Sunday, 12 May 2013

காலங்கள் வரைந்த கோலங்கள்!-பகுதி-2

அன்றைய காலத்தில், பெண் பார்க்க மாப்பிள்ளைகள் வரும்போது, அவர்கள் வந்து விட்டுச் சென்றதும் வீட்டில் பெற்றோர்கள் கேட்பார்கள், ‘மாப்பிள்ளையைப்பிடித்திருக்கிறதா’ என்று! அதற்கு பதிலே வராது. அப்படி பதில் வந்தாலும் ‘ உங்களுக்குப்பிடித்திருந்தால் சரி !’ என்ற பதில் தான் வரும்.
இன்றைக்கோ இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி மாறி விட்டன! ‘ எனக்கேற்ற மாப்பிள்ளையை சரியாக கணித்துப்பார்க்க என் பெற்றோருக்குத் தெரியவில்லை’ என்று தொலைக்காட்சி  விவாதங்களில்கூட பெண்கள் எதைப்பற்றியுமே கவலைப்படாமல் சொல்கிறார்கள். இது நல்ல மாற்றம் தானா?

வீட்டில் அம்மாக்கள் அன்றைக்கு ‘ நீ ஒன்றுமே தெரியாமலிருந்தால் உன் மாமியார் என்னைத்தான் வறுத்தெடுப்பார்கள்’ என்று புலம்பிக்கொண்டே வேலைகளைப் பழக்கி விடுவார்கள். கூடவே திட்டுக்களும் விழுந்து கொண்டே இருக்கும்!
இன்றைக்கு அம்மாக்கள் பெண்களை வேலைகள் செய்யப் பழக்குவதில்லை.
 ‘ போகும் இடத்தில் தான் கஷ்டப்பட்டாக வேண்டும். கல்யாணமாகிப்போகும் வரையாவது என் பெண் இங்கே சுகமாக இருக்கட்டுமே!’ என்கிறார்கள்.

.திருமணமாகி பெண் புகுந்த வீட்டிற்குப்போகும்போது, ‘ எங்கள் பெயரை நீ காப்பாற்ற வேண்டும். அந்த வீட்டு செய்தி எதுவும் இங்கு வரக்கூடாது’ என்று சொல்லியனுப்புவார்கள். இன்றைக்கு அந்த மாதிரி புத்திமதிகள் எதுவுமே இல்லை! ‘ உனக்கு அங்கே ஒன்றும் சரிப்பட்டு வரவில்லையென்றால் ஒரு ஃபோன் பண்ணு போதும், நான் உடனேயே வந்து அழைத்துப்போகிறேன்’ என்று ஒரு தகப்பனார் தன் பெண்ணிடம் சொன்னதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.

அன்றைக்கு தாய்மையடைந்த பெண்ணை பிரசவத்துக்குப்போகும்வரை குனிந்து நிமிர்ந்து வேலை செய்யச் சொல்லி புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும் நன்றாகப் பழக்குவார்கள். ஏழாம் மாதத்தில் குனிந்து வாசலில் கோலம் போட வேண்டும். நன்றாக எப்போதும் போல நடந்து, அடுப்படி வேலைகள், அம்மி அரைப்பது என்று சகலமும் செய்ய வேண்டும்.  குழந்தையும் எந்த வித அறுவை சிகிச்சையுமில்லாமல் சுகப்பிரசவத்தில் பிறந்தது. இன்றைக்கோ, முதலில் சில பெண் மருத்துவர்களே,
 ‘ தளர்ச்சியாக இருந்தால் பெட் ரெஸ்ட் எடு. மூன்று மாதம் வேலை செய்யாதே’ என்கிறார்கள்! அப்புறம் மாமியார் எந்த விதத்தில் புத்திமதி சொல்லி பயத்தை போக்க முடியும்? இன்னும் சில மருத்துவர்களோ ‘ நல்ல நாளாகப் பார்த்து அறுவை சிகிச்சையை ஃபிக்ஸ் பண்ணி விடுங்கள்’ என்று சொல்கிறார்கள்! 

திருமணங்களில் விவாகரத்து சதவிகிதம் இன்று கணிசமாக உயர்ந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதுவும் தமிழ் நாட்டில் அதிகமாம்! என் மகனுடன் திருமணமான அவரது நண்பர்களில் இதுவரை பதினோரு பேர்களுக்கு விவாகரத்து நடந்திருக்கின்றன!
பெண்கள், திருமண வாழ்வு-இவற்றில் வந்த மாற்றங்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!
 
35 வருடங்களுக்கு முன்பு, இங்கே திருமணமான புதிதில் நான் வந்தபோது எங்கேயுமே வானுயர்ந்த கட்டிடங்களோ, வளம் மிக்க காட்சிகளோ கிடையாது. ஒரு மகப்பேறு மருத்துவர்கூட‌ கிடையாது. சாப்பிடுவதற்கு ஏதேனும் ஓரிரண்டு கடைகள் இருக்கும். எப்படியாவது பொருளீட்டி தாய்நாட்டிலிருக்கும் குடும்பம் வாழ வேண்டுமென்று, முறையான விசா கிடைக்காமல் ‘லான்ச்’ எனப்படும் கள்ளத்தோணியில் வந்திறங்கி கிடைக்கிற வேலையில் இறங்கியவர்கள் எத்தனையோ பேர்! கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, இந்தப் பாலையின் சூட்டிலும் குளிரிலும் வதங்கி அன்று தன் குடும்பத்தை காப்பாற்றினார்கள்.

எங்கள் உணவகத்திலேயே 25 வருடங்களாக வேலை செய்து வரும் சமையல்காரர்கள், சப்ளையர்கள் எல்லோரும் இன்று தன் பிள்ளைகளை, பெண்களை மேற்படிப்பு படிக்க வைத்து, ஊரில் நிலங்களும் வீடுகளும் வாங்கி நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு வேலையில் அமரும் சிறு வயது பிள்ளைகளுக்கோ எந்த விதப்பொறுப்பும் இல்லை. ‘ நிறைய சம்பாதிக்க வேண்டும், ஆனால் வேலைகள் அதிகம் இருக்கக்கூடாது’ என்ற நினைப்புடன் இருப்பவர்கள் அதிகம் பேர்!!

சென்ற வருடம் எங்கள் உணவகத்திற்கு சமையல் செய்ய ஒரு இளைஞனை தேர்ந்தெடுத்தோம். ஊரில் அப்பா இல்லாமல் அம்மா வேலை செய்து மகனை ஓரளவு படிக்க வைத்திருந்தார்கள். அந்த பையனும் நன்கு சமைத்துக்காட்டியதால் செலவெல்லாம் செய்து அந்தப்பையனை இங்கு வரவழைத்தோம். ஒரு வாரம் வேலை செய்தான். அதற்கப்புறம் மருத்துவ சோதனைகள் எல்லாம் அவனுக்கு செய்து பாஸ்போர்ட்டில் விசா அடிக்க வேண்டும். என் கணவர் மருத்துவ சோதனைக்கு அவனைத் தயாராக இருக்கச் சொன்ன போது, அவன் சொன்னான், ‘ சார் நான் ஊருக்குத்  திரும்ப‌ப் போகிறேன்!’

அதிர்ச்சியடைந்த என் கணவர் காரணம் கேட்டபோது, அந்த 28 வயது பையன், அம்மாவை உட்கார வைத்து காப்பாற்ற வேண்டியவன்  ‘ எனக்கு என் அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!’ என்று சொன்னான்! எத்தனையோ சொல்லிப்பார்த்தும் உபதேசங்கள் செய்தும் அவன் தலையில் ஒன்றும் ஏற‌வேயில்லை! இந்த விபரத்தை அவன் அம்மாவிடம் சொன்னால் பாவம், ‘ என் மகனுக்கு எப்போது தான் பொறுப்பு வரப்போகுதோ தெரியவில்லை!’ என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார்கள் தொலைபேசியில்! வேறு வழியில்லாமல் அவனைத் திருப்பி அனுப்பினோம். அதுவரை செலவு செய்த தொகையையெல்லாம் தானே தந்து விடுவதாக அவன் அம்மா சொன்னதோடு, நாங்கள் ஊருக்குப்போன போது அந்த மகனிடமேயே அனுப்பி வைத்தார்கள்! பெற்றோர்கள் நெருப்பில் வாழ்ந்தாலும் எத்தனையோ மகன்கள் இன்றைக்கு இப்படித்தான் குளிர் காய்கிறார்கள்!!

கடைசி கடைசியாக இன்றைய வயதானவர்களின் வாழ்க்கையையும் சொல்ல வேண்டும். அன்றைக்கு, ஓரளவு ஐம்பது வயதைத் தாண்டி விட்டாலே பெண்களுக்கு வீட்டில் ஓரளவு ஓய்வு கிடைத்தது. மருமகள் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் செய்வதும் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சுவதுமாக அமைதியாக அவர்களின் பொழுது கழிந்தது. ஆண்களுக்கும் வேலையிலிருந்து பணி ஓய்வு கிடைத்ததும் ரிட்டைய்ர்ட் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடிந்தது. இன்றைக்கோ அவர்களுக்கு 50 வயதைத்தாண்டிய பிறகு தான் பொறுப்புக்கள் அதிகமாயிருக்கின்றன! உடலும் மனமும் ஓய்வைத்தேடித்தேடி கெஞ்சுகின்றன! நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளின் அல்லது பெண்களின் குழ்ந்தைகளை சமாளிக்கவும் சமைத்துப்போடவும் அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளுக்கு அடிக்கடி செல்வது இன்றைக்கு சர்வ சாதாரணமாக இருக்கிறது!, அவர்களின் குழந்தைகள் தங்களின் குழந்தைகளை இவர்களின் பொறுப்பில் விட்டு விட்டு சந்தோஷமாக அங்கே பொருள் ஈட்டுகிறார்கள்! இன்னும் சில பெற்றோர்கள் வேறு மாதிரி! பெற்றோர்கள் வேறு எங்காவது உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ பணியில் இருக்க, நம் ஊரிலேயே தாத்தாவும் பாட்டியும் பேரக்குழந்தைகளை படாத பாடு பட்டு வளர்க்கிறார்கள்! காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் உழைத்துச் சோர்ந்து போயிருக்கும் வயதானவர்களில் அநேகம் பேருக்கு இன்னுமே ஓய்வு என்பதே கிடைக்கவில்லை என்பது தான் இன்றைய நிஜம்!

காலங்கள் வரைந்தவை அன்று அழகிய கோலங்கள்! இன்று வரைந்திருப்பதோ நிறைய சமயங்களில் கிறுக்கல்கள்தான்!


 

50 comments:

  1. மிக அருமையான சிந்தனை முத்துக்கள்

    ReplyDelete
  2. நானும் இங்கு வந்த சமயம் உணவங்களோ, நல்ல ஹாஸ்பிட்டல் மற்றும் நாம்மூர் டாக்டர்கள் கிடையாது, கை வைத்தியம் தெரிந்ததால் நாட்களை தள்ள முடிந்தது.

    இப்ப நம்மூரில் கூட இப்படி நம்மை சுற்றி ஹேட்டலும் ஹாஸ்பிட்டலும் இருக்காது ஆனால் இங்கு எங்கு திரும்பினாலும் பல வகை உணவங்களும், ஹாஸ்பிட்டல் களும் இருக்கின்றன

    ReplyDelete
  3. எப்படி தான் வயதான காலத்தில் அமெரிக்கா, லண்டன் என பேறு காலம் பார்க்க செல்கின்றார்களோ என்றூ நானும் நினைப்பதுண்டு

    ReplyDelete
  4. இந்த காலத்து பிள்ளைகளுக்கு எல்லா நோகமா நோன்பு கும்பிட தான் ஆசை படுகின்றனர்.
    மிக அருமையாக பகிர்ந்து இருக்கீறீர்கள் மனோ அக்கா.

    ReplyDelete
  5. நடைமுறை உண்மைகளை அப்படியே தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். ஆனால் இவைகள் மாறப் போகின்றனவா என்று யோசித்தால் மனக்கசப்பே மிஞ்சுகிறது.

    ReplyDelete
  6. பணத்தாசையும் ஆடம்பர மோகமும் எது நிம்மதி என்ற தெளிவு இல்லாமையும் தான் இந்த தறிகெட்ட பாய்ச்சலுக்கு காரணமோ... ஆயிரத்தில் ஒருவர் அன்றைய பழக்கங்களை விடாமல் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப் படுத்துகின்றனர். தங்களைப் போல்.

    ReplyDelete
  7. அந்தக்காலத்தையும் இந்தக்காலத்தையும் ஒப்பிட்டு நிறைய விஷயங்களை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்.

    இதைப்படிப்ப்வர்கள், அவரவர்கள் அனுபவத்தில், பலவற்றை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்னையர் தின இனிய நல்வாழ்த்துக்ள்.

    ReplyDelete
  8. "வேலை செய்தால் தான் சாப்பாடே... இல்லை என்றால் முதியோர் இல்லம்" என்னும் பயமுறுத்தல் வேறு...

    ஓய்வு பெற்றவர்கள் / ஓய்வு அனுபவிப்பவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்...

    ReplyDelete
  9. எங்க அக்காவையும் எங்க அம்மா ஒரே ஒரு பெண் பிள்ளை என்று சமையல் கட்டு பக்கமே வரவிடாமல் வளர்த்ததின் விளைவு , கல்யாணமாகி போன வீட்டில் வசைபாட காரணமாகி, அப்புறம் மும்பையில் உள்ள சொந்தபந்தங்கள் வந்து சமையல் கற்று கொடுத்தார்கள், அம்மாவுக்குதான் செம டோஸ் கிடைத்தது...!

    ReplyDelete
  10. இன்றைக்கோ அவர்களுக்கு 50 வயதைத்தாண்டிய பிறகு தான் பொறுப்புக்கள் அதிகமாயிருக்கின்றன! உடலும் மனமும் ஓய்வைத்தேடித்தேடி கெஞ்சுகின்றன! //

    நீங்கள் சொல்வது சத்தியாமான உண்மை இதை இப்போது நாம் கண்கூடாக பார்க்கிறோமே!

    ReplyDelete
  11. உண்மைதான், இன்றைய தலைமுறையினரின் எண்ணங்களும் செயல்களும் முற்றிலும் மாறிவிட்டது..

    ReplyDelete
  12. வேலை செய்யக்கூடாது ஆனால் சம்பளம் மட்டும் நிறைய வேண்டும் என்பது தான் இன்றைய இளைஞர்களின் நினைப்பாக இருக்கிறது....

    காலங்கள் வரைந்த கோலங்கள் - எத்தனை மாற்றங்கள்....

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  13. காலங்கள் வரைந்த கோலங்களை அழகாய், அருமையாக வரைந்து விட்டீர்கள்.
    இன்றைய சில இளைஞசர்கள் இப்படி உடல் உழைப்புக்கு பயப்படுபவர்களாக் இருக்கிறார்கள்.
    தன் தாயுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று பேப்பர் போட்டு , கடைகளுக்கு சாமான்கள போட்டு பின் கல்லூரி போய் படித்து வேலைக்கு போய் அம்மாவை நன்றாக வைக்கும் இளைஞ்சர்களும் இருக்கிறார்கள்.

    விவாகரத்துகள் அதிகரிப்பது மனதுக்கு கஷடமாக இருக்கிறது.
    எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டதேக் காரணம் என நினைக்கிறேன்.(இரு பாலர்களிடமும்)

    ReplyDelete
  14. பெண் பிள்ளைகள் திருமணமாகி புகுந்த வீடு செல்லும் போது சுயமாக அனைத்தும் தெரிந்து வைத்திருந்தால் மிக நல்லது என்பதை பெற்றோர் மறந்து வருவதாலேயே அதிக விவாகரத்துக்கு இவர்களும் ஒரு காரணகர்த்தாவாகி விடுகின்றனர்.. அதிக பாசத்தை தருவதாக நினைத்து தங்கள் பிள்ளைகளை கெடுத்து விடுகின்றனர். காலத்தின் கோலம் இன்னும் எதில் முடியுமோ..

    ReplyDelete
  15. //காலங்கள் வரைந்தவை அன்று அழகிய கோலங்கள்! இன்று வரைந்திருப்பதோ நிறைய சமயங்களில் கிறுக்கல்கள்தான்!
    // கசப்பான உண்மைதான்... மறுக்க முடியவில்லை.

    ReplyDelete
  16. எதையும் மறுப்பதற்கில்லை!! :-) :-(

    /இன்றைக்கோ அவர்களுக்கு 50 வயதைத்தாண்டிய பிறகு தான் பொறுப்புக்கள் அதிகமாயிருக்கின்றன!//

    முன்பெல்லாம் அம்மாக்களுக்கு 12-15 வயதிலும், மகள்களுக்கு 18 வயதிற்குள்ளும் கல்யாணமாகிவிடும் என்பதால், மூன்று நான்கு தலைமுறைகள் கூட பார்த்ததுண்டு. பிறகு படிப்பு, வேலை, சட்ட ரீதியாகக் கல்யாண வயது உயர்த்தியது உள்ளிட்ட காரணங்களால் அம்மாக்களுக்கே 20 வயதுக்குமேல்தான் கல்யாணம் ஆனது. இப்பல்லாம் பெண்கள் 30-க்குப் பிறகு திருமணம் செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. அதனால் வந்த தாக்கம்னும் சொல்லல்லாம், இல்லையாக்கா.

    என்னவோ, ஒரு சமயத்தில் எதிர்வரும் நம் முதுமையைப் போலவே, பிள்ளைகளின் எதிர்காலமும் பயமுறுத்துகின்றது.

    ReplyDelete
  17. வயதான காலத்தில் கூடுகிற பொறுப்புகளால் திணறும் பெற்றோர் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். நிதர்சனத்தை சிந்திக்கத் தந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  18. //வயதானவர்களில் அநேகம் பேருக்கு இன்னுமே ஓய்வு என்பதே கிடைக்கவில்லை என்பது தான் இன்றைய நிஜம்!

    நடைமுறை உண்மைகளை அப்படியே காட்டியுள்ளீர்கள் அம்மா ... காலங்கள் வரைந்த கோலங்களை அழகாய், அருமையாக வரைந்து விட்டீர்கள் அம்மா ...

    ReplyDelete
  19. காலங்கள் வரைந்த கோலங்கள் அருமை.விவாகரத்து பற்றி எழுதியுள்ளீர்கள், என் கருத்து ஒன்றினை இவ்விடம் முன்வைக்க விரும்புகின்றேன். படிக்காதவர்கள் எங்காவது விவாகரத்து செய்ததாக கேள்விபட்டுள்ளீர்களா, மெத்தப் படித்தவர்கள் தான் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகின்றார்கள். படித்தவரகளுக்கு இன்று பொறுமையோ, அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வழக்கமோ இல்லாமல் போய்விட்டது.
    மொத்தத்தில் இன்றைய கல்வி முறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தால் ஒழிய இவற்றை ஒழிக்க இயலாது.

    ReplyDelete
  20. உழைத்துச் சோர்ந்து போயிருக்கும் வயதானவர்களில் அநேகம் பேருக்கு இன்னுமே ஓய்வு என்பதே கிடைக்கவில்லை என்பது தான் இன்றைய நிஜம்!
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  21. \இன்றைக்கு அம்மாக்கள் பெண்களை வேலைகள் செய்யப் பழக்குவதில்லை.
    ‘ போகும் இடத்தில் தான் கஷ்டப்பட்டாக வேண்டும். கல்யாணமாகிப்போகும் வரையாவது என் பெண் இங்கே சுகமாக இருக்கட்டுமே!’ என்கிறார்கள். \

    இது உண்மை தான். என் ம்மா வளர்ந்த விதம் நீங்கள் சொன்னது போல எல்லா வேலைகளும் பழகி. ஆனால் நானோ எந்த வேலையும் பழக்கப்படாமல் வளர்க்கப்பட்டேன். அதற்க்காக செல்லம் என்றில்லை :) இந்த ஒரு விஷயத்தை தவிர மற்றவைகளில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தாயிடமிருந்தும் நபி வழியிலிருந்தும் கற்றுக்கொண்டது இன்று பெரும் உதவியாக இருக்கிறது.

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் நூற்றுக்கு நூறு உண்மை. பல விஷயங்கள் பெற்றோர்களை நினைத்தும், கணவரின் பெற்றோரை நினைத்தும் கவலைக்கொள்ள செய்கிறது. :(

    ReplyDelete
  22. எவ்வளவு மாற்றங்கள்,எதையும் மறுப்பதற்க்கில்லை...சிந்திக்கவைத்த பதிவு!!

    ReplyDelete
  23. அக்கா, கால மாற்றங்கள்
    பற்றிய அழகான ஆய்வு.உங்கள் படைப்புக்களை இப்ப இருக்கிற எக்ஸ் ஜெனரேஷன் -கள் வாசிக்க வேண்டும்.அட்லீஸ்ட் அவர்களால் செயல்படுத்த முடியாவிட்டாலும் ஒரு புரிந்துணர்வாவது ஏற்படுமே!

    ReplyDelete
  24. ஒரு பெண்பிள்ளையின் தாயாய் நான் ஆற்றவேண்டிய கடமையையும் பொறுப்பையும் காலத்தே நினைவுறுத்திய பதிவு. மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  25. விரிவான பின்னூட்டத்துக்கு, விரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ஜலீலா!
    நீங்கள் சொன்ன மாதிரி இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் வித விதமான் உணவகங்கள்! வசதிக்குத் தகுந்த மாதிரி மருத்துவ மனைகள்! காலம் மாறி விட்டது! அதன் பிரம்மாண்டம் மலைக்க வைக்கிறது!

    ReplyDelete
  26. நீங்கள் சொல்வது போல இன்னும் மோசமாகத்தான் நடைமுறை உண்மைகள் மாறிக்கொண்டு இருக்கிறது சகோதரர் பழனி கந்தசாமி! நாம் தான் நிறைய விஷயங்களை மனதில் அமிழ்த்திக்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது!

    ReplyDelete
  27. பராட்டுக்கு அன்பு நன்றி நிலா! இனிய கருத்துரைக்கும்கூட!

    ReplyDelete
  28. கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் அன்பு நிறைந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  29. நீங்கள் சொல்வது மாதிரி முதியவர்கள் நிலைமை தான் இன்று பரிதாபகரமாக இருக்கிறது தனபாலன்! அதுவும் படிப்பறிவில்லாதவர்கள் நிலைமை இன்னும் மோசம்!

    வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  30. ரொம்பவும் வெளிப்படையாக, உண்மையை எழுதியிருப்பதற்கு நன்றி சகோதரர் மனோ! இந்த மாதிரி நிலைமை உருவாகும்போது, மாமியார் அதற்காக சற்று முகம் சுளித்தால்கூட மாமியார் உடனேயே பொல்லாதவர்களாகி விடுகிறார்கள்!

    வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!!


    ReplyDelete
  31. வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ஆனந்த ராஜா!

    ReplyDelete
  32. கருத்துரைக்கும் தொடர்வதற்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட்!

    ReplyDelete
  33. // தன் தாய்க்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று பேப்பர் போட்டு , கடைகளுக்கு சாமான்கள போட்டு பின் கல்லூரி போய் படித்து வேலைக்கு போய் அம்மாவை நன்றாக வைக்கும் இளைஞ்சர்களும் இருக்கிறார்கள்.//

    நீங்கள் சொல்கிற‌ மாதிரி த‌ன் பெற்றோரை உள்ள‌‌ங்கைக‌ளில் வைத்துத் தா‌ங்கும் பிள்ளைக‌ள் இன்றும் இல்லாம‌லில்லை கோம‌தி! அந்த‌‌ ச‌த‌விகித‌ம்
    குறைந்து வருவது தான் கவலையளிக்கிறது!

    கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  34. நீங்கள் எழுதியிருப்பது மிகவும் சரியானது ராதா! பெரும்பாலான இன்றைய விவாகரத்துக்களில் பெண்ணின் பெற்றோர்களே காரணகர்த்தாவாக இருக்கிறார்கள்! அதிக பாசமும் அதிக சுதந்திரம் தருவதும் இந்த மாதிரி சீர்கேடுகளுக்குக் காரணங்களகி விடுகின்றன!

    கருத்துரைக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  35. கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி உஷா!

    ReplyDelete
  36. நீங்கள் சொல்வது போல தாமதமான திருமணங்களும் காரணமாகி விடுகின்றன ஹுஸைனம்மா! இதையும் மறுப்பதற்கில்லை! இருவரும் பொருளீட்டுவதற்கு சென்று விடுவதால் வயதானவர்களின் மீது சுமைகள் திணிக்கப்பட்டு விடுகின்றன! மற்ற‌ எதற்கும் மறுப்பு உடனேயே சொல்லி விட் முடியும். ஆனால் பேரப்பிள்ளைகள் விஷயத்தில் மறுப்பு சொல்ல நா எழாது!

    கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  37. கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  38. //படிக்காதவர்கள் எங்காவது விவாகரத்து செய்ததாக கேள்விபட்டுள்ளீர்களா, மெத்தப் படித்தவர்கள் தான் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகின்றார்கள். படித்தவரகளுக்கு இன்று பொறுமையோ, அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வழக்கமோ இல்லாமல் போய்விட்டது.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோதரர் ஜெயக்குமார்!

    இதில் பெற்றோர்களுக்குத்தான் அதிகம் பொறுப்பு உள்ள‌து! எதையுமே சொல்லிக்கொடுக்கிற விதத்தில் சொல்லும்போது தான் மனதில் ஏறும் வாழ்க்கைக் கல்வி உள்பட!!

    ReplyDelete
  39. நீங்கள் சொல்லியிருப்பது போல நிறைய வித்தியாசங்கள்.
    பெண் குழந்தைகளை முதலிலிருந்தே வேறு வீட்டிற்குப் போகபோகிறாய், எல்லாம் கற்றுக் கொள் என்று மனதளவில் தயார் செய்து விடுகிறோம். ஆனால் ஆண் குழந்தைகளை அப்படிப் பழக்குவதே இல்லை.
    இன்றைக்கு ஆணுக்கு சமமாக பெண்களும் படித்து வேலைக்குப் போவதால் ஒன்றும் சொல்ல முடிவதில்லை என்று தோன்றுகிறது.
    வயதானவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ரொம்பவும் நிஜம்.

    இவர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள தயங்கினால், காப்பகங்களில் விடுவதற்கும் இந்தக் கால இளம் பெண்கள் தயங்குவதில்லை.

    காலம் மாறித்தான் போச்சு!

    ReplyDelete
  40. படிக்காதவர்களும் மாறித்தான் வருகின்றனர். கிராமங்களிலும் விவாகரத்து என சட்டப்படி நீதிமன்றங்களைத் தேடிப் போகாவிட்டாலும் உள்ளூர்ப் பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுப் பிரிக்கப்படுகின்றனர். பெரும்பாலான பெண்களின் மனமாற்றத்துக்கு முக்கியக் காரணம் தொலைக்காட்சியே. இது பட்டி, தொட்டியெல்லாம் பெருகிக் கிடப்பதால் மக்கள் தங்களை அந்தத் தொலைக்காட்சிகளில் வரும் பெண்களைப் போல் சுதந்திரமாகவும், ஆடம்பரமாகவும் வாழவேண்டியவர்கள் என நினைக்கிறார்கள்.

    ReplyDelete
  41. இன்றைய பெண்களிடமோ, அவர்களின் பெற்றோரிடமோ நாம் புத்திமதி சொன்னால் அவமானம் தான் மிஞ்சும். என்ன செய்வது! :((((( இதைக் குறித்துப் பலரும் பலவிதங்களில் சொல்லியும் எதுவும் மாறுவதாய்த் தெரியவில்லை.

    ReplyDelete
  42. வயதானவர்களின் நிலைமையைப்பற்றி நான் எழுதியிருந்த கருத்துக்கு உங்கள் கருத்தும் வலு சேர்க்கிறது வேதா! நிஜத்திற்கு எப்போதும் வலிமை அதிகம் தானே? வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  43. ரொம்ப நாட்களுக்குப்பிறகு வருகை தந்திருப்பதற்கும் அழகிய கருத்தினைத்த‌ந்திருப்பதற்கும் அன்பு நன்றி நாஸியா!

    பெண் என்ப‌வ‌ள் குடும்ப‌ப்பொறுப்புகளை ச‌ரியான‌ வ‌ழியில் செலுத்தினால் ம‌ட்டுமே இல்லற வாழ்வின் அச்சாணி ப‌ல‌மாக‌ இருக்கும்! வேறொரு குடும்ப‌த்தில் நுழைந்து அந்த‌‌ மாதிரிப் பொறுப்புக‌ளைத் தாங்கி அவ‌ள‌து குடும்ப‌த்தை வ‌ள‌மையாக்குவ‌த‌ற்கு அம்மா என்ப‌வ‌ள் தான் முத‌ல் ப‌யிற்சியினைத்த‌ர‌ வேண்டும். அத்த‌கைய‌ ப‌யிற்சி இல்லா‌விட்டாலும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருந்து விட்டால் போதும், நாம் நிறைய பேரை ஜெயித்து விட முடியும்!

    ReplyDelete
  44. கருத்துரைக்கு அன்பு ந‌ன்றி மேனகா!

    ReplyDelete
  45. இந்த மாதிரி அலசல்கள் இளந்தலைமுறைக்கு ஒரு புரிந்துணர்வைக்கொடுக்கும் என்பது உண்மை தான் ஆசியா! ஆனால் அதற்கு அவர்கள் அதற்கான பக்குவத்தையும் பொறுமையையும் மனதில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்!

    அழகிய பின்னூட்டத்திற்கு இனிய நன்றி!

    ReplyDelete
  46. ஒரு தாய் நல்ல சிந்த‌னைகளை தன்னிடத்தே வளர்த்துக்கொள்ளும்போது நிச்சயம் அவை அத்தனையும் அவரது மகளுக்குள் நல்ல வாழ்க்கைக்கான நல் உரமாய் பதிந்து போகும் கீதமஞ்சரி! நிச்சயம் தங்கள் மகளுக்கு அருமையான இல்லற வாழ்வு காத்திருக்கிறது!!

    வருகைக்கு அன்பார்ந்த‌ நன்றி!

    ReplyDelete
  47. கடைசி இரண்டு வரிகள் சுடுகின்ற நிஜம்! கிறுக்கல்களை கோலமாக்க முயற்சிக்க வேண்டும். நல்ல சிந்தனைகளை வளர்த்து, நேரக் கட்டுப்பாட்டையும், உழைப்பையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் நிச்சயம்!

    ReplyDelete
  48. முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு ந‌ன்றி கீதா சாம்பசிவம்!

    கிராமங்களில் நீங்கள் சொன்னது போல இன்னும் சில இடங்களில் பஞ்சாயத்துத் தீர்ப்பு விவாகரத்துக்களை நிர்ணயிக்கிறது என்பது உண்மை தான்! அது போல, கிராமங்களில் மனைவி சரியில்லை என்றால் வேறு பெண்களைத்தேடிக்கொள்வது வழக்கமாக இருந்து வருவ‌தும் உண்மை!!

    ReplyDelete
  49. இனிய கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி ரஞ்சனி!

    இன்றைய இளம் பெண்களுக்கு அதிக சுதந்திரமும் செல்லமும் வழங்கப்படுவதால்தான் நிறைய தவறுகள் நடக்கின்றன! உங்கள் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன்!!

    ReplyDelete
  50. நிச்சயம் கிறுக்கல்களை அழகிய கோலங்களாக்க நம்மாலான நல்ல முயற்சிகளை நீங்கள் சொல்கிற மாதிரி தொடர்ந்து செய்ய வேன்டும் சகோதரர் பால கணேஷ்!

    வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete