Friday, 7 August 2015

எப்படி ஜெயிப்பது?

ஷார்ஜாவிலிருந்து தஞ்சை வந்து ஒரு மாதம் ஓடிப்போய் விட்டது. இந்த மாதம் முழுவதுமே அனுபவங்களுக்கு குறைவில்லை. அதுவும் மோசமான, மனதை பாதிக்கும் அனுபவங்கள் தான். வாழ்க்கை என்பதே திருப்பங்கள் நிறைந்த அனுபவங்கள் தான்! ஆனால் இந்த அனுபவங்கள்.....

வந்த சில நாட்களிலேயே என் கணவரின் சகோதரருக்கு இரவில் நெஞ்செரிச்சல் போலும் பிசைவது போலவும் உணர்வு ஏற்பட, விடியற்காலை மருத்துமனையில் சேர்த்தால் பரிசோதனைகளில் இதயத்திற்குச் செல்லும் இரத்தக்குழாய் ஒன்றில் முழுவதும் அடைப்பு என்றும் எந்த நேரம் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சொல்லிய நிலையில் உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் இரத்தக்குழாயில் 'ஸ்டெண்ட் ' வைத்து மருத்துவர்கள் சிகிச்சை செய்து முடித்தார்கள். முதல் நாளிரவு என் மகன் ஊருக்குக் கிளம்பியதால் வழியனுப்ப வந்திருந்தார் இவர். மறு நாள் விடியற்காலை ஊருக்குச் சென்றடைந்த விபரம் சொல்ல என் மகன் தொலைபேசியில் அழைத்தபோது என் கொழுந்தனாருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி முடிந்து விட்டது! வாழ்க்கையில் அவசரமான திருப்பங்கள் எத்தனை எத்தனை!

ஒருவாறாக அலைச்சல் முடிந்து என் கண்ணிற்கு அறுவை சிகிச்சை நடந்தது. வீட்டிற்கு வந்து சில நாட்களிலேயே மறுபடியும் தொலைபேசி அழைப்பு. இந்த முறை எங்கள் ஷார்ஜா உணவகத்தில் மானேஜராக வேலை செய்து கொண்டிருந்தவரின் மனைவி அதே மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடைய பிரச்சினை வினோதமானது. ஃபுட் பாய்ஸன் காரணமாக அவருடைய உனவுக்குழாயில் அங்கங்கே பொத்தல்கள் ஏற்பட்டு விட்டனவாம். அதன் கார‌ணமாய் உண்ணும் உண‌வு உண‌வுக்குழாயில் இறங்க முடியவில்லை. மேலும் ஏற்கனவே உண்ட உணவு கல்லீரலைப்பாதித்துக்கொண்டிருக்கிற‌து என்று மருத்துவர்கள் சொல்லி அந்த ஓட்டைகளை அடைத்தார்கள். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டாராம். ஆனால் மாதாமாதம் அவர் மருத்துமனை வந்து அந்த ஓட்டைகளை அடைத்துக்கொண்டு போக வேண்டுமாம். தற்போது செய்தது நிரந்தர அடைப்பு இல்லையாம்! தலையை சுற்றுகிறது அல்லவா?

அதற்கடுத்த சில நாட்களில் நெருங்கிய உறவினரின் மரணச் செய்தி! இவர் 15 வருடங்களுக்கு முன் நுரையீரல் பாதிப்பில் கடைசிக்கட்டத்தில் உயிர் பிழைத்தவர். அவருக்கு கடந்த ஒரு மாதமாகவே அவ்வப்போது சுரம் வந்திருக்கிறது. அதை சாதாரணமாகவே அவரும் அவரின் வீட்டினரும் நினைத்திருக்கிறார்கள். அது நிமோனியா வைரஸாக மாறி அவரின் நுரையீரலைத்தாக்கியபோது அவர் அபாய கட்டத்துக்கு வந்து விட்டார். கூடவே அவருக்கு சர்க்கரை இருந்திருக்கிறது. அதையும் உடற்பயிற்சி மூலம் சரியாக்கி விடலாம் என்ற நினைப்பில் அதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள‌வில்லை.  அது கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பாதித்து விடவே அவரால் பிழைக்க முடியாமல் போய் விட்டது. படித்தவர்களே இப்படி இருந்தால் என்ன செய்வது?

மறுபடியும் தொலைபேசி அழைப்பு. இது பெங்களூரிலிருந்து! அழைத்தது ஷார்ஜாவில் நெடுநாள் பழகிய‌ நண்பர். இப்போது தான் சில வருடங்களாக பெங்களூரில் இருக்கிறார்கள். அவர் மனைவி சர்க்கரை நோய்க்கு ஆளானவர். ஆனால் அதைக்கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாமல் போய் சிறுநீரகம் பழுதுற்று கஷ்டப்பட்டவர். அப்போதே ஒரு நாளைக்கு அரை லிட்டர் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சில வருடங்கள் முன்பு சொன்னபோதே அதை மறுத்துப்பேசி வந்தவர். இறுதியில் சிறுநீரக சுத்தகரிப்பு செய்யும்போதே [டயாலிஸிஸ்] இறந்து விட்டார். தொலைபேசியிலேயே அவருக்கு ஆறுதல் சொன்னோம்.

நாங்கள் கிளம்பும்போதே அங்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் உறவினர் ஒருவருக்கு MOTOR NEURON DECEASE எனப்படும் நோய் வந்திருந்தது. மூளையின் செல்கள் இறந்து, மேலும் செல்கள் வளர்ச்சி இல்லாமல் போவதே இந்தப் பிரச்சினை. இந்த நோய் வந்தவர்கள் பிழைத்தது இல்லை. இதற்கு காரணங்களும் கண்டுபிடிக்கவில்லை. உலகமெங்கும் இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றனவாம். இதை குண‌ப்படுத்த மருந்துமில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நோய் வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இளைத்து, சிறுத்து, பேச்சு நின்று கடைசியில் இறக்கிறார்கள். நாங்கள் கிளம்பி வரும்போதே மன அமைதியில்லாமல் மன பாரத்துடன் தான் வந்தோம். ஆனால் இது ஆரம்ப நிலையில் இருந்தால் இதற்கு சில நிவாரணங்கள் இருப்பதாக தற்போது சொல்லுகிறார்கள். தற்போது இவர் பெங்களூரில் இருக்கும் NIMHANS மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். நரம்பியல் கோளாறுகளுக்கான மிகச் சிறந்த மருத்துவ மனை இது. உடல் நிலையில் சில முன்னேற்றங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள். எப்படியாவது அவர் பிழைக்க வேண்டும்!

இப்போதெல்லாம் இயற்கை மனிதனுக்கு எவரும் வெல்ல முடியாத பல சோதனைகளை ஏற்படுத்தி வைக்கிறது. சோதனைகளை வெல்வதற்கு மன பலமும் நம்பிக்கையும்தான் முக்கிய தேவையாக இருக்கிறது. மனிதன் ஒவ்வொரு சோதனையையும் ஜெயிக்க ஜெயிக்க, இயற்கை இன்னொரு புது விதமான சோதனையைக் கொண்டு வருகிறது. எப்படி ஜெயிப்பது?

மருத்துவர்கள், பத்திரிகைகள் அனைத்தும் பரிந்துரைப்பது சரியான உணவுப்பழக்கங்களும் நோய்களைப்பற்றிய விழிப்புணர்வும் மட்டுமே!

 

29 comments:

  1. உண்மைதான் சகோதரியாரே
    சரியான உணவுப் பழக்கங்களும்
    விழிப்புணர்வுமே
    நம்மை என்றும் காப்பாற்றும்

    ReplyDelete
  2. போராட்டமே வாழ்க்கை... ம்...

    ReplyDelete
  3. சோதனைகளை வெல்வதற்கு மன பலமும் நம்பிக்கையும்தான் முக்கிய தேவையாக இருக்கிறது.//

    உண்மை.
    பெங்ஜளூரில் மருத்துவமனையில் இருக்கும் நண்பர் உடல் நலம் பெற்று திரும்ப பிராத்தனைகள்.

    ReplyDelete
  4. உடலின் உபாதைகளுக்குப் பெரும்பாலான காரணம் நாம் உண்டாக்கிக்கொள்வதே. முடிந்தவரை எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உணவு முறை, உணவின் தன்மை என்ற நிலையில் தற்போதுள்ள சூழலும் நம்மை அந்நிலைக்கு இட்டுச்சென்றுவிடுகின்றன.

    ReplyDelete
  5. அவர்கள் குணமடைவது ஒருபக்கம். இதுபோன்ற செய்திகள் நம் மனவுறுதியைக் குலைத்துவிடாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்.

    நண்பர் சீக்கிரம் பூரண குணமடைய எங்கள் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  6. நம் உடலைக்கவனிக்காமல் நாகரீக வாழ்க்கை வாழ்வதன் விளைவு...மருத்துவமனைகளின் வளர்ச்சி....

    ReplyDelete
  7. உடல் நலம் பேணுவோம்.....

    தொடர்ந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

    ReplyDelete
  8. வணக்கம்

    நம்மை நாமே கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்
    வாழ்க்கை என்பது போராட்டாம்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  9. ஐயா வணக்கம்!

    இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html

    ReplyDelete
  10. நீங்கள் நலமா அக்கா?..

    மனதை உலுக்கும் செய்திகள் அனைத்துமே!

    விபத்தினால் இப்படியாகி போராடும் வாழ்க்கையைக் கண்டதால்
    உங்கள் பதிவின் இறுதித் தகவலான மூளையின் செல்கள் இறந்து,
    மேலும் செல்கள் வளர்ச்சி இல்லாமல் போகும் நோய் தரும்
    முடிவு எனக்குள்ளும் மிகுந்த வேதனை தந்தது.
    சில நோய்களை நாமே விழிப்புணர்வோடு வராது தவிர்த்திடலாம்.
    விதி வசமானவைகளை........

    ReplyDelete
  11. வணக்கம்,
    அலட்சியம் அன்றி இருத்தல் நல்லது,
    தங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் துன்பங்கள்! அதை வென்று வருவதே வாழ்க்கை என்றாகிவிட்டது!

    ReplyDelete
  13. இப்போதெல்லாம் இயற்கை மனிதனுக்கு எவரும் வெல்ல முடியாத பல சோதனைகளை ஏற்படுத்தி வைக்கிறது. சோதனைகளை வெல்வதற்கு மன பலமும் நம்பிக்கையும்தான் முக்கிய தேவையாக இருக்கிறது. மனிதன் ஒவ்வொரு சோதனையையும் ஜெயிக்க ஜெயிக்க, இயற்கை இன்னொரு புது விதமான சோதனையைக் கொண்டு வருகிறது.//

    ஆம் சகோதரி.

    ReplyDelete
  14. விழிப்புணர்வும் சரியான உணவுப் பழக்கங்களுமே நம்மைக் காக்கும் அம்மா...
    எத்தனை விதமான நோய்கள்...

    ReplyDelete
  15. சகோதரி என்ன ஒரு வருத்தம் தோய்ந்த நாட்கள் இல்லையா?! எந்த நிமிடம் எது நடக்கும் என்று அறியாத அறிய முடியாத நிலையில் பல கேட்டிராத நோய்கள், உடல் நலக் குறைவுகள்..வாழ்க்கை மிகவும் ரகசியப் பெட்டியாக மாறிவிட்டது...
    //ஃபுட் பாய்ஸன் காரணமாக அவருடைய உனவுக்குழாயில் அங்கங்கே பொத்தல்கள் ஏற்பட்டு விட்டனவாம். அதன் கார‌ணமாய் உண்ணும் உண‌வு உண‌வுக்குழாயில் இறங்க முடியவில்லை. மேலும் ஏற்கனவே உண்ட உணவு கல்லீரலைப்பாதித்துக்கொண்டிருக்கிற‌து என்று மருத்துவர்கள் சொல்லி அந்த ஓட்டைகளை அடைத்தார்கள். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டாராம். ஆனால் மாதாமாதம் அவர் மருத்துமனை வந்து அந்த ஓட்டைகளை அடைத்துக்கொண்டு போக வேண்டுமாம். தற்போது செய்தது நிரந்தர அடைப்பு இல்லையாம்! தலையை சுற்றுகிறது அல்லவா?// ரொம்பவே தலையைச் சுற்றுகின்றது சகோதரி....என்ன ஒரு வேதனை இல்லையா...வண்டியை சர்வீஸுக்குக் கொடுப்பது போல் நமது உடல் உறுப்புகளையும் நாம் சர்வீஸ் செய்து கொண்டே இருக்க வேண்டும்தான் போல் உள்ளது...
    (கீதா: மோட்டார் ந்யூரான் டிசிஸ்...இது ஏஎல்எஸ் என்றும் சொல்லப்பட்டது. எனது தாய் மாமாவிற்கு இதுதான் வந்தது. பொதுவாக இது கண்டுப்பிடிக்கப்பட்ட 5, 6 வருடங்களுக்குள் மரணம் வந்துவிடும். எனது மாமாவிற்கும் 12 வருடங்களுக்கு முன்பு வந்து அப்போது அத்தனை விழிப்புணர்வு இல்லையாதலால்...அமெரிக்காவில் அதைக் கண்டு பிடித்த போதே பகுதி கடந்து நிலை என்பதால்....3 வருடங்களுக்குள் மரணம் தழுவி விட்டது. அதனை நான் நேரில் அவருக்குப் பணிவிடை செய்ததால் கண்கூடாகப் பார்த்த அனுபவம் உண்டு. அதை ஒரு பதிவாக எழுதலாம் என்றிருக்கின்றேன்...பார்ப்போம்...இறுதியில் உடல் சூம்பிம் உணவு எடுத்துக் கொள்ள முடியாமல், இடுப்புப் பகுதியில் துளை இட்டு குழாய் சொருகி அதன் வழியாக திரவ உணவு செலுத்தப்பட்டு. அதுவும் தடைபட்டு ஒரு நாள் மரணம் தழுவி விட்டது...தங்களது நண்பர் இருக்கும் வரையேனும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்....)

    ReplyDelete
  16. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  17. கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  18. பிரார்த்தனைகளுக்கு அன்பு நன்றி கோமதி!

    ReplyDelete
  19. //உடலின் உபாதைகளுக்குப் பெரும்பாலான காரணம் நாம் உண்டாக்கிக்கொள்வதே//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோதரர் ஜம்புலிங்கம்! கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  20. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  21. ங்கள் சொல்வது போல இந்த மாதிரி செய்திகள் நம் மனதை பாதிக்காமல் நாம் தான் சரி பார்த்துக்கொள்ள வேன்டும் சகோதரர் ஸ்ரீராம்! கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  22. கருத்துரைக்கு இனிய நன்றி கீதா!

    ReplyDelete
  23. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ரூபன்!

    ReplyDelete
  24. நான் நலம் தான் இளமதி! இடது கண்ணில் அறுவை சிகிச்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றேன்.

    உண்மைதான்! விதிவசமானவைகளை தவிர்க்க இயலாது! ஆனால் விழிப்புணர்வுடன் இருந்தால் நிறைய பிரச்சினைகளை நாம் சரி செய்து விட முடியும்! கருத்துரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  25. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி மஹேஸ்வரி!

    ReplyDelete
  26. கருத்துரைக்கு இனிய நன்றி தளிர் சுரேஷ்!

    ReplyDelete
  27. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி நிலாமகள்!

    ReplyDelete
  28. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி குமார்!

    ReplyDelete
  29. நிச்சயமாய் சென்ற மாதம் முழுவதும் நீங்கள் சொன்ன மாதிரி வருத்தம் தோய்ந்த நாட்களாகி விட்டன! தினசரி ஏதேனும் புதிய வியாதி வந்து மனிதர்களை அள்ளிக்கொன்டு போகிறது. இதில் வேதனைக்குரிய விஷயமே பாதி மரணங்கள் படித்திருந்தும் அலட்சியம் செய்வதால் நிகழ்கிறது! கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்!

    கீதா! உங்கள் தாய்மாமாவிற்கு நிகழ்ந்த சோகம் அறிய மனது கனமானது. இது தான் என் உறவினருக்கும் நடக்கப்போகிறது. உங்களின் அன்பான பிரார்த்தனைக்கு இனிய நன்றி!

    ReplyDelete