Monday, 7 March 2011

சாப்பாட்டிற்கான தொடர்பதிவு இது!!

அன்பு சகோதரி ஜலீலா [சமையல் அட்டகாசங்கள் ]கடந்த மாதம் இந்தத் தொடர்பதிவிற்கு அழைத்திருந்தார். நேரமின்மையால் அதை இப்போதுதான் தொடர முடிந்தது. உணவு, உணவு முறைகள் பற்றியான பதிவு இது.

கேள்வி எண்:1

இயற்கை உணவை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வதுண்டா?

இயற்கையுணவு என்பதன் அர்த்தம் அடுப்பில் வைத்து சமைக்கப்படாத, எப்படி அது இயற்கையாக நமக்குக் கிடைக்கிறதோ, அப்படியே அதை உண்ண வேண்டும் என்பது தான். பல இயற்கை வைத்திய சிகிச்சை நிலையங்களில் இதைப் பின்பற்றுகிறார்கள். எனினும் முழுவதுமாக எனக்குத் தெரிந்த வரையில் எல்லா வேளைகளிலும் பின்பற்றுவதில்லை. சாப்பாட்டில் சாலட் போலத் தருகிறார்கள்.

கோவையில் உள்ள ஒரு இயற்கை வைத்திய சிகிச்சை நிலையத்திற்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுவதற்காக நான் அடிக்கடி செல்லுவதுண்டு. அங்கே காலை 11 மணிக்கும், பின் மாலை 6 மணிக்கும் என்று இரு வேளைகள்தான் உணவு தருவார்கள். சமையலில் மிகக்குறைவான எண்ணெய் தான் சேர்ப்பார்கள். மிளகாய், புளி சேர்ப்பதில்லை. பாதி உப்பு தான். தேங்காயைப் பாலாக சேர்க்கும்போது தான் அது கொழுப்பாக உடலில் படிகிறது என்பதால் அவர்கள் தேங்காய்த்துருவலாக உணவில் நிறைய சேர்ப்பார்கள். சமைக்காத உண‌வாக காய்கறித்துருவல்கள், முளைகட்டிய தானியங்கள்,  சிறிதளவே உப்பும் நிறைய அளவு தேங்காய்த்துருவலும் சேர்த்து கொடுப்பார்கள்.

இப்படி இல்லாமல் அவலைக் கழுவி அத்துடன் தேங்காய்த் துருவல், வெல்லம் கலந்து முழு நேர உண‌வாக சாப்பிடலாம்.

நான் சாலட் வடிவில் அவ்வப்போது நிறைய காய்கறிகளை உண‌வில் சேர்த்துக்கொள்வதுண்டு. பச்சை ஆப்பிள், தக்காளி, வெங்காயம், காரட், முள்ள‌ங்கி, வெள்ளரிக்காய், இவை அனைத்தையும் வகைக்கொன்றாய் எடுத்து துருவிக்கொண்டு, சிறிது உப்பும் சிறிது எலுமிச்சை சாறும் கலந்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். இது எனக்கு ஒரு மருத்துவர் சொன்ன குறிப்பு. வேறு எதுவுமே உணவாக எடுத்துக்கொள்ளாமல் முழு உணவாக இதை எடுத்துக்கொள்வதுண்டு.    

கேள்வி எண்:2

இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?

இந்த மாதிரி சாலட் முழு உணவாக சாப்பிட்டபின் வயிறு மிக இலேசாக இருக்கும். மற்ற‌ உணவுப்பொருள்கள் சாப்பிடும்போது ஏற்படும் கனம், அஜீரணக்கோளாறுகள் இருப்பதில்லை. மேற்சொன்ன இயற்கை வைத்திய சிகிச்சை நிலையத்தில் பழக்கம் ஏற்பட்ட பிறகு, உணவில் எண்ணெய், காரம் அதிகம் சேர்ப்பதில்லை.

கேள்வி எண்:3

அன்றாடம் சரியான நேரத்தில் சாப்பிடுவீர்களா? அல்லது பசிக்கும் நேரத்தில் உண்பீர்களா?

சரியான நேரத்தில் சாப்பிடுவதை வீட்டில் அனைவருமே கடைபிடிக்கிறோம். அதனால் பசியும் கண்ட நேரத்தில் வராது.

கேள்வி எண்:4

வலைப் பதிவில் சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு யார் உங்களுக்கு தூண்டுகோலாக இருந்தார்கள்?

முதன் முதலாக சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு  ஊக்கம் கொடுத்ததுடன் ஒரு பிரபல தளத்தின் சமையல் பகுதியில் எனக்கென ஒரு பிரிவையும் என் மகன்தான் ஆரம்பித்து வைத்தார். அது இன்றைக்கு 8 வருடங்களைக்கடந்து மூன்றாவது பகுதியாகப் போய்க்கொண்டிருப்பதுடன் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களையும் நிறைய பாராட்டுக்களையும் பெற்றுத்தந்திருக்கிறது. அதன் லின்க் கீழே:

http://www.mayyam.com/talk/forumdisplay.php?25-Indian-Food

கேள்வி எண்:5

புதியதாக ஏதாவது உணவுவகை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அது சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

அடிக்கடி புதிய உண‌வு வகைகளைத்தான் செய்து பார்ப்பேன். இரு சமையல் தளங்கள் வைத்திருப்பதாலும் இயற்கையாகவே சமையலில் மிகுந்த ஆர்வமென்பதாலும் இன்று வரை புதிய சமையல் பக்குவங்களை அடிக்கடி செய்து பர்த்துக்கொன்டேதான் இருக்கிறேன். சரியாக வரவில்லை என்பதெல்லாம் கிடையாது.

கேள்வி எண்: 6

உங்களது அன்றாட சமையலில் நீங்கள் கட்டாயம் தவிர்க்கும் சமையல் சம்பந்தமான பொருட்கள் ஏதாவது மூன்று?

தேங்காய் அரைத்துச் சேர்ப்பதை அதிகம் தவிர்ப்பேன். வர மிளகாய், பச்சை மிள‌காய் இவற்றை மிகவும் குறைவாகத்தான் சேர்ப்பேன். சேர்க்கும்போதும் உள்ளிருக்கும் விதைகளை முழுவதும் எடுத்து விட்டுத்தான் சேர்ப்பேன். எண்ணெயை கூடியவரை குறைத்தே சேர்ப்பேன்.

கேள்வி எண்: 7

தினப்படி சமையலில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் சமையல் பொருட்கள் சில?

கொத்துமல்லி இலை, சிவந்த தக்காளி, பெருங்காயம் இவற்றை அதிகம் சேர்ப்பேன்.

கேள்வி எண்:8

குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உண்ணும்போது அந்நியோன்யம் பெருகுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருத்தரை ஒருத்தர் கவனித்து பரிமாறும்போது அங்கே அக்கறையும் அன்பும் கூடுதலாகிறது.

கேள்வி எண்:9

உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் நீங்கள் விரும்பாத உணவு பரிமாறப்பட்டால் என்ன செய்வீர்கள்?

இதற்கு வாய்ப்பு கிடையாது என்றே சொல்லலாம். எனினும் சில சமயம் நாம் விரும்பிக்கேட்கும் உணவு கறுப்பாய் காந்தலாய் வருவதுன்டு. அந்த சமயம் அதை திருப்பி எடுத்துப்போகச் சொல்லி விடுவேன். அவர்களாகவே மறுபடியும் நல்லதாக கொன்டு வந்து தருவதும் நடந்திருக்கிறது.

இந்த தொடர்பதிவிற்கு அழைத்து என்னை அது பற்றி எழுத வைத்த சகோதரி ஜலீலாவிற்கு என் அன்பு நன்றி!!

இந்தத் தொடர்பதிவிற்கு அன்புச் சகோதரர்கள் வை.கோபாலகிருஷ்ண‌ன், ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி‍, சகோதரிகள் லக்ஷ்மி, ராஜி இவர்களை 

அன்புடன் அழைக்கிறேன்.   

49 comments:

  1. மனோ அக்கா நல்ல இருக்கீங்களா?

    லேட்டானா போட்டாலும் அழகான பதில்கள்,
    எல்லாம் அருமை

    ReplyDelete
  2. ஆரோக்கியமான,அருமையான பதில்கள்.

    ReplyDelete
  3. \\அழகான பதில்கள்,எல்லாம் அருமை\\

    எனக்கும் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது

    ReplyDelete
  4. வாவ்! அடுத்தது சமையல் தொடர் பதிவா? நல்ல கேள்விகள் – அவற்றுக்கு சிறந்த பதில்கள்! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?

    குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உண்ணும்போது அந்நியோன்யம் பெருகுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருத்தரை ஒருத்தர் கவனித்து பரிமாறும்போது அங்கே அக்கறையும் அன்பும் கூடுதலாகிறது.


    ....ஒவ்வொரு பதிலும் அருமை. இருந்தும், இந்த குறிப்பிட்ட கேள்விக்கு தாங்கள் அளித்துள்ள பதிலில் , அனுபவபூர்வமான அறிவுரையும் கலந்து சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  6. அருமையான பதில்கள்...

    ReplyDelete
  7. நல்ல பதிவு.

    ReplyDelete
  8. அன்புச்சகோதரியின் இந்தப் பதிவு மிகவும் அருமையாகத் தான் உள்ளது..

    இயற்கை உணவினால் உடம்பை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

    அது எல்லோருக்கும் பயனளிக்கக் கூடியதும் கூட.

    இது பற்றி எழுத என்னை அன்புடன் அழைத்துள்ளது (என்னை நேரில் நீங்கள் பார்த்தும் கூட) நியாயமா?

    எனக்கும் இதே 9 கேள்விகள் தானா, மேடம்?

    நான் எழுதினால் என்னைப் போல எப்படி ஒருவர் கண்டதைச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது என்று [எதிர்மறையாகத் தான்] மட்டுமே எழுதமுடியும் மேடம்.

    பரவாயில்லையா ?

    ReplyDelete
  9. //தேங்காயைப் பாலாக சேர்க்கும்போது தான் அது கொழுப்பாக உடலில் படிகிறது என்பதால் அவர்கள் தேங்காய்த்துருவலாக உணவில்//

    அப்படியா? தேங்காய் அரைத்து சேர்ப்பதும் கொழுப்பு குறைவாக இருக்குமா, பால் சேர்ப்பதைவிட?

    ReplyDelete
  10. மனோ அக்கா அருமையான பதில்கள்.

    ReplyDelete
  11. nice interview.

    raji? itz me?

    ReplyDelete
  12. நல்ல பதில்கள்

    ReplyDelete
  13. பதில்கள் அருமை. மகளிர் தின வாழ்த்துகள் மேடம்

    ReplyDelete
  14. மேடம் நீங்கள் ஏன் தமிழ் மணத்தில் ப்ளாகி இணைக்க வில்லை? இன்னும் நிறைய பேரை சென்று அடையுமே?

    ReplyDelete
  15. மகளிர் தின வாழ்த்துக்கள்!
    இயற்கை உணவு பற்றி நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  16. அம்மா...
    நலம் தானே...?
    இப்ப அடிக்கடி உங்கள் பதிவு பார்க்க முடியவில்லை...
    தொடர் பதிவாக இருந்தாலும் கேள்விகளுக்கான விடையை அழகாக தொகுத்துள்ளீர்கள்... அருமை.

    ReplyDelete
  17. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருந்தது. நல்ல பகிர்வும்மா.

    ReplyDelete
  18. அட..இப்பத் தான் பார்த்தேன்..இதோ எழுதுகிறேன்! தொடர்பதிவிற்கு அழித்ததிற்கு நன்றியுடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  19. கேள்விகளும் பதில்களும் அருமை.

    ReplyDelete
  20. // தேங்காய் அரைத்துச் சேர்ப்பதை அதிகம் தவிர்ப்பேன் = // தேங்காயைப் பாலாக சேர்க்கும்போது தான் அது கொழுப்பாக உடலில் படிகிறது என்பதால் அவர்கள் தேங்காய்த் துருவலாக உணவில் நிறைய சேர்ப்பார்கள்.//

    இன்று உங்களிடமிருந்து ஒரு விஷயம் கற்றுக் கொண்டாலும், அந்த தேங்காயை துருவி அதிலிருந்து வரும் சக்கை உடல் நலத்திற்கு ஏதும் கேடு விளைவிக்குமா??

    // எனினும் சில சமயம் நாம் விரும்பிக்கேட்கும் உணவு கறுப்பாய் காந்தலாய் வருவதுண்டு. அந்த சமயம் அதை திருப்பி எடுத்துப்போகச் சொல்லி விடுவேன். அவர்களாகவே மறுபடியும் நல்லதாக கொன்டு வந்து தருவதும் நடந்திருக்கிறது.//

    ஆமாம் மிக சரியாய் சொன்னீர்கள் சகோ.

    ReplyDelete
  21. நீங்கள் ஆரம்பித்து வைத்த இந்த தொடர்பதிவிற்கு நீங்கள் முதல் ஆளாக வந்து ரசித்து பாராட்டியதற்கு என் அன்பு நன்றி ஜலீலா!

    ReplyDelete
  22. அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  23. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் நாஞ்சில் மனோ!!

    ReplyDelete
  24. இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!

    ReplyDelete
  25. அன்பான பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!!

    ReplyDelete
  26. நெஞ்சார்ந்த பாராட்டுக்கு மகிழ்வான நன்றி சித்ரா!

    ReplyDelete
  27. அன்பு கீதா!
    அன்பிற்குரிய வானதி!!
    உங்களின் இனிய பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி!!

    ReplyDelete
  28. கேட்கப்பட்ட கேள்விகளும்
    சொல்லப்பட்ட பதில்களும் அருமை
    பயனுள்ளவை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    உருவத்தைப் பார்த்து எதையுமே மதிப்பிடக்கூடாது என்பது நிச்சயம் உங்களுக்கே தெரியும். அவரவர் அனுபவங்களும் சிறப்புக்களும்தான் முக்கியமானவை.

    நிச்சயம் உங்கள் அனுபவங்கள் இந்த தொடர்பதிவு எழுதும்போது எங்களுக்கும் பலன் கொடுப்பவையாக அமையலாம்.. அவசியம் எழுதுங்கள்!

    ReplyDelete
  30. அன்பு ஹுஸைனம்மா!

    தேங்காய்ப்பால் சேர்க்கும்போது அது ஜீரணம் அடைந்தபின் ஆவியாக மாற்ற‌ம் அடைந்து தேங்காய் எண்ணெயாக மாறி இரத்தக்குழாய்களில் படிகிறது. அதுவே தேங்காய் அரைத்துச் சேர்க்கப்படும்போது இந்த அளவு அதிக கெடுதல் இல்லை. தேங்காய்த்துருவல் Fibre அதிகம் என்பதால் உடலுக்குக் கேடு எதுவும் செய்வதில்லை என்கிறார்கள். இது கிட்டத்தட்ட உணவில் சீனி சேர்க்கும் விதம் போலத்தான். சீனியை பழரசத்திலோ காப்பியிலோ சேர்க்கும்போது அது நேரடியாக, வெகு சீக்கிரமாக ரத்தத்தில் போய்ச்சேருகிறது. அதுவே பலகாரங்களில் சேர்த்து உண்ணும்போது இத்தனை சீக்கிரத்தில் ரத்தத்தில் கலப்பதில்லை என்பதுடன் அது விளவிக்கும் கேடு சற்று குறைவு.

    ReplyDelete
  31. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  32. Thanks a lot for the nice feed back Krishnaveni!

    ReplyDelete
  33. முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் கந்தசாமி!!

    ReplyDelete
  34. Thank you very much for the nice compliment Raji!
    Yes.It is you!! I hope you will continue this 'Thodar pathivu' in your blog!

    ReplyDelete
  35. அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி எல்.கே!

    ReplyDelete
  36. மகளிர் தின வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் என் இதயங்கனிந்த நன்றி மோகன்குமார்!!
    தமிழ்மணத்தில் விரைவில் இணைக்கிறேன்! தங்கள் அக்கறைக்கு மீன்டும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  37. மகளிர் தின வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் என் அன்பு நன்றி மாதவி!
    உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  38. அன்புச் சகோதரர் குமார்!
    தங்களின் பாராட்டிற்கும் அக்கறைக்கும் என் அன்பு நன்றி!
    நான் தற்போது தமிழ்நாட்டில் இருப்பதால் அனைத்து வலைப்பூக்களுக்கும் நான் விரும்புவதுபோல சென்று வர முடியவில்லை. அதுதான் காரணம்.

    ReplyDelete
  39. பாராட்டிற்கு இனிய நன்றி ஆதி!

    ReplyDelete
  40. வருகைக்கும் என் அழைப்பை ஏற்று தொடர்பதிவு விரைவில் எழுதவிருப்பதற்கும் என் அன்பு நன்றி சகோதரர் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி!!

    ReplyDelete
  41. இனிய பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி லக்ஷ்மி!

    ReplyDelete
  42. அன்புச் சகோதரர் அப்துல் காதர்!

    தேங்காய்த்துருவல் ஃபைபர் நிறைந்தது என்பதால் அதை உண்பது மிக நல்லது என்று இயற்கை உணவு நிலையங்களில் சொல்கிறார்கள்!!
    கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  43. விரிவான பாராட்டுரைக்கு என் அன்பான நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  44. வருடத்தில் ஓரிரு முறைதான் அம்மா பரிமாற குடும்பத்தோடு ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட முடிகிறது. தங்கள் பதிவு அந்த ஆசையை தூண்டி விட்டது.
    பகிர்வுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  45. ஆரோக்கியமான சுவையான பதிவு.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  46. மனோ சாமிநாதன் said...
    //அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    உருவத்தைப் பார்த்து எதையுமே மதிப்பிடக்கூடாது என்பது நிச்சயம் உங்களுக்கே தெரியும். அவரவர் அனுபவங்களும் சிறப்புக்களும்தான் முக்கியமானவை.

    நிச்சயம் உங்கள் அனுபவங்கள் இந்த தொடர்பதிவு எழுதும்போது எங்களுக்கும் பலன் கொடுப்பவையாக அமையலாம்.. அவசியம் எழுதுங்கள்!//

    சகோதரியே, தங்கள் அன்புக்கட்டளைக்கு அடி பணிந்து எழுதத்துவங்கி விட்டேன். விரைவில் எதிர்பார்க்கலாம். அன்புடன் vgk

    ReplyDelete
  47. pl visit my blog for the "thodar pathivu"

    http://suharaji.blogspot.com/2011/03/blog-post_17.html

    ReplyDelete