Monday, 10 October 2011

நெஞ்சை அள்ளும் தஞ்சைத் தரணி- பகுதி-2

“வம்புலாஞ்சோலை மாமதிள் தஞ்சை”
என்று திருமங்கையாழ்வாரும்,

“இஞ்சி சூழ் தஞ்சை”
என்று கருவூர்த்தேவரும்,

“தஞ்சை மாநகர்” என்று
அருணகிரி நாதரும்

போற்றிப்பாடிய தஞ்சாவூரைப்பற்றி மேலும் இங்கே தொடர்கிறேன்.

சோழர் காலத்தில் செழித்து சிறந்திருந்த தஞ்சை, பிற்கால சோழ மன்னன் குலோத்துங்கன் மதுரைக்கும் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனுக்கும் இழைத்த தீங்குகளால், திரும்பவும் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் முற்றிலுமாய் அழிக்கப்பட்டது. அதன் பின் மாலிக் காபூர் படையெடுப்பால் முழுவதுமாக தஞ்சை சூறையாடப்பட்டது. நாயக்க மன்னர்களும் மராட்டிய மன்னர்களும் மீண்டும் தஞ்சையை அழகிய, சிறந்த நகரமாக உயிர்ப்பித்தார்கள்.

தஞ்சை நகரம்

நான்கு திசைகளிலும் நான்கு பெரிய ராஜ வீதிகள், அதனை சுற்றி நாலு அலங்கங்கள், அதற்குள் குறுக்கும் நெடுக்குமாக அளவில்லா சந்துக்களும் அடங்கியது தான் பழைய தஞ்சை நகரம். அனைத்து திசைகளிலும் முக்கியமாய் தஞ்சை மருத்துவக்கல்லூரி தோன்றிய பின்னர் தஞ்சை நகர் நிறைய விரிவடைந்து விட்டது.

சோழர்களுக்குப்பிறகு நாயக்க மன்னர்களும் அதன் பின் மராட்டிய மன்னர்களும் தஞ்சையை ஆண்டதால் இன்றும்கூட பழைய தஞ்சையின் சில தெருக்களின் பெயர்களும் சந்துக்களின் பெயர்களும் அவர்கள் பெயரில் விளங்குகின்றன.

தஞ்சையில் ராஜராஜ சோழன் சதுக்கம், ராசேந்திர சோழன் சதுக்கம், தொல்காப்பியர் சதுக்கம், நக்கீரன் சதுக்கம் ஆகியவை தஞ்சையிலிருந்து பிரியும் குடந்தை, நாகை, பட்டுக்கோட்டை போன்ற முக்கிய சாலைகளின் சந்திப்புகளின் பெயர்களாகத் திகழ்கின்றன.

தஞ்சையின் நடுவே புது ஆறு எனச்சொல்லப்படும், கல்லணையிலிருந்து தஞ்சை பாசனத்துக்காக வெட்டிய கால்வாயான கல்லணைக்கால்வாயை பல நிலைகளில் பார்க்கலாம்.

இன்று தஞ்சையில் மருத்துவக்கலூரி ஒன்றும் இருக்கிறது. அதன் காரணமாக, எந்த நகரிலுமே இல்லாத அளவு மருத்துவர்கள் இங்கிருப்பதாக, முக்கியமாக தெற்கு அலங்கம் முழுவதும் பல்துறை மருத்துவர்கள் நிறைந்திருப்பது கின்னஸ் புத்தகத்திலும்கூட இடம் பெற்றிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

ஆண்களுக்கென்று சரபோஜி கல்லூரி, பெண்களுக்கென்று குந்தவை நாச்சியார் கல்லூரி, சிறுசிறு தொழில் கல்லூரிகள், தஞ்சைக்கு வெளியே மணியம்மை தொழிற்பள்ளி, மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் என்று கல்வி வளர்ச்சிக்கான கல்லூரிகள் இருக்கின்றன.

பரத நாட்டியம்



பரத நாட்டிய பல நிலைகளை ராஜராஜ சோழன் தான் முதன் முதலாக கல்லில் வடித்தான் என்று சொல்லப்படுகிறது. ‘சதிர்’ என்று சொல்லப்பட்ட தேவதாசி குலத்திற்கென்றே சொந்தமாகக் கருதப்பட்ட நடனம், பின்னாளில் ‘தஞ்சை நால்வர்’ என்ற அறிஞர்களால் உருமாற்றப்பட்டு ‘பரத நாட்டியமாக’ ஆடப்பட்டது. பிறகு வந்த நடன வல்லுனர்கள் வழுவூர் ராமையா பிள்ளை, பாலசரஸ்வதி, திருவையாற்றைச் சேர்ந்த ருக்மணிதேவி அருண்டேல், பந்தணை நல்லூர் மீனாட்சி சுந்தரம்-இவர்களால் பரத நாட்டியம் சிறப்பான நிலையை அடைந்தது.

தஞ்சை பெரிய கோவில்:

தஞ்சை பெரிய கோவில்
ஆயிரம் ஆண்டுக்கு முன் மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சையில் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் எனும் பெரிய கோவிலை கி.பி., 1006ல் தொடங்கி, 1010 ல் கட்டி முடித்தான். இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் சோழர்கால தமிழகத்தின் வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், நடனம், இசை ,சமுதாயச் சிறப்புகள், இறைக் கொள்கை ஆகியவற்றை நமக்கு பெருமிதத்துடன் தெரிவிக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ நிறுவனத்தின் உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தன்னிடம் தஞ்சமடைய வருபவர்களை வரவேற்கும் முகத்துடன் இக்கோவிலின் முதல் வாயில் ‘அடையாத வாயில்’ என்ற பெயருடன் திறந்தே இருக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி ஏற்கனவே நான் விரிவாக எழுதியிருக்கும் பதிவுகளை இங்கே பார்க்கவும்.

சமயம் வளர்த்த தஞ்சை

தஞ்சையில் எல்லா சமயத்தவர்களுக்கும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. சைவ, வைணவம் தவிர, கிறிஸ்தவர்களின் திருச்சபைகள், கத்தோலிக்கர் தேவாலயங்கள், இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள், தர்க்காக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இது தவிர, கரந்தையில் ஆதீஸ்வரர் என்ற சமணக்கோவில் உள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் கருவறையின் தென்பாகத்திலும் கேரளாந்தகன் திருவாயிலிலும் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. இவை தஞ்சையில் ஒரு காலத்தில் புத்த மதமும் செழித்திருந்தது என்று தெரிவிக்கிறது.

தமிழ் வளர்த்த தஞ்சை:

பழங்கால இலக்கியங்களில் ‘கருந்திட்டைக்குடி’ என்று அழைக்கப்பட்ட, தற்போது ‘கருத்தட்டாங்குடி’ என்று அழைக்கப்படும் ‘கரந்தை’ நகரம் தஞ்சைக்கு வெளியே வட திசையில் இருக்கிறது. இந்தக் கரந்தையில் தமிழ்ச்சங்கம் 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்லாண்டுகளாக தமிழ்த்தொண்டாற்றி வருகிறது. இதில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ்வேள் உமா மகேஸ்வரனார் தமிழை வளர்க்க அரும்பாடு பட்டார். தொல்காப்பியத்திற்கு மறுப்புரை எழுதிய தமிழ்ப்புலவர் சோமசுந்தரம் பிள்ளை என் தந்தை வழி பாட்டனார். அவருடைய ஓவியம் இன்றளவும் கரந்தை தமிழ்ச்சங்கத்தில் உள்ளது.  தமிழ்ப்புலவர் பவானந்தம் பிள்ளை பழைய சுவடிகளை தேடிப்பிடித்து அச்சேற்றிய பெருமைக்கு உரியவர்.
ராவ்சாகிப் ஆப்ரகாம் பண்டிதர் 1400 பக்கங்கள் கொண்ட ‘கருணாமிர்த சாகரம்’ என்ற பெரிய இசை நூலை வடித்தவர். இவர் பெயரில் தஞ்சை கீழவாசல் அருகே ஒரு சாலையே உள்ளது. இன்னும் தமிழ் அறிஞர்கள் வேதநாயகம் சாஸ்திரி, ராவ்பகதூர் சீனிவாசபிள்ளை, விபுலானந்த அடிகள், சிவக்கொழுந்து தேசிகர் போன்றவர்கள் தங்கள் தமிழாற்றலால் கரந்தை தமிழ்ச்சங்கத்திற்கு பெரும் தொண்டாற்றியவர்கள்.

தமிழ்ப்பல்கலைக் கழகம்


தமிழ்ப்பல்கலைக் கழகம்
 இப்பல்கலைக்கழகம் 1981-ல் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே தமிழுக்கென்று ஆரம்பித்த ஒரே பல்கலைக்கழகம் இது தான் என்று சொல்லப்படுகின்ற்து.



தமிழ் பல்கலைக்கழக முகப்பு
இங்கே இயல் இசை நாடகம் பயிற்றுவிக்கப்படுகின்றன. மொழி, இலக்கிய ஆய்வுகள் செய்வது, கல்வெட்டுக்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக வெளியிடுவது, அந்நிய நாட்டினர்க்கு தமிழ் கற்பித்தல் ஆகிய அரும்பணிகளை இந்த தமிழ்ப்பல்கலைக்கழகம் செய்து வருகிறது.

தென்னக பண்பாட்டு மையம்:

கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும்.

தஞ்சை அரண்மணை



அரண்மணை தர்பார் ஹால்
 தஞ்சை அரண்மணையின் நுழைவாயில் கிழக்கு ராஜவீதியில் உள்ளது. ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய கலையழகுள்ள கட்டடங்கள் காணப்படுகிறது. இவை நாயக்க மற்றும் மராத்திய மன்னர்களால் கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் மிகப்பெரிய முற்றம் உள்ளது.. பெரிய முற்றத்தின் வழி சென்றால் அங்கு பல தூண்களை உடைய பெரிய கூடம் உள்ளது.



கண்காணிப்பு கோபுரம்

தெற்கு பக்கத்தில் 190 அடி உயரமுடைய எட்டு அடுக்குகளை உடைய கூட கோபுரம் உள்ளது. இது கண்காணிப்பு கோபுரம் என அழைக்கப்படுகிறது. மன்னர்களின் படைக்கல கொட்டிலாக இந்த இடம் இருந்தது.


அருகே உயர்ந்த கோபுரம்

அருகே உயர்ந்த கோபுரம் ஒன்றும் உள்ளது. இவற்றின் மேலேறி நாயக்க மன்னர்கள் திருச்சி ஸ்ரீரங்கப் பெருமானை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த அரண்மனையில் நாயக்க, மராத்திய மன்னர்களின் தர்பார் ஹால் மற்றும் ராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவை பார்க்கத் தகுந்த இடங்களாகும் மராத்திய /நாயக்க அரண்மனை கலைக்காட்சியகமாகவும் ,சரஸ்வதி மஹால் நூல் நிலையம் பழைய ஓலைச்சுவடிகளின் உறைவிடமாகவும் உள்ளன. இங்குள்ள கலைக்கூடத்தை நிறுவியவர் தமிழறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானும் கலெக்டராக இருந்த திரு. பழனியப்பனும்தான் என்று ஆய்வாலர்கள் தெரிவிக்கிறார்கள்..

சரஸ்வதி மஹால்




சோழர் காலத்தில் ‘ சரஸ்வதி பண்டாரம்’ என்று உருவாக்கப்பட்ட நூல் நிலையமே, மராட்டியர் காலத்தில் ‘சரஸ்வதி மஹால்’ என்று மாற்றப்பட்டது. இங்குள்ள நூலகத்தில் ஏறத்தாழ 4500 பழமையான புத்தகங்கள் உள்ளன. 30000க்கு மேல் ஓலைச்சுவடிகள் உள்ளன. அவை அறிஞர்கள், மன்னர்களால் கையொப்பமிட்டு வந்தவை என்று சொல்லப்படுகிறது. இதில் 300 ஆண்டுகள் நாயக்க மன்னர்களாலும் மராட்டிய மன்னர்களாலும் சேகரிக்கப்பட்ட எண்ணற்ற ஓலைச்சுவடிகள் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் தமிழிலும் மராட்டிய மொழியிலும் உள்ளன.

சிவகங்கை பூங்கா

பெரிய கோவிலின் வடக்கே சிவகங்கை பூங்கா உள்ளது. 
பூங்காவின் உள்ளே
பூங்கா வழியே தெரியும் பெரிய கோவில் கோபுரம்

பூங்காவின் முகப்பு



பூங்காவிற்கருகே சிவகங்கைக் குளமும் நடுவேயுள்ள சிறு கோவிலும்


ஆயிரம் ஆண்டுகள் பழமையான யானைக்கால் மரம்

1000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இங்குள்ளது. சுற்றிப்பார்க்க சிறு ரயில் வசதியும் உள்ளது. பொழுது போக்க ஒரு உகந்த இடமாக பலருக்கும் விளங்குகிறது.

தஞ்சை அருகே..

தஞ்சையிலிருந்து 12 கி.மீ தூரமுள்ள திருவையாறு சாஸ்திரீய இசைக்குப் புகழ் பெற்றது. தஞ்சைக்கும் திருவையாற்றிற்கும் இடையே காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி என்ற ஐந்து ஆறுகள் ஓடுவதால் அவற்றைச் சார்ந்த நகரம் திரு+ஐயாறு= திருவையாறு எனப்பெயர் பெற்றது.

தஞ்சைக்கு வெளியே அனைத்து திசைகளிலும் மாணிக்க வாசகர் , அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ்பெற்ற கோவில்கள் சூழ்ந்த நகரம் தஞ்சை! நவக்கிரகங்களுக்கு தனித்தனிக் கோயில்களும், சரஸ்வதிக்கென்று தனிக்கோவிலும் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே உள்ளன.

கலையழகு மிகுந்த தஞ்சையை நீங்களும் ஒரு முறை பார்க்க வாருங்களேன்!

இந்தத் தொடர் பதிவை



சகோதரர் ரமணி [தீதும் நன்றும் பிறர் தர வரா]

சகோதரி மஞ்சுபாஷிணி [கதம்ப உணர்வுகள்]

இருவரையும் தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


[அரண்மணை தர்பால் ஹால், பரத நாட்டிய புகைப்படங்களுக்கு நன்றி: கூகிள்]









44 comments:

  1. தஞ்சாவூர் போனா பார்க்க நிறைய கலைச் செறிவு மிகுந்த இடங்கள் இருக்கு போல!!

    யானைக்கால் மரம் ஆச்சர்யம்!!

    ReplyDelete
  2. தஞ்சைபற்றி முழுமையான தகவல்கள் அருமையான பதிவு..!

    ReplyDelete
  3. தஞ்சையையின் வரலாற்று சிறப்புக்களையும், நெஞ்சை அள்ளும் விதமாக விரிவாக பெருமிதப்படும் வகையில் பகிர்ந்தமை மிக பாராட்டத்தக்கது..நிச்சயம் இந்த பகிர்வு இணையத்தில் உங்கள் பெயர் சொல்லும், நீங்கா இடம் பெறும்.தொடர்ந்து இன்னமும் சிறப்புக்களை குறிப்பிடுங்கள் அக்கா..

    ReplyDelete
  4. தஞ்சையை அருமையாக சுற்றி காட்டிவிட்டீர்கள்.....!!!

    ReplyDelete
  5. படங்கள் மிகவும் அருமை...!!!

    ReplyDelete
  6. தஞ்சை பற்றிய பதிவு படங்களும் நல்லா இருக்கு. இப்பல்லாம் தஞசா ஊர்ல தலையாட்டி பொம்மைகள் செய்வதில்லையா.

    ReplyDelete
  7. தஞ்சையைப் பற்றிய அரிய பெரிய தகவல்களும், அழகழகான படங்களும் மிகச் சிறப்பாகத் தந்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  8. அக்கா,கலையழகும்,வரலாற்று சிறப்பும்,இயற்கை வளமும் ஒருங்கே பெற்ற தஞ்சையை நெஞ்சை அள்ளும் விதமாக அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்.மிக்க நன்றியக்கா.

    ReplyDelete
  9. மிக அழகாக தொகுத்து எழுதி இருக்க்கீங்க, ரொம்ப பொறுமையாகவும் பதிவிட்டு இருக்கீங்க.

    ReplyDelete
  10. தஞ்சாவூரை சுற்றிப்பார்க்க 2 நாள் வேணும் போல..அழகா தொகுத்து எழுதிருக்கீங்க.யானைகால் மரம் ரொமப் ஆச்சர்யமா இருக்கு!!

    ReplyDelete
  11. பரத நாட்டியம் சிறப்பான நிலையை அடைந்தது.

    ரெம்ப நீளமான பதிவு. பாதி வாசித்தேன். மிகச் சிறப்பு சகோதரி. பாராட்டுகள்.
    வேதா.இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  12. நெஞ்சை அள்ளும் தஞ்சை....
    அருமையான படங்களுடன் நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  13. தஞ்சை பற்றிய உங்கள் பகிர்வு
    நெஞ்சை கொள்ளை கொண்டது....

    ReplyDelete
  14. தஞ்சைக்கு ஒருமுறை சென்றுவந்ததுபோன்றதொரு உணர்வு. தஞ்சையின் சிறப்புக்களை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். மிகவும் ரசனையான அழகான பதிவு. பாராட்டுக்கள் மனோ மேடம்.

    ReplyDelete
  15. உங்கள் தலைப்பு போலவே தஞ்சை நெஞ்சை அள்ளுகிறது.

    அழகிய படங்களுடன் அபூர்வமான வரலற்றுத் தகவல்களுடன் தஞ்சையை சுற்றிக்காட்டியதற்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  16. படங்களுடன் அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  17. தஞ்சையைப் பற்றிய அழகான பகிர்வு. நல்ல தகவல்கள்.

    யானைக்கால் மரம் ஆச்சரியம்.

    ReplyDelete
  18. அன்பின் மனோ அம்மா நான் ஊருக்கு போனப்பின் கருத்து போடுகிறேன் படித்து.

    ReplyDelete
  19. சிறு குழந்தையில் விடுமுறையில் சிவகங்கைப் பூங்கா போயிருக்கிறேன். ஆனால் உங்கள் பகிர்வில் தகவல்கள் புதுமை மனோ:)

    ReplyDelete
  20. வாவ் நிறைய்ய இடங்கள் பார்ப்பதற்க்கு இருக்கு. அடுத்த முறை முடிந்தால் நிச்சயம் போய் பார்ர்கனும்.
    ஒரே ஒருமுறை ஒரு உறவினர் கல்யானத்திற்க்கு தான் போயிருக்கேன்.
    பூண்டி கல்லுரிக்கும் போயிருக்கேன்.
    நல்ல பதிவு நல்ல அருமையான படங்களோட விஷ்யங்கள். நன்றி.
    நீண்ட நாட்கள் கழிந்து வருகிறென். நல்ல பதிவு.

    ReplyDelete
  21. அற்புதமாய் தஞ்சையை ஒளிஓவியத்துடன் சுற்றிக்காட்டிய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. கருத்துக்கும் வருகைக்கும் அன்பு நன்றி ஹுஸைனம்மா!

    ReplyDelete
  23. அன்பான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் தமிழ் அமுதன்!

    ReplyDelete
  24. பாராட்டிற்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  25. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் நாஞ்சில் மனோ!

    ReplyDelete
  26. பாராட்டிற்கு இனிய நன்றி சகோதரி லக்ஷ்மி! தஞ்சை தலையாட்டி பொம்மைகளை இப்போதும் விற்பனை செய்கிறார்கள்! அவர்களைப்பற்றி அறிய முயன்றேன்‍ விபரம் சரியாகக் கிடைக்கவில்லை.

    ReplyDelete
  27. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  28. இனிய பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  29. என் பொறுமைக்குமான பாராட்டிற்கும் சேர்த்து அன்பு நன்றி ஜலீலா!

    ReplyDelete
  30. பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி மேனகா! அந்த யானைக்கால் மரம் எனக்கும் பார்த்தபோது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது!

    ReplyDelete
  31. பாராட்டிற்கு அன்பு நன்றி வேதா! நீள‌மான பதிவு தான். அதனாலேயே இன்னும் சில தகவல்களை சேர்க்காமல் விட்டு விட்டேன்!!

    ReplyDelete
  32. பாராட்டிற்கும் க‌ருத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் கலாநேசன்!

    ReplyDelete
  33. இனிமையான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!!

    ReplyDelete
  34. பாராட்டுக்களுக்கும் இனிய கருத்துக்களுக்கும் அன்பு நன்றி கீதா!

    ReplyDelete
  35. அன்பான கருத்துரைக்கு மனங்கனிந்த நன்றி ராம்வி!

    ReplyDelete
  36. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  37. பாராட்டுக்கும் கருத்துக்களுக்கும் இனிய நன்றி ஆதி!

    ReplyDelete
  38. அன்பான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி தேனம்மை!

    ReplyDelete
  39. பாராட்டிற்கும் க‌ருத்துரைக்கும் அன்பு நன்றி விஜி!

    ReplyDelete
  40. பாராட்டிற்கு இனிய நன்றி ராஜராஜேஸ்வ‌ரி!

    ReplyDelete
  41. தஞ்சையைப் பற்றிய பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். சிவகங்கைப் பூங்கா மாறி விட்டதா அப்படியேதான் இருக்கிறதா தெரியவில்லை. அந்த குளத்தில் முன்பு தொங்கு பாலம் இருந்தது. இப்போது இருக்கிறதா தெரியவில்லை. பெரிய கோவில் தவிர கொங்கநேஸ்வரர் கோவில், ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரி, மத்திய நூலகம், மங்களாம்பிகா ஹோட்டல், சுப்பையாப் பிள்ளை பால் கடை....கல்யாண சுந்தரம், பீட்டர்ஸ், ப்ளேக், அந்தோணியார் பள்ளிகள்....ம்....ஹூம்...

    ReplyDelete
  42. தஞ்சாவூரைப் பற்றி ரொம்ப அருமையான தகவல்களுடன் சிறப்பான கட்டுரை.... நீங்களும் எங்களூர் என்று தெரிந்ததில் ரொம்ப மகிழ்கிறேன். அந்த புது ஆற்றின் ஒரு கரையோடு தினமும் பயணம் செய்து பணிக்குச் செல்கிறேன். சில சமயங்களில் சுழித்தோடும் வெள்ளத்தோடு கொஞ்சம் பயம் காட்டும் .... தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை இப்போதும் செய்கிறார்கள் என்றாலும், அதிலும் புகுந்து விட்டது பிளாஸ்டிக் கலாசாரம். தஞ்சை அழகு. மரங்களும், வயல்களும் நிரம்பிய தஞ்சாவூர் ரொம்ப அழகு... எப்போதும் ஒரு வித அமைதி ததும்பும் இந்த தஞ்சை வசிக்க இனிமையானது..... இல்லையா மனோ அம்மா..? நீங்கள் தஞ்சையில் எங்கே? எப்போது வருவீர்கள் தஞ்சைக்கு? வரும் போது அவசியம் சொல்லுங்கள். உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.....

    ReplyDelete
  43. சிவகங்கைப்பூங்கா அப்படியே தானிருக்கிறது ஸ்ரீராம்! ஓரளவு சுத்தத்தை கடைபிடிக்கிறார்கள். தொங்கு பாலம் மட்டும் இப்போது கிடையாது.
    கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  44. நீண்ட கருத்துரைக்கு அன்பு நன்றி கிருஷ்ணப்ப்ரியா! நீங்களும் தஞ்சை என்பதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி! நீங்கள் சொன்னது போல அமைதியும் எளிமையும் பழங்கால சின்னங்களும் பசிய வயல்களுமாய் தஞ்சை எப்போதுமே அழகு! நானும் புது ஆறின் ஒரு பக்கம் அடிக்கடி தினந்தந்தி அலுவலகத்திற்கும் கீழவாசலுக்கும் பயணிப்பது வழக்கம். மறு பக்கம் ஆற்றின் கரையில் இருக்கும் பொன்மணி திருமண மண்டபம் என் தங்கையினுடையது. நீங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு உங்கள் வலைப்பக்கம் வந்து பதிலளித்திருக்கிறேன்.

    ReplyDelete