Wednesday, 14 December 2011

பறக்கத் துடிக்கும் பழுத்த இலைகள்!!

முதியோர் நலன் பற்றி நிறைய கருத்துரைகளும் அலசல்களும் ஏற்கனவே பத்திரிகைகளிலும் வார இதழ்கள், மாத இதழ்களிலும் ஏராளமாக வந்து விட்டன. முதியோர் இல்லங்களைப்பற்றியும் பல விதக் கருத்துக்கள், சோகங்கள் என்று எல்லாவற்றையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதிலிருந்து சற்று விலகி, இன்றைக்கு முதியோர்கள் தங்களின் மக்களுக்காக எந்த அளவு சுமைகளை தங்கள் தள்ளாத வயதிலும் சுமக்கிறார்கள் என்பதைப்பற்றியும் சொல்ல நிறைய இருக்கின்றன. சில சமயங்களில் அவர்களின் வேதனைகளைப் பார்க்கையில் மனது ரத்தக் கண்ணீர் வடிக்கின்றது. ஒரு ஆணாக இருந்தாலும் சரி, ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, வயது முதிர முதிர, அவர்களின் உடல் தளர ஆரம்பிக்கிறது. முன்போல வேலைகள் செய்ய முடியாமல் உடலின் பல பாகங்களிலும் பல வித நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. மனம் சோர்வடைய ஆரம்பிக்கிறது. சாய்ந்து கொள்ள தோள்கள் தேடி, மனம் தவிக்க ஆரம்பிக்கிறது. ஆனால், அன்போ, அக்கறையோ, ,சினேகிதமோ எதுவுமே கிடைக்காமல், இன்னும் அதிகமான சுமைகளும் பொறுப்புகளும் மனதையும் உடலையும் அழுத்த, தனிமையில் வேதனையை அனுபவிக்கும் பழுத்த இலைகள் எத்தனை எத்தனை!!





சமீபத்தில் எங்கள் குடும்ப நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். 80 வயதைத் தாண்டியவர் அவர். 30 வருடங்களுக்கு முன்பே மனைவியை இழந்தவர். இரண்டு மகன்களும் ஒரு மகளும் அவருக்கு. மகளுக்கு நல்ல இடத்தில் திருமணமாகி விட, மகன்களில் மூத்தவருடன்தான் இவர் இருக்கிறார். இரண்டாம் மகன் மன வளர்ச்சி குன்றியவர். மூத்த மகனுக்கு இரண்டு மகள்கள். மருமகள், மகன் இருவருக்குமே அதிகமான சர்க்கரை அளவு. 15 வருடங்களுக்கு முன் எங்கள் இல்லத்தில் கீழ்த்தளத்தில் குடியிருந்தார். விடியற்காலை மருமகள் எழுவதற்கு முன்பேயே, வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பார். இந்த வேலையை முடித்து விட்டு, மருமகளை எதிர்பார்க்காமல் தன் இளைய மகனுடன் தெருவோரத்திலுள்ள டீக்கடைக்கு நடந்து சென்று காப்பி குடித்து வருவார். சில சமயங்களில் சீக்கிரம் எழுந்து விட்டால், நானே காப்பி கொடுத்து விடுவேன். என்னை தான் பெறாத மகள் என்று அடிக்கடி சொல்லுவார். அதிக சர்க்கரையால் அவதியுறும் அவர் தன்னைப்பற்றி கவனிக்க முடியாமல், எப்போதும் அடுத்தவருக்காக ஏதாவது உதவி செய்து கொண்டே தான் இருப்பார். துணையின் அவசியம், அன்பு, தோழமை எல்லாமே வயது ஏற ஏற அதிகமாகி விடுகிறது. இவரோ, அந்தத் துணையும் இல்லாமல், தனது உடல் வேதனைகளையும் கவனித்துக்கொண்டு, வீட்டிலிருப்போரையும் கவனிக்க வேண்டிய நிலைமையிலிருக்கிறார்.

அவரின் மூத்த மகன் வேறு ஒரு திருமணமான பெண்ணிடம் தொடர்பு கொண்ட போது துடித்துப்போய் மகனை வெறுத்தே விட்டார். அந்தப் பெண்ணை அப்புறப்படுத்த சாம, தான, பேத, தண்டம் என்ற பல வழிகளையும் கையாண்டு அது வெற்றி பெற்றதும்தான் அமைதியடந்தார். அதற்கப்புறம் இவரின் மகன் அதிக அளவு சர்க்கரையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் அவரைச் சென்று பார்க்காமலேயே இருந்தார். அந்த அளவு வெறுப்பு மனதில் படர்ந்து விட்டது. வயதுக்கு வந்த இரு பெண்கள் வீட்டில் இருக்கையில் அவர்களின் தந்தை இப்படி தலை குப்புற விழுந்த விதம் அவரைப் பாதித்து விட்டது. அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் அந்தப் பெண்ணுக்காக தன் மகன் வட்டியுடன் வாங்கியிருந்த கடனை இவர் கஷ்டப்பட்டு அடைத்தார். தன் முதல் பேத்திக்கு நல்ல வரனாகப்பார்த்து திருமணம் செய்வித்து, பிரசவம்வரை பார்த்து விட்டார். தன் இரண்டாம் மகனுக்கு, தன் பென்ஷன் பணமும் சேர வேண்டி, அதற்கான உயிலும் எழுதி வைத்து விட்டார். ‘எப்போது அழைப்பு வருமோ, யாருக்குத் தெரியும்?’ என்று அடிக்கடி சொல்லுவார்.

சமீபத்தில், இவரின் முதல் மகன் மறுபடியும் படுக்கையில் விழுந்து விட்டார். வி.ஆர்.எஸ் வாங்க நிறைய முயற்சி செய்தும் அது முடியாமலேயே போய் விட்டது. அதற்கு தான் பட்ட சிரமங்களை என்னிடம் எடுத்துச் சொல்லி, ‘ வி.ஆர்.எஸ் கிடைக்காததும் ஒரு வகையில் நல்லது தான். வேலை பார்க்கும்போதே இறந்து போனால், என் மருமகளுக்காவது பென்ஷன் கிடைக்குமல்லவா?’ என்று வேதனையுடன் சொன்னபோது, இனம் புரியாத வலி ஒன்று மனதை ஆக்ரமித்தது.

இந்த வயதில் மகனின் அன்பும் மருமகளின் பணிவிடையும் பேரன் பேத்திகளின் கொஞ்சலும் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.. அவருக்கான தேவைகளை அக்கறையுடன் கவனிக்க அன்பான உறவுகள் அருகிலிருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக இவரின் வாழ்க்கை அமைந்து விட்டது.

ஊருக்கு வரும்போதெல்லாம், என்னால் முடிந்த அளவு அவருக்கு ஆறுதல் தரும் விதமாய் பேசிக்கொண்டிருப்பேன். அடிக்கடி சமைத்துக் கொடுப்பேன். தன் இரு கரங்களாலும் என்ன்னையும் என் கணவரையும் தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கும்போது, கோடிச் செல்வங்களும் இதற்கு ஈடாகாது என்று மனம் மகிழ்வடையும். ஆனால் அவரது வேதனைகள் எதால் தீரும்?

உதிரக்காத்திருக்கும் பழுத்த இலைகள் அனுபவித்துக்கொண்டிருக்கும் சோதனைகள் தொடர்கின்றன..

படங்கள் உதவி: கூகிள்





41 comments:

  1. மனதை கலங்க வைத்தபதிவு. வயசானா பலவித பிரச்சனைகளை சமாளிக்கத்தான் வேண்டியிருக்கு. இந்தப்பெரியவருக்கு மனதைரியம் இருந்ததால் எல்லாவற்றையும் தாங்கி கொண்டிருக்கிறார்.

    ReplyDelete
  2. பெற்று வளர்த்த பிள்ளைகள்
    சிறகு முளைத்தவுடன்
    தனிவழி பறந்து
    பெற்றவர்களை மறந்து
    இன்னும் தவிக்க விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    முதுமையின் வழிகளை மனம் கனக்குமாறும்..
    அதே சமயம் நன்கு உரைக்குமாறும் சொல்லியிருக்கீங்க அம்மா...

    ReplyDelete
  3. //. துணையின் அவசியம், அன்பு, தோழமை எல்லாமே வயது ஏற ஏற அதிகமாகி விடுகிறது. //

    உண்மைதான் மேடம்.

    அந்தப் பெரியவரின் நிலை பரிதாபத்திற்குரியதுதான்.
    ஆனாலும் அவர் மனம் தளராமல் இந்த வயதிலும் தனது குடும்பத்தினரை கவனித்துக் கொள்கிறாரே,அது எவ்வளவு பெரிய விஷயம்.

    ReplyDelete
  4. நல்ல தலைப்புக்கொடுத்து, தகுந்த உதாரணத்துடன், கொடுத்துள்ள இந்தப் பதிவினைப் படிக்கும் போதே என் மனதில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தி விட்டது.

    ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான கஷ்டங்கள். சிலவற்றை சிலரிடம் மன்ம் விட்டு வெளியே சொல்லிக்கொள்ள முடியும். சிலவற்றை அதுபோல சொல்லிக்கொள்ளவும் முடியாது. மனதில் என்றும் புழுங்கிக்கொண்டே இருக்கத்தான் முடியும். ;((((

    ReplyDelete
  5. //வி.ஆர்.எஸ் கிடைக்காததும் ஒரு வகையில் நல்லது தான். வேலை பார்க்கும்போதே இறந்து போனால், என் மருமகளுக்காவது பென்ஷன் கிடைக்குமல்லவா?’ என்று வேதனையுடன் சொன்னபோது, இனம் புரியாத வலி ஒன்று மனதை ஆக்ரமித்தது. //

    இதைப்படித்த எல்லோருக்குமே தான் அந்த இனம் புரியாத வலி ஏற்பட்டிருக்கும்.

    ReplyDelete
  6. பலரின் வாழ்க்கையை பார்த்தோமேயானால் - பெரியவரை போல வாழுபவர்களை பார்க்கலாம். சிலர் தங்களின் ஒரு தலைமுறையினருக்காக கூட உழைப்பதில்லை. ஆனால் வேறு சிலரோ தங்களுக்கான கடமைகளை முடித்து, தம் பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்து - பேரன் பேத்தி வரை கூட அவர்கள் உழைப்பு பயன்படும். உழைத்து களைத்து ஓடாய் போனவர்கள்.

    ReplyDelete
  7. அந்த பெரியவரை பற்றி வாசிக்க மிக வருத்தமாக இருக்கிறது

    ReplyDelete
  8. மனதுக்கு மிகவும் பாரமாக இருக்கு அந்த பெரியவரை நினைக்கும்போது .
    முதுமையில் துணை கண்டிப்பாக தேவை .
    நான் எங்க ஆலயத்தில் தொண்ணூறு வயது தாத்தா திருமணம் பற்றி எழுதியிருந்தேன் .இப்ப தான் எனக்கும் அதன் காரணம் புரிகிறது .முதுமையில் துணை என்பது ஒரு ஊன்றுகோல் மற்றும் நல்ல தோழமை

    ReplyDelete
  9. மனதை கனக்க வைத்து விட்டது. அந்த பெரியவர் மன நிம்மதியுடன் ஓய்வாக இருக்க வேண்டிய நேரத்திலும் தம் வாரிசுகளுக்காக உழைத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

    இது போல எத்தனை பேர் இருக்கிறார்கள்.:(

    ReplyDelete
  10. அழாத மனமும் இதை வாசித்து விட்டு அழுது விடும், ஆண்டவா அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும், தீர்க்காயுசையும் கொடு...!!!

    ReplyDelete
  11. தனிமையில் வேதனையை அனுபவிக்கும் பழுத்த இலைகள் எத்தனை எத்தனை!!


    பெரியவரின் மனத் தெளிவு பாராட்டுதலுக்கு உரியது.

    ReplyDelete
  12. படிக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருக்கும்மா...

    ReplyDelete
  13. பாவம்...கடைசி வரை இப்படிதான் என்று இவர்கள் தலையில் எழுதியிருக்கும் போல....

    ReplyDelete
  14. அந்தக் குடும்பம் நல்லாயிருப்பதற்கு அந்தப் மனதிடமான பெரியவரின் தியாகம்,முயற்சி,அதில் அவர் தேடும் நிம்மதி..அர்த்தமுள்ள வாழ்வு.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  15. படித்தவுடன் மனம் கலங்கியது..

    ReplyDelete
  16. அந்த முதியவருக்கு நல்ல மனதைரியத்தைக் கொடுக்குமாறு கடவுளிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்..பறக்கத் துடிக்கும் பழுத்த இலைகள் என்னும் தலைப்பிலேயே முதுமையின் அவலம் நெஞ்சைக் கசக்கிப் பிழிகிறது.

    ReplyDelete
  17. இதற்கு என்ன எழுத என்றே தெரியவில்லை. தந்தை சரியில்லாமல் போய்விடுவார் என்பதாலேயே, இறைவன் இவருக்கு ஆயுளும், திடமும் தந்து வைத்திருக்கிறானோ என்னவோ. அந்த மருமகளும், பேத்திகளுமாவது புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவாய் இருக்கவேண்டும்.

    ReplyDelete
  18. குழந்தை போல அனைத்திற்கும் யாரையேனும்
    சார்ந்து போகிற நிலைமை வருகிற முதிய பருவம்
    பலருக்கும் துயர் மிகுந்ததாக்வே அமைந்து விடுகிறது
    ய்தர்த்தம் சொல்லிப் போகும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. இவர்களால் தான் இயங்குகிறது உலகம் இன்னும்...

    ReplyDelete
  20. அன்போ, அக்கறையோ, ,சினேகிதமோ எதுவுமே கிடைக்காமல், இன்னும் அதிகமான சுமைகளும் பொறுப்புகளும் மனதையும் உடலையும் அழுத்த, தனிமையில் வேதனையை அனுபவிக்கும் பழுத்த இலைகள் எத்தனை எத்தனை!!

    துணையின் அவசியம், அன்பு, தோழமை எல்லாமே வயது ஏற ஏற அதிகமாகி விடுகிறது.

    தன் இரு கரங்களாலும் என்னையும் என் கணவரையும் தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கும்போது, கோடிச் செல்வங்களும் இதற்கு ஈடாகாது என்று மனம் மகிழ்வடையும்.

    ஆனால் அவரது வேதனைகள் எதால் தீரும்?//

    நித‌ர்ச‌ன‌ம் முக‌த்தில‌றைய‌, விக்கித்துப் போய் நிற்க‌ வேண்டியிருக்கிற‌து இப்ப‌டியான‌ த‌ருண‌ங்க‌ளில். ந‌ம் அனுதாப‌மும் ம‌ன‌ப்பூர்வ‌ப் பிரார்த்த‌னைக‌ளும் உட‌ன‌டியாக‌த் துளிர்த்தாலும் அப்பெரிய‌வ‌ருக்கான‌ ம‌னோதிட‌மும், தெளிவும் நாம் சிறுசிறு இடையூறுக‌ளால் கூட‌ சோர்வுறும் நேர‌ங்க‌ளில் நினைத்து தெம்பு கூட்டிக் கொள்ள‌ வேண்டிய‌தாகிற‌து.

    ReplyDelete
  21. பழுத்த இலைகள் பறக்கத் தான் செய்யும்..அவை அவ்வளவு லேசானவை!

    ReplyDelete
  22. உண்மைதான் லக்ஷ்மி! மன தைரியத்தால்தான் நிறைய பெரியவர்கள் தங்களின் இறுதிக் காலத்தை சமாளித்துக்கொன்டிருக்கிறார்கள்!
    அன்பான பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி!!‌

    ReplyDelete
  23. கருத்துரைக்கு அன்பு நன்றி மகேந்திரன்!!

    ReplyDelete
  24. உண்மைதான். இந்தப் பெரியவரின் மன தைரியம் நிறைய சமயங்களில் என்னை அசர வைக்கும்.
    கருத்துரைக்கு அன்பு நன்றி ராம்வி!

    ReplyDelete
  25. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி திரு.வை.கோபாலகிருஷ்ணன்!
    நீங்கள் சொல்வது போல எல்லோரும் எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடிவதில்லை. வெளியில் சொல்ல முடியாத உள் வலிகள் எத்தனை எத்தனை!!

    ReplyDelete
  26. விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி ரமேஷ்!

    ReplyDelete
  27. வாசிக்கவே கஷ்டமாக இருக்கும்போது, அந்தப் பெரியவர் படும் வேதனைகளை தினம் தினம் பார்ப்பது எந்த அளவு மனக்கஷ்ட‌மாயிருக்கும்! கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் மோகன்குமார்!!

    ReplyDelete
  28. நிச்சயம் முதுமையில் மனதின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள‌ அன்பான தோழமையும் துணையும் தேவை ஏஞ்சலின்! கருத்துப்பகிர்வுக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  29. ஓய்வு அவசியம் தேவையாக இருக்க வேன்டிய வயதில் உழைப்பது தான் நிறைய பேர்களின் சோகம் ஆதி!
    க‌ருத்துப்ப‌கிர்வுக்கு அன்பு ந‌ன்றி!!

    ReplyDelete
  30. தங்களின் பிரார்த்தனை நிச்சயம் அந்தப் பெரியவருக்கு நல்ல பலனைக் கொடுக்கும் சகோதரர் நாஞ்சில் மனோ! கருத்துக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  31. இனிய க‌ருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரிஷபன்!

    ReplyDelete
  32. இது தான் நிறைய முதியவர்களின் இன்றைய வாழ்க்கை மேனகா! கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  33. கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  34. பாராட்டிற்கும் கருத்துப்பகிர்வுக்கும் அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  35. முதல் வ‌ருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் அன்பு நன்றி மதுமதி!!

    ReplyDelete
  36. உங்களின் பிரார்த்தனைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா!

    ReplyDelete
  37. யாருடைய பிரியத்தையும் இவர் எத்ர்பார்க்கவில்லை. தன் கடமையைச் செய்வதில் மட்டும்தான் முழு மூச்சுடன் இருக்கிரார் ஹுஸைனம்மா!
    கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  38. பாராட்டிற்கும் இனிய கருத்துப்பகிர்வுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!!

    ReplyDelete
  39. 'இவர்களால்தான் இன்னும் உலகம் இயங்குகிறது' என்று மிக அழகாய்ச் சொல்லி விட்டீர்கள் சகோதரர் ஜனா!

    ReplyDelete
  40. //இப்ப‌டியான‌ த‌ருண‌ங்க‌ளில். ந‌ம் அனுதாப‌மும் ம‌ன‌ப்பூர்வ‌ப் பிரார்த்த‌னைக‌ளும் உட‌ன‌டியாக‌த் துளிர்த்தாலும் அப்பெரிய‌வ‌ருக்கான‌ ம‌னோதிட‌மும், தெளிவும் நாம் சிறுசிறு இடையூறுக‌ளால் கூட‌ சோர்வுறும் நேர‌ங்க‌ளில் நினைத்து தெம்பு கூட்டிக் கொள்ள‌ வேண்டிய‌தாகிற‌து.//

    அருமையான‌ க‌ருத்து நிலாம‌க‌ள்!

    ReplyDelete
  41. பாருங்கள், அத்தனை இலேசான பழுத்த இலைகள் கூட எத்தனை பாரங்களை சுமக்கின்றன!
    கருத்துப்பகிர்வுக்கு இனிய நன்றி சகோதரர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி!

    ReplyDelete