Wednesday, 23 November 2016

அந்த நாள் இனி வருமா?

சென்ற மாதம் அடுத்தடுத்து சில துக்கங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. அவை எல்லாமே ஒவ்வொரு விதமாய் மனதை மிகவும் பாதித்தது. வாழ்க்கையின் அர்த்தம் நிஜமாகவே புரியாதது போல் மனம் குழம்பியது.

முதலாவது ஒரு பெரியவரின் மரணம். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அதில் இருவர் வெளி நாட்டில். இறந்தவருக்கு வயது 80க்கு மேல். அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒத்துப்போகவில்லை. நிறைய கருத்து வேற்றுமைகள். கடைசி வரை இருவரும் அவர் மாடியிலும் அவர் மனைவி கீழேயும் தனியே வாழ்ந்தார்கள். சாப்பாடு மட்டும் அவருக்கு மாடிக்கு தவறாமல் சென்று விடும்.  அவரின் மனைவி கடைசி மகன் வீட்டுக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்ததால் இறக்கும் தருவாயில் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்க அருகில் யாருமில்லை. அலைபேசியில் மகனை அழைத்து அவர் தண்ணீர் புகட்ட அவர் உயிர் பிரிந்தது. பரிவோடு, அக்கறையோடு, உள்ளன்போடு கவனிக்க யாருமில்லாத வாழ்க்கையின் அர்த்தம் என்ன? வயது ஏற ஏற மனிதர்களுக்கு கொஞ்சம்கூட விவேகம் வராதது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கண்ணீர் விட்டு அழும் நெருங்கிய உற‌வுகளைப்பார்த்தபோது இன்னுமே ஆச்சரியமாக இருந்தது.




அடுத்தது இன்னொரு பெரியவரின் மரணம். இவரும் வயது எண்பதிற்கு மேல். ஏற்கனவே மனைவி நோயில் விழுந்து அல்லாடிக்கொண்டிருக்க, திடீரென்று இதயத்தாக்குதல் ஏற்பட்டு மருத்துவ மனையில் கொண்டு வந்து சேர்த்தார்க‌ள். இவருக்கு நான்கு பிள்ளைகளும் ஒரு பெண்ணும்! நான்கு பிள்ளைகளும் கவனிக்காத நிலையில் கணவனும் ம‌னைவியும் கடைசி வரை தனியாகவே வாழ்ந்து வந்தனர். உள்ளூரிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் மட்டும் அவ்வப்போது சமைத்துப்போட்டு பார்த்துக்கொண்டார். அவரின் தம்பி மகன் தான் அவருக்குத்தேவையானதெல்லாம் பார்த்துக்கொன்டிருந்தார். இப்போது மரணத்தருவாயில் அருகில் வசிக்கும் ஒரு மகன் மட்டும் வந்து அருகிலேயே இருந்தார். தந்தையை மனைவியின் பேச்சால் கவனிக்காத, தன்னிடம் கொண்டு வந்து வைத்துக்கொள்ளாத‌ குற்ற‌ உணர்ச்சியில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. இரத்த அழுத்தம் சற்று நன்றாக அவர் பிழைக்க கொஞ்சம் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொல்ல மகன் மருந்து வாங்க வெளியில் செல்ல, பெண்ணும் வேறு எதற்கோ வெளியில் சென்று விட‌, 'அவர் உயிர் சில விநாடிகளில் பிரிந்து விடும், யாராவது வந்து அவரிடம் பேசுங்கள்' என்று மருத்துவர் திடீரென்று எதிர்பாராத விதமாய் வெளியில் வந்து அழைத்தபோது அவர் பெற்ற பிள்ளைகள் அங்கு யாருமில்லை. அவரின் கடைசி விநாடிகளில் அவரின் தம்பி மகனின் கைகளைப்பிடித்தவாறே கண்ணீர் வழிய அவர் இறந்து போனார். நான்கு ஆண் பிள்ளைகளை பெற்று வளர்த்ததில் என்ன அர்த்தம்? அவரவருக்கு அவரவர் சுய நலம் தானே பெரிதாய்ப்போனது! வயதானவர்கள் வயதாக வயதாக அக்கறையையும் அன்பையும்தானே எதிர்பார்க்கிறார்கள்! நன்றிக்கடனையும் மனசாட்சியையும் மறந்து வெறும் சுமையை நினைத்து மட்டும் பயந்து போகும் இன்றைய இளைய தலைமுறையினர் ஏன் தனக்கும் ஒரு நாள் மூப்பு வருமென்பதை மறந்து போகிறார்கள்?




இன்னொரு மரணம் கொஞ்சம் வித்தியாசமானது. கணவர் இறந்த நிலையில் தன் நான்கு மகன்களிடமும் இரன்டு பெண்களிடமும் இருக்க மறுத்து தன் சொந்த ஊரில் 200 கிலோ மீட்டர் தொலைவில் கான்சரால் குடல் அறுக்கப்பட்டு சிகிச்சை செய்த நிலையில் தனியே வயலில் விவசாயம் பார்த்துக்கொண்டு வாழ்ந்த ஒரு தாயின் கதை இது! திடீரென்று அவர் இறந்து போக, பாசமான மகன் தஞ்சையிலிருந்து அடித்து பிடித்துக்கொண்டு அழுது அரற்றியவாறே சென்றதைப்பார்க்க சகிக்கவில்லை எனக்கு!

அந்தக்கால கூட்டுக்குடும்பங்கள் நினைவுக்கு வருகின்றன‌. கருத்து வேற்றுமை, பேதங்கள் என்று இருந்தாலும் ஒற்றுமை என்பது வேற்றுமையைக் கடந்து நின்றது. ஒருத்தருக்கு வலி என்றால் குடும்பத்திலுள்ள‌ அத்தனை பேரும் சூழ்ந்து நின்ற காலம் அது!பெரியவர்களுக்கு மனதாலும் உட‌லும் மரியாதை கொடுத்த அந்த நாட்கள் இனி வருமா? உடல்நலமில்லாதவரை ஒருவர் பார்த்துக்கொண்டாரென்றால் இன்னொருவர் வீட்டுப்பொறுப்புகளை கவனமாக பார்த்துக்கொள்வார். மற்றொருவர் குழந்தைகளைப்பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்வார். குடும்பம் என்று இழை அறுந்து விடாமல் அன்று எல்லோரும் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் இன்றோ?

சுய கெளரவம் பார்ப்பதையும் வரட்டுத்தனமான பிடிவாதத்தையும் விடாமல் பிடித்துக்கொன்டு பெரியவர்கள் செய்யும் அட்டகாசத்தால் பாசமுள்ள மகன்கள் ஒரு புறம் தவிக்க, மறுபுறம் பாசமும் மனசாட்சியும் அற்றுப்போன மகன்களால் பெற்றவர்கள் பரிதவிக்க, இதற்கு எப்போது விடிவு காலம் வரும்? 

20 comments:

  1. மிகவும் வேதனையான விடயங்கள் இன்றைய இளைய சமூகத்தினருக்கு நாளை நமக்கும் வயதாகும் என்ற சிந்தை வரவேில்லை என்பது மட்டும் நிச்சயம் அதை அந்த நிலைக்கு வந்தவுடன்தான் நம்புகின்றனர்...

    இது இன்னும் மோசமாகும் அடுத்த சந்ததியினர் பிள்ளையைப் பெற்று கல்யாணம் செய்தவுடன் மறக்கும் நிலைக்கு தானாகவே வந்து விடுவார்கள் - கில்லர்ஜி

    ReplyDelete
  2. கடைசியல் ஒருவர் வந்து இறுதி காரியங்கள் செய்யாவாவது இன்று ஆள் இருக்கிறது என்ற சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். வரும் காலங்களில் தற்போதுள்ள நிலமை வருமா என்று ஏங்கி "அந்த நாள் இனி வருமா?" என்று நினைத்தால் கூட ஆச்சரியபடுவதற்கில்லை. இப்பொழுதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் தான் அவர்களையும் வெளிநாடோ வடநாடோ அனுப்பிவிட்டு என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை.

    ReplyDelete

  3. //அந்த நாள் இனி வருமா?//

    வரவே வராது. சான்ஸே இல்லை.

    இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிறைய பல வீடுகளிலும் இன்று நடைபெற்றுக்கொண்டே தான் வருகின்றன. வெளியுலகுக்குத் தெரிபவை மிகவும் குறைவே.

    பலருக்கும் தங்கள் மனக்குறைகளை வெளியே பிறரிடம் சொல்ல முடியாத தவிப்பு உள்ளது. சொன்னாலும் கேட்டுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. இப்போது யாருக்குமே எதற்குமே நேரமும் இல்லை.

    பாசமாவது பந்தமாவது .... எல்லாமே வெளி வேஷங்கள் மட்டுமே.

    ReplyDelete
  4. இது போன்ற நிகழ்வுகள்
    என்னைச் சுற்றியும் நடந்துகொண்டிருப்பதால்
    மன வேதனையுடன் பதிவைப் படிக்க நேர்ந்தது

    ReplyDelete
  5. as you have rightly observed that the defect lies with both the youngsters and old people...let us pray that all will understand their limits responsibilities and the maturity... to enable the old people die peacefully///ji

    ReplyDelete
  6. படிக்கவே மனது கஷ்டபடுகிறது.

    ReplyDelete
  7. படித்தவுடன் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

    ReplyDelete
  8. கேட்பதற்கே கொடுமையாக இருக்கிறது, தன் சுக போகங்களுக்குக்காகப் பெற்றோரைத் தனியே தவிக்கவிடும் கொடுமையே இன்று அரங்கேறி வருகிறது. பெற்றோர்கள் இருக்கும்போது அவர்களின் அருமை தெரிவதில்லை, அவர்கள் நம்மை விட்டுச் செல்லும்போது தான் அது தெரியவரும்.

    அதே போல் வயதானவர்களும் கோபப்படுவதை குறைந்துக் கொண்டு, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இனி வரும் நாட்களில் இவைகள் வளருமே தவிர குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  9. அருமையான தகவல்
    சிறந்த படைப்பு

    ReplyDelete
  10. படிக்கும்போது மனது கனத்தது. சஞ்சிதம், ஆகாமியம், பிராரர்த்தம் என்ற நிலைகளில் சைவ சித்தாந்தத்தில் வினைகளைப் பிரிப்பர். இந்த வினைகளுக்குள் ஏதாவது ஒன்றுக்குள் நாம் அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறோம். சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளமுடிகிறது. சிலவற்றைப் பகிர முடியவில்லை. ஆனால் அவன் எழுதியதை மாற்றமுடியாது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

    ReplyDelete
  11. விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  12. முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சோமேஸ்வரன்! நீங்கள் கூறுவது போல இந்த நிலைமையும் மோசமாகி இதுவே பரவாயில்லை என்று சொல்லக்கூடிய காலமும் வரலாம்!

    ReplyDelete
  13. //அந்த நாள் இனி வருமா?//

    வரவே வராது. சான்ஸே இல்லை.

    இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நிறைய பல வீடுகளிலும் இன்று நடைபெற்றுக்கொண்டே தான் வருகின்றன. வெளியுலகுக்குத் தெரிபவை மிகவும் குறைவே.

    பலருக்கும் தங்கள் மனக்குறைகளை வெளியே பிறரிடம் சொல்ல முடியாத தவிப்பு உள்ளது. சொன்னாலும் கேட்டுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. இப்போது யாருக்குமே எதற்குமே நேரமும் இல்லை.

    பாசமாவது பந்தமாவது .... எல்லாமே வெளி வேஷங்கள் மட்டுமே.//

    எத்தனை தீர்க்கமாக, நிதர்சன உண்மைகளை எழுதியிருக்கிறீர்கள்! வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  14. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் ரமணி!!

    ReplyDelete
  15. //let us pray that all will understand their limits responsibilities and the maturity... to enable the old people die peacefully///

    Thanks a lot for the wonderful feedback Chander!!

    ReplyDelete
  16. கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி!

    ReplyDelete
  17. கருத்துரைக்கு அன்பு நன்றி சாரதா!

    ReplyDelete
  18. அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி அருள்மொழிவர்மன்!

    ReplyDelete
  19. வரூகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

    ReplyDelete
  20. சைவ சித்தாந்தத்தின் வினைகள் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் சகோதரர் ஜம்புலிங்கம்! அருமையான விளக்கத்திற்கு அன்பு நன்றி!!

    ReplyDelete