Tuesday, 2 December 2014

உதவி எனப்படுவது யாதெனில்...

பழைய புத்தகத்தொகுப்பொன்றைப் புரட்டிக்கொன்டிருந்தபோது, அவற்றில் ஒன்றில் ஒரு சினேகிதி சின்னச்சின்ன உதவிகள் பிறருக்குச்செய்வதைப்பற்றி எழுதியிருந்தார். உண்மையிலேயே அந்த கட்டுரையைப்படித்த போது மனசிற்கு இதமாக இருந்தது! என் மனதில் பதிந்தவைகளில் சிலவும் என் மன உனர்வுகளும் கலந்து இங்கே...!



ஒருத்தருக்கு உதவி செய்வதென்பது எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பது தான்! ஆனால் அது எப்படிப்பட்ட உதவி, எந்த நபருக்குச் செய்கிறோம் என்பதைப்பொருத்து அதன் பரிமாணம் விரிந்து கொண்டே போகிறது. சிலர் தன் உறவு வட்டங்களுக்கிடையே மட்டுமே உதவி என்பதைச் செய்கிறார்கள். இதுவே வேற்று மனிதர் என்றாகிற போது மனசிலிருக்கும் கருணை ஊற்று வரண்டு விடுகிறது. சாலையில் அடிபட்டு விழுந்து கிடக்கும் மனிதர், மனநிலை பிறழ்ந்தவர், நிராதரவாய் அலைந்து திரிந்து கொன்டிருக்கும் மனிதர்கள் என்று இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரியவர்களுக்கு உதவுவதற்கு மிகப்பெரிய கருணை மனம் வேண்டும்.

சின்னச் சின்ன உந்துதல்கள் தான் கருணை என்னும் படிகள் ஏற வழி செய்யும். நாளெல்லாம் வீட்டு வேலைகள் செய்யும் அம்மா, துணி காயவைக்கும் போது, நான் செய்கிறேனே என்று ஒரு கை கொடுக்கலாம். அப்பா வேலைக்குப் போகுமுன் வாகனத்தைத் துடைக்க முற்படும்போது 'அப்பா நான் துடைக்கிறேனே" என்று முன் வரலாம். காய்கறிக்காரியின் கூடையை இற‌க்கி வைக்க ஒரு கை கொடுக்கலாம். நமக்காக வேலை செய்து அச‌ந்து போகிறவர்களிடம் ஒரு விரிந்த புன்சிரிப்பு, ஒரு தம்ளர் மோர் கொடுக்கலாம். சாலையோரம் வழி கேட்பவர்களிடம் சுருக்கமான அசட்டையான பதில் தராமல் விரிவாய் புன்னகையுடன் வழி சொல்லலாம். இப்படி சின்னச் சின்ன உதவிகளை பிறருக்கு வாழ்க்கையின் வழி நெடுக செய்து கொண்டே போகலாம்.



ஒரு பழைய அனுபவம் நினைவுக்கு வருகிறது. பல வருடங்கள் முன்பு நடந்தது இது. வாசலின் முன் இருந்த சிறு கால்வாய் ஓரம் யாரோ ஒருவர் வலிப்பு வந்து துடித்துக்கொன்டிருந்தார். சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொன்டிருந்தவர்கள், அந்த வழியே நகர்ந்து கொண்டிருந்தவர்கள் என்று பலர் இருந்தார்கள். நான் என் சகோதரி மகனை அழைத்து அவரை ஓரமாக நகர்த்தி உட்கார வைத்து, ஒரு இரும்புக்கம்பியை கையில் கொடுத்து பிடித்துக்கொள்ள‌ச் சொன்னேன். சிறிது நேரத்தில் வலிப்பு நின்று நுரை தள்ளுவதும் நின்றது. ராமநாதபுரத்திலிருந்து வேலை தேடி வந்ததாயும் வந்த இடத்தில் கையில் காசில்லாமல் உண்ணுவதற்கு வழியில்லாமல் அலைந்ததால் தன் வலிப்பு நோய் மீன்டும் வந்து தாக்கி விட்டதாயும் சொன்ன அவரை வீட்டினுள் அழைத்து பின்பக்கமாய் சென்று குளிக்கச் சொன்னோம். மறைந்த என் சகோதரி கணவரின் உடைகள் தந்து அணிந்து கொள்ள‌ச் சொன்னோம். வயிறார சாப்பாடு போட்டு, திரும்ப ஊருக்குச் செல்ல கையில் பணமும் கொடுத்தோம். கை கூப்பிய அவரின் கலங்கிய கண்களில் தெரிந்த நன்றியை என்னால் 25 வருடங்களுக்குப்பின்பும் மறக்க முடியவில்லை.

தக்க சமயத்தில் ஒருத்தருக்கு வலியப்போய் உதவி செய்யும்போது அந்த நபருக்கு அது எத்தனை ஆறுதலாக இருக்கும் என்பது அனுபவத்தில் உணரும்போது மட்டுமே தெரியும். 'தெய்வம் மாதிரி வந்து உதவினீர்கள்' என்று அவர்கள் வாய் நிறைய வாழ்த்தும்போது ஆத்ம திருப்தி என்பது என்னவென்று உங்களுக்கு புரியும்.



ஒரு ஆங்கில பத்திரிக்கையில் ஒருவர்  தினமும் யாரைப்பார்த்தாலும் Good day என்று சொல்வதையும், யாரிடம் பேசினாலும் 'உங்களிடம் பேசியது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது' என்று சொல்வதையும் பிடிவாதமான வழக்கமாக வைத்துக்கொன்டிருந்தாராம். இந்த மாதிரி சொல்வது மனிதர்களுக்கு எத்தனை இதமளிக்கும் என்பது உங்களுக்கு புரிந்தால் சங்கிலி போல என்னைத் தொட்ருங்கள் என்று எழுதியிருந்தாராம்.

இந்த வார்த்தைகள் எத்தனை சத்தியாமானது என்பதை மனதளவில் உணர்ந்திருந்தாலும் வாழ்க்கையில் இதைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அனுபவத்தில் இந்த சந்தோஷம் நமக்கு கிடைக்கும் போது அது எத்தனை ஆத்ம திருப்தி கொடுக்கும் என்பதை வாழ்க்கையில் பல சமயங்களில் உண்ர்ந்திருக்கிறேன்.
சென்ற மாதம் துபாயில் ஒரு ஒரு பெரிய வணிக வளாகத்தை சுற்றிப்பார்த்து விட்டு லிஃப்ட்டிற்காகக் காத்து நின்றோம் நானும் என் கணவரும். முதல் நாள் தான் எங்களின் நாற்பதாவது திருமண நாளை சிறப்பாக எங்களின் மகனும் மருமகளும் பேரனும் கொன்டாடியிருந்தார்கள். அருகில் வந்து நின்ற ஒரு வட இந்திய பெண்மணியின் ஆறடிக்கு மேலான உயரத்தையும் அசாத்தியமான பருமனையும் பார்த்துக்கொண்டே லிஃப்ட் உள்ளே நுழைந்தேன். உடனேயே அந்தப் பெண் என்னிடம் ' உங்களுக்குத் திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகின்றன?' என்று கேட்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாகிப்போய் விட்டது. ' ஏன் கேட்கிறீர்கள்? நேற்று தான் எங்களின் நாற்பதாவது திருமண நாளைக்கொண்டாடினோம்' என்றேன். அதற்கு அந்தப்பெண் ' உங்கள் இருவரையும் பார்க்கப் பார்க்க Made for each other என்று தோன்றியது. அதனால் தான் கேட்டேன். உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!!' என்று சொல்லி முடிக்கும்போது லிஃப்ட் தரைத்தளத்தில் வந்து நிற்க, புன்னகையுடன் அந்தப்பெண் வெளியே சென்று விட்டது. நான் ஒரு நிமிடம் அசந்து போனேன். வெளி நாட்டினர் இலட்சக்கணக்காக சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில், யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண் திடீரென்று தோன்றி நல்ல வார்த்தைகளும் வாழ்த்தும் சொன்னது அதிகமான இதத்தையும் மகிழ்ச்சியையும் மனதில் நிறைய வைத்தது. ஒரு நல்ல வாக்கிற்கு எத்தனை வலிமை இருக்கிறது!!

இது போல நாம் ஒருவருக்கு அவர் எதிர்பாராத போது உதவுகையில், நல்ல வாத்தைகள் சொல்கையில் மனித சமுதாயத்தின்மீது அவருக்கு ஒரு அசாத்திய பிடிப்பும் நம்பிக்கையும் நேசமும் அவரைத் தொற்றிக்கொள்ளும். இது சங்கிலித்தொடராக மாறும். இக்கட்டு, அவசர உதவி என்றில்லை, நம் வீட்டிலேயே சின்னச் சின்ன உதவிகளை நம் உற்றவர்களுக்கு செய்து பாருங்கள், அது தொற்று வியாதி போல உங்களைப்பிடித்துக்கொள்ள்ளும்.



அடிப்படையில் நாம் எல்லோரும் நல்லெண்ணம் கொண்டவர்கள் தான். ஆனால் யோசித்து, கணக்கு பார்த்து செயல்படத் துவங்கும்போது கெட்ட எண்ணங்கள் ஒரேயடியாக அமுக்கி விடுகின்றன. இது மாதிரி உந்துதல்கள் மட்டும் தான் நல்லெண்ணங்களை தூக்கி விடுகின்றன.

ஒருவரைப்பார்த்து சிரிப்பதைக்கூட இப்போது ஒரு பெரிய உதவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மனதையும் முகத்தையும் கல்லாக வைத்திருந்தால் தான் மதிப்பு என்று பலர் நினைக்கிறோம். எங்கே சிரித்துப் பேசினால் உதவி கோரி வந்து விடுவார்களோ என்ற பயம் வேறு! பக்க்த்து வீட்டின் கதவு திறந்தால் நம் வீட்டின் கதவு அடைத்து விடுகிறது.

ரொம்ப ரொம்ப சின்ன உதவிகளை அவசரத்திற்கு செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு அதன் பின் அதுவே பழக்கமாகி விடும். அதன் பின் எத்தனை நண்பர்கள் உங்களுக்குக் கிடைக்கிறார்கள் என்று பாருங்கள்! பிரமித்துப்போவீர்கள்!! உதவும் மனப்பான்மை நம்மில் வளர வித்திடுங்கள்!!

படங்கள் உதவி: கூகிள்

29 comments:

  1. சிறிய உதவி - மிகப் பெரிய திருப்தி...! இதை விட என்ன வேண்டும்...?

    ReplyDelete
  2. பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும். அந்த நல்ல மனம் உங்களிடம் இருக்கிறது. நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம்.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு!
    நன்றிங்க அம்மா.!

    ReplyDelete
  4. வணக்கம் மனோ அக்கா!

    ஓடியுடன் செய்யும் உதவியொன்றே போதுமே
    நாடிவரும் நம்மை நலம்!

    அருமையன பதிவு அக்கா! எத்தனை உண்மை!..
    மிக்க நன்றி!

    எங்களில் எத்தனை பேருக்கு இத்தகைய மனநிலை இருக்கின்றது என எம்மை நாமே சுயபரிசோதனை செய்திட வேண்டும்!..

    குறள் 102:

    காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது!

    என்று வள்ளுவப்பெருந்தகை கூறியது போல சிறியதோ பெரியதோ உடன் உதவி உயர்வானது! - உயிரையே காக்க வல்லது!

    அந்தகைய உடன் உதவியாற்தான் (என் வாழ்விலும் ஒரு உயிர் காக்கப்பட்டு) இன்னும் வாழ்கின்றேன் நான்!..

    அக்கா!..
    என்று நடந்ததோ உங்கள் நாற்பதாவது திருமண நாள் நினைவுச் சிறப்பு!.. இருப்பினும் உங்களுக்கு என் உளமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்!

    நலம் பல பெருகி வளமோடு வாழ்க!!!

    ReplyDelete
  5. கணக்கு பார்த்து உதவிகள் செய்யும் போது தான் கெட்ட எண்ணங்கள் சூழ்கின்றன... உண்மை தான்.

    சின்ன சின்ன உதவிகள் மனதிற்கு இதம் தரும். அர்த்தமுள்ள பகிர்வு.

    ReplyDelete
  6. நமது கவலைகள், பிரச்னைகள் மனதை அழுத்த சக மனிதர்களிடம் புன்னகைக்கக் கூட மறந்து விடுகிறோம்தான்.

    ReplyDelete
  7. உதவி செய்தால் மன நிம்மதி கிடைக்கும்... திருப்தி இருக்கும்...
    நல்ல பகிர்வு அம்மா....

    ReplyDelete
  8. சிறப்பான சிந்தனைகள்! நன்றி!

    ReplyDelete
  9. காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது

    ReplyDelete
  10. நல்ல பகிர்வும்மா...

    நல்லதையே நினைப்போம்... நல்லதையே செய்வோம்....

    ReplyDelete
  11. அம்மா.உங்கள் நல்ல எண்ணம் உங்கள் பதிவிலும் தெரிகிறது.இது போன்ற விஷயங்களை சொல்ல இப்போது யார் தான் இருக்கிறார்கள்?மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

    ReplyDelete
  12. அற்புதமான பதிவு
    பிறருக்கு சிறிய உதவிகள் செய்வதன் மூலம்
    பெரிய அளவில் நாம் தான் பயனடைகிறோம்
    சொல்லிச் சென்ற விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. தங்கள் எழுத்தை அனுபவித்தேன். முற்றிலும் நிஜம்.

    ReplyDelete
  14. நிச்சயம் நம்மால் ஆன உதவிகளை பிறருக்குச் செய்வோம் சகோதரர் தமிழ் இளங்கொ! வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி!!

    ReplyDelete
  15. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சீனி!

    ReplyDelete
  16. இனிய வாழ்த்துக்கள் எனக்கு பெருமகிழ்ச்சியைத்தந்தது இளமதி! மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றைக்கும் மன நிறைவைத்தரும்!வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  17. அழகிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  18. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  19. இனிய குறள் மூலம் கருத்துரை சொன்னதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  20. பல நல்லவற்றை எழுதி கருத்துரை சொன்னதற்கு அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  21. ரொம்பவும் எளிமையாக ஆனால் அருமையாக பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள் அனிதா சிவா! வருகைக்கும் சேர்த்து என் இதயப்பூர்வமான நன்றி!!

    ReplyDelete
  22. மிக அருமையான பாராட்டு உங்களிடமிருந்து கிடைத்திருப்பது மன நிறைவைத்தருகிறது சகோதரர் ரமணி! வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் என் அன்பார்ந்த நன்றி!!

    ReplyDelete
  23. அழகிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி உமையாள் காயத்ரி!

    ReplyDelete

  24. உங்கள் முதல்(?) வருகையும் பாராட்டும் என்னை இங்கு கொண்டு வந்தது. எழுதியதுபோல் செய்கிறீர்கள். ஒரு உண்மையான பாராட்டு மகிழ்ச்சி தருகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. ஒரு கருத்திட்டேனே. காணாமல் போய் விட்டதா.?

    ReplyDelete
  26. என் பதிவில் பின்னூட்டம் கண்டு வந்தேன். இரு பின்னூட்டங்கள் எழுதினேன் பிறகே வேர்ட் வெரிஃபிகேஷன் காரணமாகக் காணாமல் போயிற்றோ என்று தோன்றுகிறது இப்போது போகிறதா பார்க்க வேண்டும்

    ReplyDelete
  27. உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் G.M.B!

    ReplyDelete
  28. முகம் பார்க்கும் கண்ணாடியை அவ்வப்போது துடைப்பது போல நம் மனித நேயத்தை இது போன்ற எண்ணமும் எழுத்தும் பளிச்சிட வைக்கின்றன.

    ReplyDelete
  29. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete