Monday, 16 April 2012

ஆற்றாமை


வாசலிலேயே காத்திருந்தாள் என் சினேகிதி விஜயா. காரை விட்டு இறங்கியதுமே ஓடி வந்து கைகளைப் பற்றியவளின் உதடுகள் துடித்தன.
“ இப்போ எப்படி இருக்கு அம்மாவுக்கு?
“பரவாயில்லை. ஆனால் கவலையாகவே இருக்கு!”
உள்ளே நுழைந்து அவள் அம்மாவைப்பார்த்ததும் மனசு கனமானது. உடல் குறுகி, வலியின் வேதனையில் முனகல் தொடர என்னைப்பார்த்ததும் ஒரு கணம் யோசனை தெரிந்தது. உடனேயே ஞாபகம் வர மெலிசான குரலில் விசாரணை.
“ எப்படி இருக்கிறாய்? ரொம்ப நாள் ஆச்சு பார்த்து!..”
“ நான் நல்லா இருக்கேன். உங்க உடம்பு தேவலாமா?”
“ நல்லாவே இல்லை. எங்கே, இவள் டாக்டரிடம் என்னை அழைத்துப்போவதே இல்லை..”
குபுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்தது என் சினேகிதியின் விழிகளில். அதை முழுங்கிக்கொண்டு, வெதுவெதுப்பான கஞ்சியைக் கொண்டு வந்து அம்மாவுக்கு புகட்டினாள். வாயைத் துடைத்து விட்டு சாய்ந்தாற்போல உட்கார வைத்தாள். அவள் மறுபடியும் சமையலறை சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் என்னிடம் மகளைப்பற்றி சரசரவென்று மனதிலிருந்து குறைகள் வெளியே தெறித்து விழுந்தன. விஜயா வந்து அமர்ந்து ஒரு கணம் கூட ஆகியிருக்காது, உடற்கழிவுகள் அந்தப் பாயிலேயே வெளியேற, மறுபடியும் அம்மாவை துடைத்து விட்டு, ஆசுவாசப்படுத்தி சாய்ந்தாற்போல அமர வைத்து, கழிவுகளை நீக்கி, பாயையும் அந்த இடத்தையும் அலசி விட்டு நிமிர்வதற்குள் விஜயாவுக்கு உடம்பு இற்றுப்போயிருப்பது தெரிந்தது.

சும்மாவா! அவளுக்கும் 60 வயது முடிந்தது இரு மாதங்களுக்கு முன்பு! மகள்களுக்குத் திருமணம் முடித்தாயிற்று. மகனும் கணவரும் வீட்டில் இருக்கும்போது அம்மாவைத் தூக்க, மெல்ல கழிவறைக்கு கொண்டு செல்ல உதவுகிறார்கள். ஒரு தம்பியும் இருக்கிறான் பக்கத்துத் தெருவிலேயே. அவனுடைய மனைவியும் வேலைக்குச் செல்லுவதால் அம்மாவை தன் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியாது என்பதை முன்னமேயே தெரிவித்து விட்டான். இதே மகன் தன் அம்மா உடம்பு நன்றாக இருக்கும்போது தன் அம்மாவை தன் செளகரியங்களுக்காக வீட்டில் வைத்துக் கொண்டவன் தான். இப்போது எந்தப்பயனும் இல்லாத அம்மாவை எதற்காக வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்? ஒரு வேலைக்காரி போல அந்த வீட்டில் வேலைகள் செய்திருந்தாலும் அம்மா தன் வாயைத் திறந்து எந்த குறையும் மகனைப்பற்றிச் சொன்னதில்லை. ஏனென்றால் அவன் மகன்! மகளைப்பற்றி மட்டும் மனதில் எத்தனை குறைகள்!!
அம்மா முனகலுடன் உறங்கியதும் விஜயா என்னருகில் வந்து அமர்ந்தாள்.
“ அம்மா சென்ற மாதம் கட்டிலிலிருந்து விழுந்து விட்டதாய் எழுதியிருந்தேனல்லவா, அப்போது டாக்டரிடம் அழைத்துச் சென்ற போது, அம்மாவின் எலும்புகள் எல்லாம் கிட்டத்தட்ட நொறுங்கி விட்டதாக டாக்டர் சொன்னார். வயசும் 80க்கு மேல்! எந்த மருந்தும் வைத்து தேய்க்கக் கூடாது என்கிறார். அம்மாவுக்கோ வலி தாளமுடியவில்லை. மருந்து தேய்க்க மாட்டாயா? என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். அக்கம் பக்கத்திலிருந்து வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லோரிடமும் நான் கவனிப்பதில்லை, மருந்து தேய்த்து விடுவதில்லை என்று ஒரே புலம்பல்! நீயே பார்த்தாயல்லவா, நீ வந்து உட்கார்ந்த இந்த அரை மணி நேரத்தில் என்னென்னவெல்லாம் நான் செய்கிறேன் என்று! எனக்கும் உடம்பு வலிக்கிறது, இற்றுப்போகிறது, இருந்தாலும் இந்த நோயுடன் போராடும் ஒரு அம்மாவிற்கு என்ன குறையை நான் வைத்தேன்? நான் போதாதென்று என் கணவர், மகன் என்று அத்தனை பேரும் இவர்களைப் பார்த்துக்கொள்கிறோம். இது புரியவில்லையா அம்மாவுக்கு?”
விஜயாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்ப் பொழிந்தது.

அவள் கரங்களை ஆதூரத்துடன் தடவிக் கொடுத்தேன்.
“ தம்பி இங்கு வருவதேயில்லையா?”
கசப்பான புன்னகை அவள் முகத்தில் படர்ந்தது.
“ வருகிறான் தினமும் இரண்டு வேளை! அவன் வந்து சாப்பாடு கொடுத்தால் இவர்கள் கொஞ்சம் கூடுதலாகவே சாப்பிடுகிறார்கள். அதனால் கட்டாயம் வரவேண்டும் இரண்டு வேளை என்று சொல்லியிருக்கிறேன். அவனும் எங்கே முழு பாரமும் தன் மேல் வந்து விடுமோ என்ற பயத்தில் தினமும் வந்து போகிறான்.. “
என் மனமும் ஆற்றாமையில் குமைந்தது. என்ன நியாயம் இது! இவள் சமைத்துத் தந்தாலும் அக்கறையுடன் இந்த அளவு விழுந்து விழுந்து செய்தாலும் கவனிப்பதில்லை என்று குறை! கவனிக்காமல் அலட்சியப்படுத்தி, கடமைக்காக வந்து எட்டிப்பார்த்து, தன் கையால் இதே உணவை மகன் கொடுக்கும்போது கொஞ்சம் அதிகமாகவே உள்ளே செல்கிறது! தாய்மையிலும் பாரபட்சம் இருக்கிறதா?
“ விடு விஜயா! வயது முதிரும்போது பெரியவர்கள் குழந்தையாக மாறி விடுகிறார்கள் என்று தான் உனக்குத் தெரியுமே! மனம் முதிராத குழந்தையாக இவர்களை நினைத்துக்கொள்”
“ குழந்தையென்றால் அடிக்க முடியும். திட்ட முடியும். இவர்களை என்ன செய்வது? நம் குழந்தை அடுத்த வீட்டில் போய் நம்மைக் குறை சொல்லாதே! அக்கம் பக்கத்தில் நான் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள். இருந்தாலும் ‘ பெற்ற அம்மாவே மகளைப்பற்றி இப்படிச் சொன்னால், ஒரு வேளை அது உண்மையாகவே கூட இருக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றாதா? காலத்துக்கும் எனக்கு அது கெட்ட பெயர்தானே?”
“ அம்மா! பேசாமல் இருக்க மாட்டீர்களா?”
அதட்டியபடி உள்ளே நுழைந்தான் விஜயாவின் மகன் ப்ரகாஷ்.
“ வாங்க பெரியம்மா! பாருங்கள், அம்மா இப்படித்தான் எப்போதும் அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு புத்திமதி சொல்லுங்கள். கீதையில் சொல்லியிருக்கிறதல்லவா, கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று. இதை எனக்குச் சொல்லிக் கொடுத்ததே அம்மா தான்.  எப்போதுமே தானாக வந்து மடியில் விழும் எந்த விஷயத்திற்கும் மதிப்பில்லை. அம்மாவின் அன்பும் அப்படித்தான். கிடைக்க முடியாத தூரத்தில் மாமாவின் அன்பு இருப்பதால் அதற்காகத் தான் பாட்டி ஏங்கித் தவிக்கிறார்கள். அவ்வளவு தான். எல்லோருக்குமே வயதானவர்கள் அருகேயிருந்து கவனிக்கும் கொடுப்பினை கிடைக்காது பெரியம்மா. எங்களுக்கு அது கிடைத்திருக்கிறது.....”
தந்தைக்கே உபதேசித்த மகனாய் எனக்கு அவன் தோன்றினான். 25 வயதில் முதிர்ச்சியடைந்த மகன், 85 வயதில் மனம் இன்னும் முதிராத தாய்-இரண்டு பேருக்கும் நடுவே கலங்கிய கண்களுடன் என் சினேகிதி! அவள் மனம் இந்த விளக்கத்தால் சமாதானமாகி விடுமா என்ன?
வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு உண்மையிலேயே பதில் தெரிவதில்லை!


39 comments:

  1. அருமையான எழுத்துக்கள்.

    ரொம்பவும் பிராக்டிகலாக ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள் தான்.

    அவ்வபோது வருவோர் போவோர் ஆயிரம் சொல்லலாம் நினைக்கலாம்.

    கூடவே இருந்து பொறுமையாக தன் கடமையைச் செய்பவர்களுக்கே அதன் கஷ்ட நஷ்டங்கள் தெரியும்.

    ஆற்றாமை நல்லதோர் தலைப்பு. மிக நல்ல சிந்திக்க வைக்கும் பதிவு.

    என் ப்ளாக்கர் இப்போது தான் சரியானது. முதல் பின்னூட்டம் தங்களுக்கு இடும் பாக்யம் கிடைத்ததில் மகிழ்ச்சி. vgk

    ReplyDelete
  2. கண் கலங்கியதற்கு நிச்சயம் சொந்த அனுபவங்கள்தான் காரணம். வெவ்வேறு சூழ்நிலைகள்...வெவ்வேறு அளவீடுகள்! தாய்மைக்கு பாரபட்சம் உண்டா.... இருக்கிறது. தந்தையும்தான். அந்த மகன் சொன்ன விளக்கத்தை நா(ங்களும்)னும் சொல்வதுண்டு. நம் மனதிலும் குறை இருக்கிறது என்றும் நினைத்துக் கொள்வோம்...நம்மைப் பற்றி அவர்கள் பெருமையாகப் பேச வேண்டும், நம்மிடம் ரொம்ப அன்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறுதானே...

    ReplyDelete
  3. இது போல் பல இடங்களில் நானும் பார்த்திருக்கிறேன். வயதானவர்கள் அனேகம் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு புரிந்துகொள்ளும் தன்மை குறைந்துவிட்டிருக்கும். அது இயல்புதான்.

    ஆனால் அவதானித்து விமர்சிக்கும் உறவினர் & அயலவர்... பராமரிப்பவரின் சிரமத்தை நினைப்பதில்லை. சிந்திக்கவைக்கும் இடுகை.

    ReplyDelete
  4. வயதானால் அடம் பிடிக்கும் குழந்தைகளைப் போல் ஆகிவிடும் நடவடிக்கைகள். தோழியின் மகனுக்கு நல்ல புரிதல். ஆனாலும் ஆற்றாமையும் தவிர்க்க முடியாத ஒன்றே. மனிதர்கள் கடக்க வேண்டிய பலவற்றில் ஒன்றாகவே இதுவும். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. ஒவ்வொரு வீட்டிலும் இது போல் நடந்து கொண்டு இருக்கிறது. நமது மனது நாம் செய்யும் எல்லாவற்றையும் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என துடிக்கிறது. செய்துவிட்டு பலன் கிடைக்கவேண்டி தவிக்கிறது.

    அருமையான கதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. எல்லோருக்குமே வயதானவர்கள் அருகேயிருந்து கவனிக்கும் கொடுப்பினை கிடைக்காது பெரியம்மா. எங்களுக்கு அது கிடைத்திருக்கிறது.....

    இவர் சொல்வதெல்லாம் உண்மைதான்.
    கவனித்துக்கொள்கிரவர்களும் மனிதர்கள்தானே.மனசு அலுத்துக்கொள்வதில் வியப்பேதும் இல்லெதான்.

    ReplyDelete
  7. ஆமாம் மனோ அக்கா,இயலாமை ஆட்டி படைக்கும் பொழுது கண்ணீரால் ஆற்றாமையை கொட்டத்தான் முடிகிறது.
    நல்ல படைப்பு.

    ReplyDelete
  8. கவனிக்காமல் அலட்சியப்படுத்தி, கடமைக்காக வந்து எட்டிப்பார்த்து, தன் கையால் இதே உணவை மகன் கொடுக்கும்போது கொஞ்சம் அதிகமாகவே உள்ளே செல்கிறது! தாய்மையிலும் பாரபட்சம் இருக்கிறதா?

    வயதானவர்கள் அனேகம் இப்படித்தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  9. தந்தைக்கே உபதேசித்த மகனாய் எனக்கு அவன் தோன்றினான். 25 வயதில் முதிர்ச்சியடைந்த மகன், 85 வயதில் மனம் இன்னும் முதிராத தாய்-இரண்டு பேருக்கும் நடுவே கலங்கிய கண்களுடன் என் சினேகிதி! அவள் மனம் இந்த விளக்கத்தால் சமாதானமாகி விடுமா என்ன?//நிறைய முதியவர்களின் அனுபவம் இது.நெகிழச்செய்த சம்பவம் உங்கள் எழுத்துக்களில் படிக்கும் பொழுது கனக்க செய்து விட்டது மனதினை.

    //வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு உண்மையிலேயே பதில் தெரிவதில்லை!//உண்மை உண்மை..!

    ReplyDelete
  10. ஒவ்வொரு வயதினருக்கும் இருக்கும்
    ஆற்றாமையை அழகாய் சொல்கிறது
    கதையின் வடிவம்...

    ReplyDelete
  11. //வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு உண்மையிலேயே பதில் தெரிவதில்லை!//

    ஆமாம்.

    ReplyDelete
  12. நல்லதொரு பகிர்வும்மா. ஆற்றாமையில் அழத் தான் முடியும். வேறு என்ன செய்வது? சகஜமாக எல்லோர் வீடுகளிலும் இப்படித் தான் நடக்கிறது. வயதான்வர்கள் குழந்தை போல் தான் நடந்து கொள்கிறார்கள்.

    அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு நம் வீட்டு நிலை பற்றி என்ன தெரியும்?

    ReplyDelete
  13. கண் கலங்கியதற்கு நிச்சயம் சொந்த அனுபவங்கள்தான் காரணம். வெவ்வேறு சூழ்நிலைகள்...வெவ்வேறு அளவீடுகள்! தாய்மைக்கு பாரபட்சம் உண்டா.... இருக்கிறது. தந்தையும்தான். அந்த மகன் சொன்ன விளக்கத்தை நா(ங்களும்)னும் சொல்வதுண்டு. நம் மனதிலும் குறை இருக்கிறது என்றும் நினைத்துக் கொள்வோம்...நம்மைப் பற்றி அவர்கள் பெருமையாகப் பேச வேண்டும், நம்மிடம் ரொம்ப அன்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறுதானே...//

    இந்தக்கருத்தை நான் மனமார வழிமொழிகிறேன்.

    ஆற்றாமை இருவருக்கும் தான். அருமையாக இருந்தது. பாராட்டுக்கள்

    ReplyDelete
  14. கதை அல்ல நிஜம்! வீட்டு வீட்டுக்கு வாசப்படிகள்தான்.

    24 மணி நேரமும் கூடவே இருந்து பார்த்துக்கும் மருமகளை விட எப்பவாவது ஊரில் இருந்து வரும் மருமகளுக்கு விசேஷ அன்பு கிடைக்கும்!

    தலைப்பு அருமை, மனோ!

    ReplyDelete
  15. இதையும் பாருங்க:

    http://pudugaithendral.blogspot.in/2012/04/blog-post_17.html

    ReplyDelete
  16. அன்புள்ள சகோதரர் வை.கோபாலகிருஷ்ண‌ன் அவர்களுக்கு,

    தங்களின் விரிவான பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நீங்கள் சொல்லியிருப்பது போல கூட இருந்து கவனிப்பவர்களுக்குத்தான் கஷ்ட நஷ்டங்கள் புரியும்.

    நேற்று தான் என் மெயில் பாக்ஸ்-ஐ திறந்த போது உங்கள் வலைப்பூவில் பிரச்சினை இருப்பது அறிந்தேன். இப்போது அவை சரியாகி எனக்கு முதன் முதலாக பின்னூட்டம் கொடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  17. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு மகிழ்வான நன்றி ஸ்ரீராம்!
    சின்ன வயதில் குழந்தைகள் பெற்றோரைப்பற்றிப் பெருமையாகப் பேசினால் பெற்றோரின் மனம் பூரித்துப்போகிறது. அதே நிலை பின்னால் மாறுபடும்போது, தான் செய்யும் நல்லவற்றையும் தன் அக்கறையையும் புரிந்து அங்கீகரிக்க வேண்டும் என்று அதே பெற்றோரிடம் அவர்கள் குழந்தைகள் எதிர்பார்ப்பதில் தவறேதுமில்லையே!

    ReplyDelete
  18. எல்லோர் த‌ர‌ப்பிலும் நியாய‌மிருக்கிற‌து போலொரு மாயை... அவ‌ர‌வ‌ர் ம‌ன‌ப்ப‌க்குவ‌த்துக்கு ஏற்ப‌வும் சூழலின் காத்திர‌ம் பொறுத்தும் நியாய‌ங்க‌ளை நிர்ண‌யிக்க‌ வேண்டியுள்ள‌து. ஆற்றாமைக‌ளை சொல்லிச் சொல்லித் தான் ஆற்றிக் கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து. வாழ்வில் இவ‌ற்றைக் க‌ட‌க்க‌ ஊன்றுகோலாக‌த் தான் நீதிபோத‌னைக‌ள்...

    ReplyDelete
  19. ஆமாம் இமா! என் சினேகிதியின் உண்மைக்கதை தான் இது! 60 வயதிலும் உடல் வலிமையின்றி, தனக்கான நோய்களுக்கிடையே, என் சினேகிதியின் கதை பல மாதங்களாக இப்படித்தான் கண்ணீரில் போய்க்கொண்டிருக்கிறது!!
    அன்பான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி!

    ReplyDelete
  20. //மனிதர்கள் கடக்க வேண்டிய பலவற்றில் ஒன்றாகவே இதுவும்//
    அருமையான வரி !
    இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  21. பாராட்டுக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  22. அன்றாடம் அனைவரும் காணுகிற நிகழ்வுதான்
    ஆயினும் இத்தனை அருமையான படைப்பாக ஏத்தனைபேரால்
    யோசித்துத் தர முடிகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. //நம்மைப் பற்றி அவர்கள் பெருமையாகப் பேச வேண்டும்,நம்மிடம் ரொம்ப அன்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறுதானே...//// இது தவறென்று என்னால் ஒத்துக்க முடியலைங்க. அந்தம்மாவும் சாதாரண மனுஷிதானே? எல்லாராலும் எல்லா நேரங்களிலும் கீதோபதேசத்தை ஃபாலோ பண்ண முடியாதல்லவா?

    பெருமையாகப் பேசாவிட்டாலும், தன் தாயார் குறை சொல்லாமல் இருக்கலாம் என்று எதிர்பார்ப்பதும் இயல்புதானே! வயதான குழந்தைகளை எதுவும் சொல்ல முடியாது. மனது வருந்துகையில் இப்படி நட்புக்களிடம் ஆற்றாமையைச் சொல்லி ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டியதுதான்!

    மனதைத் தொடும் எழுத்துக்கள் மனோ மேடம்! சில கேள்விகளுக்கு விடையே இல்லைதான்.

    ReplyDelete
  24. நேரில் அமர்ந்து பார்ப்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது
    உங்கள் எழுத்துக்களைப் படிக்கும் போது மனோம்மா. அப்படி ஒரு இயல்பான எழுத்து நடை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. நீங்கள் எழுதிய கருத்துக்கள் உண்மை தான்! உங்களை விடவும் இவற்றை எழுதுவத‌ற்கு பொருத்தமானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது! நீங்களே ஒரு அனுபவச் சுரங்கம் லக்ஷ்மி!!

    ReplyDelete
  26. பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  27. கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ரிஷபன்!

    ReplyDelete
  28. பாராட்டிற்கும் கருத்திற்கும் அன்பான நன்றி ஸாதிகா!!

    ReplyDelete
  29. பாராட்டிற்கு அன்பு நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  30. விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  31. பாராட்டுக்கும் கருத்துரைக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி புதுகைத்தென்றல்!!

    ReplyDelete
  32. நீண்ட நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி துளசி கோபால்!!

    ReplyDelete
  33. வருகைக்கும் மற்றும்மொரு தரமான வலைப்பக்கத்தை அடையாளம் காட்டியதற்கும் இனிய நன்றி ஹுசைனம்மா!

    ReplyDelete
  34. இனிமையான கருத்துக்களுக்கு அன்பு நன்றி நிலாமகள்!!

    ReplyDelete
  35. கருத்துரைக்கு இனிய நன்றி தங்கமணி!!

    ReplyDelete
  36. பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!!

    ReplyDelete
  37. //இது தவறென்று என்னால் ஒத்துக்க முடியலைங்க. அந்தம்மாவும் சாதாரண மனுஷிதானே? எல்லாராலும் எல்லா நேரங்களிலும் கீதோபதேசத்தை ஃபாலோ பண்ண முடியாதல்லவா?

    பெருமையாகப் பேசாவிட்டாலும், தன் தாயார் குறை சொல்லாமல் இருக்கலாம் என்று எதிர்பார்ப்பதும் இயல்புதானே!//

    உங்கள் கருத்துத்தான் என் மனதின் கருத்தும் மகி! இப்படி ஏங்குவதும் ஆற்றாமைப்படுவதும் எப்படி தவறாகும்? அன்பிற்கு பதிலாக அன்பை எதிர்பார்ப்பவன் மனிதன். அன்பிற்கு எதையுமே எதிர்பார்க்காதவன் ஞானி மட்டுமே!
    அன்பான கருத்துக்கள் பதிவு செய்தற்கு இனிய நன்றி மகி!

    ReplyDelete
  38. வருகைக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பான நன்றி புவனேஸ்வரி!!

    ReplyDelete