Sunday, 26 June 2011

தஞ்சை பெரிய கோவில்.. ..

என் ஊரான தஞ்சையின் பெருமிதமிக்க அழகான அடையாளம்தான் தஞ்சை பெரிய கோவில். பெரிய கோவிலுக்கு, எழுத்தாளர் கல்கி அவர்களும் தன் பங்கிற்கு புத்துயிர் கொடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். ராஜராஜ சோழனை தன் எழுத்தால் மீண்டும் மக்கள் மத்தியில் அவர் உலவ விட்டார். என் இளமைப் பருவ நினைவுகளில் கல்கியின் பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழனும் அகிலனின் ‘ வேங்கையின் மைந்தனான’ ராஜேந்திர சோழனும் எப்போதும் வலம் வந்து கொண்டேயிருந்தார்கள்.


வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாபெரும் கோவிலைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் பிரமிப்பும் ஆச்சரியமும் இன்னும்கூட அடங்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகும் அத்தனை கம்பீரமாய், ஏகாந்தமாய் அசத்தும் அழகுடன் நின்று கொண்டிருக்கும் இந்தப் பெருவுடையார் கோவிலைப் பற்றி எழுத வார்த்தைகள் இல்லை. என்றாலும் இந்தப் பெரிய கோவிலினைப்பற்றி ஒரு பதிவிட வேண்டுமென்ற என் கனவை, தாகத்தை கொஞ்சமாவது இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!

இக்கோவில் ராஜராஜ சோழன் காலத்தில் ‘இராஜராஜீஸ்வரம், இராஜராஜேச்சரம்’ என்றழைக்கப்பட்டு, பிறகு நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் ‘ பெருவுடையார் கோயில்’ என்றழைக்கப்பட்டு, பிறகு 17-ம் நூற்றாண்டுகளில் ஆண்ட சரபோஜி போன்ற மராட்டிய மன்னர்களால் ‘பிரஹதீஸ்வரர் கோயில்’ என்றழைக்கப்பட்டது.

ராஜராஜ சோழன் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் காஞ்சிக்கு வெளியே நிர்மாணித்திருந்த கைலாசநாதர் கற்கோயிலின் பேரழகில் மயங்கி " கச்சிப்பேட்டுப் பெரிய தளி' என்று போற்றினார். அப்போது அவர் உள்ளத்தில் எழுந்த எழுச்சி மிக்க கனவே பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோவிலாக உருவெடுத்தது.



விடியற்காலையில் பெரிய கோவிலின் தோற்றம் ..  
 இசை, ஓவியம், சிற்பம், நடனம் எனப் பல கலைகள் கொண்டு திகழ்ந்த ஒரே கோயில் தஞ்சை பெரிய கோயில் மட்டுமே. இக்கோவிலைக்கட்டிய தலைமைச் சிற்பியின் பெயர் குஞ்சர மல்லன். அவன் பெயரும் அவன் கீழ் வேலை செய்த அத்தனை பணியாளர்களின் பெயர்களும் கோவில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோவிலுக்கு மட்டுமேயுள்ள தனிச் சிறப்பாகும். கோவிலைப் பாதுகாக்க 118 ஊர்களிலிருந்து மெய்க்காவலர்கள் வரவழைக்கப்பட்டார்கள். கோவிலில் வழிபாட்டிற்கு பயன்பட்ட கற்பூரம் சுமத்ரா தீவிலிருந்து வரவழைக்கப்பட்டது.

பெரிய கோவில் முழுவதும் கட்டுமானப்பணி 1006ல் தொடங்கி 1010ல் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. தஞ்சாவூர்ப்பகுதி முழுவதும் வயல்வெளிகளும் ஆறுகளும் வாய்க்கால்களும் நிறைந்த பாறைகளே இல்லாத பசுமை நிறையப் பெற்ற சமவெளிப் பிரதேசம். மலைகளோ, கற்களோ கிடைக்காத சமவெளிப்பிரதேசத்தில் அறுபது, எழுபது கல் தொலைவிலிருந்து கற்களைக் கொண்டு வந்து, செம்மண் பிரதேசத்தில் மரம், பூராங்கல், சுடு செங்கல், சாந்து, களிமண், காரை என்று எதுவுமே இல்லாமல் கெட்டிப்பாறைகள் கொண்டு வந்து இத்தனைப்பெரிய கோவிலைக்கட்டியது ராஜராஜ சோழனின் பொறியியல் திறமைக்குச் சான்று!

மண்ணியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, உறுதியான கற்கள் திருச்சியின் மானமலையிலிருந்தும் புதுக்கோட்டை குன்னாண்டார் கோயில் பகுதியிலிருந்தும் பெரிய சிலைகளுக்கான கற்கள் பச்சைமலையிலிருந்தும் பெரிய லிங்கத்திற்கான கல் திருவக்கரையிலிருந்தும் வரவழைக்கப்பட்டு கற்பாறையில்லாத தஞ்சை பூமியில் ஏறத்தாழ 2 லட்சம் டன் எடையுள்ள கற்களைக்கொண்டு 216 அடி உயரமுள்ள ஒரு மலையாகவே ராஜராஜன் பெரிய கோவிலைக்கட்டியுள்ளார்.

இடம் தேர்வானதும் சமய நெறிகள் கடைபிடிக்கப்பட்டு, திசை வாஸ்து பார்க்கப்பட்டு, கோவில் கட்டிய பகுதி முழுவதும் பசுக்களை பல வருடங்கள் கட்டி வைத்து அவற்றின் சாணம் கோமியம் இவற்றால் தோஷங்கள் நீக்கப்பட்டு சுத்தமாக்கி, மண் கெட்டிப்பட யானைகளைக் கட்டி வைத்து பதப்படுத்தி, பூஜைகள் பல செய்து கட்டுமானப்பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இன்று கடைக்கால் நடுவதற்கு முன் நிலத்தைக் கோடுகளால் பிரிப்பது போல, அன்றைக்கு இடத்தை நெல்லால் பரப்பி, கோடுகளும் கட்டங்களும் போட்டு ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, பாறையின் அழுத்தம், தாங்கு திறன் இவற்றை சோதித்து, அவற்றில் விரிசல்கள் ஏற்படுகின்றதா என்பதை கவனித்து கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்படிருக்கின்றன. கோபுரத்தின் உட்பகுதியில் மணலைப் பரப்பி அதன்மீது ஏறி நின்று கொண்டு கட்டுமான வேலைகளைச் செய்து, உச்சி விமான கற்களைப்பதித்த பிறகு மணல் அத்தனையையும் நீக்கியிருக்கிறார்கள்.

மற்ற கோவில்களில் தானங்கள் செய்தவர்கள் பெயர்கள் மட்டுமே கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். ராஜராஜன் காலத்துக் கோயில்களில் மட்டும்தான் தானங்கள் செய்தவர்கள் மட்டுமல்லாது, வேதம் ஓதிய சட்டர்கள், ஆடல் மகளிர், தச்சர்கள், பக்திப்பாடல்கள் இசைத்த பிடாரர்கள், நட்டுவனார்கள், கணக்கர்கள், விவசாயிகள், வணிகர்கள், கோவிலைக்காத்த வீரர்கள் இப்படி அனைவரது பெயர்களும் மன்னனுக்கு இணையாக கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது ராஜராஜ சோழனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. தஞ்சைக்கோவிலைக்கட்டிய குஞ்சர மல்லன், அவன் கீழ் பணி செய்த 1600 தொழிலாளர்கள், அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்த தொழிலாளி அனைவருக்குமே தன் பெயரான ‘ராஜராஜன்’ என்பதையே பட்டப்பெயராக அறிவித்து அவர்களது பெயர்களைக் கல்வெட்டுகளில் பொறித்திருப்பது ராஜராஜனின் விசால மனதுக்குச் சான்று!! மற்ற கோவில்களில் சுற்றுப்புற கோபுரங்கள் பெரியதாயும் கருவறைக்கோபுரம் சிறியதாகவும் இருக்கும். ஆனால் பெரிய கோவிலில் சுற்றுக்கோபுரங்கள் சிறியதாயும் கருவறைக்கோபுரம் பெரியதாயும் அமைந்துள்ள விதம் ‘யுனெஸ்கோ’ இந்தக் கோவிலை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஒரு காரணம்.

இக்கோவிலின் விமானமான ‘ தக்ஷிணமேரு’ 216 அடி உயரமானது. விமானத்தளக்கல்லின் நான்கு மூலைகளிலும் இரண்டிரண்டு நந்திகள் உள்ளன. கோபுரம் முழுவதும் செப்புத்தகடுகளால் போர்த்தி பொன் வேய்ந்து குடமுழுக்கு நடத்தியிருக்கிறார் ராஜராஜர். 216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததை ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியில் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் எதிரிகளின் படையெடுப்பின்போது அவை அத்தனையும் சூறையாடப்பட்டு விட்டது. கருவறைக்கு மேல் மகாமண்டபம் வழியாக இரண்டாம் தளம் சென்றால் அங்கிருந்து கோபுரத்தின் உட்புறம் பிரமிட் வடிவத்தில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து, கடைசியாக 8.7 மீட்டர் பக்க அளவுகள் உள்ள சதுர தளத்தை உண்டாக்கியிருப்பதைப் பார்க்க முடியும். விமானத்தினுள் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கீழ்தளத்தின் உள்ளே இரு சுவர்கள் உள்ளன. அதற்கிடையே உள்ள அகலம் 2 மீட்டர். இரண்டு தளம் வரை அப்படியே சென்று, அதன் பின் சிறிது சிறிதாகக் குறுக்கி ஒரே சுவராக்கியுள்ளனர். அதன் மேல்தான் அந்த வானளாவும் விமானம் நிற்கிறது.


கோபுரத்தின் மேலுள்ள சதுர தளம் ஒரே கல்லினால் ஆனது என்று சொல்லப்படுவதும் சாரப்பள்ளம் என்னும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி 80 டன் எடையுள்ள பிரம்மாந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பதும் நிழல் கீழே விழாத கோபுரம் என்பதும் வளர்ந்து வருகிற நந்தி என்பதும் போன்ற தகவல்கள் அனைத்துமே தவறானவை. சரித்திர ஆராய்ச்சி வல்லுனர்கள் இவையெல்லாமே தவறு என்று நிரூபித்திருக்கிறார்கள்.

தஞ்சை கோவிலின் பயணம் அடுத்த பதிவிலும் தொடர்கிறது .. .. ..

41 comments:

  1. //கோபுரத்தின் மேலுள்ள சதுர தளம் ஒரே கல்லினால் ஆனது என்று சொல்லப்படுவதும் சாரப்பள்ளம் என்னும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி 80 டன் எடையுள்ள பிரம்மாந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பதும் நிழல் கீழே விழாத கோபுரம் என்பதும் வளர்ந்து வருகிற நந்தி என்பதும் போன்ற தகவல்கள் அனைத்துமே தவறானவை. சரித்திர ஆராய்ச்சி வல்லுனர்கள் இவையெல்லாமே தவறு என்று நிரூபித்திருக்கிறார்கள்.//


    அப்படியா ? நந்தி வளர்வது பொய் என்றுத் தெரியும் ஆனால் அந்த ஒரேக் கல் தவறா ??

    ReplyDelete
  2. நிழல் தரையில் விழாது என்பதே சரி என்றெண்ணுகிறேன்

    ReplyDelete
  3. Very interesting post! Keep going

    Balakumaranin 'udayaar' lum ithe kadhaik kalan

    ReplyDelete
  4. Ariya vendiya thagaval... nizhal tharaiyil vizhathu enpathu unmai enndru ninaikkirean....

    ReplyDelete
  5. தஞ்சை பெரிய கோவில் விளக்கங்கள்
    தெரிந்து கொண்டேன். ஏற்கன்வெ பல
    புக் களிலும் ஓரள்வு தெரிந்திருந்தது.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. உங்கள் பதிவில் சிலவற்றை அறிந்துகொண்டேன்..
    பதிவிற்கு நன்றி
    நம்ம பக்கம் காத்திருக்கிறது

    ReplyDelete
  7. தஞ்சைக்கோவில் குறித்த தகவல்கள்
    அனைத்தையும் மிகப் பிரமாதமாக
    தொகுத்துக்கொடுத்துள்ளீர்கள்
    கடைசி பாராவில் சொல்லியுள்ள தகவல்தான்
    கொஞ்சம் புதிது
    நம்பிக்கொண்டிருப்பதும் உண்மையும் பலசமயங்களில்
    இதுபோல் முரண்படுவதுண்டு
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

    ReplyDelete
  8. //தஞ்சைக்கோவிலைக்கட்டிய குஞ்சர மல்லன், அவன் கீழ் பணி செய்த 1600 தொழிலாளர்கள், அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்த தொழிலாளி அனைவருக்குமே தன் பெயரான ‘ராஜராஜன்’ என்பதையே பட்டப்பெயராக அறிவித்து அவர்களது பெயர்களைக் கல்வெட்டுகளில் பொறித்திருப்பது ராஜராஜனின் விசால மனதுக்குச் சான்று!! //

    மனம் வியந்து போனேன்

    பல முறை பார்த்த கோவில் என்றாலும் , பல புதிய தகவல்கள் மனதை ஆச்சர்யப்படுத்துகின்றன

    மிக நல்ல பதிவு அம்மா தொடருங்கள்

    ReplyDelete
  9. மனோ அந்தக் கோவிலின் மீது எனக்கு ஒரு காதலே உண்டு, அங்கு பிறக்கவில்லையாயினும். காவிரிக் கரையில் ஒரு காதல் கதை என்று ஒரு நாவல் தஞ்சை கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை வைத்தே எழுதியுள்ளேன். படித்திருக்கிறீர்களா? அதுவும் மழைநாளில் மழையில் நனையும் கோபுரத்தைக் காண வேண்டும் என்ற ஆவல் இன்று வரை ஈடேறவில்லை. கதையில்தான் தீர்த்துக் கொண்டேன். அருமையான பதிவு.

    எல்.கே., கோபுர கலசத்தின் நிழல்தான் கீழே விழாது. அது அந்த பிரம்மாந்திரக் கல்லின மீதே விழுத்து விடும்.

    ReplyDelete
  10. அன்புள்ள கார்த்திக் அவர்களுக்கு!

    திருச்சியிலுள்ள டாக்டர்.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குனர், டாக்டர்.இரா.கலைக்கோவன் [ இவர் மிகச் சிறந்த ஆய்வாளர், பல அரிய சரித்திர ஆய்வுகளை நடத்தியிருக்கிறார்] தன் ஆய்வாளர்களுடனும் இந்திய தொல்துறையின் அளவீட்டாளர்களுடனும் விமானத்தின் உச்சி வரை ஏறி, இந்த பிரம்மாந்திரக்கல், ஒரே கல்லிலானது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போலத் தோன்றும் விதம் மிக அழகாக இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்.

    ReplyDelete
  11. பல முறை சென்று வியந்து, மகிழ்ந்த கோயில். தஞ்சை பெரிய கோயில் பற்றி தொடர் எழுதுவதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  12. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி போனது... இத்தன வருஷம் போகக்கூடிய தொலைவில் இருந்தும் போக இயலாத சூழ்நிலை... கல்கி அவர்களின் எழுத்த படிச்ச பிறகு-- மறுபடியும் போகணும்-ங்கற ஆசை... சந்தர்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...

    நிறைய புது தகவல்கள்... பகிர்விற்கு நன்றி...

    ReplyDelete
  13. நான் செல்ல விரும்பும் ஒரே கோவில் தஞ்சைப் பெரியக் கோவில்தான். அதைப் பற்றிய தங்கள் பதிவு மிக நன்று.

    பல புதிய தகவல்களுடன் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்....

    ReplyDelete
  14. அருமையான பதிவு.

    ReplyDelete
  15. அடேயப்பா!ஏற்கனவே கொஞ்சம் அறிந்திருந்தாலும் இத்தனை
    தகவல்கள் இப்பொழுதுதான் தெரியும்.பகிர்விற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  16. தஞ்சைப்பெரிய கோயில் பற்றிய ஏராளமான தகவல்களைத் தாராளமாகத் தந்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம்.

    நவீன தொழில் நுட்ப வசதி வாய்ப்புக்கள் ஏதும் இல்லாத காலத்திலேயே, பளு தூக்கும் கிரேன் முதலியவை இல்லாத போதே, எப்படித்தான் இப்படியொரு கல்லால் ஆன கோயிலை இவ்வளவு பிரும்மாண்டமாகக் கட்டி முடித்தார்களோ! அதிசயமான மனித உழைப்புக்கள் அல்லவோ!

    நல்ல சுவாரஸ்யமான பதிவு. தொடருங்கள்.

    ReplyDelete
  17. நிழல் கீழே விழாது என்பதும் தவறா?

    கல்லால் மட்டுமே கட்டப்பட்டது என்றால், கற்களை இணைக்கவும் சாந்து/செம்மண் போன்ற எதுவும் வேண்டாமா?

    அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  18. அந்த தஞ்சை பெரிய கோயிலைப்போன்றே தங்களின் இந்தப்பதிவும் பிரமிப்பூட்டுவதாக மிக அழகான தகவல்கள் மற்றும் படங்களுடன் கொடுத்துள்ளீர்கள்.
    மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
    தொடருங்கள்.

    ReplyDelete
  19. சென்ற அக்டோபர் மாதத்தில் தான் இந்த கோவிலை காண வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இருட்டும் வேளையாகி விட்டதால் பொறுமையாக பார்க்க முடியவில்லை. மீண்டும் சென்று காண வேண்டும்.
    கடைசியில் சொல்லிய தகவல்களை படிக்க ஆச்சரியமாக இருக்கிறது.
    நல்ல பகிர்வுமா. தொடருங்கள்.

    ReplyDelete
  20. பெரிய கோயிலின் கம்பீரத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன்.தஞ்சை பெரிய கோயில் பற்றி இத்தனை நுணுக்கமான தகவல்களை பிரமாதமாக எழுதியுள்ளீர்கள்.

    உங்களின் படைப்பைப் படித்தபின் இன்னும் அதிகமாய் வியக்கிறேன்.

    ReplyDelete
  21. தஞ்சை பெரிய கோவில்... உள்ளே காலடி எடுத்துவைக்கும்போதே மனதில் அமைதி ததும்பும்.... அக் கோவிலைப் பற்றிய விஷயங்களை அழகாய் விளக்கிக் கொண்டு போகும் உங்கள் பாங்கு அழகு... தொடருங்கள்....

    ReplyDelete
  22. very nice post about this temple, great

    ReplyDelete
  23. கருத்துரைக்கு அன்பு நன்றி மாதவி!

    பாலகுமாரனின் 'உடையாரிலும்' நீங்கள் சொல்வது போல இந்த‌ கதைக்களம் அதிகமாக வரும்! பல பாகங்கள் கொண்ட ' உடையார்' படிக்கப் படிக்க பல அரிய தகவல்களைத் தரும்.

    ReplyDelete
  24. கருத்துப்பகிர்வுக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்! கோபுரத்தின் நிழல் கீழே விழுவதை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் படம் பிடித்துக்காட்டி நிரூபணம் செய்திருக்கிறார்கள்! தஞ்சாவூர் பற்றிய பல ஆய்வுப் புத்தகங்களிலும் நீங்கள் இதைக் காண முடியும்.

    ReplyDelete
  25. கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி சகோதரி லக்ஷ்மி!

    ReplyDelete
  26. கருத்துப் பகிர்வுக்கு இனிய நன்றி விடிவெள்ளி! தொடர் பிரயாணங்களால் உங்களுடைய வாலைப்பூ உள்பட அனைத்து வலைத்தளங்களுக்கும் விரும்பியவாறு செல்ல இயலவில்லை. விரைவில் வருகிறேன்.

    ReplyDelete
  27. மனந்திறந்த பாராட்டுரைக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  28. மனம் நெகிழச் செய்த அன்பான பாராட்டுரைக்கு இனிய நன்றி சகோதரர் ராஜகோபாலன்!

    ReplyDelete
  29. வித்யா! நீங்கள் சொல்வது மாதிரியே, எனக்கும் இந்த பெரிய கோவில்மீது காதலே உண்டு! அதுவும் அந்தி வேளையில் நாதஸ்வர இசையின் பின்னணியில் அதன் அழகையும் கம்பீரத்தையும் சினேகிதிகளுடன் வியந்து பராட்டிப் பேசி மகிழ்வது என் நெடுநாளைய பழக்கம்!

    ' காவிரிக்கரையில் ஒரு காதல் கதை' பற்றி அதைப்படித்த பின் உங்களுக்கு நான் ஒரு கடிதம்கூட எழுதியிருக்கிறேன்!

    தஞ்சையில் நான் இருக்கும்போது, ஒரு மழைக்காலத்தில் அவசியம் என் விருந்தினராக வாருங்கள். உங்களின் நெடுநாளைய ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம்!

    ReplyDelete
  30. அன்பான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி மோகன்குமார்!

    ReplyDelete
  31. நீண்ட கருத்துரைக்கு அன்பு நன்றி மாதங்கி!

    தொடர் பிரயாணங்களால் உங்களின் பின்னூட்டத்திற்கு உடன் நன்றி தெரிவிக்க முடியவில்லை. இப்போதும் தஞ்சை வந்திருக்கிறேன். நாளை மறுபடியும் பெரிய கோவிலுக்குச் சென்று ரசிக்கப் போகிறேன்.

    ReplyDelete
  32. மனம் மகிழச் செய்த தங்களின் பாராட்டுரைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் இதயங்கனிந்த நன்றி சகோதரர் அமைதி அப்பா!

    ReplyDelete
  33. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ரத்னவேல்!

    ReplyDelete
  34. கருத்துக்கு அன்பு நன்றி ராஜி! இந்தக் கருத்துக்களைப் படித்த பிறகு மறுபடியும் தஞ்சை கோவிலைப்பார்த்தால் புதிய கோண‌த்துடன் ரசிக்க முடியும்!

    ReplyDelete
  35. அன்பான பாராட்டிற்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  36. உண்மைதான் ஹுஸைனம்மா! நிழல் கீழே விழாது என்பதை ஆய்வாளர்கள் நிரூபணம் செய்திருக்கிறார்கள்! இந்த கோவில் நிர்மாணமும் அப்படிப்பட்ட பல அதிசயங்களை தாங்கியுள்ளது! இதன் முக்கிய சிறப்பே, இந்த கோவிலின் இத்தனை அழகிய பிரம்மாண்டமான நிர்மாணத்திற்கு, தன்னை மட்டுமே முன்னிறுத்திக்கொள்ளாமல் இதை நிர்மாணிக்க உதவிய அத்தனை தொழில் வல்லுந‌ர்களுக்கும் அவர்கள் பெயர்களை இந்தக் கோவிலேயே கல்வெட்டுக்களாய்ப் பொறித்து பெருமையும் மரியாதையும் செய்திருக்கிறார் ராஜராஜ சோழன்!இது எந்தக் கோவிலும் காண‌ முடியாத ஒன்று!

    ReplyDelete
  37. பாராட்டிற்கும் கருத்துக்கும் அன்பான நன்றி ஆதி! விடியற்காலைப்பொழுதில் தஞ்சை கோவிலுக்கு சென்றால் அமைதியாக ரசிக்க முடியும்! மறுபடியும் வந்து பாருங்கள்!

    ReplyDelete
  38. இனிய பாராட்டுரைக்கு அன்பு நன்றி சகோதரர் எல்லென்!

    ReplyDelete
  39. நீங்கள் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் வெங்கட் நாகராஜ்! தஞ்சை பெரிய கோவிலில் காலடி எடுத்து வைக்கும்போதே அமைதியை மனம் உணரும் என்பதை பலரும் என்னிடம் பகிர்ந்திருக்கிறரகள்! பாராட்டுரைக்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  40. Thanks a lot for the nice compliment Krishnaveni!

    ReplyDelete
  41. //கோபுரத்தின் மேலுள்ள சதுர தளம் ஒரே கல்லினால் ஆனது என்று சொல்லப்படுவதும் சாரப்பள்ளம் என்னும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி 80 டன் எடையுள்ள பிரம்மாந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பதும் நிழல் கீழே விழாத கோபுரம் என்பதும் வளர்ந்து வருகிற நந்தி என்பதும் போன்ற தகவல்கள் அனைத்துமே தவறானவை. சரித்திர ஆராய்ச்சி வல்லுனர்கள் இவையெல்லாமே தவறு என்று நிரூபித்திருக்கிறார்கள்.//

    இதை வீடியோ ஆதாரத்தோட நிரூபிச்சிருக்காங்க..ஒளிபரப்பானப்ப பார்க்க நேரிட்டது.

    தஞ்சை கோயிலுக்கு ஒருதடவை போயிருக்கேன். இன்னொருக்கா நிதானமா போயி கலையதிசயங்களை கண்டு களிக்கணும்.

    ReplyDelete