Thursday, 24 March 2011

நம் உயிர் நம் கையில்!

வீட்டிலுள்ள என் சிறிய நூலகத்தில் பழைய நாவல் ஒன்றைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தற்செயலாக பழைய வார இதழ்த் தொகுப்பு ஒன்றில் இந்த செய்தியைப் படிக்க நேர்ந்தது. மருத்துவ உலகத்தில் எத்தனை எத்தனையோ புரட்சிகள், புதிய கன்டு பிடிப்புகள் என்று தினம் தினம் ஏற்பட்டுக்கொன்டே இருக்கின்றன. ஆனாலும் இந்த செய்தி எனக்கு மிகவும் புதிய செய்தியாக இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே நடைபெற்ற உண்மை சம்பவம் இது. இந்த சிகிச்சை இன்னும் நடைமுறையில் இருக்கிறதா, இந்த சிகிச்சையில் இன்னும் பல மாற்ற‌ங்கள் ஏற்பட்டிருக்கின்ற‌னவா என்று தெரியவில்லை. யாராவது ஒரு மருத்துவர் இதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். மயிர்க்கூச்செரியும் இந்த அனுபவத்தை நான் இங்கே என் அன்புத் தோழமைகளிடம் பகிர்ந்து கொள்கிறேன். எந்த வியாதியும் துன்பமும் வெறும் நிவாரணங்களினால் மட்டும் தீர்ந்து விடாது. அதற்கு மேல் மனதில் தைரியமும் தளராத நம்பிக்கையும் இருக்க வேன்டும். அப்போதுதான் துன்பங்களையும் வியாதியையும் எதிர்த்து ஒரு மனிதனால் போராட முடியும். அப்படி போராடிய மனிதன் கதை இது.

1985ம் வருடம் நடந்த கதை இது. இவர் பெயர் காந்தி சாமுண்டீஸ்வரன். இளைஞர். ஒரு புத்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் ஆட்டோ விபத்தில் சிக்கி, தோள் சதை பிய்ந்து மருத்தவ மனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அனைத்து விதமான சிகிச்சைக்ள் செய்தும் காயங்கள் ஆறாமல் இருக்கவே, பல்வேறு சோதனைகளின் முடிவில் மருத்துவர்கள் அவருக்கு ' பிளாஸ்டிக் அனிமியா' இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய 'பிளேட்லெட் ' ரத்த அணுக்கள் அவருக்கு மிகவும் குறைவாக இருந்தன. சராசரியாக ஒரு கனமில்லி மீட்டரில் இருக்க வேன்டிய 1.5 லட்சம் பிளேட்லெட்டுக்களுக்கு பதிலாக சுமார் 35000 தான் இருந்தன. ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜையும் இறுகி விட்டது. பல வித சிகிச்சைகள் அளித்தும் சரியான பலன் அளிக்காமல் மீதமிருக்கிற ஒரே ஒரு வழியைத்தான் மருத்துவ நிர்வாகம் அவருக்குச் சொன்னது.

20 நாட்களுக்கு ஒரு முறை அவர் இரத்தம் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. காந்திக்கு ரத்தம் ஏற்றிக்கொள்வது வழக்கமாகிப் போனது. உடலில் ரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள் குறையும்போது,கண்கள் இருண்டு மயங்கி கீழே விழுவார்.பிறகு மருத்துவமனையில் கண் விழிப்பார். யாராவது ரத்தம் ஏற்றிக்கொன்டிருப்பார்கள். இதற்கு தீர்வும் முறையான சிகிச்சையும் கிடையவே கிடையாதா எனப் பார்க்காத மருத்துவமும் தேடாத மருத்துவரும் எதுவுமே இல்லாமல் போயின‌. கடைசியில் வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையின் குருதியல் துறை மருத்துவர், டாக்டர் மாமன் சான்டி, ஒரு மருந்து இருப்பதாகச் சொன்னார். 'இந்த மருந்துக்கு நோய் தீர்க்கும் உறுதி 50 சதவிகிதம்தான் என்பதையும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதையும் மருந்து வெளி நாட்டிலிருந்துதான் தருவிக்க வேண்டுமென்பதையும் சொன்னார்.

குதிரையின் சீரம்தான் அது!

காந்திக்கு வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. மருந்து பற்றி விசாரித்தபோது, அது அன்றைய தேதியில் 1700 டாலர்கள் என்று சொல்லப்பட்டது. ஏற்கனவே கைக்கு மீறிய செலவுகளால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்க்கு நண்பர்கள், தந்தை, புத்தக வெளியீட்டார்கள் என்று பலரும் உதவினார்கள். மருந்தும் ஒரு விமானி மூலம் தில்லி வந்து சேர்ந்தது. ஆனால் அதை வெளியில் எடுத்து வர போராடினார்கள். சுங்க வரி 24% கட்ட வேண்டும் என்றார்கள். இங்கிலாந்து மருத்துவர்களும் இந்திய மருத்துவர்களும் அது உயிர் காக்கும் மருந்து என்று சான்று கூறினாலும் அரசின் உயிர் காப்பு மருந்துப்பட்டியலில் லிம்ப்போகுளோபின் என்ற இந்த மருந்து இல்லை. ஒரு மத்திய அமைச்சர் உதவியுடன், உத்தரவாதம் அளித்து படாத பாடுபட்டு மருந்தை வெளியில் கொன்டு வந்தார்கள்.

அந்த மருந்து இந்தியாவிற்கும் புதிது. மருத்துவர்களுடன் சேர்ந்து காந்தியும் அந்த மானுவல் புத்தகத்தைப் படித்தார்.
இந்த மருந்தில் ஒரு மில்லி மீட்டர் அளவு எடுத்து ஒரு பாட்டில் சலைனில் கலந்து முதலில் பரிசோதனைக்காக செலுத்த வேண்டும். செலுத்திய சிறிது நேரத்தில் தலைமுடி, உடலிலுள்ள‌ முடிகள் விறைக்கும்.பயங்கரமாக உடல் அரிப்பெடுக்க ஆரம்பிக்கும். நாடித்துடிப்பு குறைந்து கொண்டே வரும். கடுமையாகக் குளிரும். குதிரையின் சீரத்தை உடம்பு ஏற்றுக்கொண்டதும் மீண்டும் உடலில் வெப்பம் கூடி, நாடித்துடிப்பு சீரான நிலைமைக்கு வரும். அதன் பின் நாள்தோறும் 5 எம்.எல் மருந்து செலுத்த வேண்டும்.

காந்திக்கு இது எப்படியும் முடியலாம் என்று புரிந்தது. 'எனக்கொரு ஆசை. நான் என் இதயத்துடிப்பை கண்ணால் பார்த்துக்கொன்டே இருக்க வேன்டும்' என்றார். அவரது ஆசையை ஒத்துக்கொண்ட டாக்டர் மாமன் சாண்டி அவர் அருகில் ஒரு மானிட்டரை வைக்க ஏற்பாடு செய்தார். நர்ஸ் அதைப்பற்றி விளக்கிச் சென்றார்.

அவர் கூறியவை காந்தியின் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.

" பாருங்க, இந்த மானிட்டரில் உங்க இதயத்துடிப்பின் கிராஃபிக் தெரியும். எழுபது இருந்தா நார்மல். மருந்து சாம்பிள் டெஸ்டில் பல்ஸ் 40க்கு கீழே இறங்கும். அதுக்கும் கீழே போனால் மூச்சு திணறும். கீழே நேர்க்கோடாகி விட்டதுன்னா கொஞ்ச தூரம் அப்படியே போய் புள்ளியா நின்னுடும், அவ்வளவு தான்"

காந்திக்கு அந்த மருத்து மனை முழுவதும் ஒரு நண்பர் கூட்டமே இருந்தது. அவரது தந்தையின் பல்கலைக் கழகப்பணியால், வேளாண்மை மருத்து மாணவர்கள் நிறைய பேர் புதிதாய் ரத்தம் கொடுக்கக் காத்திருந்தார்கள். மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு ரத்த அணுக்கள் உடலில் ஏற்றப்பட்டு தயார் நிலையில் அவர் வைக்கப்படார். மருத்துவ மனை முகப்பிலுள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. காந்தியுடன் அவரைப்போலவே நோய் கொண்ட 42 வயது, 25 வயது ஆண்கள், 12 வயது சிறுமி என்று மூன்று பேர் இந்த சாம்பிள் டெஸ்டிற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்கள். காந்திக்காக வரவழைக்கப்பட்ட மருந்தில் பரிசோதனைக்காக தயாரானார்கள்.

குதிரையின் சீரம் கலக்கப்பட்ட சலைன் காந்தியின் உடலில் செலுத்தப்பட்டது. என்னென்ன நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்ததோ, அத்தனையும் நடக்க வேண்டும்னெறு மனசு பிரார்த்தனை செய்தது. உடல் அணுக்களிலெல்லாம் இந்த மருந்தை ஏற்றுக்கொள் என்று மனசு கெஞ்சி அலைந்தது.

சிறிது நேரத்தில் முடி ஜிவ்வென்று விறைத்து குத்திட்டு நின்றது. காந்தி சந்தோஷம் தாங்காமல் விறைத்து நின்ற முடியைத் தடவினார்.

பக்கத்தில் படுத்திருந்த 12 வயது சிறுமிக்கு மருந்தின் எதிர் விளை
வால் கண், காதுகளில் உள்ள‌ சிறு சிறு நரம்புகள் உடைந்து ரத்தப் பெருக்கு அதிகமாக ஏற்பட, அவளை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

காந்திக்கு அரிப்பு ஏற்பட்டதும் கைகள் கட்டப்பட்டன. குளிர் எடுத்ததும் உடலில் போர்வைகள் போர்த்தப்பட்டன. 
இதயத்துடிப்பு குறைய ஆரம்பித்ததும் மூச்சுத் திணறல் ஆரம்பித்தது. மார்புக்குள்ளே ஒரு வெற்றிடம் அழுத்திப்பிடிக்க ஆரம்பித்ததும், காந்தியின் மனது ' எப்படியாவது உயிர் வாழ வேண்டும்' என்று தொடர்ந்து புலம்ப ஆரம்பித்தது.

சில விநாடிகளில் அவரின் மூச்சுத் திணறல் குறையத் தொடங்கி உடலின் வெப்ப‌ம் கூட ஆரம்பித்தது. அருகிலிருந்த 25 வயது வாலிபர் கண் திறக்காமலேயே இறந்து போனார். அவர் பக்கத்தில் படுத்திருந்த 45 வயது ஆண்மகன் இறந்து விட்டார் என்று உறுதி செய்யப்பட்டு, பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். அங்கிருந்து நடந்தே தன் படுக்கைக்கு வந்ததும் அனைவரது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால் மூன்றாம் நாள் இறந்து போனார்.

காந்தியின் உயிராசை மட்டும் நிலைத்தது. அதன் பின் தொடர்ந்து ஒரு வாரம் 5 எம்.எல் மருந்து அவரது உடலில் செலுத்தப்பட்டது.

இதற்குப்பிறகு தான் க்ளைமாக்ஸே இருக்கிறது. அவரின் உடல் நிலையில் பல சோதனைகள் நடத்திய டாக்டர் மாமன் சாண்டி, காந்தியின் எலும்பு மஜ்ஜையில் ஒரு ஆண்டி பயாடிக் மருந்தின் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தார். கடந்த சில வருடங்களில் அவர் என்னென்ன மருந்துகள் சாப்பிட்டார் என்பது குறித்து காந்தியிடம் விசாரித்தார். எப்போதாவது சளி பிடிக்கும்போதெல்லாம் தானே மருந்துக்கடையில் ஏதேனும் ஆண்டி பயாடிக் மருந்து வாங்கி சாப்பிட்டதாக காந்தி சொன்னார். கடைசியாக எப்போது அது போல ஆண்டி பயாடிக் மருந்து சாப்பிட்டீர்கள் என்று நினைவு படுத்திப்பாருங்கள் என்று டாக்டர் தொடர்ந்து வற்புறுத்தவே, நினைவுகளைக் குடைந்ததில் கடைசியாக காந்திக்கு, தான் பெங்களூர் ரயில் நிலையத்திற்கு ஓடுகிற அவசரத்தில், ஒரு மருந்துக் கடையில் தான் கேட்ட மருந்து இல்லாததால் ஏதோ ஒரு ஆண்டி பயாடிக் மருந்து கொடுங்கள் என்று வாங்கி சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளைக் காட்டி இதுவா, அதுவா என்று டாக்டர் விசாரிக்க, கடைசியில் காந்தி சாப்பிட்ட மருந்தை கண்டு பிடித்தார் டாக்டர் மாமன் சாண்டி. அந்த மருந்தையும் எலும்பு மஜ்ஜையில் ஏற்பட்டிருந்த வீழ்படிவையும் பரிசோதித்துப்பார்த்ததில் காலம் முடிந்து போன அந்த மருந்தைச் சாப்பிட்டதுதான் காந்தியின் அத்தனை துயரங்களுக்கும் காரணம் என்பதை டாக்டர் கண்டறிந்தார். தகுந்த சான்றுகள் இலாததால் அவரால் நுகர்வோர் கோர்ட்டில் இது குறித்து வழக்கு போட முடியவில்லை.

அவர் மருத்துவ மனையை விட்டு வெளியேறும்போது, மருத்துவர்கள் அவர் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என்றும் குழந்தைகள் பிற‌‌ப்பது அதைவிட நல்லதல்ல என்றும் எச்சரித்தார்கள்.குழந்தை பிறந்தால் அது மூளை வளர்ச்சியற்றுத் தான் பிறக்கும் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால் அதற்கு முன்பே திருமணம் செய்திருந்த காந்திக்கு, குறைகள் ஏதுமற்ற‌ அழகான குழந்தையே பிற‌ந்தது.

கோவையில் புத்தக வெளியீட்டு நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கும் இவர் 18 வருடங்கள் முன் சொன்னது.

" இப்போது என் உடலில் 1.55 லட்சம் பிளேட்லெட்டுக்கள் உள்ளன. என்னுள் இருக்கும் குதிரையின் சீரம் ஒரு குதிரையைப்போலவே என்னைக் களைப்பிலாமல் உழைக்க வைக்கிற‌து"!

மிகவும் ஆபத்தான நிலையில் உயிர் வாழ்ந்த இவர், அதையும் விட பல மடங்கு ஆபத்தான சிகிச்சை முறையை எடுத்துக்கொண்டது இவரது மன உறுதியையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய நடைமுறை உலகில் அவசரத்திற்குக்கூட மருத்துவரிடம் செல்லப் பொறுமையில்லாமல் ஒரு மருந்துக்கடை சென்று கேட்டு மருந்து வாங்கி சாப்பிடுபவர்கள் ஏராளம். இப்படி சாப்பிடுவது எந்த அள‌வு தீவிரமாக உயிரைப் பாதிக்கும் என்று இதைப்படித்த பிறகாவது சிலராவது உணர வேண்டுமென்பதுதான் இந்தப் பதிவின் நோக்கம். எல்லோருக்கும் டாக்டர் மாமன் சாண்டி போன்ற அருமையான மருத்துவர் கிடைத்து விட மாட்டார்.

நம் உயிர் நம் கையில்தான் பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது!


 

 

48 comments:

  1. மிக சுவாரஸ்யம். நன்றி

    ReplyDelete
  2. ”நம் உயிர் நம் கையில்” நல்ல பகிர்வு. பெரும்பாலானவர்கள் மருந்துக் கடைகளில் தாங்களாகவே மருந்து வாங்கிச் சாப்பிடுவது தவிர்க்க வேண்டிய ஒன்று என்பதை இந்த பகிர்வு நன்றாக விளக்கியிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. மிகவும் நல்லதொரு பயனுள்ள பதிவு தந்துள்ளீர்கள் மேடம்.

    இதைப்படிப்பதால், இனி சரியான மருத்துவரின் மருந்துச்சீட்டு இல்லாமல் தானே மருத்துக்கடையில் போய் மருந்து வாங்கிச் சாப்பிட நினைக்கும், யாரையாவது ஒரு சிலரையாவது அதுபோல செய்யாமல் தடுத்தால் போதும்.

    அவர்கள் உயிர்கள் காக்கப்படும். அந்த புண்ணியம் உங்களைத்தான் சேரும்.

    நல்லதொரு பதிவை நல்கிய தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  4. ஒரு திகில் கதை படிக்கிற மாதிரியே இருந்துது. நல்ல தைரியம்தான் அவருக்கு!!

    தானே மருந்து வாங்கி சாப்பிடுவதும், அதுவும் காலாவதி ஆகிய மருந்து சாப்பிடுவது எவ்வளவு ஆபத்தானது என்று அப்பவே சொல்லிருக்காங்க.

    ஆனாலும், மருத்துவர்கள் கூற்றுக்கு மாறாக, அவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்திருப்பதும் ஆச்சர்யம். இறைவன் செயல்!!

    ReplyDelete
  5. மன தைரியமும், வாழ வேண்டும் என்ற ஆசையும் தான் அவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
    பகிர்வுக்கு நன்றிமா.

    ReplyDelete
  6. உண்மையிலியே மயிர்க்கூச்செரிய வைத்த நிகழ்வு!

    ReplyDelete
  7. அப்போது நானும் படித்து பெரும் ஆச்சிரியம் அடைந்தேன் ..அதுக்கு காரணம் முழுக்க முழுக்க எப்படியும் உயிர் வாழனும் என்ற அவரின் தன்னம்பிக்கை மட்டுமே...!!!

    இதை படிக்கும் போது எனது பழைய நினைவுகளும் கூடவே வந்ததை மறக்க முடியவில்லை :-))

    ReplyDelete
  8. மிகவும் ஆச்சர்யமான தகவல் மனோ. நம் உயிர் நம் கையில்தான்.

    ReplyDelete
  9. ம்ம் படித்து முடித்ததும் தலை சுற்றியது...நல்லதொரு விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி அம்மா!!

    ReplyDelete
  10. Mind over matter ..... right? :-)

    ReplyDelete
  11. இதை பற்றி நான் முதன் முதலில் கேள்வி படுகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் மன வலிமை ரொம்ப முக்கியம்.

    ReplyDelete
  12. அவரின் தன்னம்பிக்கை, உயிர்வாழவேண்டும் என்ற ஆசை எல்லாமே அவரைக்காப்பாற்றி இருக்கு. ஆனாலும் சாதாரண ஜனங்கள் தம் இழ்டப்படி கடையில்போய் ஜுரமருந்தோ, சளி மருன்தோ வாங்காமல் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துகோள்ள வேண்டும்.

    ReplyDelete
  13. டாக்டரின் ஆலோசனை இல்லாமல் ஆண்டி பயாடிக் எடுத்துக் கொள்ளவே கூடாது

    ReplyDelete
  14. இதைப் படித்ததும் பிரமிப்பு தட்டியது. நம் உயிர் நம் கையில்..சாரி..சாரி.. நம் மன உறுதியில் இருக்கிறது..ஒரு நல்ல பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  15. எல்லோரது கவனத்துக்கும் சென்று சேர்க்கப் பட வேண்டிய அவசியமானதொரு பதிவு தோழி... வாழ்த்துக்களும் நன்றியும்! சேகரிப்பில் இருப்பவற்றை அவ்வப்போது புரட்டிப் பார்ப்பது எத்தனை முக்கியமாகிறது!

    சுய மருத்துவம் விளைவிக்கும் கொடூர தீங்கைப் படித்து திகைத்து நிற்கிறேன்.

    திருமணமான புதிதில், என்னவர் தன்கீழ் பணிபுரியும் கடைநிலை ஊழியரின் இப்படியான நோய்க்காக தேவைப்படும் போதெல்லாம் சென்று ரத்தம் தானம் செய்துவருவதைப் பார்த்திருக்கிறேன். அந்நோயாளியின் இறுதிவரை ரத்தம் தர மட்டுமே மனிதாபிமானம் அனுமதித்தது. உயிர் தர இறையில்லையே நாம் என மனம் நொந்தது, மனைவி மக்களை தவிக்கவிட்டு அந்நோயாளி இறந்த தருவாயில்....

    ReplyDelete
  16. >>இன்றைய நடைமுறை உலகில் அவசரத்திற்குக்கூட மருத்துவரிடம் செல்லப் பொறுமையில்லாமல் ஒரு மருந்துக்கடை சென்று கேட்டு மருந்து வாங்கி சாப்பிடுபவர்கள் ஏராளம்

    ம் ம் நல்ல விழிப்புணர்வு பதிவு.. இது வரை படிக்காத தகவல்

    ReplyDelete
  17. நல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  18. மருந்துக் கடைகளில் தானே மருந்து வாங்கி சாப்பிடுவது மிக அபாயம். நிறைய பேர் அடுத்தவர் என்ன மருந்து சாப்பிட்டார்கள் என்று கேட்டுக் கொண்டு தானும் அதன் பெயரைச் சொல்லி மருந்து வாங்குவதை பல முறைப் பார்த்திருக்கிறேன். நமது உயிரின் மேலேயே எவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம் என்பதற்கு இது உதாரணம்.
    எப்போதோ சாப்பிட்ட மாத்திரையின் வீழ்படிவை வைத்து காலாவதியான மருந்து என்று கண்டறிய முடியுமா? அந்த நோய்க் கொல்லி மருந்தின் விளைவு மட்டும் இவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்துமா? தெரியவில்லை!

    ReplyDelete
  19. மிகவும் நல்லதொரு பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  20. மெடிகல் ஷாப்பில் பார்த்திருக்கிறேன்.. ஏதோ வியாதி சொல்லி மருந்து வாங்கிப் போவதை.. இவ்வளவு பெரிய அபாயம் இருப்பது புரியாமல்.. பயனுள்ள பதிவு..

    ReplyDelete
  21. ஒரு திகில் கதைக்குரிய விறுவிறுப்புடன் ... அருமையான பதிவு.
    இன்றும் குதிரையின் சீரத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. புனேயில் இதற்கான ஒரு தொழிற்சாலையை பார்த்திருக்கிறேன்

    ReplyDelete
  22. கருத்துக்கு அன்பு நன்றி மோகன்குமார்!

    ReplyDelete
  23. பாராட்டிற்கும் கருத்துக்கும் இனிய நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  24. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
    என் பதிவின் நோக்கம், நீங்கள் சொல்லியுள்ள‌துபோல, ஒரு சிலரிடமாவது மாற்றம் ஏற்படுத்துவதுதான். நம் உயிர் நம் கையில் என்பதை எல்லோருமே நினைவில் வைத்துக்கொள்ள‌ வேண்டும்!

    ReplyDelete
  25. கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!
    நீங்கள் சொல்வது போல, மன தைரியம் அவருக்கு மிக அதிகம்தான் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள! அந்த அளவுக்கு அவரின் மனமும் உடலும் மிகவும் கஷ்டப்பட்டிருக்க வேன்டும்.
    ஒரு இதய மருத்துவர் காலாவதி ஆன மாத்திரையை தந்ததும் நான் அதன் பின்பக்கம் பார்த்து, அது காலாவதி ஆனதை உணர்ந்து, அவரிடமே அதைச் சொல்லித் திருப்பித் தந்த அனுபவமும் எனக்கே நேர்ந்திருக்கிறது!

    ReplyDelete
  26. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஆதி!!

    ReplyDelete
  27. உங்களின் பழைய நினைவலைகளை இந்தப்பதிவு கிளறி விட்டதறிந்தேன் சகோதரர் ஜெய்லானி!
    எல்லோருடைய வாழ்க்கையிலும் தன்னம்பிக்கை மட்டும்தான் மிகப்பெரிய மருந்தாக செயல்படுகிறாது.
    கருத்துரைக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  28. அன்பான கருத்துக்கு இனிய நன்றி வித்யா!

    ReplyDelete
  29. அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி மேனகா!

    ReplyDelete
  30. Correct chithra! And thanks a lot for the nice feedback!

    ReplyDelete
  31. அன்பான கருத்துரைக்கு இனிய‌ நன்றி சகோதரர் இளம்தூயவன்!

    ReplyDelete
  32. எந்த நோய்க்குமே, மருத்துவரிடம் செல்லாமல் தானே மருந்துக்கடைக்குச் சென்று கேட்டு மருந்து வாங்கி சாப்பிடுவது அல்லது யாராவது சொல்லி மருந்து வாங்கி சாப்பிடுவது போன்ற பழக்கங்களெல்லாம் ஒழிந்தால்தான் புதுசு புதுசாய் நோய்க‌ள் வருவதை கட்டுப்படுத்த முடியும். கருத்துக்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!

    ReplyDelete
  33. கருத்துக்கு நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!

    ReplyDelete
  34. ஆமாம், நம் உயிர் நம் ம‌ன உறுதியில்தான் இருக்கிறது சகோதரர் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி! கருத்துக்கு இனிய நன்றி!!

    ReplyDelete
  35. மிகவும் அத்தியாவசியமான ஒரு விழிப்புணர்வை,உங்கள் அற்புதமான பதிவு எடுத்துரைக்கிறது. சுய மருத்துவம் ஒரு சர்வ சாதரணமான நிகழ்வாய் ஆகிவிட்டது. இந்த விழிப்புணர்வை ஒரு சமூக இயக்கமாய் எடுத்து செல்ல வேண்டும் மேடம்.. நல்ல பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  36. மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் அன்பு நன்றி நிலாமகள்!

    சுய மருத்துவம் என்பது மூலிகைகள், நம் வீட்டில் கிடைக்கும் ஏராளமான மருந்துப்பொருள்களைக்கொன்டு செய்து கொள்ளும்போது அவற்றால் பாதிப்பிருப்பதில்லை. அதுவே சற்று அளவிற்கு அதிகமானால் சில சில சிறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அலோபதி மருந்துகள் அப்படியல்ல. மருத்துவரின் ஆலோசனைகளைபெற்று எடுக்கப்படும்போதே சிலருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்னும்போது, மருத்துவரின் ஆலோசனையில்லாது எடுக்கப்படும் மருந்துகளின் தாக்கம் எப்படியெல்லாம் இருக்கும்? படித்தவர்கள், படிப்பறிவில்லாதவர்கள் என்ற வேறுபாடே இதில் இருப்பதில்லை என்பது வருத்ததிற்குரியது.

    உங்களின் கணவர் மனித நேயத்துடன் செய்த சேவை போற்றுதலுக்குரியது. அவருக்கு என் உளங்கனிந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கவும்!!

    ReplyDelete
  37. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி செந்தில்குமார்!

    ReplyDelete
  38. romba arumaiyaana pathivu mano akka. Caesarean pothu enakku vantha kulirai appadiye paartha maathiri irukku. appappaaa... marakka mudiyaatha nimidangal avai. pakkaththil irukkiravargal iranthuvittaargal ena therinthum poraadiyathu viyakka vaikkirathu. so daring!!

    ReplyDelete
  39. அன்பான பதிவிற்கு இனிய நன்றி காஞ்சனா!

    ReplyDelete
  40. முதல் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் இனிய நன்றி ஸ்ரீராம்!

    நீங்கள் சொல்வது சரிதான்! நிறைய பேர், அடுத்தவர் என்ன சாப்பிடுகிறார்களோ அல்லது அடுத்தவர் என்ன சொல்கிறார்களோ, அதை எடுத்துக்கொள்வதும் நடக்கிறது.

    "எப்போதோ சாப்பிட்ட மாத்திரையின் வீழ்படிவை வைத்து காலாவதியான மருந்து என்று கண்டறிய முடியுமா? அந்த நோய்க் கொல்லி மருந்தின் விளைவு மட்டும் இவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்துமா? தெரியவில்லை! "

    20 வருடங்களுக்கு முன்பே, இதுபோல ம‌ருத்துவ‌ர்க‌ள் க‌ண்டறிந்து காலாவதியான மருந்தின் தாக்கம்தான் இந்த நோய் என்று சொல்லியிருக்கிறார்களே! அதைக்கண்டு பிடித்த மருத்துவரின் பெயரையும் எழுதியிருக்கிறேன். சொல்லப்போனால், இன்றைய தேதியில் இன்னும் பல முன்னேற்ற‌ங்களும் கண்டுபிடிப்புகளும் ஏற்பட்டிருக்க முடியும். அதனால்தான் நான் ஆரம்பத்திலேயே யாரேனும் ஒரு மருத்துவர் இந்தக்கட்டுரையைப்பற்றி அபிப்பிராயம் எழுதினால் நன்றாக இருக்குமென எழுதியிருந்தேன்.

    ReplyDelete
  41. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

    ReplyDelete
  42. அன்பான கருத்திற்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் ரிஷபன்!

    ReplyDelete
  43. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் சிவகுமாரன்!

    பூனேயில் குதிரையின் சீரம் தயாரிக்கும் தொழிற்சாலை இருப்பது நல்ல செய்தி!!

    ReplyDelete
  44. மனமார்ந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் மோகன் ஜி!

    ReplyDelete
  45. அன்பான கருத்துக்கும் பாராட்டிற்கும் உள‌மார்ந்த நன்றி அன்னு!!

    ReplyDelete
  46. இண்ட்லியில் என்னுடைய இப்பதிவில் தங்களை இணைத்த அன்புத்தோழமைகள் Kousalya, Sriramandhaguruji, Venkat Nagaraj, Aathi, Madhavi, Jeylani, Chithra, RDX, Balak, Ilamthuuyavan, Nanban, Jntube, Ashok, Makizh, Tharun, Swasam, Sudhir, Idnkarthik, Vino, maragatham, Sounder, Geetha, Nilamakal, Senthilkumar, Bsr, Shruvish, Annu, Rishaban
    அனைவருக்கும் என் இதயங்கனிந்த அன்பு நன்றி!

    ReplyDelete
  47. நல்ல பதிவு. ஒன்று மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். நம்ம ஊரில் மெடிக்கல் ஷாப்பிலேயே எக்ஸ்பயரி ஆனதை சில கடைகளில் விற்கிறார்கள்.
    அதே போல் தான் உணவு பொருட்களும் குழந்தைகளின் பால் பௌடரிலும் அவசியம் இதை கடைபிடிக்கனும். நம் உயில் நம் கையில் தான்.

    ReplyDelete
  48. இன்றைய வலைச்சரம் மூலம் இங்கே வந்தேன். இந்த பதிவை இன்றுதான் படித்தேன். அந்த நோயாளி பிழைத்துக் கொண்டாலும், அவருக்காக உயிர் இழந்த அந்த 12 வயது சிறுமி மற்றும் 25 வயது வாலிபர் மறைவு திக் என்றது.

    ReplyDelete