Sunday, 30 June 2013

வலி!!!-பகுதி-2.

பகுதி-2.

மருத்துவர்கள் எப்போதும் சொல்லும் ‘ அளவான தூக்கம், அளவான உணவு, அளவான ஓய்வு’ எப்போதுமே எல்லா வயதினருக்கும் இன்றிமையாத ஒரு தெய்வ வாக்கு என்பதை உணர வேண்டும். இது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இன்றைய இளைய தலைமுறைக்குக்கூட மிகத் தேவையான ஒன்று! இன்றைக்கு முப்பது வயதிலேயே ஸ்ட்ரோக் வருகிறது, இதயத்தாக்குதல் வருகிறது. ஆனால் இந்த விதிகளைக் கடைபிடிப்பவர்களுக்குக்கூட, எங்கிருந்து வருகிறது என்று சொல்ல முடியாமல் பிரச்சினைகள் வருகிறன. நடைப்பயிற்சி, அளவான உணவு, நல்ல பழக்க வழக்கங்கள், நிறைய உழைப்பு என்று தினமும் நூல்பிடித்தாற்போல நாட்களைக் கழித்து வரும் என் கணவருக்கும் பிரச்சினைகள் வந்தன!

பொதுவாய் நம் ஜீரண மண்டலத்தில் கல்லீரல், பித்தப்பை, பித்தக்குழாய் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. கல்லீரல் மிக முக்கியமான சில அமிலங்களை சுரக்கின்றது. இவை கொழுப்புப்பொருள்களை ஜீரணம் செய்ய உதவுகின்றன. இவை பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மையால் நீர்த்துப்போய் பித்தக்குழாய் வழியே சிறு குடலுக்குச் சென்று அங்கே உணவை ஜீரணிப்பதில் உதவுகின்றன. பித்தப்பை சுருங்கி விரியும் தன்மை குறையும்போது அங்கு வரும் ‘ BILE’ என்ற அமிலம் தேங்கி கற்களாக மாறி விடுகின்றன. வலது வயிற்றுப்பக்கம் தீவிர அல்லது மிதமான வயிற்று வலி வரும்போது மருத்துவர்கள் லாப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை நீக்கி விடுகின்றனர். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் பித்தப்பையில் கல் எடுத்தேனென்று சொன்னபோதெல்லாம் அறுவை சிகிச்சை மூலம் கற்களை எடுத்து விடுகிறார்கள் என்று தான் நினைத்துக்கொண்டேன். அதைப்பற்றி மேலும் அறிய ஆர்வம் இருந்ததில்லை.
அப்படித்தான் சிகிச்சை பெற்றவர்களும்கூட நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது சொந்த அனுபவம் கிடைக்கும்போது தான் புரிந்தது.

உண்மையிலேயே பித்தப்பையில் கற்கள் உருவானால் பித்தப்பையையே அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடுகிறார்கள். ஒரு முறை கற்களை நீக்கினாலும் அதன் பின்னும் கற்கள் உருவாகும் என்பதாலும் பித்தப்பையை எடுத்து விட்டாலும் அதனால் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதாலும் தான் பித்தப்பையை நீக்குகிறார்கள். சில சமயங்களில் நோயின் தீவிரத்தைப்பொறுத்து அறுவை சிகிச்சை [ open surgery] மூலம் பித்தப்பையை எடுக்கின்றார்கள். சில சமயங்களில் பித்தக்குழாயிலும் கற்கள் உருவாகுகின்றன. இவற்றை நீக்க, ERCP SURGERY செய்யப்படுகிறது. எண்டோஸ்கோப்பி என்பது போன்ற கருவியை மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளியின் வாய் வழியே உள்ளே செலுத்துகிறார்கள். அதன் நுனியில் இருக்கும் பல்ப் உள்ளே உள்ள நோய்க்குறைபாடுகளை வீடியோ எடுக்க உதவுகிறது. அதனூடே செலுத்தப்படும் DYE எல்லா உறுப்புகளினூடேயும் செல்ல, வெளியே மானிட்டரில் மருத்துவர் எங்கே பிரச்சினை என்று கணித்து சிகிச்சை அளிக்கிறார். பித்தக்குழாய், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற உறுப்புகளில் ஏற்படும் நோய்களை சிகிச்சை செய்ய இந்த ERCP SURGERY மிகவும் பயன்படுகிறது. பித்தக்குழாயில் கற்கள் இருந்தால் உள்ளே பலூன் போன்ற உபகரணத்தை அனுப்பி கற்களை எடுத்து, பின் BILE’ என்ற அமிலம் தடையின்றி ஓடவும் மேற்கொண்டு கற்கள் உருவாகி பித்தப்பையில் விழாமலிருக்கவும் கிட்டத்தட்ட 5 செ.மீ அளவுள்ள பிளாஸ்டிக் அடைப்பு ஒன்றை [ STENT] பொருத்துகிறார்கள். ஒரு மாதம் கழித்து மருத்துவர்கள் அதை அகற்றுகிறார்கள்.



பித்தப்பையிலோ, பித்தக்குழாயிலோ கற்கள் உருவானாலோ, அல்லது அடைப்பு ஏற்பட்டு பித்த நீர் தேங்கினாலோ மஞ்சள் காமாலை உண்டாகிறது. இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் HEPATITIS A, HEPATITIS B அல்ல. மருத்துவ உலகில் இவை இரண்டையும் MEDICAL JAUNDICE என்று கூறுகிறார்கள். ஏனெனில் மருந்துகளால் மட்டுமே இவற்றை குணமாக்க முடியும். OBSTRUCTIVE JAUNDICE என்பது பித்த நீர் சரளமாக குழாய்களில் ஓட முடியாது பித்தக்குழாயில் தேங்கும்போது உண்டாவது. INFECTION, INFLAMMATION, அல்லது எதன் காரணமாக பித்த நீர் தேங்குகிறது அல்லது பித்தக்குழாய் குறுகி அதனால் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடித்து அந்தத் தடையை நீக்கும்போது இந்த மஞ்சள் காமாலை நீங்குகிறது.

கடந்த பிப்ரவரியில் தான் பித்தப்பை, பித்தக்குழாய் என்று கற்களுக்காக என் கணவர் சென்னையில் அப்பல்லோ மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள். உற்சாகமாக எப்போதும் போல வேலைகளில் ஆழ்ந்திருந்தவர்களுக்கு மறுபடியும் இம் மாதம் 5ந்தேதி வலது வயிற்றுப்பக்கம் தீவிரமான பிசைதல் போன்ற உணர்வு ஏற்பட்டது. மறு நாள் இரத்தப்பரிசோதனை மூலமும் ஸ்கான் மூலமும் மருத்துவர் மஞ்சள் காமாலை அதிகமிருப்பதை உறுதி செய்து பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு INFECTION ஏற்பட்டுள்ளதாக தான் சந்தேகிப்பதாகச் சொல்லி, மறுபடியும்  ERCP SURGERY மூலம் மட்டுமே இந்த அடைப்பையும் மற்ற பிரச்சினைக்ளையும் சரி செய்ய முடியுமென்று கூறி உடனேயே துபாயிலுள்ள அரசாங்க மருத்துவ மனையில் EMERGENCY ADMISSION செய்யச் சொன்னார். அதன் படி மறு நாள் காலை என் கணவரைச் சேர்த்து இந்த மாதம் மூன்றாம் முறையாக ICUவில் நுழைய வேண்டியதாயிற்று.

இந்த மாதிரி INFECTION ஏற்படும்போது சில சமயங்களில் நோயாளிக்கு திடீரென இரத்த அழுத்தம் வேகமாகக் குறைதல், பிராண வாயு குறைதல் அல்லது சீராக இல்லாமை, பாக்டீரியா வேகமாகப்பரவி இரத்தத்தில் நுழைந்து நுரையீரல் வரை செல்லுதல் என்ற நிலைகள் ஏற்படுமாம். என் கணவருக்கும் இவையெல்லாமே பாதித்தது. இரத்தம் சீக்கிரம் உறையாத தன்மையும் ஏற்பட்டது. அதை சரி செய்ய அதற்கான மருந்துகளுடன் BLODD TRANSFUSION செய்ய வேண்டியதாயிற்று. ஆக்ஸிஜன் மாஸ்க் வைக்கப்பட்டது. பாக்டீரியா இன்னும் அதிகம் பரவி விடாமல் ERCP SURGERY செய்து முடித்தார்கள். அதன் பின்னர் தான் ஒவ்வொரு நிலையும் சீராகத்தொடங்கியது. ICUவில் அவர்கள் இருந்த ஆறு நாட்கள் மிகக் கொடுமையானவை. நானும் என் மகனும் கலக்கத்துடனும் கண்ணீருடனும் கழித்த நாட்கள் அவை. இந்த நாட்டு மருத்துவர்கள்  [அரேபியர், பாலஸ்தீனியர், இந்தியர், பாகிஸ்தானியர், பிலிப்பைன்காரர், ஸ்பெயின்காரர் என்று அனைத்து நாட்டு மருத்துவர்களும் இதில் அடக்கம்]  மிகச்சிறப்பான சிகிச்சை கொடுத்து அவர்களை குணமாக்கினார்கள். அதன் பின் ஆறு நாட்கள் GENERAL WARDக்கு மாற்றப்பட்டு, ஒவ்வொரு குழாயாக நீக்கப்பட்டு, ஒவ்வொரு துறை மருத்துவரும் அந்தந்த பிரச்சினைகள் சரியாகி விட்டது என்று ஓகே செய்து பின் வீட்டிற்கு அழைத்து வந்தோம். தற்போது பழையபடி எங்கள் உணவகத்துக்குச் சென்று வருகிறார்கள்.

அனைத்து மருத்துவர்களிடமும் இதற்கான காரணம் விசாரித்த போது, ‘ பொதுவாய் ERCP SURGERY செய்து கொள்ளுபவர்களுக்கும் பித்தப்பையை நீக்கிக்கொள்பவர்களுக்கும் ரொம்பவும் அபூர்வமாக சிலருக்கு இந்தப் பிரச்சினைகள் ஏற்படலாம்.’ என்று சொல்லுகிறார்கள். சென்னை அப்பல்லோவில் சிகிச்சை செய்த மருத்துவரும் நிரம்பப்படித்தவர். எங்களை மிக அருமையாகவே அனைத்து விளக்கங்களும் கொடுத்து வழி நடத்தினார். அங்கே எந்த எச்சரிக்கையும் எங்களுக்குத் தரப்படவில்லை. இங்கே, டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன் வந்து பரிசோதித்த ஒரு பாலஸ்தீனிய மருத்துவர், ‘ இத்தனை வயது வரை ஒரு சின்ன தவறான பழக்கம் கூட இல்லாத உங்களுக்கு எப்படி இந்தப்பிரச்சினை வந்தது என்று புரியவில்லை’ என்றார்.
 
அதிகம் கொழுப்புப்பொருள்களையோ அல்லது அதிகம் அசைவ உணவையோ சாப்பிடும் வழக்கமில்லாத என் கணவருக்கு எதனால் இந்தப்பிரச்சினை வந்தது என்று இன்னும் புரியவில்லை.

உடல் நலம் சீர் கெட்டு நமது வாழ்க்கையில் பல விபரீதங்களை, மரணங்களை சந்திக்காமலிருக்க நிறைய கதவுகள் நம் எதிரே திறக்கக்காத்திருக்கின்றன. அவற்றை நாம் அடுத்த பதிவில் திறந்து பார்க்கலாம்!

தொடரும்.. .. .. ! 

 

33 comments:

  1. தங்களின் பித்தப்பை பற்றிய விளக்கமும் தங்களின் கணவருக்கேற்பட்ட துயரத்தின் காரணத்தையும் அவர் அதிலிருந்து எப்படி விடுபட்டார் என்பதையும் விளக்கமாக சொன்னமைக்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்

    ReplyDelete
  2. தமிழில் புலமை வாய்ந்த, ஒரு தேர்ந்த மருத்துவரைப் போல், தங்களின் செய்தி சொல்லும் திறன் வியக்க வைக்கின்றது.
    சிக்கலான செய்திகளைக் கூட எளிய வரிகளில்,குழப்பமின்றித் தருகின்றீர்கள். நன்றி.
    தங்களைப் போலவே எனக்கும் அடிக்கடி இச்சிந்தனை வரும், எவ்வித தவறான பழக்க வழக்கங்களும் இல்லாதவர்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றார்களே அது ஏன்?
    அனைத்து வித கெட்ட பழக்கங்களையும் உடையவர்கள், நோய் நொடியின்றி வாழ்வது எதனால் புரியவில்லை.

    ReplyDelete
  3. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்பான பகிர்வு .தொடர வாழ்த்துக்கள் அம்மா .

    ReplyDelete
  4. பித்தப் பைக் கற்கள் பாதிப்பு எங்கள் வீட்டில் இருந்திருக்கிறது. நீங்கள் கொடுத்துள்ள விவரங்கள் எனக்கும் புதியவை. உபயோகமானவை. அந்த வலியை நானும் அனுபவித்திருக்கிறேன். உங்கள் கணவர் பூரண நலம் பெற எங்கள் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  5. பலருக்கும் இருக்கும் சந்தேகம் + கேள்வி...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  6. விரிவான விளக்கங்கள்... தொடர்கிறேன்.

    ReplyDelete
  7. பித்தப்பை கற்கள் என் பேரனுக்கும் இருக்கிறது வயது 7 ஆகிறது. மருத்துவர்கள் இப்போது அறுவை சிகிட்சை வேண்டாம், பின்பு வலி வந்தால் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
    உங்கள் விரிவான தகவல் எல்லோருக்கும் உதவும்.
    உங்கள் கணவர் பூரண உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மிகமிக நல்ல விளக்கமுடன் முன்னெச்சரிக்கையாய் இருக்கவேண்டிய பல தகவல்களைத் தந்துள்ளீர்கள்.

    இங்கும் என் உறவினர், நண்பர்கள் என இவ் உபாதையைக் கடந்தவர்களைக் கண்டுள்ளேன். வலியால் துடிக்கும் கொடுமை சொல்லமுடியாதது...
    உங்கள் கணவர் விரைவில் பூரண நலன் காண வேண்டுகிறேன்.

    நல்ல பகிர்வு அக்கா. தொடருங்கள்....

    ReplyDelete
  9. அம்மா...
    விரிவான விளக்கம் அருமை.
    ஐயா இப்போது எப்படியிருக்கிறார்கள்?
    உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்...

    ReplyDelete
  10. பித்தப் பைக் கற்கள் பாதிப்பு பற்றி அறிந்திருக்கிறேன்.. ஆனாலும் தங்களின் விரிவான தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  11. பித்தப்பை கற்கள் பற்றிய விழிப்புணர்வு பகிர்வு...

    தங்கள் கணவரின் உடல்நலம் தேறியது குறித்து மகிழ்ச்சி. மனதார பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  12. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கவியாழி கண்ணதாசன்!

    ReplyDelete
  13. தங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    எங்கள் உறவினர் ஒருத்தரும் நண்பர் ஒருத்தரும் வாழ்வின் இறுதி வரை அதிக மதுப்பழக்கம் வைத்திருந்தார்கள் அவர்கள் வேறு வகையில் தான் மரணம் எய்தினார்களே தவிர கல்லீரலில் பிரச்சினை வந்து சிரமப்படவில்லை! மஞ்சள் காமாலைக்கு முக்கியமாக ' குடிப்பழக்கம் இருக்கிறதா என்று தான் மருத்துவரகள் கேட்கிறார்கள்!

    ReplyDelete
  14. பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி அம்பாளடியாள்!

    ReplyDelete

  15. அன்பு அக்கா விரிவான பகிர்வுக்கு நன்றி .வீட்டில் சாருக்கு இனி எந்த உடல் நலக் குறையும் ஏற்படாமல் பூரண நலம் பெற்று தம்பதியினர் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அக்கா.

    ReplyDelete
  16. நம் சந்திப்பில் நீங்க இது தொடர்பாக சொன்ன தகவல்கள் நினைவில் வருகின்றன. மறுபடியும் தங்கள் கணவர் பாதிக்கப் பட்டது அதிர்வையும் வருத்தத்தையும் தருகின்றது.

    பார்த்து கேட்டு அனுபவித்த பலவற்றில் நாம் பார்க்காத கேட்காத அனுபவிக்காத மேலும் பலதும் இருப்பது உங்க பதிவில் வெட்ட வெளிச்சமாகிறது .

    ReplyDelete
  17. விதிகளைக் கடைபிடிப்பவர்களுக்குக்கூட, எங்கிருந்து வருகிறது என்று சொல்ல முடியாமல் பிரச்சினைகள் வருகிறன.

    தங்கள் துணைவர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறோம்..

    ReplyDelete
  18. நல்ல விழிப்புணர்வு ஊட்டும் பகிர்வு.உங்களவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சிறப்பான வாழ்க்கயை தொடர என் வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  19. உங்கள் கணவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  20. தங்களின் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

    ReplyDelete
  21. வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!

    ReplyDelete
  22. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட்!

    ReplyDelete
  23. உங்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி கோமதி! உங்கள் பேரனுக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாவம், சின்ன குழந்தை! வாழைத்தண்டு சாறு பலனளிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கொடுத்துப்பாருங்களேன்.

    ReplyDelete
  24. வருகைக்கும் கருத்துரைக்கும் என் கணவர் நலம் பெற வேண்டியதற்கும் என் இனிய நன்றி இளமதி!

    ReplyDelete
  25. என் கணவரை விசாரித்து எழுதியதற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி குமார்! கிட்டத்தட்ட 10 கிலோ வரை இழந்து விட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார்கள்.

    ReplyDelete
  26. ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களை இங்கே சந்திப்பது மகிழ்வாக இருக்கிறது சங்கவி! உங்கள் கருத்துரைக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  27. வருகைக்கும் கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் அன்பான நன்றி ஆதி!

    ReplyDelete
  28. மனம் நிறைந்த பிரார்த்தனைக்கு என்றுமே நல்ல பலன் உண்டு ஆசியா! உங்கள் நல்ல மனதுக்கு என் அன்பு நன்றி !!

    ReplyDelete
  29. வருகைக்கும் கருத்துரைக்கும் தங்கள் பரிவிற்கும் அன்பு நன்றி நிலாமகள்!

    ReplyDelete
  30. பிரார்த்தனைக்கு மனம் நிறைந்த நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  31. வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் அன்பு நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  32. தங்களின் அன்பான பிரார்த்தனைக்கு இனிய நன்றி காஞ்சனா!

    ReplyDelete
  33. இந்தப் பதிவை இப்போதுதான் படித்தேன். மிகவும் வேதனையாக உள்ளது. என் கணவருக்கும் எந்தக் கெட்டப்பழக்கங்களும் இல்லை, நல்ல ஆரோக்கியமாக இருந்தவருக்கு ஐந்தாண்டுகளுக்கு முன் பித்தப்பையில் கற்கள் உண்டாகி, வயிற்றுவலியால் அவதிப்பட்டார். லேபராஸ்கோபி மூலம் பித்தப்பை அகற்றப்பட்டது. நல்லவேளையாக அதன்பின் எந்த தொந்தரவும் இதுவரை இல்லை. உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பதால் பிரச்சனை இல்லை. ஆனால் தங்கள் கணவருக்கு ஏற்பட்ட பின்விளைவுகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. நல்லபடியாக அவர் தேறி விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete