Sunday, 29 January 2017

மஹாத்மாவிற்கு நினைவஞ்சலி!!

இரண்டு வருடங்களுக்கு முன் பூனா சென்ற போது நாங்கள் பார்க்க விரும்பிய இடம் மஹாத்மா காந்தியின் சமாதி. இணையத்தைப் பார்த்து, அது இருக்குமிடம் குறித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு தான் அங்கே சென்றேன். மஹாத்மாவின் சமாதி ஆகா கான் அரண்மணையுள்ளே தோட்டத்து மூலையில் இருக்கிறது என்று தெரியும். ஆனால் அதை விசாரித்து கண்டு பிடிக்க மிகவும் சிரமப்பட்டோமென்று தான் சொல்ல வேன்டும். பூனா வாசிகளுக்கே, அருகில் கடை போட்டிருப்பவர்களுக்கே சரியாக சொல்லத் தெரியவில்லை. எனக்கும் என் கணவருக்கும் ஹிந்தி நன்றாகப் பேசத்தெரியுமென்பதால் டாக்ஸி ஓட்டுனர் ஒரு வழியாக அங்கே கொண்டு போய் விட்டார்.



ஆகா கான் அரண்மனை

ஆகா கான் அரண்மனை பூனா நகர் சாலையில் ஏர்வாடாவில் அமைந்திருக்கிறது. 1892ல் பூனாவின் சுல்தான் மூன்றாம் முகமதுஷா ஆகா கான் அவர்களால் கட்டப்பட்டது. அருகேயுள்ள மக்கள் அப்போதைய பஞ்சத்தால் கஷ்டப்பட, அவர்களுக்காக சுல்தானால் கட்டப்பட்டது இது. பின்னாளில் இந்த அரண்மனை சரித்திர முக்கியத்துவம் பெற்றது.

இவரின் கொள்ளுப்பேரனான இமாம் சுல்தான் ஷா கரிம் நான்காவது ஆகா கான் ஆக பதவியேற்ற சில வருடங்களில் இந்த அரண்மனையையும் அதைச்சுற்றியுள்ள நிலங்களையும் 1969ம் வருடம் இந்திய தேசத்திற்கே ஒரு நினைவுப்பரிசாக அளித்து விட்டார். 
இந்திய சுதந்திரப்போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம், இங்கே தான் மகாத்மா காந்தி, கஸ்தூரி பாய், மகாதேவ் தேசாய், சரோஜினி நாயுடு முதலியோர் குவிட் இந்தியா இயக்கத்திற்குப்பின் 1942லிருந்து 1944ம் வருடம் மே மாதம் வரை சிறை வைக்கப்பட்டார்கள். அன்னை கஸ்தூரி பாயும் மகாதேவ் தேசாயும் இங்கே தான் இறந்தார்கள்.

மகாத்மா காந்தி, கஸ்தூரி பாய், மகாதேவ் தேசாய் சமாதிகள் அரண்மனைக்கு வெளியே தோட்டத்தின் ஒரு மூலையில் முலா நதி அருகே அமைந்துள்ளன.



மஹாதேவ் தேசாய் அவர்களின் சமாதி

கஸ்தூரிபாய் காந்தி அவர்களது சமாதி

மஹாத்மா காந்தி அவர்களின் நினைவிடம்

2003ல்  இதை ஒரு சரித்திரப்பிரசித்தி பெற்ற நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1969ம் வருடம் நான்காம் ஆகா கான் அவர்களால் காந்திக்கும் அவரின் தத்துவங்களுக்கும் தான் காட்டும் மரியாதையாக இதை இந்திய மக்களுக்காக வழங்கினார். 19 ஏக்கரில் அமைந்துள்ள‌ இந்த இடம் பசுமை நிறைந்த புல்வெளியாலும் தோட்டங்களாலும் சூழப்பட்டிருக்கிறது. அரண்மனை 7 ஏக்கரில் கட்டப்பட்டிருக்கிறது.








இந்த அரண்மனையில் தேசப்பிதா மகாத்மா காந்தி, கஸ்தூரி பாய் இருவரது புகைப்படங்கள், ஓவியங்கள் சுதந்திரப்போராட்ட குறிப்புகள், மகாதேவ் தேசாயின் வரலாறு பற்றிய குறிப்புகள், புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

















எல்லாம் பார்த்து முடிந்து சில நிமிடங்கள் அங்கே இருந்த படியில் அமர்ந்திருந்த போது மனம் மிகவும் கனமாக இருப்பதை உணர்ந்தேன்.

சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி சிறு வயதில் நிறைய படித்திருக்கிறோம். ஏன், அந்த வயதில் மஹாத்மா ஒரு ஹீரோவாகக்கூட பள்ளி நினைவுகளில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அந்தப் போராட்டங்களில் ஒரு பகுதியாக நடந்த நிகழ்வுகளை இந்த அரண்மணையில் புகைப்படங்களாகவும் செய்தி குறிப்புகளாகவும் அறிந்த போது மனம் பிரமித்துப்போனது! தன் இளமை, வாழ்க்கை, ஆசாபாசங்கள் அனைத்தையும் தூர எறிந்து விட்டு மக்களுக்காக, தேசத்திற்காக போராட எத்தனை மன வலிமை இருந்திருக்க வேண்டும்? அத்த‌னை போராட்டங்கள், தியாகங்கள், உழைப்பிற்கான பலன் இன்று இருக்கிறதா? சுதந்திரத்திற்காக இப்படியெல்லாம் போராடியவர்களை சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் நினைவு கூர்கிறார்களா?

மன பாரத்துடன் மஹாத்மா காந்திக்கு நினைவஞ்சலிகளை சமர்ப்பித்து வெளியே வந்த போது உலகம் வெளியில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது!

25 comments:

  1. அங்கிருப்பவர்களுக்கு அந்த இடத்தைத் தெரியவில்லை என்பது சோகம்தான். சுவாரஸ்ய விவரங்கள், அழகிய படங்கள்.

    ReplyDelete
  2. அருகில் இருப்பவர்களாலேயே வழிகாட்ட இயலாதது வேதனைதான் சகோதரியாரே
    இந்தியாவில் தியாகிகளி அனைவரின் கதியும் இதுதான்
    சில வருட்ங்களுக்கு முன் பாண்டிச்சோரி சென்ற பொழுது பாரதிதாசன் அவர்களின் இல்லம் எங்கே இருக்கிறது என்று பலரிடமும் கேட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை.
    இதில் கொடுமை என்ற என்றால், பாரதிதாசன் நினைவு இல்லம் அமைந்திருக்கும் அதே தெருவில் குடியிருப்பவர்களும் இதே பதிலைக் கூறியதுதான்

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு.

    போர்பந்தரில் இருக்கும் காந்தியின் பிறப்பிடமான கீர்த்தி மந்திர் இரு முறை சென்றதுண்டு. சபர்மதி ஆஸ்ரமமும் சென்றிருக்கிறேன். இங்கே சென்றதில்லை.

    ReplyDelete
  4. நாங்களும் அறிந்து கொண்டோம்... நன்றி அம்மா...

    ReplyDelete
  5. //அத்த‌னை போராட்டங்கள், தியாகங்கள், உழைப்பிற்கான பலன் இன்று இருக்கிறதா? சுதந்திரத்திற்காக இப்படியெல்லாம் போராடியவர்களை சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் நினைவு கூர்கிறார்களா ?//

    பக்கத்தில் கடை போட்டு இருப்பவர்களுக்கே தெரியவில்லை எவ்வளவு கேவலமான விடயம் இது ?
    உலகுக்கே அறியப்பட்டவர் திரு. காந்தி அவருக்கா இந்நிலை ?

    மனம் கனக்கும் பதிவு.

    ReplyDelete
  6. அருமையான நினைவஞ்சலி.

    ReplyDelete
  7. மிகவும் அருமையான படங்களுடன் + ஆச்சர்யமான தகவல்களுடன் கூடிய ஓர் நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    -=-=-=-=-

    நம் தேச பிதா மஹாத்மா காந்தி நினைவிடம் புது டெல்லியில் ஓரிடத்தில் இன்றும் மிகவும் நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். நான் அங்கு சென்று வரும் பாக்யம் எனக்குக் கிடைத்தது.

    அதனைக்கூட இதோ இந்தப்பதிவினில் நான் ஓரிடத்தில் படமாகக் காட்டியுள்ளேன்.

    http://tthamizhelango.blogspot.com/2016/01/by-vgk.html

    ReplyDelete
  8. மிகவும் அருமையான இடம் , படம் பார்க்கவே மனம் கனக்கிறது நேரில் பார்க்க மனம் வலித்திருக்கும் என்பது உண்மையே... இதெல்லாம் நேரில் பார்க்கவும் கொடுப்பனவு வேண்டும்.

    ReplyDelete
  9. அவ்விடத்தை எவ்வளவு அழகாக சுத்தமாக வச்சிருக்கினம், அந்த மிளகாய்ச் செம்பரத்தை இன்னும் அழகைக் கூட்டுது...

    ReplyDelete
  10. மகாத்மா காந்திக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பதிவு. படங்களுக்கும் தகவல்களுக்கும் அன்றைய வரலாற்றை எடுத்து சொல்லும் வண்ணம் எழுதியுள்ளமைக்கும் உங்கள் தேசபக்திக்கும் எனது பாராட்டுகள்.

    (காந்தி சமாதி என்பதனை விட காந்தி நினைவிடம் என்பதே சரியானது என்று நினைக்கிறேன். ஏனெனில் காந்தியின் உடல் புதைக்கப்படவில்லை. அவரது அஸ்தியின் ஒரு பகுதி அலகாபாத் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. இன்னொரு பகுதி (அஸ்தி) வைக்கப்பட்ட கலசங்கள் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கெல்லாம் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டன. திருச்சியிலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ’மகாத்மா காந்தி அஸ்தி மண்டபம்’ என்ற, அவரது அஸ்திக் குடம் வைக்கப்பட்ட ஒரு நினைவிடம் உள்ளது.)

    ReplyDelete
  11. அன்புள்ள அக்கா
    மிகஅழகாக உள்ளது படமும் தகவல்களும்.பூனாவில் இருந்துகொண்டு இன்னும் பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு.ஜுனில் போகும்போது பார்க்கிறென். காந்திகிராம்த்தில் படித்ததால் அவரின் அஷ்திகலசம் உள்ள இடத்தில்தான் எல்லா ப்ரார்தனைகளும் நடக்கும்.அப்போது மனம் கனத்து போகும்.

    ReplyDelete
  12. அருமையான பகிர்வு....

    போற்றி பாதுகாக்க வேண்டிய இடங்கள்...

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  14. உங்கள் அனுபவம் வருத்தத்தைத் தந்தது சகோதரர் ஜெயக்குமார்! ஹிந்தி மொழியாக இருக்கும் ஊரில் தமிழர்களாகிய நாம் விசாரித்து அலைவதில் ஒரு நியாயம் இருக்கிற‌து. நம் தமிழ்நாட்டில் நம்மால் விசாரித்து தெரிந்து கொள்வதற்கு எத்தனை கஷ்டமாயிருக்கிறது! அது தான் நினைக்கும்போது வருத்தத்தை அளிக்கிறது!

    ReplyDelete
  15. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!!

    ReplyDelete
  16. பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  17. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  18. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  19. பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  20. அழகிய பின்னூட்டம் இனிமையாக தந்ததற்கு அன்பு நன்றி அதிரா!

    ReplyDelete
  21. நெடு நாட்களுக்குப்பின் தந்த வருகைக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் இளங்கோ!

    காந்தி அவர்களது அஸ்தி தான் இங்கும் வைக்கப்பட்டிருக்கிறது. கஸ்தூரிபாய் காந்தி, மஹாதேவ் தேசாய் இருவரது சமாதி அருகே தான் மஹாத்மா காந்தியின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டு அதன் மீது நினைவுச்சின்னம் எழுப்பியிருக்கிறார்கள். அதனால் நீங்கள் எழுதியுள்ளது போல சமாதி என்று குறிப்பிடாமல் நினைவுச்சின்னம் என்று குறிப்பிடுவதே சரியானது. அந்த வார்த்தையை திருத்தி விடுகிறேன்.

    ReplyDelete
  22. முதல் வருகைக்கும் அருமையான பின்னூட்டம் தந்ததற்கும் அன்பு நன்றி மீரா பாலாஜி!

    ReplyDelete
  23. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி அனுராதா!

    ReplyDelete
  24. ஆகாகான் மாளிகையை நேரில் பார்த்தமாதிரி இருக்கிறது.

    -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
  25. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்வான நன்றி சகோதரர் செல்லப்பா யக்யஸ்வாமி!

    ReplyDelete