Monday, 3 June 2019

வியட்நாம் உணவும் ஒரு எட்டு வயது சிறுமியின் கதையும்!!!

இஸ்லாமிய ச‌கோதர, சகோதரிகட்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!



இங்கு ரம்தான் நோன்பு மிகச் சிறப்பான ஒன்று. நோன்பு ஆரம்பித்த நாளிலிருந்து வெளியே யாரும் பார்க்கும்படி உண்ணுதல் கூடாது என்ற சட்டம் அமுலில் இருக்கிறது. நோன்பு மாலையில் முடிந்து மறுநாள் காலை மீன்டும் தொடங்கும் வரை முப்பது நாட்களும் இரவு கடைத்தெரு முழுக்க ஜே ஜே என்றிருக்கும். நோன்பு முடிந்து ரம்ஜான் அன்று எங்கு பார்த்தாலும் இனிப்புகள், விருந்துகள் என்று அமர்க்களப்படும்.

*********************************************************************************

வியட்நாம் போரில் உடலெங்கும் தீப்புண்களால் பாதிக்கப்பட்ட ஒரு எட்டு வயது சிறுமியின் கதை!

உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது  இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் நிர்வாணமாக ஒரு சிறுமி! தெற்கு வியட்நாம் போட்ட நாப்பாம் குண்டினால் தாக்குதலுக்குள்ளான இந்தச் சிறுமி ஓடி வரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்துப் பார்த்தது. சுமார் 19 வருடங்களாக நடந்து கொண்டிருந்த வியட்நாம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர இந்தப் படம் மிகப் பெரிய காரணமாக அமைந்தது.

போரின் உச்சத்தில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும், 11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டுபோயினர்.
போர் உச்சத்தில் இருந்த காலகட்டமான 1972 ஜூன் 9-ம் நாள் தெற்கு வியட்நாம் பெட்ரோலிய ரசாயனம் கொண்ட நாப்பாம் குண்டினை தெற்கு வியட்நாமில் இருக்கும் (அப்போது வடக்கு வியட்நாமின் கட்டுப்பாட்டில் இருந்த) 'தராங்பாங்க்’ என்ற கிராமத்தில் வீசியது. இந்த நிலையில்தான் அந்தக் கிராமத்தில் இருந்த எட்டு வயதான சிறுமி பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள். அப்போது சிறுமி கிம் ஃப்யூக்கின் உடைகள் முழுவதும் எரிந்து உடலிலும் தீக்காயம் பரவிட்ட நிலையில் ''சுடுது சுடுது'' என்று கதறியபடியே ராணுவம் இருந்த பகுதியை நோக்கி ஓடி வருகிறாள்.

அந்த நேரத்தில் புகைப்படம்  எடுத்துக் கொண்டிருந்த அசோசியேட்டட் பிரஸ்சின் புகைப்பட பத்திரிகையாளர் நிக் வுட் (Nick Ut) தனது வியு ஃபைண்டர் ஓரத்தில் நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியை பார்த்தார். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, தன் கேமராவை அவளை நோக்கி திருப்பினார். நிர்வாணமாக ஓடிவந்த சிறுமி கிம் ஃப்யூக்கை படம் எடுக்கத் தொடங்கினார்.

அந்தச் சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு நின்றுவிடாமல், அவளுக்கு முதலுதவி செய்து தன் காரிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிர் பிழைக்கவும் வைத்த நிக்குக்கு அப்போது வயது 19 மட்டுமே. பிறகு, தன் அலுவலகத்துக்குச் சென்ற நிக், அந்தப் புகைப்படங்களை பிரிண்ட் போட்டு ஆசிரியர் குழுவினரிடம் காட்டியபோது, சிறுமி நிர்வாணமாக இருப்பதைக் காரணமாக காட்டி முதலில் அவர்கள் அதை பிரசுரிக்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்தப் படத்தை பிரசுரித்தது.

இதன் தொடர்ச்சியாக இந்தப் படம் உலகில் இருந்த அத்தனைப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் போருக்கு எதிரான படமாக அடையாளப்படுத்தப்பட்டது. உலக நாடுகளின் கடுமையான கண்டனத்தினாலும், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பினாலும் 1973-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அமெரிக்க ராணுவம் வியட்நாமை விட்டு வெளியேறியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல், வடக்கு வியட்நாமிடம் தெற்கு வியட்நாம் சரணடைந்தது. 1976-ல் ஜூலை 2-ல் 'வியட்நாம் சோசலிசக் குடியரசு’ (The Socialist Republic of Vietnam) உருவானது. இந்தப் படத்துக்காக நிக்குக்கு 1973-ல் நோபல் பரிசுக்கு இணையான பத்திரிகை துறையில் உயரிய விருதான ’புலிட்சர் விருது’ வழங்கப்பட்டது.




அந்த சிறுமிக்கு இப்போது வயது 52. தற்போது கனடாவில் வசித்து வரும் இவர் 1994-ம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக (UNESCO Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார். 1997-ல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம் ஃப்யூக். தற்போது இதனுடன் பல கிளை நிறுவனங்கள் இணைந்து 'Kim Phuc Foundation International' என்ற பெயரில் இயங்கி வருகிறது.

Bánh tráng

இது  வியட்நாமிய அரிசி பூரி என்று சொல்லலாம். அரிசிமாவிலும் மரவள்ளிக்கிழங்கு மாவிலும் சில பொருள்கள் சேர்த்து கரைத்து ஆவியில் மாவாக‌ வேக வைத்து செய்கிறார்கள். அந்த மாவை எப்ப‌டி அப்பளம் போல இடுகிறார்கள் எனப‌தை இந்த வீடியோ காண்பிக்கிறது.



இந்த பூரியில் அசைவ மசாலா அல்லது சைவ ம‌சாலா, காய்கறிகள் வைத்து மூடி எண்ணெயில் பொரித்து உண்கிறார்கள்!



21 comments:

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  2. ஓடிவந்த அந்த வியட்நாம் சிறுமியின் புகைப்படத்தை மறக்க முடியுமா? அவரைப் பற்றி அவ்வப்போது வாசிக்கிறேன். இப்போது உங்கள் பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன்.

    ReplyDelete
  3. மிகவும் புகழ் பெற்ற புகைப்படம்
    போரின் கொடுமையை உலகிற்கு உணர்த்தியப் படம்
    அப்படத்தினையும் வெளியிட்டிருக்கலாம்

    ReplyDelete
  4. சிறப்பு... மிகவும் சிறப்பு...

    ReplyDelete
  5. கிம் ப்யூக் அறிந்திருக்கிறேன்.

    வியட்னாம் உணவு கண்டுகொண்டோம்.

    ReplyDelete
  6. அச்கிறுமி பற்றியும் அந்த ஃபோட்டோ அதை எடுத்த நிக் பற்றியும் எங்கள் தளத்தில் துளசி பதிவு போட்டிருந்தார். அச்சிறுமி இப்போதைய இதே ஃபோட்டோ உட்பட. நீங்களும் அதை நன்றாக விவரித்திருக்கீங்க மனோ அக்கா.

    இந்த அப்பளம் போன்றது கிட்டத்தட்ட மரச்சீனி அப்பளம் போல இருக்கு இல்லையா? கூழி செய்து அதை இப்படி ஓலைப்பாயில் தேய்ப்பது வழக்கம்...இவங்க அதை தோசை போல செய்து ஓலைப்பாயில் போடுறாங்க...இந்த வீடியோ முன்னரே பார்த்திருக்கேன் மனோ அக்கா. அயல்நாட்டு வெஜ் ஃபுட் பார்த்த போது...இதே போன்று தாய் நாட்டு ஒரு ரைஸ் ஷீட் உண்டு. கிட்டத்தா நம்மூர் இலைவடாம். அரிசி வடாம் போல அதுவும் அவங்க எப்படிச் செய்யறாங்கனு பார்த்தேன். அந்த ரைஸ் ஷீட் சென்னையில் ஒரு சூப்பர் மாரெக்க்ட்டில் கிடைக்கிறது..ரொம்ப ரொம்ப ரொம்ப மெலிதாக இருகும். அந்த ஷீட்டிற்குள் நமக்குத் தேவையானதை ஸ்டஃப் செய்து ஸ்டீம் செய்து அல்லது தாவாவில் புரட்டியோ சாப்பிடலாம். ஆனால் ஸ்டீம் செய்து சாப்பிடுவது நல்லாருக்கு கிட்டத்தட்ட நம்மூர் கொசுக்கட்டை, இலை வடாம் போலத்தான்....கூர்க் அக்கி ரொட்டி ஷீட்ஸ் போல...

    கீதா

    ReplyDelete
  7. வியட்நாமிலும் ரைஸ் பேப்பர் உண்டே அக்கா..

    உங்கள் பழைய பதிவுகளையும் பார்க்கிறேன்

    கீதா

    ReplyDelete
  8. ரமலான் வாழ்த்துக்கள்.
    வியட் நாம் போர் செய்திகள் முன்பு படித்து இருக்கிறேன். இப்போது படித்தபோதும் மனது கனத்து போகிறது. எத்தனை உயிர்கள் போரால் போய் இருக்கிறது!

    அவர்களின் உணவு காணொளி பார்த்தேன் அருமை.

    ReplyDelete
  9. உலகை உலுக்கிய படமும், அதன் பின்னணிக் கதையும் நன்கு எடுத்துரைத்திருக்கிறீர்கள். உலகம் போர்களைத் தவிர்க்கட்டும்.

    வியட்நாம் உணவின் செய்முறை விவரம் சுவாரஸ்யம். இது போன்ற அப்பளங்களை இப்போது சூப்பர் மார்க்கெட்டில் தனியாகவும் விற்கிறார்கள், வாங்கி நாம் விரும்புவதை வைத்துப் பொரித்தெடுக்கும் வகையில்.

    ReplyDelete
  10. அந்தச் சிறுமியின் கதையும் போட்டோவும் பார்த்திருக்கிறேன்.. நல்ல உணவு.

    இனிய ரமலான் பண்டிகை நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்... பிரியாணிதான் கிடைக்கவில்லை:))

    ReplyDelete
  11. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  12. கிம் ப்யூக் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருப்பது ஆச்ச்ரியமாக உள்ளது. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  13. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  14. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  15. வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி தனபாலன்!

    ReplyDelete
  16. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் இனிய நன்றி மாதேவி!

    ReplyDelete
  17. நீங்கள் சொல்வதும் மிகவும் ஆக இருக்கு கீதா! எனக்கு மரச்சீனி அப்பளம் பற்றி தெரியாது. சாப்பிட்டதில்லை! இந்த அரிசி அப்பளம் சென்னையில் கிடைப்பது ஆச்சரியமாக இருக்கிறது! விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா!

    ReplyDelete
  18. வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  19. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  20. இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அதிரா! எனக்குமே ரம்ஜான் அன்று பிரியாணி கிடைக்கவில்லை!!

    ReplyDelete
  21. அந்தப் புகைப்படம் பற்றியும் கிம் ப்யூக் பற்றியும் அறிந்திருந்தேன். இருந்தாலும் மீண்டும் படிக்கும் போது ஒரு பிரமிப்பு வரத்தான் செய்கிறது.

    உணவில் அரிசியைக் குறைக்கும் முயற்சியில் இடைக்கிடையே ரைஸ் பேப்பரில் வெஜ் ரோல் செய்வது உண்டு. உள்ளீடுதான் சுவை.

    ReplyDelete