Friday, 22 April 2011

பிராயச்சித்தங்கள் நியாயங்களாவதில்லை!

 மெல்லப்பரவி வரும் இருளில் என் ஹோட்டல் ‘ப்ரியா’ வண்ன விளக்குகளின் பின்னணியில், செயற்கை நீரூற்றுக்களின் ஒளிச்சிதறல்களிடையே தனி அழகுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து விலகி, அரையிருளில் கிடந்த ஒரு நற்காலியில் அமர்ந்தவாறு, ஆங்காங்கே பணி புரிந்து கொண்டிருந்தவர்களது சுறுசுறுப்பையும் பலதரப்பட்ட உனர்ச்சிக்குவியல்கள் அடங்கியிருந்த ஜனத்திரளையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று முதுகில் யாரோ தட்டியதும் சற்று கோபத்துடன் திரும்பினேன்.

“ராமு!”

“ செல்வம்! எத்தனை நாட்கள், வருஷங்கள் ஆகி விட்டன நாம் சந்தித்து! முதலில் நீதானா என்று சந்தேகமாகவே இருந்தது எனக்கு! பிறகு இது என் செல்வத்தைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று உறுதியாகத் தெரிந்து விட்டது.. ..”

அவன் முகத்தில் பொங்கி வழிந்த மகிழ்ச்சியைப்பார்த்தபோது என் மனதில் ஏற்பட்டது மகிழ்வா, ஆத்திரமா, கசப்பா என்று எனக்கே தெரியவில்லை. முறிந்து போனதாக நினைத்திருந்த நட்பு, ‘ மறுபடியும் இது துளிர்க்கும்’ என்பது போலல்லவா இவன் சிரிக்கிறான்!

இருவரும் குளிர்பானம் அருந்திக்கொண்டிருந்தபோது, ராமு மெதுவாகத் தயக்கத்துடன் கேட்டான்.

“ அவள்..அவளை.. .. நீ எங்காவது பார்த்தாயா?”

ராமுவையே உற்று நோக்கிக்கொண்டிருந்த என்னுள் கோபம் திரண்டெழுந்தது.

“ அவள் என்றால் யார் ராமு? இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால்.. உன்னால் கருகிப்போன யாரைப்பற்றியாவது கேட்கிறாயா?”

ராமு என் கரங்களைப்பற்றி அழுத்தினான்.

“ ப்ளீஸ்.. செல்வம்.. ..ப்ளீஸ்”

என்னால் ஏனோ என்னைக்கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

“ அவளை முதன் முதலில் பார்த்தபோது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? வைகறைப்பொழுதின் மலர்ந்தும் மலராத ஒரு பரிசுத்தமான பூவின் நினைவுதான் தோன்றியது எனக்கு. இத்தனை அழகாக, குழந்தையாகச் சிரிக்கும் இவளை நேசிக்கத் தெரியுமா உனக்கு என்றுதான் நினைத்தேன் ராமு! நீ அப்போது என்ன சொன்னாய்? இது உன்னுடைய வழக்கமான பலவீனம் இல்லையென்றாய். உன்மையாகவே அவளைக்காதலிப்பதாகச் சொன்னாய். என்னால் மேலே வாதாட முடியவில்லையே தவிர, நான் உன்னை நம்பவேயில்லை ராமு!”

“ ப்ளீஸ்.. .. செல்வம்! குரங்கு கையில் பூமாலையாய் அவள் சிதறிப்போனது என்னால்தான்.. .. எதற்கு செல்வம் பழைய குப்பையைக் கிளறுகிறாய்?”

“ ராமு! என்னைக் கொஞ்சம் பேச விடு. இருபது வருடங்களாக அழுத்திக்கொண்டிருந்த மனச் சுமை இந்த நிமிடம்தான் இறங்கிக் கொண்டிருக்கிறது, தெரியுமா உனக்கு? நீங்கள் எவ்வளவோ சிரித்தாலும் நெருக்கத்திலிருந்தாலும் என்னால் அதையெல்லாம் நிதர்சனமாக ஏற்றுக்கொள்ள‌ முடிந்ததே இல்லை. என் மனதில் ஏதோ ஒன்று, இது சீக்கிரமே காற்று போன பலூனாகப் போகிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை மறுபடியும் வேறொருத்தியுடன் பார்க்கப் போகிறேன் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

ராமு இடை மறித்து மெதுவாகப்பேசினான்.

" அன்றைக்குக் கொதித்துப்போய் நீ கூறிய வார்த்தைகள் என் நெஞ்சில் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன, செல்வம்! நீ கூறினாய், ' நீ மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறாய்! உன் இளமையின் பலத்தாலும் தான் என்ற கர்வத்தாலும் இன்னும்கூட மேலே மேலே பறப்பாய்! ஆனால் கீழே இருப்பது தரைதான். களைப்புடன் என்றாவது நீ  இறங்கும்போது நிச்சயம் உன்னை வரவேற்க யாருமே இருக்க மாட்டார்கள் ' என்று கூறினாய். உண்மைதான் செல்வம்! நான் இப்போது கீழே தான் இருக்கிறேன். என் மனைவியையும் இழந்து, கண்ணுக்கெட்டியவரை யாருடைய உன்மையான அன்பின் துணையில்லாமல் தனியாக‌ நிற்கிறேன். உயரத்தில் கூடப்பறந்தவர்கள் எல்லாம் உண்மையான துணைகள் இல்லை என்பதை இப்போது என்னை சுடும் தனிமையில்தான் உணர்கிறேன் செல்வம்!"
 
அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து சிதறியது!

" ராமு! என்ன இது?"

" செல்வம்! என் குழந்தையைப்பற்றி.. .. ஏதாவது தகவல்.. .. உனக்குத் தெரியுமா?"

மறுபடியும் எனக்கு கோபம் பொங்கி எழுந்தது.

" எந்தக்குழந்தை? 'இந்தக் குழந்தை என்னுடையதுதான் என்று எனக்கெப்படித் தெரியும்' என்று அன்றைக்குக் கேட்டாயே, அந்தக் குழந்தையா? அது எப்போதிலிருந்து உன்னுடையதாயிற்று.. ..?"

"ப்ளீஸ்.. .. என்னை வதைக்காதே... .."

ராமு சோர்ந்து போய் அமர்ந்திருந்தான். கலங்கியிருந்த அவனது முகத்தைப்பார்த்த போது, கோபத்தையும் வருத்தத்தையும் மீறி அவன் மனதிற்கு இதமாக ஒரு மகிழ்ச்சியைத் தரவேண்டும்போல் இருந்தது எனக்கு.

" ராமு! அவள்..ராஜி இங்கு தானிருக்கிறாள். அவள் மகனுக்கும் அதாவது உன் மகனுக்கும் என் மகளுக்கும் வெகு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.. .."

சற்று நேரம் என்னையே வெறித்து நோக்கியவனின் கண்களில் மெதுவாக பனி படர்ந்தது. உணர்ச்சியுடன் என் கரங்களை பற்றினான்.
 
" செல்வம்! உனக்கு எப்படி என் நன்றியைத் தெரிவிப்பதென்றே தெரியவில்லை. நான் இழந்த நிம்மதியை, மகிழ்ச்சியை நீதான் மீட்டுக்கொடுத்திருக்கிறாய்.அவள்.. ராஜி எங்கிருக்கிறாள் செல்வம்?"

" நீ அவளைப் புறக்கணித்து வேறொருத்தியை மணந்து சென்ற பிறகு, நான் அவளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். அவள் மேலே ப‌டித்து, இப்போது கல்லூரியொன்றில் விரிவுரையாளராக வேலை செய்கிறாள். உன் மகன் மேற்படிப்பிற்காக ஜெர்மனி சென்றிருக்கிறான்.. .."

அவன் முகத்தில் பலதரப்பட்ட உணர்ச்சிகள்! கண்கள் கலங்க என்னை நிமிர்ந்து பார்த்தான்.

" செல்வம்! எனக்கு அவளைப்பார்க்க வேன்டும். பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும்..."

"அண்ணா!"

சரேலென்று திரும்பினேன் நான். ஐயோ! இவள் எதற்காக இங்கே வந்தாள் இப்போது?

" அண்ணா! எங்கள் கல்லூரியிலிருந்து விலகிப்போகும் ப்ரின்ஸ்பாலுக்கு நம் ஹோட்டலில்தான் பார்ட்டி ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காகத்தான் நான் அவசரம் அவசரமாக இங்கே வந்தேன் இப்போது! நீங்கள் ஏன் இங்கே தனிமையில் உட்.. .."
என் அருகில் யோரோ அமர்ந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தவளாய் சட்டென்று பேச்சை நிறுத்தினாள். நிறுத்தியபோதே அமர்ந்திருப்பது யாரென்று புரிந்து விட்ட நிலையில் உறைந்து போய் சலனமின்றி நின்றாள்.

" நான் அப்புறம் வந்து உங்களிடம் பேசிக்கொள்கிறேன்.. .."

வேகமாகத் திரும்பி நடந்தவளை ராமுவின் வார்த்தைகள் நிறுத்தின.

"ராஜி! உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேன்டும்.. .."

என் அருகேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். வேகமாக எழுந்த என்னையும் அதட்டினாள்.

" அண்ணா! நீங்களும் இருங்கள். அவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். அதை உங்கள் முன்னேயே கூறட்டும்.."

ராமுவின் கண்கள் கலங்கின.

" ராஜி! இத்தனை நாட்களாய் உனக்குக் கொடுக்கத் தவறிய வாழ்க்கையை இனியாவது கொடுத்து.. .. அதன் மூலமாவது உன் மன்னிப்பு எனக்குக் கிடைக்குமா?"

அவள் மெதுவாகச் சிரித்தாள்.

" என்னை நீங்கள் இன்னும் சரியாக கவனிக்கவில்லை. என் நெற்றியில் குங்குமமில்லை. என் உடலில் வெள்ளை நிறப்புடவைதான் இருக்கிறது. பார்க்கவில்லையா நீங்கள்?"

" ராஜி.. .. .."

" இது எனக்கு நானே போட்டுக்கொண்ட வேஷம். வெளியுலகத்திற்குத்தான் வேஷமே தவிர, என்னைப்பொறுத்தவரை என் உண்மையான நிலையும் இதுதான். பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத நிலையில், உங்களையே நம்பி, என்னை வளர்த்த பெரியப்பாவை விட்டு வெளியேறி வந்த என்னை, முழுவதுமாக வாசத்தையெல்லாம் நுகர்ந்து விட்டு, ஒரு குழந்தையையும் பரிசாகக் கொடுத்து விட்டு நீங்கள் வேறு மலருக்குத் தாவி விட்டீர்கள். எனக்காகப் பரிந்து பேச வந்த அண்ணாவிடம் இந்தக் குழந்தையையே சந்தேகித்துக் கேட்ட பிறகு என்னிடமிருந்த எல்லாமே செத்து விட்டன. வெளியுலகின் பேச்சுக்களைத் தவிர்க்க உங்களையும் சாகடித்து விட்டேன். உங்களின் கேள்விக்கு இதுதான் பதிலும்கூட!"

அவளின் பேச்சு என்னை பிரமிக்க வைத்தது.

'சொன்ன மொழி தவறு மன்னனுக்கே எங்கும் தோழமையில்லை' என்னும் வரிகளை அவள் நிதர்சனமாக்கி விட்டாள்.

 என் பிரமிப்பு அவனின் கெஞ்சுதலால் கலைந்தது.

" என்னுடைய தவறுகளுக்கு, நான் உனக்கு இழைத்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தம் செய்ய ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க மாட்டாயா ராஜி?"

அவள் அமைதியுடன் அவனை நோக்கி புன்னகைத்தாள்.

" தழும்பாகிப்போன மனக்காயங்களுக்கு என்ன பிராயச்சித்தங்கள் செய்ய முடியும் சொல்லுங்கள்? ஏனென்றால் பிராயச்சித்தங்கள் என்றுமே நியாயங்களாவதில்லை. பிராயச்சித்தங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மனது சொல்லும் தீர்ப்புகள்தானே தவிர பாதித்தவர்களது தனி நியாயங்கள் அல்ல!"

இருவரும் பேச்சிழந்து நிற்க, அவள் மெதுவாக விலகி நடந்தாள்.


பின் குறிப்பு:

மே 1983ல் 'பாரதி' என்ற எனக்குப்பிடித்தமான புனைப்பெயரில் ஆனந்த விகடனில் வெளியான சிறுகதை இது.
ஓவியர் ராமு அழகாக படம் வரைந்திருந்தார்.

இது ஒரு உண்மைக்கதையும் கூட! ஆனால் நிஜக்க‌தாநாயகி என் கதையின் நாயகி போல அமைதியாய் விலகி இருக்கவில்லை. இக்கதை வெளி வந்த பிறகு சில வருடங்கள் கழித்து, நாயகனுக்கெதிராய் வழக்கு போட்டு அதில் ஜெயிக்கவும் செய்தாள்.அதனால் நாயகனின் நல்ல வேலையை அவன் இழக்கவும் காரணமானாள். 

35 comments:

  1. நல்ல சிறுகதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மனசு ரொம்ப வலிக்குது படித்து விட்டு....

    ReplyDelete
  3. மிக மிக அருமை
    கதை சொல்லிப்போகும் விதத்தில் இருந்தே
    இது கற்பனைக் கதையில்லை என்பது
    தெளிவாகத் தெரிந்து போகிறது
    ஒவ்வொரு வார்த்தையிலும் அத்தனை ஜீவன்
    பின் குறிப்பு கொடுத்தது நல்லது
    அது கொஞ்சம் மனபாரம் குறைத்துப் போனது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. 'சொன்ன மொழி தவறு மன்னனுக்கே எங்கும் தோழமையில்லை' என்னும் வரிகளை அவள் நிதர்சனமாக்கி விட்டாள்.//
    பிராயச்சித்தங்கள் என்றுமே நியாயங்களாவதில்லை. // Good story.

    ReplyDelete
  5. ' நீ மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறாய்! உன் இளமையின் பலத்தாலும் தான் என்ற கர்வத்தாலும் இன்னும்கூட மேலே மேலே பறப்பாய்! ஆனால் கீழே இருப்பது தரைதான். களைப்புடன் என்றாவது நீ இறங்கும்போது நிச்சயம் உன்னை வரவேற்க யாருமே இருக்க மாட்டார்கள் ' என்று கூறினாய். உண்மைதான் செல்வம்! நான் இப்போது கீழே தான் இருக்கிறேன். என் மனைவியையும் இழந்து, கண்ணுக்கெட்டியவரை யாருடைய உன்மையான அன்பின் துணையில்லாமல் தனியாக‌ நிற்கிறேன். உயரத்தில் கூடப்பறந்தவர்கள் எல்லாம் உண்மையான துணைகள் இல்லை என்பதை இப்போது என்னை சுடும் தனிமையில்தான் உணர்கிறேன் செல்வம்!"


    ......வாழ்க்கை கற்று தரும் பாடங்களில் இதுவும் உண்டு.

    ReplyDelete
  6. தழும்பாகிப்போன மனக்காயங்களுக்கு என்ன பிராயச்சித்தங்கள் செய்ய முடியும் சொல்லுங்கள்? ஏனென்றால் பிராயச்சித்தங்கள் என்றுமே நியாயங்களாவதில்லை. பிராயச்சித்தங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மனது சொல்லும் தீர்ப்புகள்தானே தவிர பாதித்தவர்களது தனி நியாயங்கள் அல்ல!"


    ...WOW!!!

    ReplyDelete
  7. மேடம், இந்தக்கதை மிகவும் நன்றாக இருக்கிறது.
    ஆனந்த விகடனில் பிரசுரம் ஆனது இன்னும் சந்தோஷமாக உள்ளது. பாரதி என்ற உங்களின் அன்றைய புனைப்பெயரும் இந்தக்கதைக்கு மிகவும் பொருத்தமாகவே உள்ளது. தலைப்பு அதைவிட பொருத்தமாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  8. உங்கள் ஆரம்பகாலப் படைப்புக்களை மீண்டும் படிக்கக் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  9. 1983-யா, அதானே பார்த்தேன், எதற்கு //என் நெற்றியில் குங்குமமில்லை. என் உடலில் வெள்ளை நிறப்புடவைதான் இருக்கிறது. // இதெல்லாம் என நினைத்தேன்.
    அருமையான கதை!

    ReplyDelete
  10. பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  11. அன்பான கருத்துக்கு இனிய நன்றி சகோதரர் நாஞ்சில் மனோ!!

    ReplyDelete
  12. வழக்கம்போல உங்களின் ஊக்குவிப்பும் பாராட்டும் மனதில் நிறைவைத் தருகிறது சகோதரர் ரமணி!!
    இதயங்கனிந்த நன்றி!

    ReplyDelete
  13. பாராட்டிற்கு இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!

    ReplyDelete
  14. பொட்டில் அடிப்பது போன்ற கடைசி வரிகள். நாயகன் மனைவி இறக்காமல் இருந்திருந்தால் இந்த பிராயச்சித்த எண்ணம் அவனுக்கு வந்திருக்குமா? சுயநலப் பிராயச்சித்தங்கள்.

    ReplyDelete
  15. கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சித்ரா!

    ReplyDelete
  16. அனைத்துப்பாராட்டுக்களுக்கும் மனங்கனிந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

    ReplyDelete
  17. கருத்துக்கு அன்பு நன்றி இமா!

    ReplyDelete
  18. பாராட்டிற்கு அன்பு நன்றி மாதவி!
    உண்மைதான்! அந்தக்காலத்தில் இப்படித்தான் கணவனை இழந்தவரை அடையாளம் காட்டுவார்கள்! அதையொட்டித்தான் இப்படி எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  19. அக்கா,என்பதுகளில் வெளிவந்த உங்கள் படைப்புகளை மீண்டும் இங்கு காண்பதில் மக்ழ்ச்சி.தொடருங்கள்.எழுத்து நடை அருமை.

    ReplyDelete
  20. மிக அருமையாகவும், பொறுமையாகவும் எழுதியிருக்கிறீங்க மனோ அக்கா, நன்றாக இருக்கு.

    ReplyDelete
  21. மனோ அக்கா தலைப்பே சிந்திக்க வைத்தது, நல்ல படைப்பு..

    ReplyDelete
  22. கதை பிரமாதம்..அதனையும் விட, பின் குறிப்பில் உள்ள நிகழ்வின் யதார்த்தம் அதை விட சூப்பர்...!!

    ReplyDelete
  23. அன்பு அக்கா உணமைதான் நாம் செய்யும் தவறுகளுக்கு ப்ராயசித்தமும், பரிகாரமும் தான் அதுவும் மனகாயங்கள் ஆறும் போட்டால்தான் பலன் அளிக்கும் ஆனால் காலத்தினால் காயங்கள் ஆறி தழும்பான பிறகு ??? இதில் எந்த மருந்தும் வேலை செய்யாதுதான்.

    இதைதான் simply E=Mc^2 என சொல்லலாம்!

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  24. நல்ல கதைக்கு பாராட்டுகள் அம்மா.

    ReplyDelete
  25. மனதில் அறைந்த கதை...நல்ல நடை,மேடம்..

    ReplyDelete
  26. மனோ அக்கா ஊரில் இருந்து வந்தாச்சா? தொடர்ந்து கதை எழுதுங்க..

    ReplyDelete
  27. ஸ்ரீராம். said...

    "பொட்டில் அடிப்பது போன்ற கடைசி வரிகள். நாயகன் மனைவி இறக்காமல் இருந்திருந்தால் இந்த பிராயச்சித்த எண்ணம் அவனுக்கு வந்திருக்குமா? சுயநலப் பிராயச்சித்தங்கள்."

    உண்மைதான்! இந்த மாதிரி சுயநல பிராயச்சித்தங்கள் தழும்பாகிப்போன காயங்களுக்கு எப்படி மருந்தாக முடியும்?
    கருத்துக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  28. கருத்துக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஸாதிகா!

    ReplyDelete
  29. அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி அதிரா!

    ReplyDelete
  30. கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி!
    எப்போதுமே வாழ்வின் யதார்த்தங்கள் கற்பனையைக்காட்டிலும் அதிர வைக்கும். இந்தக்கதையும் கூட அப்படித்தான்!

    ReplyDelete
  31. அன்புச் சகோதரர் ஹைஷ்!
    ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே பார்க்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி!
    அன்பான கருத்துக்கும் இனிய நன்றி!!

    ReplyDelete
  32. மிக அருமையான கதை, பாரட்டுக்கள்,உள் கருத்து உண்மைகதை உயிரோட்டம் அதிகமாக இருக்கு.
    உங்களுக்கு ஒரு அவார்டு காத்து கொண்டு இருக்கு வந்து பெற்று கொள்ளுஙக்ள்
    இன்னும் ஊரில் இருந்து வரவில்லையாமனோ அக்கா?

    ReplyDelete
  33. பாராட்டுக்களுக்கும் விருதுக்கும் அன்பு நன்றி ஜலீலா! விரைவில் வ‌ந்து பெற்றுக்கொள்கிறேன். மே முத‌ல் வாரம்தான் ஷார்ஜா திரும்ப முடியுமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  34. இண்ட்லியில் எனது இந்தப்பதிவில் இணைந்து அன்புடன் ஓட்டும் அளித்த அன்புத் தோழமைகள்

    vengkat waakaraaj, Nanjil mano, chithra, sriramanandhaguruji, KarthikVK, Madhavi, Vai.GoplakirushNan, Vadivelan, RDX, Bsr, Inbathurai, easylife, Subam, Jolleyjegan, Ambuli, Spice74, Hihi12, Vivek, Ashok, Pirasha, Sura, Asiya, Haish

    அனைவருக்கும்மனங்கனிந்த நன்றி!!

    ReplyDelete