Sunday, 30 October 2016

ஜன்னலுக்கு வெளியே!!

அது ஒரு முதியோர் இல்லம். இரண்டு வயதானவர்கள் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். ஒருவருக்கு முதுகுத்தண்டில் கோளாறு. அதனால் மல்லாந்து எப்போதும் படுத்திருப்பார். இவரைப்போல இன்னொருவரும் நடமாட முடியாதவர். சர்க்கரை வியாதிக்காரர். அவருடைய கட்டில் ஜன்னலோரமாக இருந்ததால் எப்போதும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி அமர்ந்திருப்பார்.

வருடக்கணக்காக அங்கேயிருந்ததால் இருவரும் நல்ல சினேகிதர்களாக மாறியிருந்தார்கள். இருவரையுமே பார்ப்பதற்கு யாரும் வருவதில்லை. அதனால் எப்போதுமே தங்களுக்குள் ஏதாவது பேசியபடியே நாட்களைக் கழித்தார்கள்.

ஒரு நாள் படுத்திருந்தவர் ஜன்னல் பெரியவரிடம் அங்கே தெருவில் என்ன நடக்கிறது? எனக்கு சொல்லுங்கள்' என்று கேட்க, அவருடைய நண்பர் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தார்.
" அங்கே ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருக்கிறது. நிறைய குழந்தைகள் விளையாடிக்கொன்டிருக்கிறார்கள். பார்க்கவே அழகாய் இருக்கிறது"

படித்திருந்தவர் சொன்னார்

 " அங்கே என்ன நடந்தாலும் அவ்வப்போது எனக்குச் சொல்லுங்கள். அதையெல்லாம் கேட்பதால் மனசுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது"

அடுத்த நாள் ஜன்னல்காரர் ' தூரத்தில் ஒரு கோவில் தெரிகிறது. ஏதோ உற்சவம் போல இருக்கிறது வாண வேடிக்கைகள் எல்லாம் அமர்க்களப்படுகின்றன" என்றார்.

"இது பங்குனி மாதம் இல்லையா? பங்குனி, சித்திரையெல்லாம் உற்சவங்கள் நிறைய இருக்கும். குணமானதும் நான் கோவிலுக்குப்போகப்போகிறேன்" என்றார் படுக்கைக்காரர் உற்சாகத்துடன்.

இன்னொரு நாள் அந்த வழியாகச் சென்ற கல்யாண ஊர்வலத்தைப்பற்றி, மாப்பிள்ளையின் அழகைப்பற்றி ரசித்துக் கூறினார். படுக்கைக்காரருக்கு கல்யாணத்தையே நேரில் பார்த்தது போல இருந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு சிறு குழந்தை தன் அம்மாவிடம் அடம் பிடித்து சாலையில் போகும் ஐஸ் வண்டிக்காரனிடம் குச்சி ஐஸ் வாங்கிய கதையை சுவைபடச் சொன்னார். படுக்கைக்காரருக்கு அந்தக் காட்சியை தானே நேரில் கண்டது போல இருந்தது.சிரித்தவாறே " பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நடக்கும் சண்டையில் எப்போதும் குழந்தைகள் தான் ஜெயிக்கும்" என்று குதூகலித்தார்.

மறுபடியும் ஒரு நாள் ஜன்னலுக்கு வெளியே பூத்திருந்த பூக்களின் அழகை ரசித்து பேசிக்கொண்டிருந்தவர் மயங்கி விழ, உடனேயே அவரை ஸ்ட்ரெச்சரில் போட்டு வெளியே கொன்டு போனார்கள். அன்றும் அடுத்த நாளும் அவர் வராமலேயே போக, படுத்திருந்தவர் அவரைப்பற்றி விசாரித்தார். ஜன்னல்காரர் இறந்து விட்டதாக அவர்கள் சொன்னதும் அவர் அப்படியே துக்கத்தில் துயரத்தில் மூழ்கிப்போனார். தினமும் நண்பரை நினைத்து நினைத்து மருகினார்.

ஒரு நாள் நர்ஸிடம் சொல்லி தன் படுக்கையை ஜன்னலோரமாக மாற்றச் சொன்னார். மிகவும் பிரயாசைப்பட்டு கையை ஊன்றி பாதி நிமிர்ந்து ஜன்னலுக்கு வெளியே நோக்கினார்.

அங்கே தெரிந்ததோ ஒரு உயரமான மதில் சுவர் தான்!

திகைத்துப்போய் நர்ஸிடம் கேட்டார்.

" இங்கே ஒரு மதில் சுவரல்லவா இருக்கிறது! தினமும் என்னென்னவோ தெரிவதாய் அவர் ரசித்து ரசித்து சொன்னாரே?"

" உங்களுக்கு சந்தோஷம் தருவதற்காக அவர் கற்பனை செய்து சொல்லியிருப்பார்!"

நர்ஸ் சொன்னதும் அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். நர்ஸ் மேலும் சொன்னாள்.

" உங்களுக்காவது இந்த சுவர் தெரிகிறது. அவருக்கு அதுவும் தெரியாது. ஏனென்றால் அவர் பார்வையை இழந்தவர் அய்யா!"


பெரியவர் அப்படியே பிரமித்துப்போய் அமர்ந்திருந்தார். தனக்குள் அத்தனை சோகங்கள் இருந்தும் அடுத்தவரை மகிழ்விக்க வேண்டுமென்று வாழ்ந்த அவர் எத்தனை உயர்ந்த மனிதர்!

உங்களின் சொந்த நிலைமை எப்படியிருந்தாலும் அடுத்தவருக்கு சந்தோஷம் ஏற்படும்படி நடந்து கொள்ளுங்கள். ஒருவரிம் முகத்தில் புன்னகை பூக்கும்படி செய்தீர்களென்றால் அதையும் விட உயர்ந்த விஷயம் வேறெதுமில்லை!!

பின்குறிப்பு:

என்னை பாதித்த‌ ஒரு சிறுகதையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சில பதிவுகளுக்கு முன் நான் விமர்சித்து எழுதிய ரா.கி.ரங்கராஜன் அவர்களின் நூலான ' நாலு மூலை'யில் படித்த சிறுகதை இது!

19 comments:

  1. அருமையான தன்நம்பிக்கை ஊட்டக் கூடிய விடயம் நானும் இந்தக் கதையை வேறு வடிவில் கேட்டு இருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. என்னையும் மிகவும் பாதித்த இந்தக்கதையை நான் ஏற்கனவே பலமுறை படித்து வியந்துள்ளேன். இருப்பினும் இன்று இங்கு உங்கள் பதிவினில் மீண்டும் படித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.

    //உங்களின் சொந்த நிலைமை எப்படியிருந்தாலும் அடுத்தவருக்கு சந்தோஷம் ஏற்படும்படி நடந்து கொள்ளுங்கள். ஒருவரிடம் முகத்தில் புன்னகை பூக்கும்படி செய்தீர்களென்றால் அதையும் விட உயர்ந்த விஷயம் வேறெதுமில்லை!! //

    மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். :)

    மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. நான் இதை வாசித்துருக்கிறேன் அம்மா....
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

  4. நெகிழ வைத்த கதை சகோதரியாரே

    ReplyDelete
  5. கதையின் முடிவில் மனம் கனத்து விடும்...

    இந்தக் கதையை முன்பே வாசித்திருக்கின்றேன்..

    நினைவிலுள்ள கதைகளில் இதுவும் ஒன்று..

    ReplyDelete
  6. ji it is a noble act...
    very rarely this BEST QUALITY/BEHAVIOUR is found in human beings....
    these people are the real GEMS in our society...

    ReplyDelete
  7. முன்பே படித்து இருக்கிறேன்.
    மீண்டும் உங்கள் பதிவில் படித்ததில் மிக்க மகிழ்ச்சி.
    நம் சோககதையை சொல்லி கொண்டு இருக்காமல்
    மற்றவரை மகிழ்ச்சி படுத்தி எழுந்து நடக்க வைத்தவரை வாழ்த்த வேண்டும்.

    ReplyDelete
  8. அருமையான கதை

    ReplyDelete
  9. நெகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  10. அதிர்வும் நெகிழ்வுமாக இருக்கிறது. நல்ல மனம் படைத்தவர்களால்தான் இந்த பூமி இயங்கிக்கொண்டு இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  11. பாராட்டுடன் கூடிய இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  12. நிறைந்த பாராட்டுக்களுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  13. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி குமார்!

    ReplyDelete
  14. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

    ReplyDelete
  15. உண்மை தான்! இந்த மாதிரி அரிய குணம் வெகு சிலருக்குத்தான் இருக்கும் சந்தர். இனிய கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  16. நீங்கள் சொல்வதில் நானும் ஒத்துப்போகிறேன் கோமதி! நம் சோகக்கதை பிறருக்குத் தேவையில்லை. கூடியவரைக்கும் அடுத்தவரை சந்தோஷப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! அதில்தான் வாழ்க்கையின் மகத்துவம் அடங்கியிருக்கிறது! கருத்துரைக்கு இனிய நன்றி!

    ReplyDelete
  17. பாராட்டிற்கு இனிய நன்றி யாழ்ப்பாவணன்!

    ReplyDelete
  18. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி அருள்மொழிவர்மன்!

    ReplyDelete
  19. அறிந்த கதை என்றாலும் சொல்லிச் சென்ற விதம் அருமை.

    ReplyDelete