Friday, 26 February 2021

முத்துக்குவியல்-60!!!

 

சிந்திக்க வைத்த முத்து: 

நேற்று ஒரு இயற்கை மருத்துவர், Drug free diabetic club நடத்துபவர் யு டியூபில் பேசிய விஷயம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. சர்க்கரை நோய் பற்றி அவர் நிறைய பேசினார். ' இன்றைக்கு எந்த சர்க்கரை நோய் நிபுணரிடம் சென்றாலும் நமது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரைக்கேற்ப அவர்கள் மாத்திரைகள் கொடுப்பதுடன் நாம் பின்பற்ற வேண்டிய தினசரி உணவுப்பட்டியல் ஒன்றையும் கொடுக்கிறார்கள். அதன்படி  நாம் காலையில் 3 இட்லி அல்லது 2 சப்பாத்தி, மதியம் ஒரு கப் சாதம்+நிறைய காய்கறிகள், இரவிலும் அதே 3 இட்லி அல்லது 2 சப்பாத்தி வேண்டும். . இந்த உணவுப்ப‌ட்டியலைத்தானே சர்க்கரை நோயாளிகள் தினமும் கடைபிடிக்கிறார்கள்? மாவுச்சத்தை நிறுத்தாமல் குறைக்காமல் தினமும் சாப்பிட்டால் இதில் எப்படி சர்க்கரை குறையும்? நமக்குத்தேவை தினமும் 50 கிராம் கார்போஹைட்ரேட். ஆனால் காலை, மதியம், இரவு என்று நாம் 100 கிராம் மாவுச்சத்தை சாப்பிடுகிறோம். இப்படி சாப்பிட்டாலும் சர்க்கரை கூடத்தானே செய்யும்? சர்க்கரை நோய் மருத்துவர்கள் மாவுச்சத்தை குறைத்து புரதம், கொழுப்பு அதிகமான மெனுவைத்தானே சாப்பிட வற்புறுத்த வேண்டும்? ' என்று சொன்ன போது அதிச்சியாக இருந்தது. நானும் நாலைந்து வருடங்களுக்கு முன் இதைத்தானே கடைபிடித்தேன்? மனம் விழித்துக்கொண்ட போது மாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்து பல வருடங்களாகியிருந்தன.. இந்த மெனுப்படி, தினமும் உணவு எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை கூடத்தானே செய்யும்?




அதற்கேற்றாற்போல மாத்திரைகளும் கூடத்தானே செய்யும்? அதிக மாத்திரைகளால் சிறுநீரகமும் மெல்ல மெல்ல கெடத்தானே செய்யும்? இதென்ன மருத்துவ முறை? மாவுச்சத்து மிக மிக குறைவாக உள்ள உணவுப்பட்டியலைத்தானே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்? அரிசி சாதத்தை பரிந்துரைக்கும் மருத்துவர் கூட பாலிஷ் செய்யப்படாத அரிசியை பரிந்துரைக்கவில்லையே? 

அசத்திய முத்து: 

ஷில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலியின் முதல் பெண் கலெக்டர். பல அரசு விருதுகளுக்கு சொந்தக்காரர். தன் பெண்ணை அரசு அங்கன்வாடியில் சேர்த்து அதிரடி காட்டியவர். .கர்நாடகத்தைச்சேர்ந்த இவருக்கு சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்காக மத்திய அரசின் ' தூய்மை இந்தியா திட்ட சிறப்பு விருது' கிடைத்திருக்கிறது.



 திருநெல்வேலி முழுவதும் கட்டப்பட்டிருக்கும் சமுதாயக் கழிவறைகளை சரியாக‌ பராமரித்து முறையான பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததற்காக இந்து விருது கிடைத்துள்ளது. மீனவப்பெண்களுக்கும் கிராமப்பெண்களுக்கும் காணி பழங்குடியினருக்கும் பல விதங்களில் உதவி செய்து வருகிறார். தற்போது சென்னையில் சுகாதார குடும்ப நல திட்ட அலுவலகத்தில் இணை செயலாளராக இருக்கிறார். 

அபாய முத்து: 

பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கு மூலையிலுள்ள ஒரு கிராமத்தில் 80 வயது பெரியவர் ஒருவர் தன்னை சுற்றி சுற்றி வந்து ரீங்காரமிட்ட ஒற்றை ஈயை கொல்ல மின்சார ராக்கெட் ஒன்றை உபயோகித்திருக்கிறார். அப்போது வீட்டிலிருந்த சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டரில் இலேசாக கசிவு ஏற்பட்டிருப்பது அவருக்குத் தெரியவில்லை. 




மின்சார ராக்கெட்டை உபயோகிக்கத் தொடங்கியதுமே வீட்டின் சமையலறை வெடித்து சாம்பலானது. இலேசான காயங்களுடன் அவர் தப்பி விட்டார். ஆபத்துக்கள் எந்தெந்த வடிவில் எல்லாம் வருகிறது!! மின்சார ராக்கெட்டை உபயோகத்தில் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்கவும். 

இசை முத்து: 

என்னுடைய all time favourite-என்றைக்குமே என் மனதில் முதலிடத்தில் இருக்கும் பாட்டு இது. சுத்த தன்யாசி ராகத்தில் சுசீலா தன் தேன் குரலில் மயங்க வைப்பார். அதனாலேயே ராகங்களில் எனக்கு மிகவும் பிடித்த ராகமாக ‘ சுத்த தன்யாசி ‘ ஆகி விட்டது. ஆச்சரியம் என்னவென்றால், எப்போது இந்தப்பாட்டைக் கேட்டாலும் அதன் இனிமைக்கு முன்னால் வேறு எதுவும் மனதுக்கு அந்த சில நிமிடங்களில் புலப்படுவதில்லை. அந்த மாதிரியான பாதிப்பை இன்றைக்கும்கூட இந்தப் பாட்டு உண்டாக்குகிறது!! கர்ணன் திரைப்படத்தில் வரும் ‘ கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? ‘ பாடல் தான் அது. பொதுவாக வெகு சிலரே அதே இனிமையுடன் பாடுவார்கள். எல்லோராலும் இதை அத்தனை எளிதாக பாடி விட முடியாது. அப்படி ஒரு பெண் மிக இனிமையாக இந்தப்பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டு ரசியுங்கள். இந்தப்பாடல் உருவாக தில்ரூபா, ஷெனாய், சந்தூர் போன்ற இசைக்கருவிகள் உபயோகிக்கப்பட்டதாம். பாடல் ஆரம்பிக்கும் முன் தொலைக்காட்சியில் அதிகமான இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் திருமதி சுபஸ்ரீ தணிகாசலம் இந்தப்பாடல் உருவான விதம் பற்றி இன்னும் நிறைய சொல்லுகிறார்.


 


26 comments:

  1. இபடித்தான் அதிக வீரியமுள்ள மருந்துகள் கொடுக்கப்பட்டு இன்று எந் தாய் பாதிக்கப்பட்டுள்ளார்..

    இரண்டு நாட்களாக மனம் ஆறவில்லை..

    ReplyDelete
  2. பெரும்பாலும் மருத்துவர்களின் உணவுப் பரிந்துரை நடைமுறைக்குச் சரிவராததாகவே இருந்து வருகிறது. சேர்க்க வேண்டிய உணவு குறித்த விழிப்புணர்வு சமீபகாலமாக மக்களிடம் அதிகமாகக் காண முடிகிறது.

    கலெக்டர் ஷில்பா பாராட்டுக்குரியவர். மின்சார ராக்கெட் பயன்படுத்துகையில் கவனம் தேவை. விழிப்புணர்வைத் தரும் தகவல். இசை முத்து இனிமை.

    ReplyDelete
  3. சமீபத்தில் இன்சுலின் தருவதே வீண் என்ற வகையிலும் முந்தைய சர்க்கரை அளவீடுகளை மாற்றியும் தந்திருப்பதாய் ஒரு கட்டுரை படித்தேன்.  எல்லாம் வியாபாரமாகிப் போகிறது.  மின்சார ராக்கெட் பயங்கரம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.  பெண் கலெக்ட்ர் பாராட்டபப்ட்ட வேண்டியவர்.  கர்ணன் திரைப்படப்  பாடல்கள் எல்லாமே மிக மிக மிக இனிமையானவை.

    ReplyDelete
  4. சர்க்கரை பற்றி வரும் மருத்துவ அறிக்கைகள் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. பத்திரிகையாளர் ஒருவர் முப்பது வருடங்களாக மாவுச்சத்தை குறைத்து, சாலட் போன்ற காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொண்டதன் மூலமாகவே சர்க்கரையை கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டிருப்பதாக கூறினார். உண்மையாக சொன்னால், கண்கள் எங்கே பாடலை கேட்ட பிறகு படித்த மற்ற விஷயங்கள் மறந்து விட்டன. மிக இனிமையான பாடலை மிக இனிமையாக பிரசெண்ட் செய்திருக்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி. பெண் ஆட்சியாளருக்கு வாழ்த்துகள். மின்சார ராக்கெட்டெல்லாம் பயன்படுத்துவது எப்போதுமே ஆபத்துத் தான். கர்ணன் படத்தின் இந்தப் பாடல் அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. சர்க்கரை நோய்க்கு நம் பாரம்பரிய மருத்துவமே சிறப்பானதோ என்னும் எண்ணம் எனக்குள் உண்டு. ஆனாலும் மக்கள் விரைவில் ஆங்கில மருத்துவத்தின் பிடியிலிருந்து வெளிவருவதில்லை.

    ReplyDelete
  6. முதல் முத்து : சிந்திக்க வேண்டிய முத்து...

    ReplyDelete
  7. அதிகப்படியான மருந்துகளால் உங்கள் தாயார் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமாக இருந்தது சகோதரர் துரை.செல்வராஜ்!. அவர் படும் துன்பங்களிலிருந்து அவரை காப்பாற்ற முடியாதா?

    ReplyDelete
    Replies
    1. அவரது துன்பங்களை விவரிப்பதற்கு இய்ல்வில்லை.. 85 வயதில் அவர்களுக்கு இப்படியொரு வேதனை .. அவர் செய்த நல்லன தாம் அவரைத் தற்போது காத்துக் கொண்டிருக்கின்றன...

      கடல் கடந்து இருக்கும் நான் அவரது வேதனையைக் கண்டு நிலை குலைந்து விட்டேன்.. இதனால் இரண்டு நாட்களாக காணொளியில் பேசுவதில்லை..

      தொலைபேசி அழைப்பொலியைக் கேட்டாலே மனம் பதறுகின்றது..

      நிறுவனம் உடனடியாக என்னை விடுவிக்காது.. ஏதும் செய்ய இயலாதவனாக இங்கு இருக்கிறேன்...

      தங்கள் அன்பினுக்கு நன்றி...

      Delete
  8. மருத்துவத்தைப்பற்றிய விழிப்புணர்வு இப்போது மக்களிடம் அதிகமாக காண முடிகிறது என்பது உண்மை தான் ராமலக்ஷ்மி!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  9. இனிமையான கருத்துத்தொகுப்புக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  10. இனிமையான பாடலை ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!

    ReplyDelete
  11. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!

    ReplyDelete
  12. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  13. அன்புள்ள சகோதரர் துரை.செல்வராஜ் அவர்களுக்கு,
    நீங்கள் எழுதியதைப்படித்து மிகவும் வருத்தமாக இருந்தது. உங்கள் தாயார் நல்லபடியாக இருப்பார்கள். கவலைப்படாதீர்கள். நான் தஞ்சை செல்ல வேண்டும். ஆனால் கொரோனாவால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தஞ்சை சென்றால் உங்கள் தாயாரைப்பார்த்து பேசுகிறேன். நீங்கள் பஹ்ரைன் அல்லது குவைத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் தொலைபேசி எண் தாருங்கள். நான் உங்களை அழைத்துப் பேசுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பினுக்கும் ஆறுதல் வார்த்தைகளுக்கும் நன்றி...

      இன்று தொலைபேசி மற்றும் இணைய இணைப்பு எண்கள் Recharge செய்யப்பட வேண்டியதாகி விட்டது.. எனவே தான் தாமதம்...

      நான் குவைத்தில் இருக்கின்றேன்..
      எனது தொலைபேசி எண் :
      +965 9892 8847 ...

      தங்களது அன்பினுக்கு மீண்டும் நன்றி..

      Delete
  14. மிக அருமையான தகவல்களுக்கு நன்றி. நானும்
    17 வருடங்களாக இந்த மருந்துகளை எடுத்து வருகிறேன்.
    மாற்று இருந்தால் கடைப்பிடிக்கலாம். என்ன செய்வது:(

    திருனெல்வேலி கலெக்டரின் அருமையை மனம் பாராட்டுகிறது. சென்னையிலும் முன்னேற்றமடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. அன்பின் துரை செல்வராஜுவின் தாயார் உடல் நிலை முன்னேறப் பிராத்தனைகள்.
    காணொளி மிகவும் இனிமை.
    தந்தமைக்கு நன்றி. அன்பு மனோ.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பினுக்கும் பிரார்த்தனைக்கும் நன்றியம்மா...

      Delete
  16. முத்துக்கள் பகிர்வு அருமை.
    பாடல் மிகவும் பிடித்த பாடல்.
    பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர்.

    சகோ துரைசெல்வராஜு அவர்கள் அம்மா விரைவில் உடல்நலம்பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  17. நல்முத்துகள். மருத்துவம் வியாபாரமாகிப் போன கொடுமை! தீர்வு தான் என்ன?

    திருநெல்வேலி கலெக்டர் - பாராட்டுகள்.

    அன்பின் துரை செல்வராஜூ ஐயாவின் தாயார் உடல்நிலை சீராக எனது பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பின் பிரார்த்தனைக்கு நன்றி.. தற்போது அபாய கட்டத்தைக் கடந்திருக்கின்றார்கள்..

      Delete
  18. அம்மா தற்போது ஓரளவு நலமாக இருக்கின்றார்கள்..

    எனது மின்னஞ்சல்
    duraiselvaraju14@gmail.com

    தங்களது விரிவான பதிவுக்காக
    காத்திருக்கின்றேன்... நன்றி..

    ReplyDelete
  19. கருத்துரைக்கு அன்பு நன்றி வல்லிசிம்ஹன்!
    ஆயுர்வேதம் சித்தா, ஹோமியோபதி தவிர்த்து மாற்று மருத்துவம் இருக்கிறது. விரைவில் அதைப்பற்றி எழுதுகிறேன்.

    ReplyDelete
  20. எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களையும் நெகிழ வைத்தது என்பதை அறிய மனம் மகிழ்ந்தேன் கோமதி அரசு! பாராட்டிற்கும் பிரார்த்தனைக்கும் அன்பு நன்றி! சகோதரர் துரை.செல்வாஜுவின் தாயார் தற்போது நலம் அடைந்து வருகிறார்கள்.

    ReplyDelete
  21. மருந்துகளும் மருத்துவமும் வியாபாரமாகிப்போன கொடுமைக்கு தீர்வு உயர்மட்டத்தில் இருப்பவர்களால் கிடைத்தால் தான் உண்டு. நாம் தான் சுதாரித்துக்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் வெங்கட்!.
    கருத்துரைக்கும் பிரார்த்தனைகளுக்கும் அன்பு நன்றி!
    சகோதரர் துரை.செல்வராஜ் அவர்களின் தாயார் தற்போது குணமடைந்து வருகிறார்கள்!

    ReplyDelete
  22. அன்புள்ள சகோதரர் துரை.செல்வராஜ் அவர்களுக்கு,
    அம்மா உடல் நலம் சீராகிக்கொண்டு வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.
    விரைவில் மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

    ReplyDelete