Tuesday, 25 August 2015

கண்ணின் மணியே!

ஒரு மாதத்திற்கு முன்னால் வலது கண்ணில் காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதைப்பற்றி தெளிவாக முடிந்த போது எழுதுமாறு சகோதரர் தமிழ் இளங்கோ எழுதியிருந்தார்கள். கண்ணில் தொடர்ந்து 45 நாட்கள் சொட்டு மருந்து போட வேண்டுமென்பதாலும் அறுவை சிகிச்சை நடந்த கண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக பார்வைத்திறன் அதிகரிப்பதாலும் பார்ப்பதிலும் எழுதுவதிலும் வித்தியாசங்கள் இருந்தன. அதனாலேயே அவ்வளவாக இணையத்திற்கு வர இயலாமல் இதுவரை இருந்து வந்தேன். ஒரு வழியாக சொட்டு மருந்து உபயோகம் இப்போது தான் முடிந்தது!

இனி கண் அறுவை சிகிச்சை பற்றி.....!

நம் எல்லோர் கண்களிலும் இயற்கையாகவே லென்ஸ் இருக்கிறது. அதன் வழியாக ஒளிக்கதிர், பின்னாலுள்ள விழித்திரையில் விழும்போது, நம்மால் பார்க்க முடிகிறது. இந்த லென்ஸ் வெளுத்துப்போய், வெளிச்சத்தைக் கண்ணுக்குள் புகாமல் தடுக்கும்போது, அதைக் கண்புரை அல்லது காடராக்ட் என்கிறோம். லென்ஸில் மாசு படிந்து ஒளி ஊடுருவும் தன்மை இழந்து பார்வை படிப்படியாக குறைகிறது. நீங்கள் மருத்துவரிடம் சென்றால் கூட அவர் இன்னும் நன்கு வளரட்டும் என்பார். கண் புரை ஏற்படும்போது படிப்பதிலும் எழுதுவதிலும் கொஞ்சம் கொஞ்சமாக சிரமங்கள் அதிகரிக்கும். அந்த சிரமங்கள்  கணினி எதிரே அமரும்போது நன்றாகவே தெரியும்.



கண் புரையை அகற்ற (அதாவது காடராக்டை குணப்படுத்த) அறுவை சிகிச்சை ஒன்றே தீர்மானமான வழி. பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இன்னும் மிகச்சரியான மருந்துகள் காடராக்ட் வராமல் தடுக்கவோ, குணப்படுத்தவோ கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார்கள்.செயற்கை லென்ஸைப் பொருத்தி, சிகிச்சை அளித்துப் நல்ல பார்வையைப் பெற முடிவது மட்டுமே சிறந்த வழி.
அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் வரச்சொல்லி கண்களின் அளவு, நம் பார்வைத்திறன் முதலியவற்றை பரிசோதிக்கிறார்கள். இந்த அளவுகள் நமக்கு சரியான பார்வைக்கான லென்ஸ் பொருத்த மருத்துவருக்கு உதவியாக இருக்கின்றன. கண்கள் ஸ்கான் செய்யப்படுவதுடன் கண்கள் கீழ் உள்ள சிறு பைகள், சிறு சிறு குழாய்கள் பரிசோதிக்கப்படுகின்றன. பின் இஸிஜி, இரத்தப்பரிசோதனைகள் செய்கிறார்கள்.

அறுவை சிகிச்சை செய்வதற்கு முதல் நாள் அட்மிட் ஆவது நல்லது. இரவு நல்ல தூக்கம் அவசியம் என்கிறார்கள். உள்ளூரில் உள்ள‌வர்கள் என்றால் விடியற்காலையில் அட்மிட் ஆகலாம். முதல் நாள் காலையிலிருந்தே மருத்துவர்கள் சொல்லும் சொட்டு மருந்துகளை போட்டு வர வேண்டும்.
அறுவை சிகிச்சை நடக்கும் முன் கண்ணின் கீழ் ஒரு ஊசி போடப்ப்படுகிறது. இது கண்னை சிறிது நேரம் உணர்வற்ற நிலையில் வைத்திருப்பதால் மருத்துவருக்கும் நோயாளிக்கும் அறுவை சிகிச்சை நடக்கும்போது எந்த‌ சங்கடமும் இருப்பதில்லை.

ஃபேகோ எமல்ஸிஃபிகேஷன் என்பது அல்ட்ரா சவுண்ட் முறையில்,  கண் பார்வையை மறைக்கும் புரை அல்லது படலத்தை, சிறு துவாரம் வழியாகக் கரைத்து விட்டு, அதே துவாரம் வழியாகவே லென்ஸைக் கண்ணுக்குள், தையல் இல்லாமல் பொருத்துவது தான்.இம்முறையில் கண்ணில் 5 மில்லி மீட்டர் அளவிற்கு சிறிய துவாரம் போடப்படுகிறது. அல்ட்ராசோனிக் அலைகள் (Ultrasonic waves) உதவியுடன் புரை லென்ஸ் சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, ஊசியின் உதவியுடன் வெளியே எடுக்கப்படுகிறது. பிறகு இதற்காகவே சிறப்பாக செய்யப்பட்ட ஐ.ஓ.எல் லென்ஸ் கண்ணில் பொருத்தப்படுகிறது. சிறிய துவாரத்தின் வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் தையல் போட வேண்டிய அவசியம் இல்லை. காயம் விரைவில் குணமாகிவிடும்.
 
சிறிய துவாரத்தின் வழியே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தையல் போடத் தேவையில்லை. கண்ணில் எரிச்சல் ஏற்படாது. நீர் வடியாது, தையல் பிரிக்கும் அவசியமும் ஏற்படாது. அதிக நாட்கள் ஓய்வு எடுக்கத் தேவையில்லை. விரைவில் பணிகளைச் செய்யமுடியும்.

ஒரு சில நோயாளிகளுக்குத் தெளிவான பார்வைக்கு கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்படலாம். சிகிச்சை முடிந்த அன்றே அல்லது நம் கண்களின் நிலைமையைப்பொறுத்து மறு நாள் வீடு திரும்பி விடலாம்.  அடிக்கடி பரிசோதனைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை மட்டும் மறு பரிசோதனைக்கு சென்றால் போதுமானது. ஒரு மாதத்திற்குப் பின் நிலையான பார்வையைப் பெறலாம். அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரம் கழித்து தொலைக்காட்சி பார்க்கலாம். புத்தகம் படிக்கலாம். 45 நாட்கள் வரை சொட்டு மருந்து போட்டு வர வேண்டும் என்பது தான் நாம் உபயோகிக்க வேன்டிய ஒரே மருந்து.

இது போலவே எனக்கும் நடந்தது, கண்கள் முழுமையான பார்வைத்திற‌னை அடைய ஒரு மாதம் பிடிக்கிறது.

கண்ணாடி அணிந்திருப்பவர்கள், அதுவும் மைனஸ் பவர் உள்ள‌வர்களுக்கு ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை முடிந்து முழுமையான பார்வைத்திறனை திரும்பப் பெற்றாலும் அறுவை சிகிச்சைக்கு ஆட்படாத இன்னொரு கண்ணில் பவர் வித்தியாசம் அதிகம் இருந்தால் பார்வை வித்தியாசப்படும். படிப்பதிலும் சற்று சிரமம் ஏற்படும். அதனால் அந்தக் கண்ணில் கொஞ்சமாக காடராக்ட் வளர்ந்திருந்தாலும் ஒரு மாதத்துலேயே அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. அப்போது தான் இரண்டு கண்களிலும் சமமான பார்வைத்திறன் கிடைக்கும். அப்போது தான் படிப்பதற்கு கண்னாடி போட வேன்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானம் செய்ய முடியும்.

இதில் முக்கியமான சில விஷயங்கள்:

1. இரத்தப்பரிசோதனைகள்  மற்றும் ஸ்கான்கள், கண் பரிசோதனைகள் செய்யும்போது, நீங்கள் சர்க்கரை நோய் உள்ள‌வராக இருந்தால், இந்த பரிசோதனைகள் செய்யும்போது உணவருந்தி இரண்டு மணி நேரம் ஆகியிருந்தால் உங்களுக்கு சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக் குறைய ஆரம்பிக்கும். அதற்கேற்ப, உங்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்பவரிடம் சொல்லி முதலில் சர்க்கரை நோய்க்கான இரத்தப்பரிசோதனையை செய்து விடுங்கள். அதன் பின் ஏதாவது சாப்பிட்டு விட்டு மற்ற பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். உங்களுக்கு சோர்வு ஏற்படாது.

2. இன்ஷூர் செய்து கொண்டவராக இருந்தால் அதற்கான க்ளைய்ம் செய்து கொள்ள‌லாம்.

3. சில கண் மருத்துமனைகளில் கண்ணை உணர்வற்ற‌ நிலைக்கு ஆட்படுத்தாமலேயே அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அது உங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். மருத்துவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். அதனால் உங்களுக்கு முதல் கட்டப்பரிசோதனைகள் செய்யும்போதே அறுவை சிகிச்சையின் போது கண்ணை உணர்வற்ற‌ நிலைக்கு ஆட்படுத்தித்தான் அறுவை சிகிச்சை நடக்குமா என்பதை கேட்டு நிச்சயப்ப‌டுத்திக்கொள்ளுங்கள். என் தோழி ஒருவருக்கு எந்த ஊசியும் போடாமலேயே அறுவை சிகிச்சை நடந்து அவர் பெரிய்தும் அவதிக்குள்ளானார்.

பட உதவி: கூகிள்

36 comments:

  1. கண் அறுவை சிகிச்சை பற்றி அருமையான பதிவு கொடுத்தீருக்கீங்க அக்கா. எல்லா விபரமும் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  2. நல்ல அருமையான உபயோகமான தகவல்கள்.சகோதரி.தங்களின் அனுபவ விவரணமும் அருமை...இப்போது தாங்கள் நலமா?

    ஆம் கண்ணை சில சமயம் உணர்வற்ற நிலைக்கு ஆட்படுத்தாமல் செய்கின்றார்கள் ...சில மருத்துவமனைகளில் சென்னையில் லேசர் சிகிச்சையில் அறுவை சிகிச்சை செய்வதாகச் சொல்லப்படுகின்றது.ஆனால் உறவினர்க்கு நீங்கள் சொன்ன முறையில்தான் நடந்தது....

    ReplyDelete
  3. படிக்க பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் மிகவும் உபயோகமான குறிப்புகள்.

    ReplyDelete
  4. நானும் எனது ஒரு கண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து
    லென்ஸ் பொருத்தியுள்ளேன்
    தாங்கள் பூரண நலன் பெற்றது அறிந்து மகிழ்கின்றேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  5. சிறப்பான விளக்கம்! எவ்வளவு செலவு ஆகின்றது கட்டண விபரங்களையும் தந்திருக்கலாம்!

    ReplyDelete

  6. பலருக்கும் பயனுள்ள தகவல்கள் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  7. கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாரதா!

    ReplyDelete
  8. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்! நான் இப்போது நலமே. ஆனாலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கண் தெளிவான பார்வையுடையதாகவும் பவர் மிக மிகக் குறைந்த பவராகவும் அறுவை சிகிச்சை செய்யப்படாத கண் இலேசாக காடராக்ட்டுடனும் பவர் மிக அதிகமான மைனஸ் அளவோடும் இருப்பதால் இப்போது அதற்கான கண்ணாடி அணிந்து வருகிறேன். டிவி பார்க்கவும் சில சமயம் படிக்கவும் மட்டுமே அதை உபயோகித்து வருகிறேன். ஆனால் கண்ணாடி அணியும்போதும் பின் அதை நீக்கும்போதும் பார்வை சற்று கனமாகவும் சற்று வித்தியாசமாயும் இருப்பதால் அடுத்த அறுவை சிகிச்சைக்கும் தயாரானேன். ஆனால் இன்ஷூரன்ஸ் நிர்வாகம் அடுத்த வருட ஆரம்பத்தில் தான் மறுபடி கிளெய்ம் செய்ய முடியும் என்று சொல்லி விட்டது. அதுவரை இப்படி சமாளிக்க வேண்டும்!

    என் கண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தது என் சகோதரி மகள். அவர் கண் அறுவை சிகிச்சை நிபுணர். அவரும் அந்த மருத்துவ மனையின் தலைமை சர்ஜனும் இணைந்து செய்தார்கள். அதனால் லேசர் என்ற பேச்சே எழவில்லை. எது நல்லதோ அதையே செய்யச் சொன்னேன். அவர்கள் மேற்கண்ட முறையில் தான் செய்தார்கள்.

    ReplyDelete
  9. பயப்படத் தேவையில்லை சகோதரர் ஸ்ரீராம்! அதிக வலியோ வேதனையோ இல்லை எனக்கு. ஊசி போடும்போது மட்டுமே வலி இருந்தது.

    ReplyDelete
  10. தங்கள் அக்கறைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்! நீங்களும் லென்ஸ் பொறுத்தியிருக்கிறீர்களா? நீங்கள் வயதில் மிகவும் சிறியவராயிற்றே? அதற்குள் பொறுத்தி விட்டீர்களா?

    ReplyDelete
  11. பாராட்டுக்கு அன்பு நன்றி சுரேஷ்! மொத்த செலவும் 25000 ரூபாய் ஆனது. நான் அன்று மாலையே வீட்டுக்கு வந்து விட்டதால் மேற்கொன்டு எந்த செலவுமில்லை. அதுவும் இன்ஷூர் பண்ணியிருந்ததால் வெறும் 8000 மட்டுமே ஆனது.

    ReplyDelete
  12. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  13. ஸ்ரீராம் சொன்னதுபோல் படிக்க கொஞ்சம் பயமாத்தான் இருக்குது மனோ மேடம்

    ஏன்னா எனக்கு வலது கண்ணின் ஓரத்தில் ஏதோ பிரச்சனை இருப்பது போல இருக்கு. இந்த வயதில் காடராக்ட் வருமா. ?

    படிக்கவோ எழுதவோ முடியாமல் போய்விடுமோ அப்புறம் எல்லாவற்றுக்கும் அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டுமோ என்ற பயமே அதிகம்.

    ReplyDelete
  14. காட்ராக்ட் வந்தால் அதனை நீக்க மேற்கொள்ளும்
    வைத்திய முறைகளையும் நல்ல ஆலோசனைகளையும்
    தந்தீர்கள் அக்கா!
    நீங்களும் தேறிவிட்டமை கண்டு மிக்க மகிழ்ச்சி!

    பயனுள்ள பதிவு! நன்றியுடன் வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
  15. கண் அறுவை சிகிச்சை பற்றி மிகவும் பயனுள்ள செய்திகள் ....

    ReplyDelete
  16. அருமையாக பயனுள்ள பகிர்வு. நான் இரண்டு கண்ணும் செய்து கொண்டேன்.

    இந்த வயதில் காடராக்ட் வருமா. ?//

    சிறு வயதிலும் வரும் காடராக்ட் தேனம்மை, என் கணவரின் சித்தப்பா மகளுக்கு 30 வயதில் காட்ராக்ட் அறுவை சிகிட்சை செய்யப்பட்டது, எனக்கு 50 வயதில். இப்போது ஒரு ஊசி போடும் மட்டும் தான் வலி உடனே வீட்டுக்கு போய் விடலாம். நித்தியகடன்களை எப்போதும் போல் செய்யலாம், மனோ அவர்கள் மிக தெளிவாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள்.

    ReplyDelete
  17. எல்லோருக்கும் பயன் தரக் கூடிய அருமையான பகிர்வு பகித்வுக்கு மிக்க நன்றி அம்மா !நீங்கள் மென் மேலும் நலம் பெற வேண்டும் .வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  18. கண் அறுவைச் சிகிச்சையைப் பற்றி விவரமாகப் பதிவு செய்திருக்கின்றீர்கள்..

    படிக்கும் போதே மனதை ஏதோ செய்கின்றது..

    நோய் நொடி இல்லாது வாழ வேண்டும் .. அதற்கு அபிராமவல்லி திருவருள் புரிய வேண்டும்..

    ReplyDelete
  19. கண்புரை (CATARACT) அறுவை சிகிச்சை பற்றிய உங்களது கட்டுரையை நேற்று இரவே படித்து விட்டேன். இன்று காலை மறுபடியும் இரண்டாவது முறையாக படித்து மனத்தில் இருத்திக் கொண்டேன். காரணம் எனக்கும் இடது கண்ணில் கண்புரை வந்துள்ளது. அதனால்தான் எனக்குள்ள சில பயத்தை, சந்தேகங்களை நீக்க வேண்டி, கண்புரை (CATARACT) அறுவை சிகிச்சை சம்பந்தமான உங்கள் அனுபவத்தை ஒரு பதிவாக எழுதச் சொன்னேன். எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் பயனுள்ள கட்டுரை. தங்கள் அனுபவ பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  20. ஆரம்பத்தில் சில வ‌ருடங்களுக்கு முன்னால் நானுமே கண்ணில் அறுவை சிகிச்சை என்பதால் பயந்து கொண்டிருந்தேன் தேனம்மை. அப்புறம் பார்த்தால் படிக்காதவர்கள், விபரம் தெரியாதவர்கள் கூட அனாயசமாக இதை பண்ணிக்கொண்டு ஒரு பயமுமில்லை என்ற போது எனக்கே வெட்கமாகி விட்டது. முக்கியமான விஷயம் நமக்கு நம்பிக்கையான, அக்கறையுள்ள மருத்துவர் கிடைக்க வேண்டும்.

    கண்ணில் பல பிரச்சினைகள் இருக்கின்றன‌. வலது கண் ஓரம் என்றால் வேறு ஏதாவது பிரச்சினையாகக்கூட இருக்கலாம்.தாமதப்படுத்தாமல் உடனே ஒரு கண் மருத்துவரை சென்று பாருங்கள் தேனம்மை!

    ReplyDelete
  21. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் மனம் நிறைந்த நன்றி இளமதி!

    ReplyDelete
  22. கருத்துரைக்கு அன்பு நன்றி அனுராதா!

    ReplyDelete
  23. நீண்ட கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  24. வருகைக்கும் என் மீதான அக்கறைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பார்ந்த நன்றி அம்பாளடியாள்!

    ReplyDelete
  25. கருத்துரைக்கு அன்பு நன்றி ஜனா!

    ReplyDelete
  26. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

    ReplyDelete
  27. நீண்ட கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

    ReplyDelete
  28. பாராட்டிற்கு அன்பு நன்றி யாழ்ப்பாவணன்! விரைவில் உங்கள் புதிய வலைப்பூவிற்கு வ‌ருகிறேன்!

    ReplyDelete
  29. முதலில் ஒருவேண்டுகோள், உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது கருத்து. கண்ணைப் பற்றி, பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றிய நல்லவொரு விழிப்புணர்வுப் பதிவு.

    ReplyDelete
  30. நல்ல பகிர்வு அம்மா...
    உடல் நலம் பூரண குணமடைந்தமைக்கு வாழ்த்துக்கள்...
    இருப்பினும் அதிக நேரம் கணிப்பொறி பார்க்காமல் உடல் நலம் பாருங்கள் அம்மா...

    ReplyDelete
  31. அருமையான பதிவு!
    என் தந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு சென்ற அனுபவம் உண்டு.

    ReplyDelete
  32. கண் அறுவை சிகிச்சை பற்றி பலருக்கும் பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள். தங்களுடைய இந்த விழிப்புணர்வுப் பதிவுக்கு மிகவும் நன்றி மேடம்.

    ReplyDelete
  33. தங்களின் அக்கறைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  34. என் மீதான அக்கறைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி குமார்!

    ReplyDelete
  35. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கீதமஞ்சரி!

    ReplyDelete
  36. பாராட்டிற்கு அன்பு நன்றி செந்தில்குமார்!

    ReplyDelete