Monday, 19 September 2011

முத்துக்குவியல்கள்!!

முத்துக்குவியல்களில் இந்த முறை வித்தியாசமான, வியப்பளிக்கும் விசித்திரமான தகவல்கள் இடம் பெறுகின்றன. தகவல்கள் அடங்கிய இடுகையை அளிக்கும் முன் ஒரு நல்ல செய்தி!

இரண்டு இடுகைகளுக்கு முன் ஒரு இந்தியப்பெண், இங்கு விஷப்பூச்சி கடித்து கோமாவில் விழுந்திருப்பதாக தெரிவித்திருந்தேன். அந்தப் பெண் தற்போது கோமாவிலிருந்து எழுந்து விட்டார். முழுவதும் குணமாகி சில நாட்களுக்கு முன் தான் மருத்துவ மனையிலிருந்து வெளியேறியுள்ளார். பிரார்த்தனை செய்து, நலம் விசாரித்த அன்புத் தோழமைகள் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி!


முதல் முத்து:


TOWER OF SILENCE
 ஜோரோஸ்ட்ரியன் எனப்படும் பார்சி சமூகத்தினரின் பூர்வீகம் ஈரான். அங்குள்ள இஸ்லாமியர் அளித்த தொல்லைகள் காரணமாக மேற்கிந்தியாவில் 10- ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள். மும்பையில்தான் இவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

மரணமெய்திய ஒரு பார்சி இனத்தவரது இறுதிச் சடங்கு முறை நம்மை நடுங்க வைக்கிறது. அவர்கள் இறந்த உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல், அந்த உடலிலிருந்து தலைமுடி, நகங்களை நீக்கி விட்டு, அந்த உடலை பாலில் குளிப்பாட்டி TOWER OF SILENCE என்ற குன்று போன்ற இடத்தில் வைத்து விடுகிறார்கள். அங்கு தயாராக இருக்கும் கழுகுகள் அந்த உடலை கண நேரத்தில் தின்று விடுமாம். நீர், காற்று, நெருப்பு, பூமி- இவை புனிதமான மூலங்கள் என்பதால் அவை களங்கப்படக்கூடாது என்று இப்படி செய்கிறார்களாம்.

மும்பையில் சி.எஸ்.டி அருகில் உள்ள Tower of Silence கட்டடம் 3 அடுக்குகளாய் பிரிக்கப்பட்டு, முதல் அடுக்கில் ஆண்களையும் இரண்டாம் அடுக்கில் பெண்களையும் மூன்றாவதில் குழந்தைகளையும் வைப்பார்களாம்.

பார்சி இனத்திலிருந்து வேறு மதத்தில் திருமணம் ஆனவர்களுக்கு இங்கு அனுமதி கிடையாது. சமீபத்தில் மரணம் அடைந்த கோத்ரெஜ் உடலும் இப்படித்தான் வைக்கப்பட்டதாம். ரத்தன் டாட்டா கூட பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்தான்.

இரண்டாம் முத்து:

உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் இருப்பது நெய்வேலியில்தான். 10 அடி உயரமும் எட்டரைஅ டி அகலமும் 2420 கிலோ எடையும் கொண்ட இந்தச் சிலை பஞ்ச லோகத்தால் ஆனது. இக்கோவிலில் பக்தர்களின் மனக்குறையைத் தீர்க்கவென்று மனு நீதிப்பெட்டி ஒன்றும் ஆராய்ச்சி மணியொன்றும் உள்ளது. மனக்குறைகளை அல்லது விருப்பங்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி மனு நீதிப் பெட்டியில் போட்டு விட்டு, பிறகு ஆராய்ச்சி மணியை அடித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் அல்லது குறைகள் உடனேயே தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மூன்றாம் முத்து:





வாகனப்புகையால் சுற்றுப்புற சூழ்நிலை பாழடைவதைக் கணக்கில் கொண்டு ஜெர்மனி ‘ டிபி ஸ்கூட் ’ என்ற மின்சாரத்தால் இயங்கும் மின் ஸ்கூட்டர் தயாரித்துள்ளது. 1000 வாட் மின்சாரப் பயன்பாடு உள்ள இது 132 செ.மீ அகலமும் 32 செ.மீ அகலமும் 62 செ.மீ உயரமும் கொண்டது. தேவைப்படும்போது கையில் எடுத்துச் செல்லலாம் என்பதுடன் செல்ஃபோன் போல எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் செல்ல வெறும் 7 காசு தான் செலவாகிறதாம்!

நான்காம் முத்து:

ஆந்திர மாவட்டம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பூலரேவு என்னும் கிராமத்தில் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த மீனவர்கள் வசிக்கிறார்களாம். இவர்கள் வழக்கப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பெரிய பந்தல் போட்டு எல்லோரது வீட்டுத் திருமணங்களையும் அங்கே இரவு நேரத்தில் நடத்துவது வழக்கமாம். மணமகனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்கரித்து, மணமகள் மனமகனுக்கு தாலி கட்டி மூன்று முடிச்சுகள் போட்டு திருமணம் செய்கிறார்!!

சமீபத்தில் படித்த-ரசித்த பழமொழி:

பெண்-

காதலனுக்கு கைப்பாவை.
கணவனுக்கு உடைமை.
குழந்தைக்கு ஒரு விளையாட்டு பொம்மை!

படங்களுக்கு நன்றி: கூகிள்





62 comments:

  1. அனைத்து முத்துக்களுமேஅ அருமை,புதுமை.

    பார்ஸி இன சவ அடக்கம் நடுநடுங்க வைக்கின்றது.

    //
    பெண்-

    காதலனுக்கு கைப்பாவை.
    கணவனுக்கு உடைமை.
    குழந்தைக்கு ஒரு விளையாட்டு பொம்மை!
    // அக்கா,இது பழமொழியா கவிதையா?எதுவோ..மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. அம்மா முத்துக்கள் அருமை.
    முதல் முத்து படித்திருக்கிறேன்.
    மற்றவை புதியவை.
    கோமாவில் இருந்து மீண்ட பெண் நலமுடன் வளமாய் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  3. வாகனப்புகையால் சுற்றுப்புற சூழ்நிலை பாழடைவதைக் கணக்கில் கொண்டு ஜெர்மனி ‘ டிபி ஸ்கூட் ’ என்ற மின்சாரத்தால் இயங்கும் மின் ஸ்கூட்டர் தயாரித்துள்ளது. 1000 வாட் மின்சாரப் பயன்பாடு உள்ள இது 132 செ.மீ அகலமும் 32 செ.மீ அகலமும் 62 செ.மீ உயரமும் கொண்டது. தேவைப்படும்போது கையில் எடுத்துச் செல்லலாம் என்பதுடன் செல்ஃபோன் போல எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் செல்ல வெறும் 7 காசு தான் செலவாகிறதாம்!

    பயனுள்ள பல தகவல்களையும் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி அம்மா ............

    ReplyDelete
  4. அந்த கோமாவில் இருந்த பெண்ணுக்காக
    ஒரு நாள் மீனாட்சி கோவிலில் அர்ச்சனை செய்தோம்
    உங்கள் பதிவைப் படித்ததும் மிகவும்
    சந்தோஷம் அடைந்தோம்
    வழக்கம்போல் முத்துக்கள் அனைத்தும் அருமை
    பழமொழி மிக மிக அருமை
    பெண் யாருக்குமே பெண்ணாக இல்லாத
    அவலத்தை மிக அழகாக் விளக்கிப் போகிறது பழமொழி
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. முத்துக்குவியல் சிறந்த தகவல் களஞ்சியம்.

    ReplyDelete
  6. பார்சி இனத்தவரின் இறுதிச்சடங்குபத்தி நீங்க சொல்வது சரிதான். நான் 50 வருடம் முன்னே பூனாவில் கண்ணுக்கு நேரே பார்த்து நடுங்கிய காட்சிகள் இப்பவும் கண்முன்னே வருகிரது.லுல்லா நகர் என்னுமிடத்தில்தான் பாறைகளில் வீசி விடுவார்கள் அங்கே கழுகளின் கூட்டம் தான் எப்பவும்.பார்க்கவே பயங்கரமா இருக்கும்.

    ReplyDelete
  7. முத்து சிதறல் புதுமை, அந்த பெண்ணுக்கு என் வாழ்த்துக்கள், நான் இத்தனை வருஷம் மும்பையில் இருந்தும் இந்த விஷயம் தெரியாமல்தான் இருந்துருக்கேன் போங்க...

    ReplyDelete
  8. அனைத்து முத்துக்களுமே புதுமை...கடைசி பழமொழியை மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
  9. குணமடைந்த பெண்ணிர்க்கு வாழ்த்துக்கள்.
    முதல் முத்தைப்பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.பெங்களீரில் TOWER OF SILENCE  இடத்தை தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.வயத்தை கலக்கும்.
    மற்ற முத்துக்கள் அருமை.

    ReplyDelete
  10. //தேவைப்படும்போது கையில் எடுத்துச் செல்லலாம் என்பதுடன் செல்ஃபோன் போல எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் செல்ல வெறும் 7 காசு தான் செலவாகிறதாம்!//
    அட, ஆச்சரியம் தான்!

    ReplyDelete
  11. முத்துக்குவியல் செய்திகள் அனைத்துமே கேள்விப்படாதவை.சமீபத்தில் ரசித்த புதுமொழியும் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  12. முத்துக்குவியல் அருமை .

    ReplyDelete
  13. அந்தப் பெண் நலமடைந்தது மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி.

    பார்ஸி இனத்து சவ அடக்கம் முன்பே கேள்விப்பட்டு, ஆச்சர்யப்பட்டிருக்கீறேன்.ஆனால், இந்த டவர் பத்தித் தெரியாது. மலைகளில்தான் போடுவார்கள் என்று படித்திருக்கிறேன். இப்பப் புதுசா கட்டினாங்களோ என்னவொ?

    ஐரோப்பாவில் பல நாடுகளில் மின்சக்தியால் இயங்கும் கார்கள் பிரபலம். இப்ப ஸ்கூட்டரும் வந்தாச்சா? இங்கயும் சில மால்களில் பேட்டரி ஸ்கூட்டர் பாத்திருக்கிறேன். ஆனா அது சிறுவர்களுக்குரியதுபோல.

    ReplyDelete
  14. முதலாவது முத்துக்கு முதலில் சொந்தக்காரர் எமது திருவள்ளுவர் என்று நினைக்கிறேன். திருவள்ளுவரும் தனது உடலை காக்கைக்குக் கழுகுக்குப் போடும்படிப் பணித்ததாக அறிகின்றேன். பார்சி இனத்தவரும் இப்படிச் செய்கின்றார்கள் என்னும் போது ஆச்சரியமாக ஆனாலும் எரிந்து கடலுக்குள் ஐக்கியமாகும் உடலை வேறு உயிரினங்களாவது உண்ணட்டுமே என்று நினைத்துச் செய்யும் இக்கிரியையை நாமும் மதிப்போம்.
    இரண்டாவது முத்துப்போல் ஜேர்மனியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் இருக்கின்றது. அங்கு செல்லும் பக்தர்கள், தமது குறைகளை எழுதி ஒரு உண்டியலினுள் போட்டுவிடுவார்கள். தமது கோரிக்கைகள் நிறைவேறும் என்று அவர்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.
    மூன்றாவது முத்து மிக்க சந்தோஷம் நல்ல ஒரு அரிய கண்டுபிடிப்பு.
    நான்காவது முத்து வித்தியாசமாக இருக்கிறதே. ஆணுக்குப் பெண் கட்டும் தாலி. அவன் பெண்ணுக்கு என்றும் அடிமை என்று காட்டுகின்றதோ. நாமும் இப்படி மாற்றிப் பார்க்க வேண்டும். பெண்களே இப்போது தாலியைக் கழட்டி வைத்துவிட்டுச் செல்கின்றார்கள். ஆண்கள் என்ன செய்வார்கள் என்று சொல்லத் தேவையில்லை.
    சிறப்பான தகவல்களைத் தந்தளித்த தோழி நீங்கள் ரசித்த பழமொழி கூட அற்புதம் வாழ்த்துகள். நேரம் கிடைக்கும் போது இந்த வலையையும் எட்டிப் பாருங்கள்.
    kowsy2010.blogspot.com

    ReplyDelete
  15. முத்துக் குவியல் ..விபரீதம், வேண்டுதல், விஞ்ஞானம், விழா, விளையாட்டு என தகவல் நிலையமாக இருக்கிறது.....

    ReplyDelete
  16. முதலில் குணமான அந்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள்.

    அனைத்து முத்துக்களுமே அருமை.
    சவ அடக்கம் நடுநடுங்க வைக்கிறது.

    கவிதை நன்றாக இருந்தது.

    ReplyDelete
  17. முத்துக்கள் அனைத்தும் புதுமை. கடவுளே, முதல் முத்து மட்டும் நான் தூங்க போகும் முன் நினைவிற்கு வரகூடாது!

    ReplyDelete
  18. விஷப்பூச்சி கடித்து கோமாவில் விழுந்த பெண் குணமானார் என்று கேட்க மிகவும் சந்தாஷமாக உள்ளது.

    1) பயங்கர முத்து

    2) பக்தி முத்து

    3) சிக்கன முத்து

    4) சீர்திருத்த முத்து

    பழமொழி நல்ல நகைச்சுவையாகவே உள்ளது. [voted 4 to 5 in Indli] vgk

    ReplyDelete
  19. முத்துக்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  20. ஹையா!பதிவைப் படிக்க ஆரம்பிக்கும் பொழுதே நல்ல செய்தி.
    கூட்டுப் பிரார்த்தனைக்கு என்னிக்குமே பலன் அதிகம்தான்.மேலும் அந்த பெண்ணின் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திப்போம்.
    முதல் முத்து: எனக்கு கருத்து வேறுபாடு உள்ளதாக இருக்கிறது.
    TOWER OF SILENCE என்றால் அது பூமியைச் சேர்ந்தது இல்லையா மேடம்? அவர்கள் குளிப்பாட்டும் பால்
    புனிதமான மூலம் கிடையாதா?
    இரண்டாம் முத்து: குறை தீர்க்கும் தகவல்,நன்றி
    மூன்றாம் முத்து:ஹை!இது சூப்பர்.ஆனா மின்சார தட்டுப்பாடு வராதா?
    நான்காம் முத்து:மணமகனுக்கு தாலி?
    வித்தியசம்தான்

    மொத்தத்தில் தகவல் முத்துக்கள் அருமை

    ReplyDelete
  21. அனைத்துத் தகவல்களுமே வியக்கவைக்கின்றன. நல்ல பயனுள்ள தளமாக உங்கள் தளம் விளங்குகிறது. மிகுந்த பாராட்டுகள்.

    கோமாவிலிருந்து மீண்டுவந்த பெண் பற்றிச் சொல்லி மகிழ்வைத் தந்தீர்கள். நன்றி.

    ReplyDelete
  22. எல்லா முத்துக்களுமே புதிய தகவல்கள் அக்கா. எல்லா முத்துக்களையும் VGK sir பாஷையில் பயங்கர முத்து மற்ற முத்துக்களை டாமினேட் செய்து திகிலுற வைக்கிறது.

    ReplyDelete
  23. கோமாவிலிருந்து மீண்ட பெண் பற்றிய தகவல் சந்தோஷமளிக்கிறது. பார்சி இனத்தவர் வழக்கம் இப்போதுதான் கேள்விப் படுகிறேன். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பயங்கரம்.

    ReplyDelete
  24. பாராட்டுக்கு அன்பு நன்றி ஸாதிகா!

    இந்த பழமொழியை நானும் மிகவும் ரசித்தேன். கரிபால்டி என்பவர் எழுதியது. முக்கியமாய் குழந்தைக்கு அம்மா தானே முதல் விளையாட்டு பொம்மையாக இருக்கிறாள்!

    ReplyDelete
  25. கருத்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  26. கருத்துரைக்கு அன்பு நன்றி அம்பாளடியாள்!

    ReplyDelete
  27. முன் பின் தெரியாத ஒருத்தருக்காக மதுரை கோவிலில் பிரார்த்தனை செய்த தங்களின் மனித நேயமும் அக்கறையும் மனதை சிலிர்க்க வைக்கிறது சகோதரர் ரமணி! உங்களுக்கு என் அன்பு நன்றி!

    பெண் பிறந்த‌‌திலிருந்தே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இன்னொருத்தருக்கு அடங்கியவளாகத்தான் வாழ்கிறாள். அப்படி வாழ்வதையே ஆழ்ந்து, ரசித்து தனக்கென்று ஒரு தனித்துவம் இன்றி அனுபவித்துச் செய்கிறாள் என்பது தான் சில‌ சமயங்களில் அவளின் பலமாகவும் ஆகின்றது!! கொஞ்ச நாட்களாய்த்தான் தன்னைப் பற்றியும் தன் உண‌ர்வுகளைப்பற்றியும் தனக்கென சிறிது நேரமாவது ஒதுக்குதல் வேன்டும் என்பது பற்றியும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறாள்!

    ReplyDelete
  28. கருத்துரைக்கு அன்பு நன்றி தமிழ் உதயம்!

    ReplyDelete
  29. உங்களின் அனுபவப்பகிர்வுக்கு அன்பு நன்றி லக்ஷ்மி!

    ReplyDelete
  30. கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் மனோ!

    ReplyDelete
  31. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  32. முத்து முத்தாய் முகிழ்த்த பகிர்வுகள் ரசிக்கவைத்தன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  33. அனைத்து முத்துக்களும் அருமை

    ReplyDelete
  34. ஒவ்வொரு முத்துக்களும் அருமை :-)

    அந்த பெண் கோமாவிலிருந்து மீண்டது கேட்டு மிகுந்த சந்தோஷம் :-))

    ReplyDelete
  35. அனைத்து முத்துக்களும் அருமை..அந்த பெண் குணமானது மிக..மிக.. நல்ல செய்தி!
    ஒரு பெண் நடந்து செல்லும் வாழ்க்கைப் பாதை மூன்று ஆண்களைச் சார்ந்து உள்ளது என்கிற சமஸ்க்ருத பாடல் ஞாபகம் வருகிறது.
    அவர்கள்...
    தந்தை
    கணவன்
    மகன்.

    ReplyDelete
  36. கருத்துரைக்கு அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  37. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ராம்வி!

    ReplyDelete
  38. கருத்துரைக்கு அன்பு நன்றி கே.பி.ஜனா!

    ReplyDelete
  39. இனிய கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி ஆசியா!

    ReplyDelete
  40. கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!

    ReplyDelete
  41. விரிவான கருத்துரை எனக்கு மகிழ்ச்சியை அளித்தது சந்திர கெளரி!
    பூமியில் புதைக்கப்பட்டு புழுவுக்கும் இரையாகிப் போகும் உடல் கழுகுக்கு உண‌வாகப்போவதில் என்ன தப்பு என்று சொல்லும் உங்கள் கருத்தை மதிக்கிறேன். மற்ற‌ விஷயங்களில் அந்த உடலுக்கு நேரும் அவலத்தை நாம் காண்பதில்லை. இந்த விஷயத்தில் அந்த உடல் அவலப்பட்டு, சிதிலமாகிறது என்பது தான் வேதனை!

    ReplyDelete
  42. இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!

    ReplyDelete
  43. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் பத்மநாபன்!

    ReplyDelete
  44. அன்பான வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஆதி!

    ReplyDelete
  45. - முதல் முத்து - படித்ததும் சிலிர்க்க செய்தது... வினோதமான முறை தான், இதுவரை கேள்விப்பட்டதில்லை
    - இரண்டாம் முத்து - இதுவும் எனக்கு செய்தியே
    - மூன்றாம் முத்து - கேள்விபட்டேன், நல்ல விஷயம் தான் மேடம், நம்ம ஊரிலும் இது உபயோகத்துக்கு வந்தால் சூப்பர்
    - நான்காம் முத்து - ஆஹா... இது நல்லா இருக்கே... :)

    ReplyDelete
  46. மூன்று முத்துகளோடு பழமொழியும் 4வது முத்தாக அருமையாக இருந்தது. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  47. உங்கள் புது புதுமுத்துகுவியல்கள் அருமை

    கோமாவில் இருந்து அந்த பெண் நினைவு திரும்பியது மிகுந்த சந்தோஷம்,

    ReplyDelete
  48. கருத்துரைக்கு இனிய நன்றி அமுதா!

    ReplyDelete
  49. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  50. அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி காஞ்சனா!

    ReplyDelete
  51. பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராஜி! நீங்கள் சொல்வது சரி தான்! எனக்கும் இந்த TOWER OF SILENCE ல் கருத்து வேறுபாடு இருக்கிறது. கழுகுகள் தின்று போட்ட எச்சத்தினால் காற்று மாசு படியாதா, என்ன‌?

    ReplyDelete
  52. என் தளத்தை ரசித்துப்பாராட்டியதற்கு மனங்கனிந்த நன்றி கீதா!

    ReplyDelete
  53. எல்லா முத்துக்களுமே புதிய தகவல்கள் அக்கா. எல்லா முத்துக்களையும் VGK sir பாஷையில் பயங்கர முத்து மற்ற முத்துக்களை டாமினேட் செய்து திகிலுற வைக்கிறது.//

    க‌ருத்துரைக்கு இனிய‌ ந‌ன்றி!

    ReplyDelete
  54. கருத்துரைக்கு அன்பான நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  55. ரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  56. அன்பான பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி ஆயிஷா!

    ReplyDelete
  57. அந்தப் பெண் கோமாவிலிருந்தது மீண்டதற்கு உங்களைப்போன்று அனைவருடைய அன்பு தான் காரணம் சகோதரர் ஜெய்லானி! முத்துக்களைப்பாராட்டியத‌ற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  58. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி!

    ReplyDelete
  59. முதல் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி தங்கமணி!

    ReplyDelete
  60. முதல் வ‌ருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி கோவைக்கவி!

    ReplyDelete
  61. பாராட்டிற்கும் கருத்துக்கும் அன்பு நன்றி ஜலீலா!

    ReplyDelete
  62. இண்ட்லியில் இணைந்து ஓட்டளித்த அன்புத் தோழமைகள் நாஞ்சில் மனோ, BSR, திரு.வை.கோபாலகிருஷ்ணன், ஆசியா, ஜனா, ஜெய்லானி, அனைவருக்கும் இனிய நன்றி

    ReplyDelete