Monday, 4 July 2011

தஞ்சை பெரிய கோவில்- இரண்டாம் பகுதி



தஞ்சை கோவில் இரு கோட்டை சுற்று சுவர்களும் இடையே அகழியும் சூழப்பெற்றது. இவை பிற்காலத்தில் செல்வப்ப நாயக்க மன்னனால் உருவாக்கப்பட்டன என்று ஒரு ஆராய்ச்சியாளரால் சொல்லப்பட்டாலும் ராஜராஜனின் தெய்வீகக் குருவான கருவூர் சித்தர் தனது காலத்திலேயே தன் திருவிசைப்பாவில் அகழியைப்பற்றியையும் அதிலிருந்த முதலைகளைப்பற்றியும் பாடியிருக்கிறார் என்று மற்றொரு ஆராய்ச்சியாளர் சொல்லுகிறார்.


கிழக்கு வாயிலும் அதிலுள்ள சுதை சிற்பங்களும் மராட்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது. இது தான் முதல் வாயில். தற்போது இதன் வழியே உள் நுழைந்ததும் அரசினால் பதிக்கப்பெற்ற தெளிவான தஞ்சை கோவிலின் வரவேற்பும் குறிப்புகளும் நம்மை வரவேற்கின்றன!


கோவிலின் நுழைவு வாயில் கேரளாந்தகன் திருவாயில். இது சற்று உயரம் குறைந்த அகலமான கோபுரம். கேரள மன்னன் ரவி பாஸ்கரனை வென்றதன் நினைவாக தனக்கு விருதாய் நிலைத்த கேரளாந்தகன் என்ற பெயரையே இந்த வாயிலுக்கு கேரளாந்தகன் வாயில் என்று ராஜ ராஜ சோழன் சூட்டினான்.



ஒரே கல்லினாலான இரு நிலைக்கால்கள் இந்த வாயிலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஐந்து அடுக்குகளாலான இந்த கோபுரத்தில் ராஜ ராஜன் காலத்து சிற்பங்கள் சிலவும் பிற்கால மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பல அழகான சுதைச் சிற்பங்களும் அழகுற காட்சியளிக்கின்றன.



அடுத்தது ராஜராஜன் திருவாயில். இது சற்று உயரம் குறைந்த முன் வாயிலை விடவும் அகலமான வாயில்.



அதில் நுழைந்து உள்ளே புகுந்தால் நந்தியும் நந்தி மண்டபமும் கோவிலும் அதைச்சுற்றி பெரிய பிரகாரமும் பிரகாரத்தை ஒட்டிய திருச்சுற்று மாளிகையும் கண்ணுக்குப் புலப்படுகின்றது. நந்தி மண்டபமும் நந்தியும் அம்மன் மண்டபமும் நாயக்க மன்னர்களின் கொடை.


ஒரே கல்லினால் செய்யப்பட்ட நந்திகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தி திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ளது. பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லினால் செய்யப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை உள்ளது. ராஜராஜன் நிர்மாணித்த நந்தி தற்போது நந்தி மண்டபத்துக்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் உள்ளது.



கோவிலின் தெற்குப்புறம் இருக்கும் வாயின் மேல் “விக்கிரம சோழன் திருவாசல்” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்துக்களை மறைத்துக் கொண்டு இப்போது ஒரு மின் விளக்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

வடக்குப்புறம் இருக்கும் வாயில் அரசனின் மாளிகைக்கு அருகே இருந்ததால் அணுக்கன் திருவாயில் என்று அழைக்கப்பட்டது.
அணுக்கண் வாயில் ராஜராஜன், தெய்வீகப் பணியாளர்கள், ஆடல் மகளிர் நுழைய ஏற்படுத்தப்பட்டது. செம்பு, பொன் தகடுகளால் போர்த்தப்பட்டிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்கால கொள்ளைகளினாலும் படையெடுப்புகளினாலும் அழிந்து விட்டன.



கோவிலைச் சுற்றி 800 அடி நீளமும் 400 அடி அகலமுமான மதில் சுவரில் நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டன. பிரகார சுற்றுத்தளத்தில் கருங்கல், செங்கற்களினால் தளங்களை இரண்டாம் சரபோஜி 1803ல் அமைத்தார்.

ராஜராஜன் காலத்தில் கோவில் என்பது வழிபாட்டுக்கூடம் என்பது மட்டுமல்லாமல் மக்கள் கூடிக் கொண்டாடும் இடமாக அமைந்திருக்கிறது. நடனம், சிற்பம், இசை, ஓவியம், சிற்பம் இவற்றில் ஆற்றல் மிக்கவர்கள் தங்கள் திறமைகளை பொது முக்கள் முன்னிலையில் பறை சாற்ற ஒரு முக்கிய இடமாக திகழ்ந்தது கோவில்.






நந்தி மண்டபத்தைக் கடந்ததும் கோவிலின் முக மண்டபம் வரும். நடுவிலும், இரு புறமும் இருக்கும் படிகள் வழியே மேலே ஏறிச் சென்று மண்டபத்தை அடைய வேண்டும். சிற்பங்கள் செதுக்கப்பட்ட கல் தூண்களின் வரிசையைக் கடந்ததும் முன்மண்டபத்தை ஒட்டியபடி மகாமண்டபம் இருக்கிறது. வாயிலின் இரு புறமும் இரு மாபெரும் காவலர்கள் (துவாரபாலகர்கள்) நிற்பதைக் காணலாம். ராஜராஜன் பாணியில் அமைக்கப்பட்ட இந்த காவலர்களின் 18 உருவங்கள் கோவிலின் பிற்பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருகின்றன.

மகாமண்டபத்திற்கும் கருவறைக்கும் இடையே இருப்பது அர்த்த மண்டபம். அர்த்த மண்டபத்தின் வடக்கு, தெற்குப் புறங்களில் இருக்கும் வாயில்கள் வழியாகவும் உள்ளே வரலாம். கோவிலின் தாங்குதளம் மிக உயரமாக இருப்பதால் அர்த்த மண்டபமும் கருவறையும் தரைமட்டத்திற்கு 20 அடி உயரத்தில் இருக்கின்றன. எனவே தெற்கு, வடக்கு வாயில்களைச் சென்றடைய இரு நிலைகளில் உள்ள படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். படிகளின் பிடிச்சுவர்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருகின்றன. இரு வாயில்களிலும் காவலர் சிலைகள் காணப்படுகின்றன.

கருவறையில் மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறு அடி உயரமும் 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும் 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களினால் செதுக்கப் பட்டு இணைக்கப் பட்டுள்ளது.

கட்டுமானப்பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டையில், ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தியபோது. மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ""கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது,'' என்று அசரீரி வாக்கு கேட்டு, ராஜராஜ சோழரும் கருவூர்த்தேவரை ஒரு சித்தர் உதவியுடன் அழைத்து வந்து தனக்கு உதவுமாறுவேண்டினார். கருவூராரும் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும் அகமகிழ்ந்து, அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் கோவிலுக்கு மேற்குப்புறம் அவருக்கு ஒரு சந்நதியை ஏற்படுத்தினார்.



இன்றைக்கும் வியாழன் தோறும் கருவூர்த்தேவருக்கு அங்கே சிறப்புப்பூஜைகளும் அன்னதானங்களும் செய்யப்படுகின்றன.

கருவறையைச் சுற்றி 11 அடி அகல சுற்றுச் சுவரும் 19 அடி அகல சுற்றுச் சுவரும் உள்ளன. இந்த சுவர்களின் இடைவெளியில் 13 சித்திரக்கூடங்கள் அமமக்கப்பட்டு. இதில்தான் ராஜராஜன் காலத்து மகத்தான ஓவியங்களும் நாயக்கர்கால ஓவியங்களும் நம்மை பிரமிக்க வைக்கும் அழகுடன் திகழ்கின்றன. உண்மையில் சோழர் காலத்து ஓவியங்கள் மீது பிற்காலத்தில் வந்த நாயக்கர்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டு முன்னையது மறைக்கப்பட்டிருக்கிறது. நாயக்கர் கால ஓவியங்கள் சில இடங்களில் உதிர்ந்து போக பழைய மூல ஓவியங்கள் காட்சி தந்திருக்கின்றன. இந்த மூல ஓவியங்களைக் கண்டுபிடித்தவர் திரு ச.க. கோவிந்தசாமிப்பிள்ளை என்பவர். மேலறையில் நடராசரின் நடன சிற்பங்களையும் இடம் பெறச்செய்திருக்கிறார் ராஜராஜன். 108 கரணச் சிற்பங்களில் 81 நடன சிற்பங்களே பூர்த்தியாகி இருக்கின்றன.

கோபுரத்தின் உச்சியில் இருக்கும் தளம் 25 அடி சதுரமானது. சிகரம் கூம்பு வடிவில் செதுக்கபட்டு நுனியில் 12 1/2 அடி உயரமான கலசத்தைத் தாங்குகிறது. ராஜராஜனின் 25 ம் ஆட்சி ஆண்டின் 275ம் நாள் கோவிலுக்கு அளிக்கப்பட்ட இக்கலசம் அக்காலத்தில் தங்கத்தால் கவசமிடப்பட்டிருந்தது. இப்போது இல்லை. இதன் பிரமரந்திரத்தளக்கல் ஒரே பாறையால் ஆனது என்றும், 80 டன் எடையுள்ளது என்றும் எல்லாரும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.

இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையிலுள்ள விநாயகர் கோவில் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது.


வட மேற்கு மூலையில் பிரமிக்க வைக்கும் அழகுடன் காணப்படும் முருகன் கோவில் செல்வப்ப நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.

அதன் பிறகு வரும் சண்டீஸ்வரர் கோவில் ராஜராஜனால் கட்டப்பெற்றது. உலகிலேயே மிகப்பெரிய சண்டீஸ்வரர் ஆலயம் இது. நந்தி மண்டபத்திற்கு வடக்கே காணப்படும் அம்மன் கோவில் பாண்டிய மன்னன் ஒருவனால் எழுப்பப்பட்டது. அதன் முகப்பு மண்டபம் விஜய நகர அரசர்களால் கட்டப்பட்டது. இப்படி ராஜராஜ சோழனுக்குப்பிறகு ஆண்ட பல மன்னர்கள் தங்களின் கலைத்தாகத்தை அங்கங்கே தீர்த்துக்கொண்டிருந்தாலும் ராஜ ராஜ சோழத்தேவனால் மட்டுமே நிர்மாணிக்கப்பட்ட பெருவுடையார் பெரிய கோவில் இன்றளவும் கம்பீர அழகுடன் தனித்து பெருமிதமாய் நிற்கிறது.

இக்கோவிலின் சமகாலத்திலும் அதன் பிறகும் எத்தனையோ கோவில்கள் எழுந்தன. ஆயினும் எந்தக் கோவிலையும் தஞ்சை ராஜராஜீஸ்வரம் கோவிலோடு ஒப்பீடு செய்ய இயலாத அளவுக்கு இத்திருக்கோவில் எழுந்து நிற்கிறது. இக்கோவில் போன்று உலகின் வேறு எந்தக் கோவிலோ, வரலாற்றுச் சின்னமோ தன்னுடைய வரலாறு பற்றிய விளக்கமான சாசனங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. இந்தக் கோவிலின் தாங்குதளக்கற்களிலும், குமுதவரிகளிலும், வேறு பகுதிகளிலும் இருக்கும் கல்வெட்டுகள் இக்கோவில் நிர்மாணிக்கப்பட்ட கதையையும் அது நிறுவப்பட்டபோது இருந்த மகோன்னத நாட்களின் சமுதாய அமைப்புகள் பற்றிய விரிவான விளக்கங்களையும் சொல்கின்றன. மேலும் கோவிலுக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளின் பட்டியல்கள், வழிபாடு செவ்வனே நடைபெற செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், கோவிலுக்கு அளிக்கப்பட்ட உலோகத்தாலான சிலைகள், சிலைகளுக்கு உரிய தங்கம் வெள்ளியிலானா அணிகலன்கள், கோவிலின் அதிகாரிகள், அலுவலர்கள், ஏனைய பணியில் இருப்போரின் பெயர்கள், முகவரிகள், சம்பளங்கள் (400 தளிப்பெண்டிர் உட்பட) முழுவதுமே சிறிய சிறிய விவரங்களைக்கூட விட்டுவிடாமல் துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது.

ஆனாலும் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பெரிய கோயில் பலவிதத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறது. கோவிலின் திருச்சுற்று மாளிகை, தெய்வத்திருவுருவங்கள், மகா மண்டபம் சிதைந்துள்ளன. ஆனாலும் அதன் அழகு கொஞ்சமும் குறையவில்லை. ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.

மாலை மயங்கும் நேரத்தில் நாதஸ்வர இசை, தவழ்ந்து வரும் தென்றல், பாலொளிக்கீற்றுக்களுடம் மெல்ல எழும்பி வரும் நிலவு, கருவூர் சன்னதியில் மங்கலகரமாக ஒலிக்கும் அமர்க்களமான பாடல்கள்-இவற்றையெல்லாம் ரசிக்க நீங்களும் ஒரு முறை தஞ்சை வாருங்களேன்!!



 

36 comments:

  1. கோயிலும், நந்தி மண்டபமும், மதில் சுவர்களும், கட்டுமானமும், கலைநயமும் படத்தில் பார்க்கவே மிகவும் பிரமிப்பாக உள்ளன. 3 முறை சென்று வந்துள்ளேன். செய்திகள் யாவும் நன்கு விளக்கமாகவே சொல்லியிருக்கிறீர்கள்.

    எவ்வளவு ஒரு கடும் உழைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. நமது பழைய கலை + கலாச்சார பாரம்பர்யத்திற்கு இவையெல்லாம் நல்ல சான்றுகள்.

    பதிவுக்கு நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  2. மனம் வியந்த மகிழ்ந்த ரசித்த
    அற்புத ஆன்மீகப் பதிவு அம்மா,
    பாறைகளே இல்லாத இடத்தில்
    கற்களை கொண்டு ஒரு
    கலைக் கூடம் அமைத்த
    ராஜராஜ சோழனின் திறமையை
    கலைத் தாகத்தை
    எததனை வியந்தாலும் தகும்
    நன்றி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  3. தஞ்சை கோவில் பற்றி தெரியாத பல விஷயங்கள் உங்கள் பகிர்வு மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. அடுத்த பயணத்தில் நிதானமாக காலையிலேயே வந்து முழு கோவிலையும் ஆற அமரப் பார்க்க வேண்டும்.... சென்ற முறை மாலையில் சென்றதால் ”வந்தோம்... சென்றோம்...” என்று ஆகிவிட்டது.

    ReplyDelete
  4. பிரமிப்பைத் தரும் விவரங்கள். படங்கள் அருமை. இரண்டு முறைகள் சென்றிருக்கிறேன். மீண்டும் செல்லும் எண்ணம் உள்ளது. ஆவலை அதிகரிப்பதாக அமைந்து விட்டுள்ளது உங்கள் பகிர்வு.

    ReplyDelete
  5. மிக அருமை மனோ.. விரிவான பகிர்வு. அற்புதமான தகவல்கள். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு என்னையும் அழைத்துச் சென்று விட்டீர்கள்..:)

    ReplyDelete
  6. மீண்டும் தஞ்சைக்கோவிலுக்கு அழைத்து சென்ற அருமையான படங்களுக்கும் பகிர்வுக்கும் பராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தஞ்சை கோவில் பயணம்- தங்கள் எழுத்தின் மூலம்! மீண்டும் ஒரு குரல்- எங்கிருந்தோ-- தஞ்சைக்கு அழைக்கிறது!
    இத்தனை விஸ்தாரமாக இந்தக் கோவிலைப் பற்றி இது வரை நான் படித்ததே இல்லை!

    Brilliant!

    ReplyDelete
  8. ராஜராஜனின் மகனான ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் இந்த அளவுக்கு வந்திருக்க வேண்டியக் கோவில் . தற்பொழுது நிலை மோசமாக உள்ளது

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    உங்கள் முயற்சி போற்றத்தக்கது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. படங்களும் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  11. கோயில் என்றாலே அது பெருவுடையார் கோயிலைத்தான் குறிக்கும்ன்னு சொல்லுவாங்க.. அந்தளவுக்கு கலையும் பக்தியும் போட்டிபோடும் இடமல்லவா அது!!.

    ReplyDelete
  12. மனம் வியந்து... மகிழ்ந்து... ரசித்த
    அற்புத ஆன்மீகப் பதிவு அம்மா.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு. நிறைய இதுவரை அறியாத தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றிமா.

    ReplyDelete
  14. thanks for this post madam, keep posting

    ReplyDelete
  15. போன வாரம், தான் நித்யா அந்த அம்மன் முன் ‘காமாக்‌ஷி காம ரூபிணி’ என்கிற தீட்சிதை கிருதி பாட, மெய்மறந்த நிலையில் நான்!

    அருமையான பதிவு!

    ReplyDelete
  16. பலமுறை இக்கோவிலுக்குச் சென்று அதன் பிரமாண்டத்தில்
    அசந்துபோய் நின்றிருக்கிறேன்
    ஆயினும் இத்தனை தகவல்கள் தெரியாதுதான்
    பார்த்து வந்திருக்கிறேன்
    கோவிலுக்குள் அழைத்துச் செல்வதைப் போலவே
    பதிவிற்குள் அழைத்துச் சென்ற விதமும்
    படங்களும் மிக மிக அருமை
    நல்ல பதிவைத் தரவேண்டும் என தாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிற
    சிரத்தைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. மாலை மயங்கும் நேரத்தில் நாதஸ்வர இசை, தவழ்ந்து வரும் தென்றல், பாலொளிக்கீற்றுக்களுடம் மெல்ல எழும்பி வரும் நிலவு, கருவூர் சன்னதியில் மங்கலகரமாக ஒலிக்கும் அமர்க்களமான பாடல்கள்-இவற்றையெல்லாம் ரசிக்க நீங்களும் ஒரு முறை தஞ்சை வாருங்களேன்!!

    அருமையாய் அழைத்துச்சென்றீர்கள். நன்றி.

    ReplyDelete
  18. எப்போதோ பார்த்த கோயில்
    இப்போதே பார்த்த உணர்வு
    ஒப்பேதும் இல்லாத ஒன்று
    செப்பேடாய் ஆனது நன்று
    அரிய பதிவு
    உரிய பெருமை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. பிரமிப்பைத் தரும் விவரங்கள். படங்கள் அருமை.

    ReplyDelete
  20. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  21. ரசித்து எழுதிய கருத்துரைக்கு என் அன்பார்ந்த‌ நன்றி சகோதரர் ராஜகோபாலன்!

    ReplyDelete
  22. கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்! உண்மைதான்! தஞ்சை பெரிய கோயிலை, மனதுக்குப் பிடித்தவர்களுடனோ அல்லது ஏகாந்தமாகவோ நிறைய நேரம் இருந்து ரசித்தால் தான் மன நிறைவு கிட்டும்!

    ReplyDelete
  23. பாராட்டுரைக்கு மனங்கனிந்த நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  24. பாராட்டுக்கும் கருத்துக்கும் இதயங்கனிந்த நன்றி தேனம்மை!

    ReplyDelete
  25. பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  26. மீண்டும் உங்கள் பாராட்டு மனதை நெகிழ வைத்த‌து மாதங்கி! என் அன்பு நன்றி!

    ReplyDelete
  27. பாராட்டுக்கு அன்பான நன்றி சகோதரர் ரத்னவேல்!

    ReplyDelete
  28. பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வித்யா!

    ReplyDelete
  29. கருத்துரைக்கு அன்பு நன்றி கார்த்திக்!

    ராஜேந்திர சோழனின் ' கங்கை கொண்ட சோழபுரத்து கோவில்கூட இந்த அளவிற்கு பிரமிப்பைத்தரவில்லையென்றாலும் மிக அழகானதுதான்! ஓரளவு பராமரிக்கவும் செய்கிறார்கள். சமீபத்தில் நான் பார்க்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் சரித்திர ஆராய்ச்சியாளார்களின் கருத்துப்படி ராஜேந்திர சோழன் தன் தலைநகரை த‌ஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றிக்கொன்ட பிற‌குதான் தஞ்சையின் சிறப்பு மெல்ல மெல்ல அழிந்தது என்கிறார்கள்!

    ReplyDelete
  30. நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை அமைதிச் சாரல்! கருத்துரைக்கு இனிய நன்றி!

    ReplyDelete
  31. ரசித்து எழுதிய கருத்துப்பகிர்வுக்கு இனிய நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  32. இனிய கருத்திற்கு அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  33. Thanks a lot for the nice feedback Krishnaveni!

    ReplyDelete
  34. பாராட்டுரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி!

    ReplyDelete
  35. முதல் வ‌ருகைக்கும் வாழ்த்துக்கவிதைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ராமானுஜம்!

    ReplyDelete
  36. இனிய பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி மாலதி!

    ReplyDelete