Thursday, 26 May 2011

முத்துக்குவியல்கள்!!

வாழ்க்கையின் நீண்ட பாதையில் நடந்து கொண்டிருக்கும்போது, எத்தனையோ ஆச்சரியங்களும் பாதிப்புகளும் வழி நெடுக நமக்காக காத்துக்கொண்டிருக்கின்றன! சில நம் மனதை நெகிழ வைக்கின்றன! சில நம்மை அதிர்ந்து போக வைக்கின்றன! சில நம்மை மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன! ஆனாலும் ஒவ்வொருத்தர் வாழ்விலும் சில அருமையான அனுபவங்கள் ஆழ்கடலினின்றும் எடுத்த நல்முத்துக்களாய், பொக்கிஷங்களாய் என்றும் இதயத்தில் உறைந்து போகின்றன!

இங்கே வழக்கம்போல முத்துக்குவியல்களில் அதிசயிக்க வைத்த முத்தும் அசத்திய முத்தும் அருமையான முத்தும் இருக்கின்றன!

அதிசயிக்க வைத்த முத்து;


இதை ஒரு மாத இதழில் படித்தபோது உண்மையிலேயே வியப்படைய வைத்த செய்தியாக இருந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த, சர்க்கஸ் குழுவில் வேலை செய்த பாபி லீச் என்பவருக்கு நிறைய சாதனைகள், அதுவும் யாருமே செய்திருக்க முடியாத சாதனைகள் செய்து உலகப்புகழ் எய்த வேண்டுமென்ற கனவும் ஆசையும் இருந்து கொண்டே இருந்தது. 1911-ல் இவர் கனடாவிலுள்ள 167 அடி உயரமான நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து ஒரு இரும்பாலான பீப்பாயினுள் உட்கார்ந்து உருண்டு விழுந்து சாதனை படைத்தார். இதனால் இவருக்கு இரு முழங்கால்களிலும் உடலின் வேறு சில பாகங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டு 6 மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்த போதிலும் இந்த மாதிரி பல சாதனைகளை முயன்று கொன்டு இருப்பதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யமாக இருந்தது அவருக்கு!. 15 வருடங்கள் கழித்து ஒரு வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்து, அதனால் ஏற்பட்ட காயங்களினால் அவர் மரணமடைந்தார்!

நமது பக்கத்தில் சொல்லும் “ மலையிலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, புல் தடுக்கி விழுந்து செத்தவனும் உண்டு” என்ற வாக்கு தான் நினைவில் எழுந்தது இதைப்பற்றிப் படித்தபோது!

அசத்திய‌ முத்து:

இதுவும் அடுத்த நாட்டில் நடந்தது தான். இது மாதிரியெல்லாம் நம் நாட்டில் நடந்தால் எப்படி இருக்கும்[!] என்ற ஏக்கத்தையும் கனவையும் ஏற்படுத்தியது இந்தச் செய்தி!

பல வ‌ருடங்களுக்கு முன்னர் நெதர்லாந்தை ஸ்பானிஷ் வீரர்கள் முற்றுகையிட்டு போர் புரிந்த போது, அவர்களை நாட்டிற்குள் நுழைய விடாமல் மக்கள் காட்டிய வீர தீரத்திற்குப் பரிசாக நெதர்லாந்தின் மன்னர் வில்லியம்ஸ் அவர்களுக்கு வரி விலக்கு அளித்தாராம்! ஆனால் அந்நகர மக்கள் அந்த வரிச்சலுகையை மறுத்து அதற்குப்பதிலாக ஒரு சர்வகலாசாலையைக் கட்டித்தருமாறு கேட்டுக்கொண்டார்களாம். மன்னனும் அவர்களின் அறிவு வேட்கையை மதித்து ஒரு சர்வகலாசாலையைக் கட்டித் தந்தானாம்.

மக்களுடைய வீரத்திற்கு ஒரு மன்னன் நன்றியுடன் பரிசளிப்பது ஒரு மகத்தான சிறப்பு என்றால், சலுகைகள் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று மறுத்து நகரத்தில் அறிவுக்கண்ணைத் திறக்குமாறு வேண்டிய மக்களின் மனம் அதையும் விட சிறப்பானது அல்லவா? ‘ லெய்டன் சர்வகலாசாலை’ [Leiden University ] என்று பெயரிடப்பட்டு 1575-ல் தோன்றிய இந்த சர்வகலாசாலை, உலகளாவிய தரத்தில் பல நோபல் பரிசு பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்களைத் தன்னகத்தே தாங்கி இத்தனை வருடங்களில் மிகவும் புகழ் பெற்றிருக்கிறது!

அருமையான முத்து:


யாரை எப்படி வணங்க வேண்டும்?

1. இறைவனை வணங்கும்போது தலைக்கு மேல் இரு கரங்களையும் ஒரு அடிக்கு மேல் குவித்து வணங்குதல் வேண்டும்.

2. குருவை வணங்கும்போது, நெற்றிக்கு நேராக கரங்களைக் குவித்து வணங்குதல் வேண்டும்.

3. அறநெறியாளர்களை வணங்கும்போது, மார்பிற்கு நேராக கரங்களைக் கூப்பி வணங்குதல் வேண்டும்.

4. தந்தையை வணங்கும்போது, வாய்க்கு நேராக கரங்களைக் குவித்து வணங்குதல் வேண்டும்.

5. தாயை வணங்கும்போது, சாஷ்டாங்கமாகத் தரையில் படுத்து வணங்குதல் வேண்டும்.

ஆன்றோர்கள் வகுத்திருக்கும் இந்த நெறிமுறைகள் பற்றி அறிந்தபோது, தாய்க்கு நம் இந்திய நாட்டில் முன்னோர்கள் கொடுத்திருந்த மரியாதையை உணரும்போது, இந்த பண்புகளும் நெறிமுறைகளும்தான் இன்னும் இந்திய நாட்டை காப்பாற்றிக்கொண்டிருக்கிறதோ என்று

பெருமிதப்படத்தோன்றுகிறது!!

படங்கள் உதவி: கூகிள்

21 comments:

  1. முத்துக்குவியலில் பகிர்ந்து கொண்டவை நன்றாக இருந்தது.

    ReplyDelete
  2. மக்களுடைய வீரத்திற்கு ஒரு மன்னன் நன்றியுடன் பரிசளிப்பது ஒரு மகத்தான சிறப்பு என்றால், சலுகைகள் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று மறுத்து நகரத்தில் அறிவுக்கண்ணைத் திறக்குமாறு வேண்டிய மக்களின் மனம் அதையும் விட சிறப்பானது அல்லவா?

    சத்தியமான வார்த்தைகள் அம்மா!, இங்கே இலவசங்களால் இல்லாமை பெருகிக்கொண்டுதான் இருக்கிறது , வணங்கும் முறை பற்றியும் அறிந்தேன் தெளிந்தேன் நன்றி

    ReplyDelete
  3. //மக்களுடைய வீரத்திற்கு ஒரு மன்னன் நன்றியுடன் பரிசளிப்பது ஒரு மகத்தான சிறப்பு என்றால், சலுகைகள் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று மறுத்து நகரத்தில் அறிவுக்கண்ணைத் திறக்குமாறு வேண்டிய மக்களின் மனம் அதையும் விட சிறப்பானது அல்லவா? ‘ லெய்டன் சர்வகலாசாலை’ [Leiden University ] என்று பெயரிடப்பட்டு 1575-ல் தோன்றிய இந்த சர்வகலாசாலை, உலகளாவிய தரத்தில் பல நோபல் பரிசு பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்களைத் தன்னகத்தே தாங்கி இத்தனை வருடங்களில் மிகவும் புகழ் பெற்றிருக்கிறது!//


    நம்ம ஊர்ல அரிசி இத்யாதிகள் இலவசமா வாங்குறதை வசமா குத்தி இருக்கீங்க ஹா ஹா ஹா ...
    //

    ReplyDelete
  4. கண்டிப்பா அந்த நாட்டு மக்களை பாராட்டனும்...!!!

    ReplyDelete
  5. நயாகரா நீர்வீழ்ச்சியில் சாதனை செய்தவர் வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்து உயிரை விட்ட செய்தி - அடேடே.
    //சலுகைகள் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று மறுத்து நகரத்தில் அறிவுக்கண்ணைத் திறக்குமாறு வேண்டிய மக்களின் மனம் // - அடேடேடே.
    //இந்த பண்புகளும் நெறிமுறைகளும்தான் இன்னும் இந்திய நாட்டை காப்பாற்றிக்கொண்டிருக்கிறதோ// (ம்ஹூம்....என்ற பெருமூச்சு)

    ReplyDelete
  6. சர்க்கஸ் கம்பெனியில் வேலைபார்த்து பல சாகஸங்கள் செய்தவரின் முடிவு வாழைப்பழத்தோலில் சறுக்கிவிழுந்து அதன் காரணமாக ஏற்படணும் என்று இருக்கிறது பாருங்கள். வியப்பாக உள்ளது.

    யாரை எப்படி வணங்க வேண்டும் என்பதுவும், அதுவும் தாய்க்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பிடமும் அருமை. முற்றும் துறந்த முனிவர்களையும் மகான்களையும் அவரின் அண்ணன், அக்காள், தந்தை உள்பட உலக மக்கள் அனைவரும் விழுந்து சாஷ்டாங்கமாக 4 முறை நமஸ்கரிப்பது வழக்கம். அந்த மகான்/முனிவர் கூட தன்னைப்பெற்றெடுத்த தாய் ஒருவரை மட்டுமே விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று இந்துக்களின் தர்மசாஸ்திரமே சொல்லுகிறது. தாயார் அவ்வளவு உயர்ந்தவள்.

    அதையே தங்கள் இந்தப்பதிவிலும் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. முத்துக்குவியலை பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா!!

    ReplyDelete
  8. என் நண்பர் ஒருவர் எப்போதும் முகத்துக்கு வலதுபக்கம் உடலை விட்டு ஒதுக்கு கைகளைக் குவித்து வணங்குவார். 'மனிதர்களிடம் அப்படிதான் வணக்கம் தெரிவிக்க வேண்டும்' என்பார்!

    ReplyDelete
  9. அதிசயிக்க வைத்த முத்து

    ReplyDelete
  10. நன்முத்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  11. வணங்குவது தமிழர் பண்பாடு. எங்கள் வீட்டில் யாரிடமும் கை குலுக்க மாட்டோம். கரம் குவித்து வணக்கம் சொல்வோம். இளைவர்களும்தான். சில சமயம் ஆச்சரியமான பார்வைகள்தான் கிட்டுகின்றன. பண்பாட்டை நினைவுபடுத்தும் இது போன்ற பதிவுகள் நிறைய வரவேண்டும். நன்றி,

    ReplyDelete
  12. அன்பான கருத்துக்கு இனிய நன்றி தமிழ் உதயம்!

    ReplyDelete
  13. விரிவான கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி சகோதரர் ராஜகோபாலன்!

    ReplyDelete
  14. மக்கள் இலவசமாக வாங்குவதை நிச்சயமாக குத்தி எழுதவில்லை சகோதரர் மனோ! ஏழைகளின் இயலாமை நிச்சயம் இலவசங்களை வரவேற்கத்தான் செய்யும்! ஆனால் இலவசங்களைத் தவிர்த்து ஒரு மன்னன் நாட்டின் அறிவுக் கண்களைத் திறந்து, உடல் நலம் நலிந்தவர்களுக்கு உதவிகள் செய்து, உண்மையிலேயே அவன் மகுடம் ஜொலிக்க வேன்டும்! அது தான் ஆரம்பத்தில் ' ஏக்கம்' என்று குறிப்பிட்டிருந்தேன்!!

    தங்களின் கருத்துக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  15. உங்களின் பெருமூச்சு என்னையும் பற்றிக் கொண்டது அன்புச் சகோதரர் எல்லென்! இதெல்லாம் நம் தமிழகத்தில் நடப்பதென்பது கனவு காண்பது மாதிரி தான்! இருந்தாலும் கனவு காண்பது தவறில்லை!

    ReplyDelete
  16. தங்கள் அன்பான விரிவான கருத்துக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    இதே இந்து மத தர்ம சாஸ்திரம் ' மாதா, பிதா, குரு, தெய்வம்' என்றும் சொல்கிறது! அங்கேயும் தாயை முன்னால் வைத்துத்தான் வணங்குகிறது!

    ReplyDelete
  17. அன்பான கருத்துக்கு இனிய நன்றி மேனகா!

    ReplyDelete
  18. ஸ்ரீராம். said...
    என் நண்பர் ஒருவர் எப்போதும் முகத்துக்கு வலதுபக்கம் உடலை விட்டு ஒதுக்கு கைகளைக் குவித்து வணங்குவார். 'மனிதர்களிடம் அப்படிதான் வணக்கம் தெரிவிக்க வேண்டும்' என்பார்! "

    வணங்கும் பழக்கம் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு மாதிரி இருப்பதை அறிந்து கொள்ள‌ முடிகிற‌து! எப்படியிருந்தாலும் ஒருத்தரை வணங்கும் குணமே அருமையான பழக்கம், இல்லையா?

    ReplyDelete
  19. கருத்துக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்துக்கும் இனிய நன்றி மாதவி!

    ReplyDelete
  21. பாராட்டுதல்களுக்கும் முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சாகம்பரி!
    எங்கள் இல்லத்திலும் இந்த பழக்கம் இருக்கிறது. காலத்தால் அழிந்து கொண்டிருக்கும் இது போன்ற நல்ல பழக்க வழக்கங்களை இந்த மாதிரி நினைவூட்டியாவது அவற்றை நிலை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்!!

    ReplyDelete