Saturday, 13 January 2018

பொங்கலோ பொங்கல்!!!

இன்றைக்கு போகிப்பொங்கல்!!


வீட்டில்அசுத்தங்களையும் குப்பைகளையும் ‘ போக்கி’ என்பதுவே காலப்போக்கில் ‘ போகி ’ என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. போகிப்பொங்கல் அன்று பெரும்பாலும் பழைய துணிமணிகளைக் கொளுத்திப்போடுவதும் வீடுகளை சுத்தம் செய்து, காரை வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்து மெருகேற்றுவதும் கிராமங்களில் எப்போதுமே நடக்கும். கோவை பக்கம் வாடைகைக்கு விடும்போது கூட ‘ பொங்கல் சமயம் புதிதாக சுண்னாம்பு பூச வேண்டும் என்று நிபந்தனை போடுவார்கள் என்று அங்கு வசிக்கும் என் சினேகிதி கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார். மாயவரம் பக்கத்தில் இந்த நாள் ‘ காப்பு கட்டும்’ நாளாக கொண்டாடப்படுகிறது. மாவிலை, வேப்பிலை, நவதான்யங்கள் இவற்றால் தோரணம் போல வீட்டிலும் கோவிலிலும் கட்டி வைப்பது தான் ' காப்பு கட்டுதல்' என்று பெயர். இதனால் கெட்டவைகள் நெருங்காது என்பது ஐதீகம். அன்று அரிசியையும் வெல்லத்தையும் இடித்து ‘ மாவிளக்கு மாவு’ போல செய்வார்களாம். 

பொங்கல் அன்று பொங்கல் பொங்குவதும்கூட பல வீடுகளிலும் பல ஊர்களிலும் மாவட்டங்களிலும் வேறுபடுகின்றன. சிலர் விடியற்காலையே, சூரியோதயம் வரும் நேரம் பொங்கலைப் பொங்குகிறார்கள். சிலர் அந்தி சாயும் நேரம் பொங்கல் பொங்குகிறார்கள். சிலர் நல்ல நேரம் பார்த்து, பெரும்பாலும் உச்சியில் கதிரவனின் கிரணங்கள் மின்னும்போது பொங்கல் பொங்குகிறார்கள். 

முன்பெல்லாம் இங்கு பொங்கலன்று, அலுவலகம் செல்லும் நண்பர்களுக்காக விடியற்காலையே 3 மணிக்கு எழுந்து குளித்து 6 மணிக்கெல்லாம் பொங்கல் செய்து விடுவேன். சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல், பொங்கல் குழம்புடன் சூடான இட்லியும் இருக்கும். சுமார் பதினைந்து பேராவது சாப்பிட வருவார்கள். ஊர் நினைவுடன் வயிறு நிறைய சாப்பிட்டுச் செல்வார்கள்! 


இங்குள்ள தமிழ்க்கடைகளில் கரும்பு, இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து, வாழையிலை, மல்லிகைப்பூ முதலியவற்றை எப்போதும் ஊரிலிருந்து வரவழைத்து விற்பனை செய்வார்கள் என்பதால் ஊரைப்போலவே பாத்திரங்களில் மஞ்சள் கொத்தையும் இஞ்சிக்கொத்தையும் சுற்றிலும் கட்டித்தான் பால் ஊற்றி அடுப்பில் வைப்பது வழக்கம். 

சின்ன வயதில் மட்டுமில்லை, ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு கூட எல்லோருக்கும் கனஜோராக பொங்கல் வாழ்த்து அனுப்பும் வேலை நடந்தது. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடைக்குச் சென்று பார்த்துப் பார்த்து பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்கி வந்து வீட்டிலிருக்கும் சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை கையெழுத்து வாங்கி தபாலில் அனுப்புவது ஒரு தனி சுவாரஸ்யம். இப்போதெல்லாம் வாட்ஸ் அப் தான் எல்லாவற்றுக்கும்!! 

பொங்கல் தினம் வரும்போதெல்லாம் என் புகுந்த வீட்டு பொங்கல் கொண்டாட்டங்கள் நினைவில் வரத்தவறுவதில்லை. 
என் புகுந்த வீடு தஞ்சை மாவட்டத்திலிருக்கும் அழகிய சிறு கிராமம். ஆற்றோரமாய் கிராமத்துக்குச் செல்லும் பாதை நீண்டு கொண்டே போகும். ஒரு பக்கம் நுங்கும் நுரையுமாக சலசலத்துச் செல்லும் ஆறும் மறுபக்கம் பசிய வயல்களும் குளுமையாக நமக்கு வரவேற்பு கூறும். பெரிய கூட்டுக்குடும்பம் என்பதால் வீட்டிலிருக்கும் நபர்கள் என்றில்லாமல் பக்கத்துத் தெருக்களிலிருந்து பார்க்க வருவோர், சாப்பிட வருவோர் என்று எப்போதும் அமர்க்களமாயிருக்கும். பொங்கலுக்கென்றே அறுவடைக்கு முன்பே கொஞ்சமாக நெல்லை அறுத்து புத்தரிசி தயார் செய்வார்கள்.
பச்சரிசியும் பாலும் தேங்காய்த்துருவலுமாய் தயாராகியிருக்கும் வெண் பொங்கல் மிகுந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி இரவில் மூடி வைத்து விடுவார்கள். காலையில் அதில் கட்டித் தயிர் ஊற்றி பொங்கல் குழம்பைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது அத்தனை அமிர்தமாக இருக்கும்!!!பொங்கலன்று வாசலை அடைத்து வரைந்த வண்ணக்கோலங்களும்
 “ பொங்கலோ பொங்கல் “  என்று தாம்பாளத்தில் கரண்டியாலடித்துக் கூவும் சிறுவர், சிறுமியர்களும் மாட்டுப்பொங்கலன்று அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் நாலு கால் பாய்ச்சலில் வீட்டை நோக்கி ஓடி வர, அதன் பின்னாலேயே இளைஞர்கள் அவற்றை விரட்டிக்கொண்டே ஓடி வர, முறைப்பெண்கள் அவர்கள் மேல் மஞ்சள் தண்ணீர் விசிறியடிக்க, கொண்டாடும் கிராமத்து மக்களும் ம்.....அது ஒரு நிலாக்காலம்!

என் இனிய அன்புத் தோழமைகளான உங்கள் அனைவருக்கும் பொங்கும் பால் போல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அனைத்துச் செல்வங்களும் அனைவருக்கும் நிறைந்து பொங்கி வழிய அன்பின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!! 

18 comments:

தனிமரம் said...

அது ஒரு கனாக்காலம் போலாகிவிட்டது பொங்கல் விழாக்காலம்))).இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

athiraமியாவ் said...

அது ஒரு நிலாக்காலம்தான் மனோ அக்கா, ஆனா நாம் நினைச்சால், நாமாவது வாழ்த்துக் கார்ட் வாங்கி அனுப்பி விடலாம்தானே..

உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..

துரை செல்வராஜூ said...

பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்!...

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

இனிய நினைவுகள், அது ஒரு நிலாக்காலம் தான்!
இனிய பொங்கல் வாழ்த்துகள் அம்மா

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

சீராளன் said...

வணக்கம் !

பங்கயம் பூத்துக் கங்கை
....பசுமையும் கொள்ளல் போல!
மங்கலம் பெருகி மக்கள்
....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
எங்கிலும் அமைதி வேண்டி
...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

KILLERGEE Devakottai said...

எமது பொங்கல் நல் வாழ்த்துகள் சகோ

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்க்ள் நேசன்!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள் அதிரா!
பொங்கல் வாழ்த்துக்கடைகள் இப்போதெல்லாம் அதிகமில்லை ஊரில்! இங்கேயும்கூட அப்படித்தான் அதிரா!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரர் துரை செல்வராஜ்!!

மனோ சாமிநாதன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்கவிதைக்கு அன்பு நன்றி சீராளன்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

இளமதி said...

வணக்கம் அக்கா!

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

priyasaki said...

உங்களுக்கும்,குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மனோக்கா.