Sunday 19 February 2012

நம்ம ஊரு நல்ல ஊரு!!!

15 நாட்களுக்கு முன் சென்னை, கோவை, தஞ்சை என்று ஒரு அவசியப் பயணம் 10 நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டியிருந்தது. சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் உடனடியாகச் செல்ல வேண்டியிருந்ததால் காரை கோவைக்கு வரச்சொல்லி விட்டோம். அதனால் சென்னை ஏர்போர்ட்டில் இந்த முறை FAST TRACK TAXI SERVICE உள்ள இடம் சென்று மயிலாப்பூருக்கு டிக்கட் வாங்கினோம்.



ரூபாய் 450 மட்டும்தான் ஆகியிருந்தது. இரு வருடங்கள் முன்பு வரை தனியார் டாக்ஸிகளுக்கு கிட்டத்தட்ட 1000 வரை இதே இடத்திற்கு கொடுத்திருக்கிறோம். இந்த FAST TRACK TAXI SERVICE வந்ததிலிருந்து வசதியாக இருப்பதாகவும் செலவு குறைவாக இருப்பதாகவும் எல்லோருமே சொன்னார்கள். என் அனுபவமும் அதே போலத்தான் இருந்தது.


ராதாகிருஷ்ணன் சாலையில் உட்லாண்ஸ் ஹோட்டலில் தங்குவது தான் எப்போதும் வழக்கம். அதிலேயே இருக்கும் உணவகம், பக்கத்தில் சரவண பவன் -இது தான் எப்போதுமே சாப்பிட வசதி. சாப்பிட்டு வெளியில் அலையவும் வசதி. என் கணவருக்கு எங்கு சென்றாலும் இரண்டு இட்லி போதும். ஆனால் நானும் என் மகனும் எங்கெல்லாம் வித்தியாசமான உணவு இருக்கிறதோ, அங்கு தேடிப்பிடித்து செல்வோம். 25 வருடங்களாக உணவகம் வெளி நாட்டில் நடத்தி வரும் அனுபவத்தால் ஏற்பட்ட தேடல் இது. இந்த முறை என் கணவரை சம்மதிக்க வைத்து, ரொம்ப நாட்களாக போக வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த உணவகம் ஒன்றிற்குச் சென்றோம்.

நுங்கம்பாக்கத்திலும் முகப்பேரிலும் இருக்கிறது இந்த ‘ சஞ்சீவனம் ’ என்ற உணவகம். கேரள ஆயுர்வேத மருத்துவ மனையுடனேயே இணைந்து நடத்தப்பட்டு வருகிறது இந்த ‘சஞ்சீவனம்’ ! நானும் என் கணவரும் என் சினேகிதியுமாகச் சென்றோம். ‘ராஜ கீயம்’ என்ற சாப்பாட்டைத் தேர்ந்தெடுத்தோம்.

முதலில் ஒரு பழத்துண்டு வைத்தார்கள் சாப்பிட. அதை சாப்பிட்டு முடித்ததும் சத்துள்ள ஐந்து பானங்கள் [appitizers] சிறு சிறு கப்புகளில் வரிசையாக வந்தன.



1. முதலில் பேரீச்சம்பழ ஜுஸ்

2. அடுத்தது முந்திரி, பாதாம் துண்டுகள் மிதந்த பால்.

3. அடுத்தது காய்கறி சூப்.

4. அதற்கப்புறம் கறிவேப்பிலை அரைத்துப்போட்ட ருசியான மோர்.

5. கடைசியாக சிகப்பரிசி கஞ்சி.

இவற்றை சாப்பிட்டு முடித்ததும் சமைக்கப்படாத இனிப்பு சிகப்பரிசி புட்டு, நான்கு வகை வேக வைக்காத காய்கறி பச்சடிகள் வந்தன.

அதற்கப்புறம் ஓரளவு வெந்த காய்கறி வகைகள் நான்கு, முழுவதும் வெந்த காய்கறி வகைகள் நான்கு வந்தன. அதன் பின்பே சிகப்பரிசி சாதம் புளி சேர்க்காத சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, துவையலோடு வந்தன.



அதன் பின் சிகப்பரிசி பாயசம், தேங்காய்த்துருவல் கலந்த பீடா தருகிறார்கள். இறுதியாக ஒரு கரண்டி தேனை கையில் ஊற்றுகிறார்கள். இது செரிப்பதற்காம்!

Appitizers ஒரு சிறு கரண்டி அளவு தானிருக்கும். மற்றபடி சாலட் வகைகள், காய்கறி வகைகளை மறுபடியும் கேட்டால் தருகிறார்கள். ருசியாகவும் நிறைவாகவும் சாப்பாடு இருந்தது. சாலட் வகைகள் நிறையவும் சாதம் குறைவாகவும் சாப்பிட்டு எழுந்தோம். எங்கள் மூவருக்கும் தண்ணீர், டிப்ஸ் உள்பட 750 ரூபாய் ஆனது. அவசியம் செல்ல வேண்டிய உணவகம் இது.

அடுத்த நாள் மாலை உட்லாண்ஸ் ஹோட்டல் எதிரே உள்ள ‘ இட்லி விலாஸ்’ என்ற ஒரு புதிய உணவகத்திற்குச் சென்றோம். பெயருக்கு ஏற்ற மாதிரி பல வகை இட்லிகள். நல்ல கூட்டம். அப்போதுதான் திறந்திருந்ததால் இன்னும் மெனு கார்ட் தயாராகவில்லை என்றார்கள். ஒரு கரும்பலகையில்தான் உணவு வகைகளை எழுதியிருந்தார்கள்.



குண்டூர் இட்லி,

சம்மந்தி இட்லி,

சில்லி இட்லி,

பொடி இட்லி,

சின்ன வெங்காய ஊத்தப்பம்,

இலந்தைப்பழ சப்பாத்தியும் இனிப்பு மாங்காய் பச்சடியும்,

வெட்டி வேர் எலுமிச்சை சர்பத்.

இப்படி வித்தியாசமான உணவு வகைகள். சின்ன வெங்காய ஊத்தப்பம் மிகவும் சுவை. குண்டூர் இட்லி, பொடி தடவி எண்ணெயில் வறுத்திருந்தார்கள். பொங்கலும் சாம்பார், சட்னி வகைகளுமே சுவையாகத்தானிருந்தது. மினரல் வாட்டர் பாட்டில்கள் இல்லாதது தான் குறை.

தஞ்சையில் ஒரு அனுபவம்.

பிரபல இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பணம் கட்ட ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் சென்னையிலிருந்து ஃபோன் செய்து தஞ்சையிலுள்ள ஒரு மருத்துவ மனையின் விலாசம் சொல்லி இரத்தப்பரிசோதனை செய்யுமாறு சொன்னார்கள்.

மறு நாள் காலை வெறும் வயிற்றில் இரத்தம் கொடுக்கச் சென்றோம் நாங்கள். இரத்தம் கொடுக்கக் காத்திருந்தபோது, அங்கு வந்த ஒரு பெண், ‘ இதற்கு முன்னால் வந்து ரத்தம் கொடுத்துச் சென்றார்களே, அவர்கள் பெயர் என்ன தெரியுமா, நான் எழுத மறந்து விட்டேன் ’ என்று கேட்க, அங்கு ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த பெண் ‘ எனக்கெப்படி தெரியும்? நீயல்லவா ஒழுங்காக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்? ’ என்றது. கேட்டுக்கொண்டிருந்த எனக்கு தலை சுற்றியது. ‘சரி தான் மறுபடியும் ஒரு அனுபவமா?’ என்று சலித்துப்போனது மனது. நமது இரத்தப் பரிசோதனையின் ரிசல்ட் ஒழுங்காக வருமா என்ற சந்தேகம் தானாக வந்தது. அதற்கப்புறம் ECG பரிசோதனைக்காக என் கணவர் உள்ளே போக, நான் ரிசப்ஷன் அருகே காத்திருந்தேன். அப்போது ஒரு பையன் வந்து, ‘ உள்ளே போயிருப்பவர் வந்ததும் இவர்களுக்கு [எனக்கு] ECG எடுத்து விடு’ என்றதும் அந்தப்பெண் ‘எனக்குத் தெரியாது ECG எடுக்க’ என்றது. அந்தப் பையன் முறைத்துப்பார்த்தவாறே சென்று விட்டான். அதே மாதிரி, எனக்கு ECG எடுக்க உள்ளே வந்த அந்தப் பெண் என்னென்னவோ பட்டன்களைத் தட்டி எதுவும் புரியாமல் வெளியே சென்று விட்டது. வேறு பெண் ஒன்று மொபைலில் பேசிக்கொண்டே வந்தது. பேசியவாறே பட்டன்களைத் தட்டியது. என் கணவர் சத்தம் போட்ட பிறகு தான் பேச்சை நிறுத்தியது.

வெளியே வந்ததுமே அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அழைத்து எல்லாவற்றையும் சொல்லி இனியாவது உங்கள் நிறுவனத்தில் நம்பிக்கை வைத்து இணைய வருபவர்களுக்கு ஒரு தரமான மருத்துவமனையை அடையாளம் காட்டுங்கள் என்று கடிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

பி.கு: அந்த மருத்துவ மனைக்கு, இரத்தப்பரிசோதனையின் நகலை வாங்கச் சென்ற போது, நாங்கள் புகார் செய்த பின் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும் அதன் பலனாக தலைமை மருத்துவர் எல்லோரையும் கூப்பிட்டு மிகவும் கடிந்து கொண்டதாகவும் நகலைக் கொடுத்த உதவியாளர் சொன்னார்.







40 comments:

  1. சூப்பராக இருக்கு அனுபவங்கள்.

    ச்ஞ்ஜீவனம்... சூப்பர், உணவையும் பரிமாறியிருக்கும் முறையையும் பார்க்க ஆசையாக இருக்கு. அதிலும் ரொம்பவும் மலிவாக இருக்கே...

    ஒருவரின் சாப்பாட்டிற்கே 500 க்கு மேல வரும் எனப் புலம்புகிறார்கள்.. இது மிக மிக மலிவுதான்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  3. 'ச‌ஞ்சீவ‌ன‌ம்' உண‌வ‌க‌ சாப்பாடு ப‌ற்றிய‌ விவ‌ர‌ணை கூடிய‌ விரைவில் அங்கு சென்று உண்ண‌ ஆவ‌லைத் தூண்டிய‌து. ந‌ம்ம‌ ஊரின் ந‌ல்ல‌ செய்தியைப் ப‌கிர்ந்து கொண்ட‌ சூட்டோடு, ம‌ருத்துவ‌ம் வியாபார‌மாகிப் போன‌ அவ‌ல‌த்தை அனுப‌வ‌த்தில் அணுகிய‌து ச‌ரியான‌ சூடு. க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டியிருக்கிற‌து எங்கேயும் எப்போதும். ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு க‌வ‌ன‌ப்ப‌டுத்தி ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வைத்த‌து ந‌ல்ல‌ முய‌ற்சி. ந‌ம‌க்கென்ன‌ என்றிறாம‌ல் ஒவ்வொருவ‌ரும் அக்க‌றையோடிருந்தால் இத்த‌கைய‌வ‌ர்க‌ளைக் க‌ட்டுப்ப‌டுத்த‌வேணும் செய்ய‌லாம்தான் ச‌கோ...

    ReplyDelete
  4. (1) மிகவும் ருசிகரமான பதிவு.

    (2) பல இடங்களில் இதுபோல கவனக்குறைவுகள் உள்ளன. இந்த செல்போனை பேசாமல் யாரும் எதுவும் செய்வதில்லை. இதனால் அவர்களின் கவனம் சிதறுவதும், பாதிக்கப்பட்ட நமக்கு எரிச்சல் ஏற்படுவதும் சகஜமாக உள்ளது.

    மிகவும் நல்ல அனுபவப் பகிர்வு.
    வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. சஞ்ஜீவனம் - நல்ல அனுபவமாக இருந்திருக்கும். சென்னை செல்வது அரிது என்பதால் - அதுவும் நுங்கம்பாக்கம், ம்ஹும்.. - ஏக்கபப்டுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    இதுபோல உணவகங்கள், அமீரகத்தில் இருக்கின்றனவா? (பர்ஸுக்கும் பாதுகாப்பாக)

    மருத்துவமனைகள், அதுவும் இந்தியாவில் - போகும் வாய்ப்பே வரக்கூடாது என்பதுதான் நித்தம் வேண்டுதல். மிக மிக அலட்சியமாக இருக்கின்றனர். மருத்துவர்கள் உடபட்.

    ReplyDelete
  6. ருசிகரமான பகிர்வு.அதனை படத்துடன் சொல்லிய விதம் அருமை.

    ReplyDelete
  7. புகார் செய்த பின் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும் அதன் பலனாக தலைமை மருத்துவர் எல்லோரையும் கூப்பிட்டு மிகவும் கடிந்து கொண்டதாகவும் நகலைக் கொடுத்த உதவியாளர் சொன்னார்.

    இதனால் பயனொன்றும் விளைந்திருக்காது..
    கண்துடைப்புதான்..

    ReplyDelete
  8. சுவையான அனுபவங்கள்....

    மருத்துவமனை அனுபவங்கள்.... கஷ்டம்...

    ReplyDelete
  9. இரெண்டாவது அனுபவம் எனக்கும் வந்தது ஒரு முறை. யாரோட டெஸ்ட் ரிசல்டை பேர் மாற்றி எனக்கு குடுத்து விட்டார்கள் .ரிசல்ட் எனக்கும் முன்பே என் வீட்டிற்கும் உறவினர்க்கும் தெரிய வர....ஏகப்பட்ட பிரச்சனை ...மன உலைச்சல் :-( .

    டோட்டல் ரிசல்டில் மெதுவாக செக் செய்ய கடைசியில் பிளட் குருப் என்னுடையதே இல்லை... டாக்டர் என் காலில் விழாத குறை ஒன்றுதான் ... இதுப்போல அறை குறை டெக்னீஷியன்(ள்) இருக்கும் வரை ஒன்னுமே செய்ய முடியாது .

    ReplyDelete
  10. சாப்பாடு ரெஸிபி ஐட்டங்கள் வித்தியாசமா இருக்கு. :-)

    ReplyDelete
  11. நல்ல அனுபவங்கள் மேடம்.நீங்கள் விவரித்தவிதம் உடனடியாக சாப்பிட வேண்டும் என தோன்றிவிட்டது.

    பல மருத்துவ மனைகளில் இதே நிலைமைதான்.மருத்துவரிடம் செல்லவே பயமாக இருக்கு. நீங்க புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது நல்ல விஷயம்.

    ReplyDelete
  12. ச்ஞ்ஜீவனம்... சூப்பர், உணவையும் பரிமாறியிருக்கும் முறையையும் பார்க்க ஆசையாக இருக்கு. அதிலும் ரொம்பவும் மலிவாக இருக்கே...
    உண்மையிலேயே வித்யாச அனுபவம்தான்

    ReplyDelete
  13. அங்கே 'ஓணம் சாத்யா' என்று ஓணம் நாளில்
    சிறப்பு விருந்தும் உள்ளது. அடையாறிலும் அதற்குக் கிளை
    உள்ளது. நீங்கள் போட்ட இட்லிவிலாசின் மெனு வை பார்த்ததும்
    எனக்கு , நாங்கள் ஒருதரம் கல்யாண வீட்டில் சாப்பிட்டு ஜமாய்த்த
    'குஷ்பூ இட்லி '[ என்னமா பேர் வைக்கிறார்கள் ] , இளநீர் பாயாசம் போன்ற
    வித்யாச ஐட்டங்கள் நினைவுக்கு வந்தன.
    சுவையான பதிவு.

    ReplyDelete
  14. உண்மையிலேயே சஞ்சீவனத்தின் சாப்பாடு மிக‌ அருமை அதிரா! வெறும் சாம்பார், சாதம் ரசம் என்றில்லாமல் காய்கறிகளுக்கும் ருசிக்கும் அதிக‌ முக்கியத்துவம் கொடுத்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் பதிவில் எழுதினேன். அழகான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  15. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ரத்னவேல் நடராஜன்!!

    ReplyDelete
  16. விரிவான பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள் நிலா! அன்பு நன்றி!! பொதுவாய் வெளியூர் செல்லும்போது வயிற்றுக்கு நல்லதாய் சாப்பாடு கிடைப்பதில்லை. அதனால்தான் சத்துக்கள் நிறைந்த சாப்பாட்டை சாப்பிட்டதும், இதை பதிவில் போட்டு அனைவருக்கும் இது பயனளிக்க வேண்டுமென நினைத்தேன்!

    ReplyDelete
  17. இந்த அலைபேசியை நிறைய பேர் தொல்லை பேசி, கொலை பேசி என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அந்த அள‌விற்கு மனிதர்கள் அதற்கு அடிமையாகி விட்டார்கள். இத‌னால் அடுத்த‌வ‌ர்க‌ளின் நேர‌மும் பாதிக்க‌ப்ப‌டுகிற‌து.
    என‌து க‌ருத்தையே நீங்க‌ளும் பிர‌திப‌லித்திருக்கிறீர்க‌ள். விரிவான‌ பின்னூட்ட‌த்திற்கு இனிய‌ ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் வை.கோபால‌கிருஷ்ண‌ன்!!

    ReplyDelete
  18. அமீரகத்தில் இந்த மாதிரி உணவகங்கள் இல்லையென்று தான் நினைக்கிறேன் ஹுஸைனம்மா!

    நீங்கள் சொல்வது போல உண்மையில் ந‌ம் த‌மிழ‌க‌த்தில் எந்த‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு செல்ல‌வும் ப‌ய‌மாக‌த்தானிருக்கிற‌து.

    இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  19. அன்பார்ந்த க‌ருத்துரைக்கு இனிய நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  20. நீங்கள் சொல்வது சரி தான் ராஜராஜேஸ்வரி! நிறைய சமயங்களில் இதெல்லாம் கண் துடைப்பு தான். எல்லாவற்றையும் க‌மிஷன் தான் நிர்ணயிக்கிறது இப்போதெல்லாம்!

    ReplyDelete
  21. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!!

    ReplyDelete
  22. // இர‌ண்டாவது அனுபவம் எனக்கும் வந்தது ஒரு முறை. யாரோட டெஸ்ட் ரிசல்டை பேர் மாற்றி எனக்கு குடுத்து விட்டார்கள் .ரிசல்ட் எனக்கும் முன்பே என் வீட்டிற்கும் உறவினர்க்கும் தெரிய வர....ஏகப்பட்ட பிரச்சனை ...மன உலைச்சல் :-( .//

    சரியாகச் சொன்னீர்கள். நமக்கு ம‌ட்டுமல்லாது, நம் வீட்டினருக்கும் இது போன்ற தவறுகளால் எத்தனை மன உளைச்சல்! அதற்குப்பின் ஒரு மருத்துவரிடம் பேசிக்கொன்டிருந்த போது, 'சரியான லாப் என்பதை அடையாளாம் காட்டுவது மிகவும் கஷ்டம்' என்றார்!

    பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி!!

    ReplyDelete
  23. அவசியம் சென்னை வ‌ரும்போது சஞ்ஜீவனம் சென்று அனைத்தையும் ருசித்துப் பாருங்கள் சகோதரி லக்ஷ்மி! பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  24. நீங்கள் சொல்வது சரி தான் ஸ்ரவாணி! அடையாறிலும் இதற்கு ஒரு கிளை இருக்கிறது. கேரள நாட்டினர்தான் இந்த உண‌வகத்தைச் சேர்ந்தவர்கள் என்ராலும் அவர்களின் உணவு ஸ்டைல் இந்த சாப்பாட்டில் அற‌வே இல்லை.

    பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  25. மிக வித்தியாசமான உணவகங்களாக உள்ளதே! வாசிக்கவே நாவூறியது. நல்ல தான்(மருத்துவமனை) அனுபவங்கள தான்! பகிர்விற்கு நன்றி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  26. சுவையான பகிர்வு. ஆரோக்கியமான சாப்பாடு....

    இன்றைக்கு மருத்துவமனைகளை நினைத்தாலே பயமாகத் தான் இருக்கிறது.....

    ReplyDelete
  27. நல்ல பதிவு.

    உங்கள் விழிப்பணர்வு பாராட்ட தக்கது.

    இங்கே 'நமக்கேன் வந்தது, நம் வேலை ஆனால் போதும்' என்று நினைப்பவர்களே அதிகம். ஒரு தொழில் செய்யும் போது அதை சரியாக செய்யாதவர்களை கேட்க வேண்டியது மிக அவசியம்.

    கார் வசதி குறித்த தகவலுக்கு நன்றி.சென்னைக்கு வரும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகள்.

    வணக்கம்.

    ReplyDelete
  28. ச்ஞ்ஜீவனம்..இட்லி விலாஸ்.....நோட்ட்...சீக்கிரமே போய் விடுவோம்!

    ReplyDelete
  29. தலைப்புக்கு மிய அழகாக இரண்டு மாறுபட்ட
    விஷயங்களைச் சொல்லிப் போனது அருமை
    முதல் விஷயம் நம்ம ஊரு நல்ல ஊரு எனப்பட்டது
    இரண்டாவது விஷயம் நம்ம ஊரு ந...ல...ல..ஊரு எனப் பட்டது
    படங்களுடன் பதிவு அருமை
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. வணக்கம் சகோதரி….இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்

    ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

    அன்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  31. வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    அன்புடன் vgk 24.02.2012

    ReplyDelete
  32. எப்படி இருக்கிங்க. நீண்ட நாட்காயிற்று.

    நல்ல பதிவு அனுபவங்களை பகிர்ந்துகொண்டது நல்ல பயன். மருத்துவமனையின் அனுபவம் எனக்கும் ஏற்ப்பட்டது. என் மகள் உடல்நிலை சரியில்லாதபோது கண் எதிரே டாக்டர் ஏமாற்றிவிட்டார்.
    பணம் வாங்கிகொண்டும் ஏமாற்றுவது இன்னும் மோசம். என் கணவருக்கு மிக கோபம் வந்து இனிமேல் இந்த ஹாஸ்பிட்டல் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று எல்லா நணபர்களுக்கும் சொல்லிவிட்டார், அதுவும் பிரபல குழந்தைகள் மருத்துவமனையில் இருக்கும் டாக்டர் தன் ப்ரைவ்டே கிளினிக்கில் செய்தது.
    ம்.. என்று தான் நம் நாடு திருந்துமே?
    நல்ல உணவகம் பற்றிய விரிவான தகவல் கிடைத்தது. நன்றி அடுத்த முறை செல்லும் பொது மறக்காமல் செல்ல வேண்டும். இட்லி விலாசஸ் அவசியம் செல்வேன் என் பேவரிட் அயிட்டமே இட்லிதான். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  33. விரிவான க‌ருத்துரைக்கு அன்பு நன்றி வேதா!!

    ReplyDelete
  34. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஆதி!!

    ReplyDelete
  35. பாராட்டிற்கும் க‌ருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  36. //ச்ஞ்ஜீவனம்..இட்லி விலாஸ்.....நோட்ட்...சீக்கிரமே போய் விடுவோம்!//

    இதற்காகத்தான் இந்த உணவகங்களை அறிமுகம் செய்தேன் Sriram!! பின்னூட்டத்திற்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  37. சஞ்சீவனம் போன்ற வாடிக்கையாளர்களின் உடல் நலனுக்கு சத்தானதைக்கொடுக்கவே்ணடுமென்ற அக்கறைகொண்ட உணவகங்கள் இப்பொழுது உருவாவது மகிழ்ச்சிக்குரியதே.

    நிறைய பரிசோதனைக்கூடங்களில் இப்படி நிலைதான் உள்ளது. உடனே புகார் தெரிவிக்க பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உங்களைப்போல் முன்வரவேண்டும். அப்பொழுதுதான் நிலைமை சரியாகும்.

    ReplyDelete
  38. சென்னை சென்றால் .சஞ்ஜீவனம் கண்டிப்பாக சுவைக்கனும்

    பார்க்கவே அருமையாக இருக்கு

    இட்லி விலாஸ்க்கும் போகனும்

    ReplyDelete
  39. மருத்துவ மனைகள் என்னத்த சொல்வது..

    ReplyDelete
  40. அருமையான சுவையான பதிவு என்றும் சொல்லாம். சஞ்சீவனம் இட்லி விலாஸ் கண்டிப்பாக செல்கிறேன். சஞ்சீவனம் சாப்பாடு வித்தியாசமாக உள்ளது

    ReplyDelete