Wednesday 8 February 2012

வித்தியாசமானதொரு கோவில்!!

மறைந்த எழுத்தாளர் கல்கி தனது வரலாற்றுப்புதினமான ‘பொன்னியின் செல்வனில்’ கதை முழுவதும் பின்னால் மறைந்திருந்தே ராஜராஜசோழனுக்கும் அவரின் தந்தையார் சுந்தர சோழனுக்கும் காவல் தெய்வமாக விளங்கிய ‘மந்தாகினி’ என்ற ஒரு பெண்ணைப்பற்றி அருமையாக சித்தரித்திருப்பார்.



சிறு வயதில் அவரை சுந்தர சோழன் இலங்கை சென்றிருந்தபோது காந்தர்வ மணம் புரிந்ததாயும், பின் அவரை நிர்க்கதியாய் தவிக்க விட்டதாயும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தொடர்ந்த உறக்கமற்ற இரவுகள், அவரையே தெய்வமாக வழிபட்ட மந்தாகினி, சுந்தர சோழரை தன்னுயிரைத்தந்து இறுதியில் அவர் காப்பாற்றியது என்று அவரின் கதை நிகழ்வுகள் உணர்ச்சிக்குவியல்களாய் இறுதி வரை தொடர்ந்து வந்திருக்கும். இந்த மந்தாகினி தேவியாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராஜராஜசோழன் கோவில் எடுத்து, தஞ்சை எல்லையில் காவல் தெய்வமாக வைத்து பூஜித்ததாய் கேள்விப்பட்டிருக்கிறேன். ரொம்ப நாட்களாய் அங்கே போய் பார்த்து வர எண்ணியும் சென்ற மாதம் தான் அது நிறைவேறியது. அந்தக் கோவில்தான்


செங்கமல நாச்சியம்மன் கோயில்!!



கோவிலின் முகப்பு
சிங்கள நாச்சியம்மன் கோயில் என்றும் செங்காச்சியம்மன் கோவில் என்றும் செங்க நாச்சியம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது.

தஞ்சை நகரத்தில் திருச்சி செல்லும் சாலையில் மேம்பாலம் தாண்டி ராஜப்பா நகர் என்பதுதான் தஞ்சை நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சியில் முதன் முதலாகத் தோன்றியது. இதையடுத்து வல்லம் வரையில் ஒரே முந்திரிக்காடாக இருந்திருக்கிறது. இந்தக் காட்டுப் பகுதியில் இருந்ததுதான் செங்கமல நாச்சியம்மன் எனும் சிங்கள நாச்சியம்மன் கோயில். தற்சமயம் இந்தக் கோயில் குந்தவை நாச்சியார் அரசினர் பெண்கள் கல்லூரிக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது. மக்கள் இதனை செங்கநாச்சியம்மன் அல்லது செங்காச்சியம்மன் என்றே அழைக்கின்றனர். இந்தக் கோயிலுக்கு நேர் வடக்கு திசையில் அப்போது காடாக இருந்த [ இப்போதைய மருத்துவக் கல்லூரி ] சாலையில் ஓர் நடுகல் நடப்பட்டு, அந்த இடத்தைத் தாண்டும் போது, இந்த அம்மனை வழிபடுவதற்காக அமைக்கப்பட்டிருந்தது.


கோவிலின் உட்புறம்
இந்த ஆலயம் வடக்கு நோக்கிக் கட்டப்பட்ட ஆலயம். சுற்றுப்புற மக்களால் மிக சிறப்பாக வழிபாடு நடத்தப்படும் ஆலயமாக இது திகழ்கிறது. இங்கு மக்கள் மிகவும் பயபக்தியோடும், சுத்தமாகவும் பால்காவடி எடுத்து வந்து வழிபாடு செய்வதை இப்போதும் காணலாம். விசேஷ நாட்களில் பெண்கள் இவ்வாலயத்தின் முன்புறமுள்ள குளக்கரையில் திறந்த வெளியில் செங்கல் அடுப்பு வைத்து பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். தஞ்சை நகரத்திலுள்ள பல தெருவினர் இந்தக் கோயிலுக்கு பாற்குடம் காவடி எடுத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இது குறித்து வேறொரு ஒரு வரலாற்றுச் செய்தியும் உண்டு.

ஒரு காலத்தில் இங்கு ஆட்சிபுரிந்து வந்த ஒரு சோழ அரசன் ஒரு சிங்கள அரசனை பலமுறை அழைத்தும் , அவரை அவமரியாதை செய்வதைப் போல வராமல் இருந்துவிட்டு இறுதியில் இங்கு தன் மனைவி, மந்திரிகளுடன் வந்திருக்கிறான். சக்கரவர்த்தியிடம் இருந்த பயத்தின் காரணமாகத் தன் உடன் வந்தவர்களை தலைநகரான தஞ்சையை ஒட்டிய இந்தக் காட்டுப் பகுதியில் தங்க வைத்துவிட்டு அவன் மட்டும் ஒரே ஒரு அமைச்சரைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு அரண்மனை சென்று சக்கரவர்த்தியைக் கண்டானாம்.



உள்ளிருக்கும் காவல் தெய்வமொன்றின் ஓவியம்!
உள்ளே சென்ற சிங்கள அரசனுக்கு என்ன நேர்ந்ததோ, அவன் வெளியே வரவேயில்லை. வெளியில் காத்திருந்த அமைச்சருக்கு தங்கள் அரசன் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென்று பயம் ஏற்பட்டு அவ்விடத்தை விட்டு அகன்று ராணியிடம் வந்து உடனே நாடு திரும்பிவிட வேண்டுமென்று கூற ராணி மட்டும் அரசனுக்கு ஏற்பட்ட கதியைத் தெரிந்து கொள்ளாமல் திரும்ப முடியாது என்று கூறியிருக்கிறாள். பிறகு அவ்விடத்திலேயே ராணி தனது உயிரை அழித்துக்கொண்டு விட்டதாகவும் தெரிகிறது. அந்த சிங்களப் பெண்மணி உயிர்த்தியாகம் செய்த அந்த இடத்தில்தான் சிங்கள நாச்சியார் கோயில் என்ற பெயரில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த ராணியின் தியாகம் பற்றிய அந்தக் கால கிராமப்புறப் பாடல்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். கல்வெட்டுகளிலும் இந்தச் செய்தி காணப்படுவதாகவும் கூறுகிறார்கள்.


பதினெட்டாம்படி கருப்பணசாமி
இந்த ஆலயத்தில் அம்மன் அமர்ந்த கோலத்தில் நான்கு கைகள், கைகளில் சூலம், பாசம், கபாலம் ஆகியவையுடன் அம்மனின் தோற்றம் உக்கிரமாக இருப்பதைப் பார்க்கலாம்.



மதுரை வீரன்
இங்கே மதுரைவீரனுக்கு சிலை உள்ளது. இங்குள்ள சூலம், அடைக்கலம் காத்த ஐயனார் என்று வழிபடப்படுகிறார். பதினெட்டாம்படி கருப்பணசாமி என்றொரு சுதைச் சிற்பமும் இருக்கிறது. இவர் புலி மீது அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே சிறிய பிரகாரம் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது.


காவல் தெய்வம் வேதமுனி
இக்கோயிலின் முன்பாக ஒரு குளம் இருக்கிறது. அதன் கரையில் தென்மேற்கு மூலையில் சுதையாலான ஒரு பெரிய 12 அடி உயரமுள்ள வேதமுனி எனும் சிலை தோள்களில் பச்சைக்கிளிகளுடனும் காதுகளில் நாகங்களுடனும் வலது கையில் உயர்த்திப் பிடித்த வாள் ஒன்றுடன் ஒரு கல் திண்ணையில் காவல் தெய்வம் போல அமர்ந்திருக்கிறது. இடக்கையில் ஒரு புத்தகம். இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது!!


செங்கமல நாச்சியம்மன்
 தை மாதத்தில் செவ்வாய்க்கிழமைகளில் கரகம் எடுக்கப்படுகிறது. சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிவலம் வருவதுண்டு. ஆடிமாதத்தில் காப்புக்கட்டியும் மற்ற பல மாதங்கள் பல தெருவார்கள் வந்து வழிபாடு செய்தும் வருகிறார்கள். பலகாலம் இங்கு ஆடு, கோழி இவை பலியிடப்பட்டு வந்தன. இதுவும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோயில் எனினும் பெரும்பாலன விசேஷங்கள் பொதுமக்களின் காணிக்கைகள் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன!!



கோபுரத்தின் அழகு!
ஒரு காவல் தெய்வத்துக்கு, ஒன்றுக்கு பத்தாய் அதைச் சுற்றிலும் காவல் தெய்வங்கள் இருக்கும் இந்த செங்க நாச்சியம்மன் கோவில் மிக மிக வித்தியாசமானதொரு கோவில்தான்!!

35 comments:

  1. ஆமாம் வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகள் தஞ்சையை சுற்றி நிறைய உண்டு.மந்தாகினி தேவி படைப்பை பற்றி அறிய தந்தமை நல்ல பகிர்வு.வயல்வெளிகளும்,குளம் ஆறு,கோவில் மரங்கள் அடர்ந்த சாலைகளும் தஞ்சையில் மிக அழகு.மிக நுணுக்கமான பகிர்வு.

    ReplyDelete
  2. மிக விரிவான தகவல்களும் படங்களும் தங்கள் சிரத்தையை காட்டுகிறது. நன்றி

    ReplyDelete
  3. ஒரு புதிய வரலாற்று தகவல் தெரிந்து கொண்டேன் மேடம்.
    படங்களும்,பதிவும் அருமை.

    ReplyDelete
  4. மிக மிக வித்தியாசமானதொரு பகிர்வு... அழ்கிய படங்களுடன்.. மனம் கவர்ந்த அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. கோவிலைப் பற்றிய தகவல்களையும், வரலாற்றோடு தொடர்புள்ள செய்திகளையும் அழகா தந்திருக்கீங்கம்மா....

    ReplyDelete
  6. ’மந்தாகினி’ என்ற பெயரே அருமையாக உள்ளது.

    செங்கமல நாச்சியம்மன் கோயில் போய் வந்து அழகான படங்களும், சரித்திர விளக்கங்களும் தந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது, மேடம்.

    தங்கள் பதிவு ஒன்றினில் [தஞ்சைப்பெரிய கோயில் தவிர] கோயில்களும், தெய்வீக சிலைகளும் பற்றி எழுதியிருப்பது எனக்கு வியப்பளிப்பதாக இருந்தது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
  7. புதிய கோவில் பற்றியும் அது பற்றியதகவல்களும் தெரிந்து கொள்ளமுடிந்தது. நன்றி

    ReplyDelete
  8. விரிவான தகவல்களும், படங்களும் இந்த இடத்தைப் பார்க்க ஆர்வத்தினை தூண்டியது...

    நல்லதோர் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. அருமையான படங்களுடன் பயனுள்ள கட்டுரை!

    ReplyDelete
  10. படங்களுடன்,வரலாற்று சிறப்புமிக்க கட்டுரைக்கு மிக்க நன்றிம்மா!!

    ReplyDelete
  11. தஞ்சையின் சிறப்பு பேச மற்றுமொரு தெய்வீகத்தலம். கோயிலின் படங்களைப் பார்த்தாலே அக்கோயிலைப் பராமரிக்கும் அற்புதம் தெரிகிறது. காவல் தெய்வங்களுடன் வீற்றிருக்கும் செங்காச்சியம்மன் சிறப்பையும் தல வரலாற்றையும் விவரித்த விதம் இயல்பும் ஈர்ப்பும். பாராட்டுகள் மேடம்.

    ReplyDelete
  12. ஆமாம் ஆசியா! வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்களும் இடங்களும் தஞ்சை மாவட்டத்தில் நிறைய உண்டு! சிற்பங்கள், ஓவியங்கள் என்று மிக அழகாக இருக்கும்!
    கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  13. கருத்துரைக்கு அன்பு நன்றி மோகன்குமார்!!

    ReplyDelete
  14. பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ரமா!

    ReplyDelete
  15. பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!‌

    ReplyDelete
  16. பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ஆதி!

    ReplyDelete
  17. பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
    தஞ்சையைப்பற்றி எப்படி ரசித்து எழுதினேனோ, அதேபோலத்தான் இந்தக் கோவிலின் பின்னிருக்கும் கதைகள் என்னை ரசித்து இதைப்பற்றியும் எழுத வைத்தன!

    ReplyDelete
  18. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!

    ReplyDelete
  19. சமயம் கிடைக்கும்போது அவசியம் இந்தக் கோவிலை வந்து பாருங்கள் சகோதரர் வெங்கட் நாகராஜ்! கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  20. பாராட்டிற்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜனா!

    ReplyDelete
  21. கருத்துரைக்கு அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  22. விரிவான க‌ருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் அன்பு நன்றி கீதமஞ்சரி!

    ReplyDelete
  23. நல்ல தகவல்கள். படங்கள் அருமை.

    ReplyDelete
  24. அன்பின் சகோதரி தங்களுக்கு தரப்பட்ட விருது பற்றிய தகவலை இங்கு காணுங்கள். வாழ்த்துகள்.http://kovaikkavi.wordpress.com/2012/02/11/23-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-liebster-blog/

    ReplyDelete
  25. கதையை படிச்சதும் இல்லாம போய் பார்க்கும் ஆவலும் , கூடவே இன்னும் வரலாற்று சிறப்பையும் தொகுத்து இருப்பதும் , எல்லோராலும் முடியாத காரியம் :-).

    ReplyDelete
  26. கோயிலின் பின்ன‌ணிக் க‌தைக‌ள் போய்ப் பார்க்கும் ஆவ‌லை முன்ன‌ணிப் ப‌டுத்துகின்ற‌ன‌. பிற‌ந்த ஊர்ப் பெருமையை ஆவ‌ண‌ப் ப‌டுத்தும் அக்க‌றையுட‌னான‌ ப‌கிர்வுக்கு ந‌ன்றி ச‌கோ...

    ReplyDelete
  27. தங்களுக்கான விருது ஒன்று காத்திருக்கிறது, மேடம்.

    அன்புடன் வருகை தந்து ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2012/02/liebster-blog-award-german.html

    அன்புடன் vgk

    ReplyDelete
  28. பாராட்டிற்கும் கருத்துக்கும் அன்பு நன்றி வித்யா!

    ReplyDelete
  29. விருதுக்கு மனமார்ந்த நன்றி வேதா!

    ReplyDelete
  30. இனிய விருதுக்கு அன்பான நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ண‌ன்!!

    ReplyDelete
  31. பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி!

    க‌ல்கியின் எழுத்துக்கள் அந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்னுள். பார்க்கப்போனால் தஞ்சையிலேயே இருந்து கொண்டும் இந்தப் பதிவு சற்று தாமதமாகத்தான் வெளி வந்திருக்கிறது போதுமான அவகாசமில்லாதலால்!

    ReplyDelete
  32. எனக்கும் கல்கியின் படைப்புகள் என்றால் மிகப் பிடித்தமானவை. இப்படி ஒரு ஆலயம் இருப்பதை இன்று உங்கள் மூலம்தான் அறிந்து கொண்டேன். விரிவான தகவல்களுடன், படங்களுடன் அழகாய்ச் சொல்லியிருக்கீங்க. ஒரு முறை அவசியம் பார்த்துடணும்னு தோணிடுச்சு. உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

    ReplyDelete
  33. உங்களின் விரிவான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் வருகைக்கும் என் மனமர்ந்த நன்றி சகோதரர் கணேஷ்!!

    ReplyDelete
  34. இந்த locationல் இருக்கும் கோயில் தானா தாங்கள் எழுதிய கோயில்?

    Shri Nachi Amman Temple
    N.S.C Bose Nagar, Ramani Nagar, Thanjavur, Tamil Nadu 613007

    htt,ps://goo.gl/maps/vLKTJS2YD952

    இல்லை என்றால் தயவு செய்து சற்று locationஐ கொடுக்க முடியுமா?

    நன்றி

    ReplyDelete
  35. நீங்கள் குறிப்பிட்டிருப்பது நடராஜபுரம் அருகே. அங்கே ஒரு நாச்சியம்மன் கோவில் உள்ளது. நான் குறிப்பிட்டிருக்கும் கோவில் ராஜப்பா நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்குள்ள தேவர்ஸ் சிற்றுண்டி சாலை வழியே சென்றால் அரசு குந்தவை மகளிர் கல்லூரி வரும். அதன் எதிரே இந்தக் கோவில் அமைந்துள்ளது. சற்று உள்ளடங்கிய கோவில் இது. குடிசைகள் வழியே உள் செல்ல வேண்டும்.

    ReplyDelete