Wednesday, 21 September 2016

தற்கொலை மரணங்கள்!!

சில நாட்களுக்கு முன், தொடர் நிகழ்வுகளாக தெரிந்தவர்கள் இல்லங்களில் தற்கொலை மரணங்கள். ஒன்றின் பாதிப்பிலிருந்து மீளுமுன் அடுத்த மரணம். முதலாவது மரணம் கிராமத்தில் நடந்தது. இள‌ம் வயது தம்பதி. ஒரு சின்ன குழந்தை மட்டும் இருந்தது. குடிப்பதற்கு காசு கேட்டு மனைவி தர மறுத்ததால் கணவனே ஆத்திரத்தில் மனைவி மீது மண்ணெண்னெய் ஊற்றி எரித்து விட்டான். என்னைக்காப்பாற்றுங்கள் என்று அலறியவாறே உடல் முழுக்க தீ பற்றி எரிய அப்பெண் தெருவில் ஓடி வந்த காட்சியை என் உறவினரால் பல நாட்களுக்கு மறக்க இயலவில்லை. வேதனை என்னவென்றால் கணவன் தன்னை கொல்லவில்லை, யதேச்சையாக நடந்தது என்று மனைவி மரண வாக்குமூலம் தந்தது தான்!



அடுத்ததும் குடியால் வந்தது தான். மனைவி குடிக்க காசு தராத கோபத்தில் 'இப்போது உன் கண்ணெதிரேயே சாகிறேன் பார்' என்று சொல்லி கணவன் விஷத்தைக் குடித்து விட்டான். அவன் நண்பர்கள் அலறிப்புடைத்துக்கொண்டு, பைக்கில் அவனை ஏற்றிக்கொண்டு தஞ்சை மருத்துமனைக்கு பறக்க, வழியில் பைக் விபத்துக்குள்ளாகி அவனது கதையும் அங்கேயே முடிந்து போனது.

அடுத்தது, இளம் கணவன் மனைவிக்குள் தகராறு. வீட்டிலிருந்து அனைவரும் பல‌ அலுவல்கள் காரணமாக வெளியே போகும் வரை காத்திருந்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டது.

30 வருடங்களுக்கு முன் என் நெருங்கிய சினேகிதி தற்கொலை செய்து கொண்டார். மூன்று பெண் குழந்தைகள் பத்து வயதிலும் ஐந்து வயதிலும் ஒரு வயதிலுமாக இருந்தன. அதிலும் மூத்த பெண் கால் ஊனமான பெண் வேறு! கணவனின் அதிகமான குடிபோதை, அவர் கொடுத்த அடி, உதைகள், அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் சில தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டபோது நானே அவரைக் காப்பாற்றி இருக்கிறேன். பெண் குழந்தைகளை சுட்டிக்காண்பித்து நான் திட்டும்போதெல்லாம் அழுவார். நான் வெளிநாட்டில் இருக்கும்போது அவர் இற‌ந்து விட்டார். தற்கொலை என்றார்கள். கணவன் தான் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார் என்றார்கள். ஆனால் மரண வாக்குமூலத்தில் அவர் தன் கணவன் தான் தன்னைக் கொளுத்தினார் என்று சொல்ல அவர் கணவர் சிறைக்குச் சென்றார். ஆனால் அவர்கள் மேல்தட்டு வர்க்கம், மிகுந்த பணக்காரர்கள் என்பதால் விரைவில் அவர் ஜாமீனில் வெளி வந்தார். உடனே குழந்தைகளை கவனிக்க‌ என்று திருமணமும் பண்ணிக்கொண்டார்!



35 கோடிக்கும் அதிகமானோர்  உலக அளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி நடந்த உலக மன நல ஆரோக்கிய தினத்தில் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள் என உலக நாடுகளில், இந்தியா முதல் இடத்தில் உள்ளது. படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகம், தற்கொலையில் முதல் இடத்தில் இருக்கிறது. பொதுவாகக் குடும்பப் பிரச்சினை, நோய், வரதட்சிணை, தேர்வில் தோல்வி, காதல் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தற்கொலை முடிவுக்குக் காரணமாக இருக்கும். சமீப காலமாக தந்தை அடித்தார், ஆசிரியர் வகுப்பறையில் சக மாணவர்கள் இருக்கும் போது திட்டினார் என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகவெல்லாம் தற்கொலைகள் நிகழ்கின்றன.

தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் மன அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கால இளம் பருவதினருக்கு மன தைரியம், சகிப்புத் தன்மை, கூடி வாழ்தல் போன்றவற்றை கற்றுத் தர எந்தப் பெற்றோருக்கும் நேரமும் இல்லை, அக்கறையும் இல்லை. இதனால் அவர்கள் சிறு வயதில் இருந்தே யந்திரத்தனமாக, எந்தவித உன்னத குறிக்கோளுமில்லாமல் வளருகிறார்கள்.  இதனால் அவர்களுக்கு சிறு பிரச்சினை ஏற்படும்போது தாங்கிக்கொள்ள‌ முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்குத் தயாராகிறார்கள்.

எந்தப் பிரச்சினையையும் மன தைரியத்துடன் போராடினால் எளிதில் அப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பது அவர்களுக்குப்புரிவதில்லை.

முறையான உணவு, மன இறுக்கத்தைப் போக்கும் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சி முறைகள்,குழந்தைகளுக்கு பாசத்தையும் விட்டுக்கொடுத்தலையும் சொல்லிக்கொடுத்தல் போன்ற அணுகு முறைகளை இன்றைய பெற்றோர் அவசியம் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

பள்ளிகளிலும் தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை உடைய நூலகத்தை ஏற்படுத்துவது, ரசனையை மேம்படுத்தும் திரைப்படங்களை அறிமுகப்படுத்துவது, மாணவ சமுதாயத்திற்குப்பயன்படும் வகையில் ஆரோக்கியமான பட்டிமன்றங்களை அடிக்கடி நடத்தி அவர்களின் சிந்தனைகளை கூர்மைபப்டுத்துவது,சக மனிதர்களின் மீதான நேசத்தை வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்வதற்கு வழிகாட்டும் பல்வேறு துறை நிபுணர்களை அழைத்து வந்து பேச வைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் இளம் தளிர்களை நல்வழிக்கு, நல்லுலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வளரும் பருவத்தினராவது இத்தகைய மன அழுத்தங்களுக்கு ஆட்படாமல் வளமாக வாழ வேன்டும்.


 

25 comments:

  1. சிறப்புப் பதிவு வெகு அருமை
    உதாரணங்களைச் சொல்லி முடிவாகத்
    தெளிவான முடியக் கூடிய தீர்வுகளைச்
    சொல்லிப் போனவிதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மன இறுக்கத்தைப் போக்குவதற்கான முயற்சிகள் பள்ளிப் பருவத்தில் இருந்தே தொடங்கப் பட வேண்டும்.
    ஆனால் இன்றுதான் பள்ளி என்பதே மதிப்பெண் பெறவும், தேர்ச்சி பெறவும் மட்டுமே என்று ஆகிவிட்டதே

    ReplyDelete
  3. மனதை கனக்கச் செய்கின்றது - பதிவு..

    ஒரு நொடி சிந்தித்தால் மன அழுத்தத்திலிருந்து மீளலாம்.. ஆனாலும் விதி வலியது..

    >>> வளரும் பருவத்தினராவது இத்தகைய மன அழுத்தங்களுக்கு ஆட்படாமல் வளமாக வாழ வேன்டும் <<<

    சீரிய கருத்து.. சிந்திக்க வேண்டும்..

    ReplyDelete
  4. அனைவரையும் சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான விழிப்புணர்வுக் கட்டுரை.

    ஒருசில உதாரணங்களுடன் சொல்லியுள்ளது மனதில் தைக்கக்கூடியதாக உள்ளன.

    கடைசி இரண்டு பத்திகளின் தாங்கள் சொல்லியுள்ள தீர்வுகள் பயனளிக்கக்கூடியவை.

    பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
  5. பள்ளிகளிலும் தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களை உடைய நூலகத்தை ஏற்படுத்துவது, ரசனையை மேம்படுத்தும் உலகத் திரைப்படங்களை அடிக்கடி திரையிடுவது, சக மனிதர்களின் மீதான நேசத்தை வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்வதற்கு வழிகாட்டும் பல்வேறு துறை நிபுணர்களை அழைத்து வந்து பேச வைப்பது போன்ற செயல்பாடுகள் மூலம் இளம் தளிர்களை நல்வழிக்கு, நல்லுலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வளரும் பருவத்தினராவது இத்தகைய மன அழுத்தங்களுக்கு ஆட்படாமல் வளமாக வாழ வேன்டும். //

    வீட்டைவிட பள்ளிகளில், கல்லூரிகளில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள் பிள்ளைகள் . நீங்கள் சொல்வதை அமுல்படுத்தினால் இளம் தளிர்கள் கருகாமல் நன்கு தழைத்து வளர்வார்கள்.
    நல்ல பதிவு.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மிக்க அருமையான கட்டுரை. நினைத்தது நடக்காவிட்டால் தற்கொலைதான் தீர்வு என்று நம்பி விடும் இளைஞர்கள்,இளைஞிகள். பெற்றோர்கள் நடைமுறையில் அவர்களுக்குக் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஆதலால் பெற்றோர்களும் முன்மாதிரியாக இருந்து வழி நடத்த வேண்டும். அவர்களுக்கு நேரம் இருக்கிறதா? வீட்டிலும்,பள்ளியிலுமாக அஸ்திவாரம் பலமாக அமைய வேண்டும்.நிறைய உங்களின் ஆலோசனைகள் மிக்க நன்றாக இருக்கிறது. நன்றி அன்புடன்

    ReplyDelete


  7. நல்ல கருத்தாழமிக்க பதிவு.." Effective Parenting " பற்றி courses களும் , lectures களும் சமூக அளவில் பரவலாக நடத்தப்பட - வேண்டும் ..தற்கொலை பெருமையை அல்ல -இழிவைத்தான் தேடித்தரும் என்று உணரப்பட செய்யவேண்டும் ..
    மாலி

    ReplyDelete
  8. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! சிலர் தற்கொலை செய்துகொண்டதை என்னால் நம்ப முடியாமல் போனதுண்டு. ஒரு நொடியில் ஏற்படும் மனச்சிதைவு அவர்களை தற்கொலை செய்ய தூண்டுகிறது!

    ReplyDelete
  9. என்னுடன் கூடப் பணிபுரிந்த ஒருவர் தனது மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி எங்கள் தளத்திலும் முன்னர் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  10. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தனை மறந்தோம். நல்ல நெறி வகுப்புகளை விட்டுவிட்டோம். பெரியவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்பதில்லை. முன்னேறுகிறோம் என்று கூறிக்கொண்டே பின்னுக்குப் போகிறோம், மனதைப் பக்குவப்படுத்தத் தெரியாமல். முயன்றால் எதனையும் எதிர்கொள்ளலாம் என்ற நல்லுணர்வு முதலில் தேவை.

    ReplyDelete
  11. பாராட்டிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோத‌ரர் ரமணி!

    ReplyDelete
  12. பாராட்டிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோத‌ரர் ரமணி!

    ReplyDelete
  13. பாராட்டிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோத‌ரர் ரமணி!

    ReplyDelete
  14. இனிய பாராட்டிற்கு மனங்கனிந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  15. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  16. அருமையான கருத்துக்களுக்கு அன்பு நன்றி காமாட்சி அம்மா!

    ReplyDelete
  17. இனிய பாராட்டிற்கும் அருமையான நல்ல கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் மெளலி!

    ReplyDelete
  18. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சுரேஷ்! நீங்கள் சொல்வது போல ஒரு நிமிடத்தில் ஏற்படும் மனச்சிதைவு தான் தற்கொலை நிகழக் காரணம் என்று முன்பு நினைத்திருந்தேன். இறக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்து அடுத்தடுத்து சின்ன சின்ன திட்டங்கள் செய்து தற்கொலைகள் நிகழ்கின்றன‌ என்பதையும் தற்போதெல்லாம் காண்கிறேன்!

    ReplyDelete
  19. கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்! தற்கொலைகளுக்கு எப்படியெல்லாம் காரணங்கள் கிடைக்கின்றன பாருங்கள்! எப்படியோ இந்தத்த‌கவலை படிக்க விட்டிருக்கிறேன்!

    ReplyDelete
  20. அருமையான கருத்துக்களை சொல்லியிருப்பதற்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  21. இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான பதிவை அளித்தமைக்கு நன்றிகள்! இதில் கொடுமை யாதெனில் பள்ளி செல்லும் சிறார்களிடத்தில் தற்கொலை என்பது பரவலாகக் காணப்படுகிறது.

    ஐயா ஜம்புலிங்கம் அவர்கள் குறிப்பிட்டதுபோல் ``ஆத்திச்சூடி, கொன்றைவேந்தனை மறந்தோம். நல்ல நெறி வகுப்புகளை விட்டுவிட்டோம். பெரியவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்பதில்லை. முன்னேறுகிறோம் என்று கூறிக்கொண்டே பின்னுக்குப் போகிறோம்`` என்பது தான் உண்மை.

    ReplyDelete
  22. வருத்தம் அம்மா....
    என்ன பிரச்சினை என்றாலும் தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவெடுக்கும் செயல் கேவலமானது....

    ஆனாலும் மனைவியை கணவன் எரித்துக் கொல்வது என்பது... மனித மிருகங்கள்...

    எங்கள் ஊரில் இதுபோல் இருவர் திருமணம் செய்து போய் ஒரு வருடத்தில் கணவனால் அடித்துக் கொல்லப்பட்டார்கள்... அந்தக் கணவர்கள் இன்று இரண்டாம் திருமணம் செய்து சந்தோஷமாய்...

    தற்கொலை... எங்கள் இல்லத்தையும் ஆட்டிப்பார்த்தது....
    மறக்கமுடியாத நிகழ்வு அது...
    மாமாவையும் அத்தையும் மொத்த வாழ்க்கையையும் இழந்து நடைபிணமாக வாழ வைத்திருக்கிறது...

    எனக்கு தற்கொலை செய்து கொள்பவர்கள் மீது வெறுப்புத்தான் வருகிறது.

    ReplyDelete
  23. வேதனை தரும் தற்கொலைகள்.... என்ன சொல்வது. சரியான வழிகாட்டுகதல் இங்கே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  24. தற்கொலை என்பதே கோழைத்தனம் தான் இல்லையா. ஷண நொடியில் மனம் அதாவது மூளையின் வேதியியல் நிகழ்வு எதிர்மறைச் சிந்தனி அவர்களை அந்த ஒரு முடிவிற்குத் தள்ளிவிடுகிறது.

    உங்கள் பரிந்துரைகள் அனைத்தும் மிகச் சரியே அருமையான பதிவு

    ReplyDelete