Monday, 10 December 2012

சோள இட்லி

இன்றைய சமையல் முத்தாக நான் தேர்ந்தெடுத்திருப்பது சோள இட்லி. பொதுவாய் புழுங்கலரிசியை ஊறவைத்து நம் பக்கத்தில் இட்லி சுடுவது வழக்கம். இதைத்தவிர சேமியா இட்லி, ரவா இட்லி, ஜவ்வரிசி இட்லி வகைகள் நடைமுறைப்பழக்கத்தில் இருந்து வருகின்றன. சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு கேழ்வரகு இட்லி, கோதுமை இட்லி, கோதுமை ரவா இட்லி செய்து தருவது வழக்கமாயிருக்கிறது. அந்த வரிசையில் வருவது தான் சோள இட்லி.


இந்த மக்கா சோள முத்துக்கள் படத்திலுள்ளது போல காட்சியளிக்கும். சோயா பீன் தானியத்தை விட சிறியதாக இருக்கும். கம்பு, கேழ்வரகு போல நார்ச்சத்து மிகுந்தது. கோதுமையில் சப்பாத்தி செய்யும்போது இதையும் க‌லந்து செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயுள்ள‌வர்களுக்கு மிக நல்லதொரு உணவு இது! ஆங்கிலத்தில் JOWAR என்றும் ஹிந்தியில் SORGHUM என்றும் அழைக்கப்படுகிறது!

காய்ந்த சோள முத்துக்களையும் புழுங்கலரிசியையும் ஊற வைத்து அரைத்துச் செய்வது தான் இந்த சோள இட்லி. முறையாகச் செய்தால் நம் வழக்கமான இட்லியைக்காட்டிலும் மிருதுவாக இருக்கும். இதற்குப் பக்கத்துணை சாம்பாரை விட, தேங்காய் சட்னியையும் விட, தக்காளிச் சட்னி, வெங்காய்ச்சட்னி, காரச்சட்னி வகைகள் தாம் பொருத்தமாக இருக்கும்!!



சோள இட்லி

செய்யத் தேவையான பொருள்கள்:

காய்ந்த மக்காச்சோள முத்துக்கள்- 1 கப்
புழுங்கல் அரிசி- 1 கப்
முழு உளுந்து- 1 கப்
வெந்தயம்- 1 ஸ்பூன்
தேவையான‌ உப்பு

செய்முறை:

உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து போதுமான நீரில் ஊற விடவும். பொதுவாய் உளுந்து 1 மணி நேரம் ஊறினால் போதுமானது.
அரிசியையும் சோளத்தையும் தனித்தனியாக போதுமான நீரில் ஊற வைக்கவும்.
இரண்டுமே 6 மணி நேரம் ஊற வேண்டும்.
இட்லிக்கு அரைப்பது போல முதலில் உளுந்தை பூக்க பூக்க அரைத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு அரிசி, சோளம் இரண்டையும் நன்கு அரைக்கவும்.
பின் இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
காலியில் சுடச்சுட இட்லிகளை வேக வைத்து எடுக்கவும்.
மிருதுவான, ருசியான சோள இட்லி தயார்!!

30 comments:

  1. பூ போல இட்லி படத்துல ரொம்ப ஷாப்டா தெரியுது மேடம்... வெங்காய சட்னியும் சூப்பர்.. செய்து பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. சட்னியும் இட்லியும் பார்க்கவே சூப்பரா இருக்கே...:)

    ஒரு கேள்வி அக்கா...
    இங்கே சோளக்குறுணி ரவா சைஸில் கடைகளில் இருக்கு. அதைவாங்கி கொஞ்சமா ஊறவைத்து இப்படி அரைத்து அல்லது அப்படியே அரைத்த ஏனையவற்றுடன் கலந்து செய்யலாமா?
    ஒருவேளை பதம் பிசகி இட்லியால் மண்டையில் அடித்துக்கொள்ள வேண்டி வந்திடுமோ...:)))

    மிக்க நன்றி அக்கா நல்ல பகிர்வுக்கு...

    ReplyDelete
  3. அட ! நாங்களும் முயற்சி பண்ணி பார்க்கிறோம் !

    ReplyDelete
  4. சோளத்தில் இப்படி மிருதுவாக இட்லி செய்து காட்டி இருக்கின்றீர்கள்.பார்க்கவே சாப்பிடத்தூண்டுகிறது.

    ReplyDelete
  5. புதுமையான தகவல் ஆனால் சுவையாக உள்ளது. மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. அக்கா, ‘காய்ந்த சோள முத்துக்கள்’ என்றால்.. பாப்கார்ன் செய்வதற்காகக் கடைகளில் பாக்கெட்டுகளில் வைத்திருப்பார்களே அதுதானே?

    அரிசியும், சோளமும் ஒன்றாகச் சேர்த்து ஊறபோடலாமா? ஒன்றாக அரைக்கலாமா அல்லது தனித்தனியேதான் அரைக்கணுமா?

    கேழ்வரகு இட்லியையும் இதேபோல செய்முறை போடுங்களேன். அதுவும், ஊறப்போடுவதிலிருந்து ஸ்டெப்-பை-ஸ்டெப்பாகப் படமெடுத்து. ப்ளீஸ்!! :-))

    ReplyDelete
  7. புதுசா இருக்கு....கண்டிப்பா செய்து பார்க்கிறோம்.....இன்னும் இதை போல் இருந்தால் சொல்லுங்க....பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  8. Vow!
    I hate idlies!
    But adhe idly square ah senja saapidven, bcoz its different!
    Will tell my mom to try this!
    Thank u:)

    Can check my crafts @ http://theepz-madcrafts.blogspot.in/

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. இட்லி மாவு புளிக்க வேண்டும் என்றால், நாங்கள் சம்மர் வரை காத்திருக்க வேண்டும் செய்து பார்க்க.... :)

    முயற்சித்து விடுவோம்!

    ReplyDelete
  10. இட்லியில் புதுப்புது வகை உண்பவர்களை உற்சாகப் படுத்தும்.
    கேழ்வரகு மாவை (உலர்ந்தது) அரைத்த உளுந்து மாவுடன் கலந்து வைத்து மறுநாள் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை இத்யாதிகளை வதக்கி சேர்த்து இட்லியாக்கியது உண்டு. சோள மாவை முயற்சிக்க வேண்டும்.

    @வெங்கட் சகோ...

    முந்தைய நாள் மாவில் ஒருகை வைத்திருந்து கரைக்கும் போது சேர்த்து
    அடுப்போரம் பாத்திரத்தை வைத்தால் குளிர் பிரதேசங்களில் பதமாக புளித்து விடும் என்கிறார்களே...

    ReplyDelete
  11. நல்ல ரெசிபி. செய்து பார்க்கலாம். படத்தை பார்க்கும் போதே பசி வயிற்றை கிள்ளுகிறது...

    ReplyDelete
  12. செய்முறை விளக்கம் தெளிவாக இருந்தது.மிகவும் உபயோகமான பகிர்வு. இட்லி புதுமையாக இருக்கிறது. செய்து பார்க்கிறேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    ராஜி

    ReplyDelete
  13. அக்கா ..pop corn சோள முத்துக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்குமே அதை ஊறவைத்து செய்ததா இந்த இட்லி ..
    நான் இரண்டொரு தினங்களில் செய்துவிட்டு சொல்கிறேன் .பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. பாராட்டுரைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராதா! அவசியம் செய்து பாருங்கள்.

    ReplyDelete
  15. படத்திலுள்ள‌து போல உங்கள் சோள‌க்குறுணி இருந்தால், அரைக்காமல் அப்படியே சேர்த்து கொஞ்சமாக ட்ரையல் செய்து பார்க்கலாம் இள‌மதி! கோதுமை ரவாவை இட்லி செய்ய அப்படியே சேர்க்கிறோமல்லவா, அது மாதிரி! அரைத்தும் செய்து பாருங்கள்!!

    கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி!!

    ReplyDelete
  16. செய்து பார்த்துட்டு சொல்லுங்கள் லக்ஷ்மிம்மா!

    ReplyDelete
  17. முயற்சி பண்ணிப்பார்த்து சொல்லுங்கள் மோகன்குமார்! வருகைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  18. பாராட்டு கலந்த கருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  19. இனிய கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

    ReplyDelete
  20. ஹுஸைனம்மா! நீங்கள் குறிப்பிட்டுள்ள‌‌ சோளம் இல்லை இது! உங்களுக்காக சில தகவல்களும் படமும் மறுபடியும் இந்தப் பதிவில் இனைத்துள்ளேன்.
    சோளமும் அரிசியும் ஒன்றாகவே ஊறப்போட்டு அரைக்கலாம். ஆனால் அரிசி சீக்கிரம் அரைபட்டு விடும். சோள‌ம் அரைபட சற்று அதிக நேரம் பிடிக்கும். அல்லது ஊறிய சோளத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பின் அரிசியுடன் சேர்ந்தரைக்கலாம்.

    ReplyDelete
  21. விரைவில் கேழ்வரகு இட்லி பற்றி பதிவிடுகிறேன் ஹுஸைனம்மா. கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மலர்!!

    ReplyDelete
  23. பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்! இட்லி மாவு புளிக்க சகோதரி நிலாமகள் சில யோசனைகள் இங்கே தெரிவித்திருக்கிறார்கள். அவனை நன்கு சூடு பண்ணி பிறகு OFF பண்ணி விட்டு மாவை அதற்குள் வைத்தால் மாவு சீக்கிரம் பொங்கும்!

    ReplyDelete
  24. வருகைக்கும் யோசனைக்கும் அன்பு நன்றி நிலாமகள்! கேழ்வரகு இட்லிக்கான குறிப்பிற்கும் கூட!! அளவுகளையும் எழுதியிருக்கலாமே?

    ReplyDelete
  25. வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  26. அவசியம் செய்து பாருங்கள் ராஜி!

    ReplyDelete
  27. மறுபடியும் இந்தப் பதிவிலேயே இதில் குறிப்பிட்டுள்ள சோள‌ வகையின் படமும் அதைப்பற்றிய சில தகவல்களும் இணைத்திருக்கிறேன் ஏஞ்சலின்! செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்!

    ReplyDelete
  28. நல்ல குறிப்புகள். என்னதான் அரைத்தாலும் சோளம் கொஞ்சம் நறநறவென அகப்படுமோ? அல்லது அதுவும் அரைபட்டு விடுமா?

    ReplyDelete
  29. இட்லியும் சட்னியும் சூப்பர் அக்கா.சத்தானது.
    அக்கா தேவையானவற்றில் மக்காச் சோள முத்துக்கள் என்றிருப்பதை சோள முத்துக்கள் என்றாக்கவும்.

    ReplyDelete