Sunday, 13 April 2014

முத்துக்குவியல்-27!!



                               அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்     
                              புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்!

                                   *************

முத்துக்குவியல்-27!!

மருத்துவ முத்து:



இந்தப்பொடியை செய்து வைத்துக்கொண்டு தினமும் காலையிலும் மாலையிலும் காப்பி, தேனீருக்கு பதிலாக பருகி வருவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.

உடல் உஷ்ணம் சீராக, இரத்த அழுத்தம் சீராக இருக்க,

100 கிராம் தனியா, 100 கிராம் தோல் சீவிய சுக்கு, 10 கிராம் ஏலம் முதலிய பொருள்களை எடுத்து இலேசாக வறுத்துப்பொடிக்கவும். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து அரை டம்ளர் நீரில் போட்டு ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு, பால் தேன் கலந்து பருகவும்.

அசத்தும் சேவை முத்து:

அண்மையில் நெருங்கிய உறவினர் ஒருவர் இங்குள்ள‌ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். மருத்துவ மனையின் உரிமையாளரான மருத்துவரும் உறவினரும் பள்ளிக்கால நண்பர்கள். அதனால் அந்த மருத்துவர் சொல்வதை யாராலும் மறுக்க முடியவில்லை. இரத்தம் குறைந்திருக்கிறது, கிரியாடினின் ஏறியிருக்கிறது என்று சொல்லி சிகிச்சை செலவு 60000 வரை ஆகி விட்டது. அப்புறம் இன்னொரு சிறுநீரக சிறப்பு மருத்துவர் அவரும் தெரிந்தவர் தனிமையில் ' சில விஷயங்களை என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. அவருக்குப்பெரிதாக எதுவும் பிரச்சினையில்லை, இன்றே அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை தேவையில்லை என்று எழுதி அனுப்பச் சொல்லி விடுகிறேன்' என்றார். ஒரு வயதான நோயாளியின் குழம்பிய மனநிலையைப்பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எத்தகைய சுயநலமான, கொடூரமான விஷயம்? அதற்கு நேர்மாறான விஷயத்தை இங்கே படியுங்கள்.

சென்னை, அடையாறு இந்திர நகரிலுள்ள ஸ்ரீமாதா கான்ஸர் கேர் காப்பகம் புற்று நோய் முற்றிய நிலையிலுள்ள‌ ஏழை நோயாளிகளுக்காக அருமையான சேவை செய்கிறது. அதுவும் முற்றிலும் இலவசமாக செய்கிறது.நோயை ஞாபகப்ப்டுத்தும் சூழல் இல்லாது ஆறுதலும் மருந்துகளும் மன சாந்தியும் தரும் இடமாக இது விளங்குகிறது. இங்கு அடைக்கலமடைய ஒரே நிபந்தனை, நோய் முற்றிய ஏழை புற்று நோயாளியாக இருக்க வேண்டும் என்பது தான்! இப்போது சிறுநீரகப்பிரச்சினைகளால் அவதிப்படும் ஏழைகள் இலவசமாக டயாலிஸிஸ் செய்து கொள்ள‌ புதிய மையமும் தொடங்கப்பட்டுள்ள 2 யூனிட்டுகள் மூலம் மாதம் 100 எழைகள் பயன்பெறும் வகையில் இது செயல்படுகிறது. எத்தனை உன்னதமான சேவை இது! இதன் நிறுவனர் விஜயஸ்ரீயை பாராட்ட வார்த்தைகள் ஏது?

ஆச்சரியப்படுத்திய முத்து:



நாய் வாலை ஆட்டுவது நட்பை உணர்த்தவே என்று நாம் நினைத்திருக்கிறோம். அது உண்மையில்லையாம்! அது தனக்கு வலப்புறமாக வாலை ஆட்டினால் மட்டுமே நட்பு என்று அர்த்தமாம்! தனக்கு இடது புறமாக வாலை ஆட்டினால் வெறுப்பு என்று அர்த்தமாம்! இப்படி ஒரு ஆராய்ச்சி சொல்கிறது!!

ரசித்த முத்து:

ஒழுக்கம் என்பது மரம். புகழ் என்பது அதன் நிழல். நாம் எப்போதுமே நிழலைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறோம். மரத்தை நினைத்துப் பார்க்க மறந்து விடுகிறோம்!

சொன்னவர் ஆப்ரகாம் லிங்கன்!

ரசித்த பழம்பாடல்:



ஒளவையாரின் பாடல்கள் என்றுமே எனக்குப்பிடித்தவை. நான் மிகவும் ரசித்த ஒரு பாடல் இது. மனிதர்களுக்கு எப்படிப்பட்ட உவமானக்களைக் கொடுத்திருக்கிறார் பாருங்கள்!!

பாடல்:

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வார்சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார்.

கருத்து:

சொல்லாமல் உதவி செய்பவர்கள் பூக்காம‌லே காய்க்கும் பலாமரம் போன்றவர்கள். சொல்லிவிட்டு உதவி செய்பவர்கள் பூத்துக் காய்க்கும் மாமரம் போன்றவர்கள். உதவுவதாகச் சொல்லிவிட்டுச் செய்யாதவர்கள் பூத்துவிட்டுக் காய்க்காத பாதிரிமரம் போன்றவர்கள்.






24 comments:

  1. முத்துக்கள் அருமை...
    நாய் வால் புதிய தகவல்...

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் நல் முத்து!

    ReplyDelete
  3. ஔவையாரின் மூன்று உவமைகளும் எத்தனை அழகு!

    ReplyDelete
  4. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. உங்கள் மருத்துவக் குறிப்பை எழுதிக் கொண்டேன். நீங்கள் ஸ்ரீமாதா ட்ரஸ்ட் பற்றி எழுதியதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாய் வாலைப் பற்றிய செய்தி புதிது.
    முத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு,நன்றி மனோ மேடம்

    ReplyDelete
  6. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  10. சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ஔவையார் பாடல் அருமை..!

    ReplyDelete
  12. அசத்தலான தகவல்கள் மனோம்மா.பகிர்ந்தமைக்கு நன்றி. தங்களுக்கு எனது இனிய
    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. முத்துக்கள் ஒவ்வொன்றும் நல்ல சொத்துக்கள்! அருமை! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி குமார்!

    ReplyDelete
  15. இனிய கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி ஜனா!

    ReplyDelete
  16. கருத்துரசிக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  17. இனிய வாழ்த்துக்களுக்கும் விரிவான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ராஜலக்ஷ்மி!

    ReplyDelete
  18. வழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்! உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  19. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  20. நல்வாழ்த்துக்கள் அக்கா. பகிர்வு அருமை.

    ReplyDelete
  21. நல்ல பகிர்வு. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. தாமதமாகப் பெற்று தாமதமாகவே சொல்கிறேன்... புத்தாண்டில் ஜெயம் நிறையட்டும்!

    ReplyDelete
  23. அனைத்து முத்துகளும் அருமை. பாடலும் அதன் பொருளும் மிக அருமை.

    ReplyDelete
  24. அருமையான முத்துக்களின் அணிவகுப்பு. பகிர்வுக்கு நன்றி மேடம். ஔவையார் பாடல் அற்புதம். பூத்துவிட்டுக் காய்க்காத பாதிரி மரம் பற்றிய தகவல் புதிது.

    ReplyDelete