Saturday, 8 October 2016

நாலு மூலை!!

இது என்னுடைய முன்னூறாவது பதிவு.

எனக்குத் தொடர்ந்து பின்னூட்டம் கொடுத்து அதன் மூலம் எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துக்கொன்டிருக்கும் பதிவுலக சகோதர உள்ள‌ங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!!!

நாலு மூலை:

சமீபத்தில் படிக்க ஒரு புத்தகம் கிடைத்தது. இது சிறுகதை தொகுப்போ அல்லது பெரிய நாவலோ இல்லை. அன்றாடம் நம்மைக்கடந்து போகும் நிகழ்வுகளின் தொகுப்பு இது! எழுதியவர் காலஞ்சென்ற எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள்.




2012ல் தன் 85ஆவது வயதில் மறைந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள், மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, குமுதம் வார இதழில் நெடுங்காலம் ஆசிரியராக வேலை பார்த்தவர். 1500 சிறுகதைகள், 50 புதினங்ளுக்கு மேலாக எழுதியவர். மோகினி, சூர்யா, கிருஷ்ணகுமார் என்று இவர் பல்வேறு புனைப்பெயர்களிலும் எழுதினார். 2005ல் இவர் தன் பல்வேறு கருத்துக்களை விமர்சனக்களாகவும் அபிப்பிராயங்களாகவும் சென்னை பத்திரிகைகளில் எழுதினார். அவற்றின் தொகுப்பு 'நாலு மூலை' என்ற நூலாக 2005ல் வெளி வந்திருக்கிறது சமீபத்தில்தான் அரசு நூலகத்தில் அதை எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க சுவாரஸ்யம் மிகுந்ததில் மற்ற புத்தகங்களை ஓரம் க‌ட்டி வைத்து விட்டேன்.

ஆரம்பத்திலேயே எழுதுவதற்கான கருத்துக்கள் கிடைக்கும் விதம் பற்றி தன் முன்னுரையில் சுவைபடச் சொல்கிறார். ஒரு முறை இளையராஜாவிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னாராம், " கற்றுக் கொண்டதை எல்லாம் கொட்டி விட்டேன். ஐயோ, இனிமேல் என்ன செய்யப்போகிறோம் என்று ஆர்மோனியம் எதிரே திகைத்துப்போய் உட்கார்ந்த போது தானாகவே பாட்டு வருகிறது. பறவை ஒருத்தர் சொல்லியா பறக்கிறது? It happens! Music happens!!"




அது போல எழுத உட்கார்ந்ததும் பல்வேறு கருத்துக்கள் எப்படியாவது கிடைத்து விடுகின்றன என்கிறார் இவர்!

ஒரு காஷ்மீர நாட்டுப்புற கதை பற்றி எழுதியிருந்தார். ஒரு இளவரசன் ஒரு ஏழைப்பெண் மீது காதல் கொண்டு அவள் தந்தையிடம் சென்று பெண் கேட்கிறான். அவர் அவனுடைய தொழில் என்ன என்று கேட்கிறார். அவன் எனக்கு தொழில் எதுவும் தெரியாது. பத்து தலைமுறைக்கான சொத்து இருக்கிறது என்றானாம். அதற்கு அந்தப்பெண்ணின் தந்தை முதலில் ஒரு தொழிலைக்கற்று வா. அப்புறம் பெண் தருவதைப்பற்றி யோசிக்கிறேன் என்றானாம். இளவரசன் விதவிதமான பூ வேலைப்பாடுகள் அடங்கிய காஷ்மீர கம்பளம் நெய்யக் கற்று அதில் தேர்ச்சி அடைந்தான். தான் விரும்பிய பெண்னையும் மணந்து கொண்டான். சில காலம் கழித்து இளவரசனும் அவன் நண்பர்களும் காட்டிற்கு வேட்டையாடச் சென்ற போது கொள்ளையர்களால் சிறை வைக்கப்பட்டார்கள். சில நாட்கள் கழித்து, எதற்கு இவர்களுக்கு வெட்டியாக சோறு போட வேண்டும் என்று நினைத்து, இளவரசனிடம் உனக்கு ஏதாவது தொழில் தெரியுமா என்று கேட்டார்களாம். தனக்கு கம்பளம் நெய்யத்தெரியும் என்று இளவரசன் சொன்னதும் அதற்கான பொருள்களை வாங்கிக்கொடுக்க இளவரசன் மிக அழகான கம்பளம் நெய்தானாம். இதை ஊருக்குள் கொண்டு சென்றால் நிறைய பணம் கிடைக்குமா என்று அவர்கள் கேட்டதும் இளவரசன் ஊருக்குள் கொஞ்சமாகத்தான் பணம் கொடுப்பார்கள். இதையே அரண்மனையில் சென்று விற்றால் நிறைய பண்ம கிடைக்கும் என்று சொன்னானாம். அவர்களும் அது போலச் செய்ததும் நிறைய பணம் கிடைத்ததாம். மறு நாள் அரசனின் படை வீரர்கள் கொள்ளையர் இருந்த இடத்தை சூழ்ந்து அவர்களைக் கொன்று இளவரசனைக் காப்பாற்றினார்களாம். காரணம் அந்தக் கம்பளத்தில் காஷ்மீர மொழியில் தான் இருக்குமிடத்தையும் தனக்கு நேர்ந்துள்ள ஆபத்தைப்பற்றியும் இளவரசன் எழுதியிருந்தது தான் காரணம்.
இந்தச் சிறுகதையை எழுதி விட்டு ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு தொழிலைக்கற்க வேண்டுமென்ற முனைப்பு வருகிறதல்லவா என்று கேட்டிருந்தார்!

ஒரு ஆன்மீக தலைவரின் சீடர் கூறிய அருமையான கருத்தை இடையே சொல்லியிருக்கிறார்.
"ஒரு ஊருக்கு காரில் போய்க்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு எருமை குறுக்கிட்டது. மாட்டுக்காரன் தன் கம்பினால் அதை அடித்து விரட்டினான். அது சாலைக்கு மறுபக்கம் போய் விட்டது. அப்போதும் மாட்டுக்காரன் அதை அடிப்பதை நிறுத்தவில்லை. தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்ததைப்பார்த்தபோது நான் யோசித்தேன். அது தான் சாலையிலிருந்து ஒதுங்கிப்போய் விட்டதே? அப்புறமும் ஏன் அதை அடிக்க வேண்டும்? ஏனென்றால் அது ஒரு சமயம் அடம் பிடித்துக்கொண்டு அவன் சொன்னதைக்கேட்காத கோபம் அவன் மன‌சிலிருந்து அகலவில்லை. பழசை நினைத்து அடிக்கிறான். இப்படித்தான் வாழ்க்கையில் நாம் நடந்து கொள்கிறோம். பழசை மறக்காமல் நினைத்து கோபப்பட்டு நம் நிம்மதியைக் கெடுத்துக்கொள்கிறோம்!"

பேரன் பேத்திகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் இடையில் கூறுகிறார்.
"பேரன், பேத்திக்களிடம் முடியாது, கிடையாது என்று சொல்வது மிகவும் கடினமான காரியம்தான். ஆனாலும் அவர்கள் கேட்கும் எல்லாவற்றுக்கும் சரியென்று சொல்வதும் ஆமோதிப்பதும் வீட்டில் பல பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகின்றன என்பதையும் தாத்தாக்களும் பாட்டிகளும் புரிந்து கொள்ள வேண்டும். எதையாவது உங்கள் பேரக்குழந்தை கேட்டு அதன் பெற்றோர் மறுத்திருந்தால் அது உங்களிடம் தான் அடுத்ததாய் சலுகைக்கு வரும். நீங்கள் அது கேட்டதை கொடுத்தாலோ அல்லது வாங்கித்தந்தாலோ, அதற்கு தன் அம்மா, அப்பாவை மதிக்கத்தேவையில்லை என்ற எண்னம் வந்து விடும். எதையும் உங்கள் மூலம் சாதித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் வந்து விடும். அதனால் குழந்தையிடம் பக்குவமாகச் சொல்லி அப்பா, அம்மா சொல் மதிக்க வேண்டும் என்று நீங்கள் பழக்க வேண்டும்"

நிறைய பக்கங்களில் நகைச்சுவை மிளிர்கிறது!

இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்த ஒரு அமெரிக்கர் ஒரு சுவாமிஜியின் நல்லியல்புகளை தொடர்ந்து கவனித்து வந்தாராம். ஒரு நாள் அவரிடம் சென்று ' சுவாமிஜி! மந்திரங்களுக்கு நல்ல மகிமை உன்டு என்றும் அவற்றைத் தொடர்ந்து சொல்லி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அடிக்கடி சொல்லி வருகிறீர்கள். எனக்கும் ஒரு நல்ல மந்திரம் சொல்லிக்கொடுங்கள். அதனால் ஒரு நல்ல பலன் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்' என்றாராம். சுவாமிஜியும் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்து ' உனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லு. ஆனால் எக்காரணம் முன்னிட்டும் இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லிக்கொடுக்கக்கூடாது' என்று சொல்லி சத்தியமும் வாங்கிக்கொண்டாராம். அதன் படியே அமெரிக்கரும் ஊருக்குத்திரும்பியது முதல் அந்த மந்திரத்தை சொல்லி வந்தாராம்.
அவரின் மனைவி ஒரு ராட்சஸி. கணவன் உயிரை தினமும் கொல்லாமல் கொன்று வருபவள். தன் கணவன் இந்தியாவிலிருந்து திரும்பியதிலிருந்து தினமும் தனக்குள்ளாகவே ஏதோ முனகிக்கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தாள், இரண்டாம் நாள் பார்த்தாள், அதன் பின் அவளால் பொறுத்துக்கொள்ல முடியவில்லை. கணவனிடம் கேட்டாள் அவன் தினமும் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறான் என்று! அவனும் விஷயத்தைச் சொல்லி இது ஒரு மந்திரம், இதை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறேன் என்று சொல்ல, பலத்த சண்டையாகி விட்டது அங்கே. மிரட்டலுக்கும் வற்புறுத்தலுக்கும் மசியாத கணவனிடம் 'இனி ஒரு நாள் கூட உன்னுடன் வாழ மாட்டேன் என்று சொல்லி விட்டு மூட்டை முடிச்சை கட்டிக்கொன்டு அவள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள். அவனுக்கு ஒரே சந்தோஷம்! ' மந்திரம் என்றால் இதுவல்லவோ மந்திரம்! கை மேல் பலன் கிடைத்து விட்டதே' என்று ஆனந்த கூத்தாடினான் அவன்!

இப்படி சுவாரஸ்யமான நிகழ்வுகளை இவரும் நூல் முழுவதும் சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே போகிறார்!வழக்கமான புதினங்களிலிருந்து வித்தியாசப்ப‌டுகின்ற‌ நூல் இது! படித்துப்பாருங்கள்!

கிடைக்குமிடம்:

கிழக்கு பதிப்பகம்,
16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர், சென்னை 4



 

24 comments:

  1. தங்களின் 300-வது பதிவுக்கு முதற்கண் என் மனமார்ந்த பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  2. எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள் எழுதிய நூலான ’நாலு மூலை’ பற்றிய தங்களின் அலசல் படித்து ரஸித்து மகிழ்ந்தேன். இயல்பான நகைச்சுவைகளும் கலந்துள்ளதால் மேலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  3. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.

    ReplyDelete
  4. 300-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
    அழகான நூல் விமர்சனம்!

    ReplyDelete
  5. நாலு மூலை...
    மிகச் சிறந்த எழுத்தாளரின் புத்தகம் குறித்தான பகிர்வு...
    எழுத உட்கார்ந்தால் எண்ணத்தில் எழுத்து ஓடும் என்பது உண்மையே...

    ReplyDelete
  6. ரா.கி.ரங்கராஜனை தெரியாதவர்கள் இருக்க முடியுமா என்ன ?
    அற்புதமான எழுத்தாளர் அவரது கதைகள் படிக்க, படிக்க விருப்பம் தொடரும்...
    நல்லதொரு நூலைப்பற்றிய விடயம் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  7. 300-வது பதிவைத் தொட்டமைக்கு வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  8. தங்களுடைய முன்னூறாவது பதிவிற்கு மகிழ்ச்சி..
    மேலும் பல நூறு பதிவுகளை வழங்க வேண்டுகின்றேன்..

    எழுத்தாளர் திரு ரா. கி. ரங்கராஜன் அவர்களின் நூலை சிறப்பித்து வழங்கிய பதிவு நன்று..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  9. எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் ’நாலுமூலை’ பற்றிய தங்களது சுவாரஸ்யமான குறிப்புகள் அந்த நூலை வாங்கும்படி சொல்லுகின்றன.

    தங்களது வலைத்தளத்தில் இது 300 ஆவது பதிவு என்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. முன்னூறாவது பதிவிற்காக என் மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  11. ra ki rangarajan was a bafflig genius
    hjis stories are marvellous
    writer sujatha had to write in his wifes name as sujatha
    because of ra ki rangarajan....

    ReplyDelete
  12. அம்மாவின் முன்னூறாவது பதிவிற்கு பாராட்டுக்கள்! தங்களின் தமிழ்ப்பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகள்!
    `நாலு மூலை` என்னும் தலைப்பே சுவாரசியமாக உள்ளது.

    ReplyDelete
  13. அருமையான கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  14. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  15. இனிய வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி செந்தில்குமார்!

    ReplyDelete
  16. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி குமார்!

    ReplyDelete



  17. தங்களுடைய முந்நூறாவது பதிவுக்கு மனமுவந்த பாராட்டுக்கள் --நாலு மூலை குறித்து வைத்துக்கொண்டேன் --அவச்யம் படிக்க வேண்டும் ..நன்றி

    மாலி

    ReplyDelete
  18. இனிய கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  19. இனிய கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் தமிழ் இள‌ங்கோ!

    ReplyDelete
  20. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

    ReplyDelete
  21. இனிய பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் கந்தசாமி!

    ReplyDelete
  22. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சந்தர்!

    ReplyDelete
  23. இனிய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பார்ந்த நன்றி அருள்மொழிவர்மன்!

    ReplyDelete
  24. இனிய கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் மெளலி!

    ReplyDelete