Sunday, 20 December 2015

நலம் காக்கும் முத்திரைகள்!!!

எல்லோருக்குமே பெரும்பாலான உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றின் சமத்துவமின்மையால்  ஏற்படுகிறது. பஞ்ச பூதங்கள் சமநிலையில் இருப்பதற்குத் தியானம் மிகவும் அவசியம்.

நம் கையின் கட்டை விரல்  நெருப்பையும் சுட்டுவிரல்  காற்றையும் நடுவிரல்- ஆகாயத்தையும் மோதிர விரல்  நிலத்தையும் சுண்டு விரல்  நீரையும் குறிக்கின்றன. பல்வேறு முறைகளில் விரல்களை இணைப்பதன் மூலம் பல நோய்கள் குணமாகின்றன என்பது தான் முத்திரைகளின் சிறப்பு!

நம் உடல்நலக்குறைபாடுகளுக்கேற்ப அதற்குப் பொருத்தமான முத்திரைகளை நாம் தினந்தோறும் செய்து வந்தால் நம் உடல்நலக்குறைபாடுகள் படிப்படியாக சரியாகி விடும்.


இந்த முத்திரைகளை பொதுவாய் கிழக்கு நோக்கி அமர்ந்து செய்வது நல்லது. இரு கைகளிலும் செய்ய வேண்டியது அவசியம். டீவி பார்க்கும்போது, நடைப்பயிற்சி செய்யும்போது, யாருடனாவது பேசிக்கொன்டிருக்கும்போது கூட இந்த முத்திரைகளைச் செய்யலாம். இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும் எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

முத்திரைகள் செய்ய வயது வரம்பு கிடையாது. இதற்கு பக்க விளைவுகளும் கிடையாது. தின்மும் உடல் நலத்திற்காக எடுக்க வேன்டிய மாத்திரைகள், மருந்துகள் எப்போதும் போல உட்கொள்ளலாம். தினமும் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.  முதலில் 15 நிமிடங்கள் என்று ஆரம்பித்து பின் தினமும் 45 நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரைகளை செய்து அனைவரும் என்றும் நலமோடு வாழ பிரார்த்திக்கிறேன்!!

வலது கை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

பெண்கள் மலர், புத்தகங்கள் என்று இந்த முத்திரைகள் பற்றி நிறைய புத்தகங்களில் படித்திருக்கிறேன். சென்னையில் அக்குபிரஷர் வைத்தியம் பார்த்து வரும் பிரபல மருத்துவர் ஜெயலக்ஷ்மி எழுதிய முத்திரைகள் பற்றிய புத்தகமும் என்னிடம் உள்ளது. ஆனால் அவைகளை செய்து பார்க்க எனக்கு ஆர்வம் இதற்கு முன் வந்ததில்லை. இப்போது தான் இவைகளின் அருமையை அனுபவம் மூலம் உணர முடிந்தது.
  
சமீப காலமாக,  ஒரு மூன்று மாதங்களாக என் வலது கை மணிக்கட்டில் ஒரு பிரச்சினை இருந்து வந்தது. வேலைகள் செய்யும்போது வலது கையை  திடீரென்று திருப்பினாலோ அல்லது மடக்க நேர்ந்தாலோ ஷாக் அடிப்பது போல ஒரு வலி ஏற்பட்டுக்கொண்டிருந்தது.  வலி சற்று அதிகம் என்பதால் மூலிகை எண்ணெய் தடவுவதும் வேறு ஏதேனும் தைலம் தடவுவதுமாக சமாளித்துக்கொண்டிருந்தேன். ஊருக்குத்திரும்பிய பிறகு மருத்துவரிடம் உடனே சென்று கையைக்காண்பிக்க எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஒரு நாள் சர்க்கரை நோய் பற்றி தெரிந்து கொள்ள இந்தப்புத்தகத்தை எடுத்து படித்த போது சின் முத்திரையும் அபான முத்திரையும் செய்து வந்தால் சர்க்கரை நோயின் தாக்கம் மிகவும் குறைந்து விடும் என்று தெரிய வந்தது அதனால் தினமும் நடைப்பயிற்சி செய்யும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் இந்த முத்திரைகளை செய்து வந்தேன். 15 நாட்களுக்குப்பிறகு தான் திடீரென்று கவனித்தேன் என் கையில் அந்த ஷாக் அடிக்கும் வலி இல்லையென்பதை! கையை நன்றாக மடக்கி மடக்கிப் பார்த்தாலும் இப்போது அந்த வலி இல்லை. நான் வேறு எதற்கோ செய்யப்போய் இன்னொரு வலியும் குறைந்ததில் மனம் ஆச்சரியத்தில் மூழ்கியது. இந்த முத்திரைகள் பற்றி நிறைய பேருகுத் தெரிய வேண்டுமென்பதற்காகவே இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்!!

முத்திரைகளில் நிறைய வகைகள் இருக்கின்றன. இருப்பினும் சில முக்கிய முத்திரைகள் பற்றி மட்டுமே இங்கே எழுதுகிறேன்.

ஆகாய முத்திரை:




கட்டை விரல் நுனியுடன் நடுவிரல் நுனி சேர வேண்டும்.
ஒரு நாளைக்கு, ஒரு தடவைக்கு 4 நிமிடங்கள் என்று மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.  ஒரு நாளைக்கு இரு வேளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.  நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ செய்யக் கூடாது. ஆகாய முத்திரையை ஒரு கையில் மட்டும் செய்யக் கூடாது.

பலன்கள்:

காரணமின்றி ஏற்படும் விக்கல், கொட்டாவி விடுவதால் தாடையில் ஏற்படும் பிடிப்பு ஆகியவற்றை உடனடியாகச் சரிசெய்யும். இதயநோய்,  இதயப் படபடப்பு, முறையற்ற இதயத்துடிப்பு (Irregular heart beat), முறையற்ற ரத்த அழுத்தம்  ஆகியவை மட்டுப்படும்.

அபான முத்திரை:




நடு விரல், மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியுடன் பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்.

பலன்கள்:

வாயுத்தொல்லை, அஜீரணம், மூட்டு வலி சரியாகும். இது நீரிழிவிற்கு [ சர்க்கரை நோய்க்கு ] மிகவும் சிறந்த முத்திரை. சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும். மலச்சிக்கலை சரியாக்குகிறது.

மேலும் முத்திரைகள் தொடரும்.....!!

18 comments:

  1. வணக்கம்

    ஒவ்வொன்றையும் பற்றி அற்புத விளக்கம் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான அற்புதமான விளக்கம் மனோக்கா.

    ReplyDelete
  3. அறிந்திடாத தகவல்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
  4. இதில் சிலவற்றை எங்கள் யோகா மாஸ்டர் சில வருடங்களுக்குமுன் சொல்லிக் கொடுத்து, நானும் சிலகாலம் செய்தேன். என் சோம்பேறித்தனம், அப்புறம் நிறுத்தி விட்டேன்!!

    :)))

    ReplyDelete
  5. சகோதரி இதைத்தான் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள்-
    இது மனதில் பதிவாகிவிடும்
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  7. அருமையான பதிவு தோழி ! தக்க தருணத்தில் இந்தப் பதிவு இட்டுள்ளீர்கள். நிச்சயம் எனக்கு இது உதவும் என்பதில் மிக்க மகிழ்ச்சியே. இவற்றை செய்வதால் நாம் நிச்சயம் நலம் பெறலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மேலும் அறிய அவா தொடர்கிறேன். மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
  8. நலம் காக்கும் முத்திரைகள்
    நமக்கு நல்ல வழிகாட்டல்

    ReplyDelete
  9. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி ரூபன்!

    ReplyDelete
  10. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சாரதா!

    ReplyDelete
  11. கருத்துரைக்கு இனிய நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  12. வருகைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்! கற்ற‌வற்றை உடல்நலம் கருதி இனியாவது தொடருங்கள்!

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வேதா!

    ReplyDelete
  14. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  15. நிச்சயமாக இந்த முத்திரைகள் உங்களுக்கு நன்மை பயக்கும் இனியா! அவசியம் செய்ய ஆரம்பியுங்கள்!

    ReplyDelete
  16. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

    ReplyDelete
  17. நம்முடைய ஜபதபங்களில், முத்திரைகளை ஒரு அங்கமாகவே வைத்திருக்கின்றனர் நம் முன்னோர். மிக உபயோகமான பதிவு. இன்னமும் விரிவாக எழுதுங்கள் மேடம்!

    ReplyDelete
  18. நலம் காக்கும் முத்திரைகளை அழகாய் தொகுத்து அறியத் தந்தீர்கள் அம்மா...

    ReplyDelete