதனையாளரைப் பற்றிய இந்தப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.

    தங்களுக்கு மிகவும் பிடித்தமான சில இனிய பாடல்களைக் காணொளியாகக் கொடுத்திருப்பது சிறப்பாக உள்ளது.

    அவர் இதுவரை வாங்கியுள்ள பல்வேறு விருதுகளை வரிசைப்படுத்திச் சொல்லியுள்ளது மேலும் அந்த விருதுகளுக்கே பெருமையளிப்பதாக உணர முடிகிறது.

    தன் இனிமையான பாடல்களின் மூலம் இன்னமும் சாதனை செய்துவரும் அவருக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. மனம் வேதனை கொள்ளும் போது
    அதிலிருந்து மீளவும்
    மனம் சந்தோஷம் கொள்ளும் போது
    அதை அனுபவிக்கவும்
    ஒரு உற்ற துணையாய் இருப்பது இசையே

    அதிலும் மிகக் குறிப்பாய்
    நமக்கு ஏதோ ஒரு பூர்வ ஜன்ம பந்தம் போல
    மனத்தளவில் நெருக்கமானமான சிலரின் குரலே

    நம்மில் பெரும்பாலானவர்களுக்கு
    அந்தக் குரல் எஸ். பி. பாலு அவர்களின்
    குரல்தான் என்றால் மிகையில்லை

    அவர் பல்லாண்டு பல்லாண்டு
    நலத்தோடும் இதே குரல் வளத்தோடும் வாழ
    இறைவன வேண்டிக் கொள்வோமாக

    அற்புதமான பாடல்களுடன் அருமையான
    பதிவினைத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் சாதனை போற்றுதலுக்கு உரியது.
    பகிர்ந்து கொண்ட பாடல்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  4. இனிய பாடல்கள்.. பாடும் நிலா பாலு அவர்களைப் பற்றி அழகிய பதிவு.. அருமை.. வாழ்க நலம்..

    ReplyDelete
  5. மிகவும் ரசித்த பாடல்கள்...

    ReplyDelete
  6. எனக்குப் பிடித்த மிகச் சிறந்த இசை ஆளுமைகளில் இவர் முதன்மையானவர். இனம் புரியாத ஓர் ஈர்ப்பு இந்த காந்த குரலுக்கு உண்டு. பழைய பாடல்களை விட்டுத் தள்ளுங்கள். அதில் அவர் ஜாம்பவான். ஆனால், புதுப் படங்களில் இவர்பாடும் பாடல்கள் இன்றைய இளைய பாடகர்கள் கூட பாடமுடியுமா? என்று சந்தேகப்படும் அளவிற்கு இவரின் குரல்வளம் இருக்கிறது. 'ஆடுகளம்' படத்தில் இவர் பாடிய 'அய்யய்யோ' பாடலும், 'ஏழாம் அறிவு' படத்தில் இவர் பாடிய 'யம்மா யம்மா காதல் கண்ணம்மா' பாடலைக் கேட்டு பிரமித்துப் போயிருக்கிறேன். குரலில் இருக்கும் இளமை அசரவைத்தது. என்ன மனிதர் இவர்! பிறவிக் கலைஞர். அதைவிட மிக நல்ல மனிதர்.

    அருமையான அனுபவப் பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. இசையுலகில் ஐம்பது வருடங்கள் - இனிமையானதோர் இசைப்பயணம். பகிர்ந்து கொண்ட பாடல்களும் அருமை.

    இசையுலக சாதனையாளருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. மிக அழகிய விமர்சனத்திற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  9. //மனம் வேதனை கொள்ளும் போது
    அதிலிருந்து மீளவும்
    மனம் சந்தோஷம் கொள்ளும் போது
    அதை அனுபவிக்கவும்
    ஒரு உற்ற துணையாய் இருப்பது இசையே//

    இசையின் மேன்மையை அழகாய்ச் சொல்லி எனக்கும் நல்வாழ்த்துக்கள் சொன்னதற்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  10. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  11. இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

    ReplyDelete
  12. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!


    ReplyDelete
  13. உண்மை தான் செந்தில்குமார், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது குரல் இன்னும் இந்த எழுபது வயதிலும் அதே கம்பீரத்துடனும் அதையும் விட அதிக இனிமையுடன் இருப்பதைக் கேட்ட போது அசந்து போனேன் நான்! அவர் அன்று 'அஞ்சலி புஷ்பாஞ்சலி' பாடலை சித்ராவுடன் உச்சஸ்தாயில் அத்தனை இனிமையாகப்பாடினார். கரகோஷம் விண்ணைத்தொட்டது! அது வரம்! எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை! ' அய்யய்யோ' பாடலும்கூட அப்படித்தான் நீங்கள் சொல்வது மாதிரி!

    இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  14. பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  15. மிகச் சிறந்த பண்பாளர் எஸ்.பி.பி. அவர்கள்...
    நான் கேட்கும் பாடல்கள் பெரும்பாலும் இவரது பாடல்கள்தான்...
    என்ன ஒரு குரல்வளம்...
    அருமையான தொகுப்பு அம்மா...

    ReplyDelete