பகுதி-1
லாபங்கள்.. .. .. ..
ஐக்கிய அரபுக் குடியரசில் வாழ்க்கை முப்பந்தைந்தாவது வருடத்தில் சென்று கொண்டிருக்கிறது!! இத்தனை வருடங்களில் நிறைய பெற்றிருக்கிறோம் என்பதும் சிலவற்றை இழந்திருக்கிறோம் என்பதும் மன நிறைவு கிடைத்திருக்கிறது என்பதும் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.
இங்கு வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கும் எத்தனையோ இந்தியர்கள் டாய்லட் கழுவியும் கார்களைக் கழுவியும் பாலங்கள் கட்டும் சித்தாட்களாயும் இன்னும் எத்தனையோ கடை மட்ட வேலைகளைச் செய்து பிழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களாலும் அவர்கள் குழந்தைகளை ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைக்க முடிகிறது. மனைவிக்கும் குழந்தைக்கும் நகைகள் வாங்கி சேமிக்க முடிகிறது. இவைதானே எதிர்காலத்திற்கான உத்திரவாதங்கள்!! அவ்வளவு ஏன், எங்களிடம் பல வருடங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த - அவ்வளவாக படிப்பு இல்லாத ஒருவர் இங்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்த இத்தனை வருடங்களில் ஊரில் தனது நிலங்களையெல்லாம் அடமானங்களிலிருந்து மீட்டு மேற்கொண்டு நிலங்கள், நவீன மயமான வீடு, தன் மூன்று பெண்களுக்கும் பட்ட மேற்படிப்பு, பொறியியல் கல்லூரிப்படிப்பு என்ற வசதி வாய்ப்புகளுடன் வாழ்க்கையை நிலை நிறுத்தியிருக்கிறார். பெண்களுக்கு பொன்னும் பொருள்களும் தந்து திருமணம் செய்து வைக்க அவரால் முடிந்திருக்கிறது!. . இது ஒரு உதாரணம் மட்டும்தான்.
அப்புறம் இங்குள்ள அனைவருக்கும் ஒரு மிக முக்கியமான ஒற்றுமை இருக்கிறது. இந்தியாவில் எந்த இயற்கைச் சீரழிவு ஏற்பட்டாலும் மன உந்துதல் ஏற்பட்டு உடனே சமூகச் சேவை நிலையங்களைத் தேடிப்போய் உதவ வழிகள் இருக்கின்றதா என்று பார்ப்பவர்கள் மிகக் குறைவு. அதே மனிதர்கள் இங்கு வந்தபிறகு, அதே மாதிரி இந்தியாவில் மட்டுமல்ல, எந்த நாட்டில் இயற்கைச் சீரழிவு ஏற்பட்டாலும் வேறு வகையில் பாதிப்பு ஏற்பட்டாலும் மனித நேயத்தில் ஒன்றாகி பணமும் பொருள்களும் வசூலித்து உடனே இந்தியாவிற்கு அனுப்புவதில் யாரும் வித்தியாசம் பார்ப்பதில்லை. ஒரு சாதாரண கூலித் தொழிலாளிகூட தன் பங்காக ஏதேனும் கொண்டு வந்து கொடுக்கும்போது மனம் நெகிழ்ந்து போகும். இதுதான் தாய்நாட்டுப்பாசம்!
நஷ்டங்கள்?
இந்த சந்தோஷங்களுக்கும் நிறைவுகளுக்கும் பின்னால் இருக்கும் கண்ணீர்க்கதைகள், சோகங்கள் எத்தனை எத்தனை!!
வாழ்க்கையில் காலூன்றத்தான் இங்கு முதன் முதலாக அனைவரும் நுழைகிறார்கள். குடும்பக்கடமைகளுக்காக பலரும், பட்ட கடன்களை அடைப்பதற்காக சிலரும் இங்கு வேலை செய்ய வருகிறார்கள். எனக்குத் தெரிந்து ஒருவர் தன் கிட்னியை விற்றுக்கூட இங்கு வந்திருக்கிறார். குடும்பக்கடமைகள் தீர்ந்த பிறகும்கூட, கடன்கள் எல்லாம் அடைந்த பிறகும்கூட நிறைய பேர்களால் அவர்கள் விருப்பப்படி தாயகம் திரும்பிச்செல்ல முடிவதில்லை. சொந்த பந்தங்களின் ஆசைகளும் தேவைகளும் விரிந்து கொண்டே போவதால் அவர்களின் துன்பங்களும் முடிவில்லாது விரிந்து கொண்டே போகின்றன. இந்த புதை குழியிலிருந்து அவர்களால் மேலெழும்ப முடிவதில்லை. இதிலேயே அவர்கள் இளமையும் சந்தோஷங்களும் கரைந்து போய் விடுகின்றன.
எத்தனையோ பேர்கள் தனக்கு மீறின கடன்களை வாங்கி ஊரில் தன் சொந்தங்களுக்கு பொருள்களும் உடைகளுமாய் வாங்கிக் குவித்துச் செல்வார்கள். இன்னும் சில இடங்களில் மொய்ப்பணம் மாதிரி யார் ஊருக்குச் சென்றாலும் நண்பர்களெல்லாம் ஆளாளுக்கு 500 திரஹம் தரவேண்டும் என்ற வழக்கமே இருக்கிறது. இது வட்டியில்லாக் கடன்!
திரும்பி வந்ததும் ‘ யாருக்கும் மனசு முக்கியமில்லை. என் பணமும் நான் கொண்டு சென்ற பொருள்களும் மட்டும்தான் முக்கியமாகப்போய்விட்டன. இனி 3 வருடங்களுக்கு ஊர்ப்பக்கம் தலை வைத்து படுப்பதில்லை என்று ரத்தக் கண்ணீர் விட்டழுதவர்களைப் பார்த்திருக்கிறோம். திரும்பவும் ஆறு மாசத்திலேயே அவர்களே ‘ இதெல்லாம் பிரசவ வைராக்கியம் மாதிரிதான். அடுத்த வருடமே ஊருக்குப் போகணும்.” என்று புலம்புவதையும் பார்த்திருக்கிறோம். சோகங்களும் வலிகளும் தொடர்ந்து துரத்தினாலும் விழியோரங்களில் கண்ணீர் கசிந்தாலும் தூரத்துப்பச்சையாய் எப்போதும் தாய்மண் இங்குள்ளவர்களை இழுத்துக்கொண்டே இருக்கிறது! இதுதான் நம் மண்ணின் மகிமை!!
இங்குள்ள நடுத்தர குடும்பங்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் இல்லை. ஆனால் வேறு மாதிரியான பிரச்சினைகள்- அதிக செலவினங்கள், படிப்புப் பிரச்சினைகள்-இவற்றை சமாளிக்க முடியாமல் நிறைய பேர்கள் திணருகிறார்கள். நம் ஊரைப்போலவே இரண்டு பேரும் சம்பாதித்து வாழ்க்கைச் செலவினங்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது. அல்லது மனைவியையும் குழந்தைகளையும் ஊருக்கு அனுப்பி விட்டு தனிமையிலும் பிரிவிலும் இளைஞர்கள் பாரத்தை சுமக்க வேண்டியிருக்கிறது. இதிலும் ஆயிரம் பிரச்சினைகள். ஊரில் மாமியார்-மருமகள் பிரச்சினை. பெற்றோரின் பாசப்பிணைப்பு ஒரு பக்கம், மனைவியின் தனிக்குடித்தன வற்புறுத்தல் ஒரு பக்கம். பாலைவனத்தில் வேலை செய்யும் இளைஞன் ஊருக்குச்சென்று அனைவரையும் சமாதானப்படுத்த யாரிடமாவது கடன் வாங்கி அவசரம் அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
எங்களிடம் வேலை செய்யும் ஒருத்தரின் மனைவி, கடன்களை சமாளிக்க முடியவில்லையென்றும் சீக்கிரம் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகவும் விட்ட மிரட்டலில் அவர் அவசரமாகக் கிளம்பி ஊருக்குச் செல்கிறார். இப்படி உடனே தீர்த்து வைக்க முடியாத பல பிரச்சினைகளுடன் போராடுவதுதான் இங்கு பாலையில் வேலை செய்யும் பலரின் வாழ்க்கை!!
ஒரு சமயம் ஊரிலிருந்த வந்திருந்த தன் குழந்தையின் புகைப்படத்தை தனது சகோதரரிடம் காண்பிக்க அவர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்ற ஒரு நண்பர்- கவனக்குறைவினால் அபாயகரமான இடத்தில் மாட்டி-அவர் பின்னந்தலை முழுவதும் உயரத்திலிருந்து வேகமாக வந்த க்ரேனினால் அப்படியே சீவப்பட ரத்த வெள்ளத்தில் விழுந்தார். உயிர் பிழைப்பது மிகவும் அரிது என்ற நிலையில் அவரை இங்குள்ள சாதாரண மருத்துவ மனைகள் எதுவும் அட்மிட் செய்ய மறுத்த நிலையில் அவர் இந்த நாட்டின் தலைநகரில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சொன்னால் நம்ப முடியாது. அவருக்காக-அவர் பிழைப்பதற்காக இங்கு தெரிந்தவர்-தெரியாதவரெல்லாம் பிரார்த்தனை செய்தார்கள். கடைசியில் எல்லோருடைய பிரார்த்தனை வென்றது. அவர் நம்பவே முடியாதபடி உயிர் பிழைத்தார்.
இன்னொரு சமயம், என் கணவர் கண்ணெதிரே, சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருத்தர், திடீரென இதயத்தாக்குதல் ஏற்பட்டு, கையில் இட்லித்துண்டுகளுடன் அப்படியே இறந்து போனார். அவர் நண்பர்களிடம் தெரிவித்து, ஊரில் மனைவிக்குத் தெரிவித்து- மனசு முழுவதும் கனமாகிப்போனது. இப்படி பல சோகங்கள்!
இது தொடரும்!

அற்புதமான பதிவு. எல்லா வகை வாழ்க்கையிலும் லாபங்கள், நஷ்டங்கள் இருக்கிறது.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை வேறு
இன்று நம் நாட்டிலேயே நிறைய சம்பளமும், மதிப்பும் கிடைக்கிறது. எனவே அயல் நாடு வேலை என்பதை தவிர்க்கலாம்.
இப்போது உள்ள சூழ்நிலையில் வளைகுடா, சிங்கப்போர் நாடுகள் நேபாளி, பாகிஸ்தானியர்கள், பிளிபிநோஸ், இலங்கை, சூடான் மக்களுக்கு சரியான இடம்
I appreciate your patience & emotional control (35 years in Gulf country is gre8)
Great Article...
ReplyDelete35 வருட அனுபவத்தை மிக அழகாக சித்தரித்து இருக்கின்றீர்கள் அக்கா.//. சொந்த பந்தங்களின் ஆசைகளும் தேவைகளும் விரிந்து கொண்டே போவதால் அவர்களின் துன்பங்களும் முடிவில்லாது விரிந்து கொண்டே போகின்றன. இந்த புதை குழியிலிருந்து அவர்களால் மேலெழும்ப முடிவதில்லை// உண்மையை உங்கள் எழுத்துக்களில் படிக்கும் பொழுது மனம் கனத்துப்பொகின்றது.
ReplyDeleteUngal padhivu migavum nidarsanam i am also here in sharjah for past 3 years.
ReplyDeleteஅருமையான பதிவு!!
ReplyDeleteமனோ அக்கா மிக அழகாக அனுபவத்தை வடித்திருக்கிறீங்கள். தொடர்ந்து எழுதுங்கோ. படிக்க ஆவலாக இருக்கு.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்க வளமுடன்
மெழுகு வர்த்தி வாழ்க்கையை சொன்ன விதம் அருமை..தொடருங்கள்.....
ReplyDelete35 வருட அனுபவத்தை அனைவரோடு பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.நம் பெண்கள்
ReplyDeleteநிறைய விஷயங்கள் தெரியாமலே இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆண்கள் தான், காரணம் தான் படும் கஷ்டத்தை தன் தாய் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் கூறுவது கிடையாது. இது தான் பல பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது.
எத்தனை வேதனைகள்..... அதை பகிர்ந்து கொள்ள முடியாத உறவுகள்..... வாசிக்கும் போது மனம் வலிக்கிறது.... பாவம்!
ReplyDeleteexcellent post...it happens... in everyone's life living around the world, eagerly expecting the rest
ReplyDeleteவாழ்கையில் கடந்து வந்த பாதயை, ஒவ்வரு வெளிநாட்டு வாழ் மக்களும் சந்திக்கும் பிரச்சனைகளை மிக தெளிவாக சொல்லியிருக்கிர்றிகள்
ReplyDeleteELLAM MANANIRAIVU ILLATHATHUTHAN
ReplyDeleteKANKALIL NEER
NADESAN
dubai
நன்றாக சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteஅன்புள்ள தமிழ் உதயம் அவர்களுக்கு!
ReplyDeleteநீங்கள் சொல்வது போல எல்லா வகை வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் எல்லாம் இருக்கிறது என்றாலும் இந்த பாலைவன வாழ்க்கையில் சிரமங்கள் மிக அதிகமானவை. என் கணவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை:
“ ஊரில் வீட்டுக்கு அடங்காமல் ஊரைச் சுற்றும் பசங்களைக் கொண்டு வந்து இந்த punishment area-வில் போடணும். தன்னாலேயே திருந்துவார்கள்!”
அது போல மாறியவர்கள் இருக்கிறார்கள்! அளவுக்கு அதிகமான சூட்டிலும் அதை விடச் சில்லிடும் குளிரிலும் வாடிக்கொண்டு, வீட்டுக்குப் பணம் அனுப்புவதை மட்டும் தவமாக எடுத்துக்கொண்டு, சாப்பிடக்கூட பார்த்துப் பார்த்து செலவழித்துக் கொண்டு- வாழ்க்கை இப்படித்தான் இங்கே நிறைய பேருக்குப் போய்க்கொண்டிருக்கிறது!!
அன்புள்ள ராம்ஜி அவர்களுக்கு!
ReplyDeleteதங்களுடைய முதல் வருகைக்கும் அன்பான கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி!
ஊரிலேயே மதிப்பும் போதுமான வருமானமும் உடைய வேலைகள் கிடைத்தாலும் அளவிற்கு அதிகமான தேவைகள்தான் தினந்தோறும் பல நூற்றுக்கணக்கான மனிதர்களை இங்கு விமானங்கள் இறக்கி விட்டுக்கொண்டிருக்கின்றன! Recession காரணமாக இங்கு கடந்த 2 வருடங்களாக தனி மனித வருமானங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறிச் சென்றாலும், பொருள்களின் விலைகள் வானளவு உயர்ந்தாலும், ஆட்குறைப்பும் சம்பளக்குறைப்பும் தடாலடியாக எங்கும் நடந்து கொண்டிருந்தாலும் தினமும் வேலை தேடி வந்து சேருபவர்களின் எண்ணிக்கை என்னவோ குறைவதேயில்லை!!
கடந்த 35 வருடங்கள் வாழ்க்கை என்பது புகுந்த வீட்டுக்கு வந்தது போலத்தான். ஆனாலும், என்ன வசதிகள் இருந்தாலும் அவ்வப்போது பாட்டரி ரீச்சார்ஜ் செய்து கொள்ள தமிழக மண்ணுக்குப் போய் ஆசுவாசம் செய்து வருவதால்தான் இங்கே இன்னும் சுவாசிக்க முடிகிறது!
பாராட்டிற்கு அன்பு நன்றி இர்ஷாத்!!
ReplyDeleteஉண்மைதான் ஸாதிகா! நிறைய பேருக்கு “ எப்போது போய் ஊரிலேயே நிம்மதியாக உட்காருவோம்” என்ற தேடலே கானல் நீர் மாதிரி இங்கே!
ReplyDeleteஅன்புச் சகோதரர் குரு!
ReplyDeleteநீங்களும் ஷார்ஜாவில் இருக்கிறீர்களென்றறிய மகிழ்ச்சி!!
3 வருடங்களாகி விட்டதென்பதால் இங்கே வாழ்க்கை பழகிப்போயிருக்கும் என்று நினைக்கிறேன்.
பதிவிற்கும் கருத்துக்களுக்கும் அன்பு நன்றி!!
பாராட்டிற்கு அன்பு நன்றி மேனகா!!
ReplyDeleteஅன்பான பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி அதிரா!
ReplyDeleteநிச்சயம் இந்தப் பாலைவன வாழ்க்கையின் கஷ்டங்கள், அனுபவங்கள் பற்றி அடுத்த பதிவிலும் எழுதுவதாகத்தான் உள்ளேன்.
அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு!
ReplyDeleteதங்களின் பாராட்டிற்கு என் இதயப்பூர்வமான நன்றி!!
அன்புச் சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!
ReplyDeleteஊக்கத்திற்கும் கருத்துக்களுக்கும் அன்பார்ந்த நன்றி!!
அன்புச் சகோதரர் தூயவன் அவர்களுக்கு!
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் சரியே!
அன்பென்றாலும் அக்கறையென்றாலும் கஷ்டங்களென்றாலும் தன் நேசத்துக்குரியவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போதுதான் அவற்றிற்கு சரியான சிறப்பும் அந்தஸ்தும் கிடைக்கும்!
உண்மைதான் சித்ரா!
ReplyDeleteஎந்த நாட்டையும் விட இங்கே பிரமிப்புகளும் வசதிகளும் அதிகம்!
அதே மாதிரி, சாதாரண தொழிலாளிகளுக்கு இங்கே கஷ்டங்களும் கண்ணீரும் அதிகம்!!
Dear Krishnaveni!
ReplyDeleteThanks a lot for the encouraging support as well as the sincere appreciation!!
This comment has been removed by the author.
ReplyDeleteமனோ மேடம்...
ReplyDeleteமிக மிக அருமையான தொடக்கம்... முதல் பகுதியிலேயே லயித்து படிக்கும்படி செய்தது உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி....
இதை மையமாக வைத்து போன வருடம் நான் “மத்திய கிழக்கு நாடுகள் - அயல்நாட்டு மோகம்’ என்றொரு தொடர் எழுதினேன்... அது என் www.edakumadaku.blogspot.com வலைப்பதிவில் உள்ளது...
அதில், கூடியவரை நிறைய விஷயங்களை சுற்றி வளைத்து எழுதியது நினைவுக்கு வந்தது... உடனே ஞாபகத்திற்கு வந்த ஒரு வரி இதோ :
“இங்குள்ள பளபளக்கும் கட்டிடங்களுக்கு பின்னால், பல ஆயிரம் தொழிலாளிகளின் கண்ணீர், வியர்வை மற்றும் ரத்தம் உள்ளது”
தொடருங்கள்... அடுத்த பகுதியை படிக்க ஆவலாக வெயிட்டிங்....
அம்மா,
ReplyDeleteஉங்கள் கட்டுரையை பதிவிட்டதும் படித்தேன். நல்ல கட்டுரை. இதற்கான பின்னூட்டம் எழுத அலுவல்களின் அலுப்பால் மிடியவில்லை.
உங்கள் கருத்து உண்மைதான். பணம் இருக்கும் நம்மிடம்... மற்றதெல்லாம்...?
வருடம் ஒருமுறை செல்லும் போது விருந்தும் உவசரிப்பும் அதிகம்தான்... பின்னர் வெளிநாட்டு வாசிகள் வடிக்கும் கண்ணீர் அதைவிட அதிகமல்லவா?
அலுவலங்களில் பணி புரியும் நம் நிலை பரவாயில்லை. ஆசைப்பட்டால் குடும்பத்தை இங்கு கொண்டு வர முடியும். சாதாரண வேலையில் இருக்கும் நண்பர்கள் நிலை...?
20 வருடங்களுக்கு மேலாக இங்கு வேலை செய்யும் நண்பர் ஒருவரின் குடும்ப வாழ்க்கை வெறும் 20 மாதங்கள் மட்டுமே... இதுபோல் எத்தனை இதயங்கள் இருக்கின்றன இங்கே.
நேற்று நாங்கள் மதிக்கும் ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு யாருக்குமே வரக்கூடாது. இது குறித்து இங்கு எழுத முடியாது. விரைவில் மனதில் பகிர்கிறேன்.
அன்புள்ள நடேசன் அவர்களுக்கு!
ReplyDeleteமுதல் பதிவிற்கும் கருத்துக்கும் அன்பு நன்றி!
அன்புள்ள ரெக்ஸ் அவர்களுக்கு!
ReplyDeleteமுதல் வருகைக்கும் பாராட்டி எழுதியிருந்த கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!!
அன்புள்ள வடுவூர் குமார் அவர்களுக்கு!
ReplyDeleteபாராட்டுக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி!!
அன்புள்ள கோபி அவர்களுக்கு!
ReplyDeleteதங்களது மனந்திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி!
தாங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துக்களை தங்கள் வலைத்தளம் சென்று படித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது.
அன்புள்ள குமார் அவர்களுக்கு!
ReplyDeleteநீங்கள் எழுதியவை அனைத்தும் உண்மையே. வெறும் பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கையில் மன நிறைவு கிடைத்து விடுவதில்ல என்பது ஒரு பக்கமிருக்க, அந்தப் பணமும் பாதுகாக்கப்படாமல் அழிவதும் கூட இங்கே நிறைய பேரின் வாழ்க்கையில் சோகமான நிகழ்வாக இருக்கிறது!
கருத்துப்பதிவுக்கு என் அன்பு நன்றி!!
அருமையான பதிவு! தேடல் எல்லாருக்கும் எல்லா வயதிலும் இருக்கு.இந்த தேடலுக்காக எவ்வளவு இழக்க வேண்டும்.. இதனால் என்ன பயன்..இப்படி கேள்விகளே தேடலாய் முடிகிறது. வாழ வேண்டிய வயதில் வாடி... வாடிய வயதில் வாழ முடிவதில்லை. இழப்புகள்/தியாகங்கள் எல்லாம் ஒரு வரைமுறையோடு தான்... யாரும் நீ எனக்காக தியாகம் செய்தாய் நான் உனக்காக என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதில்லை.
ReplyDeleteஉண்மைதான் இலா! தியாகங்களுக்கு ஒரு வரைமுறை இருக்கிறது! தானம் என்பது உயர்ந்த விஷயம். ஆனால் தன்னையே அழித்துக்கொண்டு தானம் செய்வதென்பது அறிவீனம். படாத பாடு பட்டு இப்படியெல்லாம் வந்து சம்பாதிக்கும்போது இலையுதிர் காலத்துக்கென சிறிது சேமித்தும் வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் உறவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
ReplyDeleteதமிழிஷில் எனக்கு ஓட்டளித்த
ReplyDeleteSathika, Jeylani, PaniththuLi sankar, Thakaval nutpa poongka, vadivel, prasanna, kaarthi, Balasee, vino, kosu, Balak, KaarthikVK, Menaka, Boopathy, makizh, Ashok, ChithraX, Syed rahman, Yahoo ramji, Ask B, Ilamurugu-
அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி!!
இந்தப் பகிர்வை இன்று தான் வலைச்ச்ரம் மூலம் வாசிக்கிறேன்.மனதை தொட்டது பகிர்வு.அனைத்தும் மறுக்க முடியாத உண்மைகள்..
ReplyDeleteகுடும்பக்கடமைகள் தீர்ந்த பிறகும்கூட, கடன்கள் எல்லாம் அடைந்த பிறகும்கூட நிறைய பேர்களால் அவர்கள் விருப்பப்படி தாயகம் திரும்பிச்செல்ல முடிவதில்லை. சொந்த பந்தங்களின் ஆசைகளும் தேவைகளும் விரிந்து கொண்டே போவதால் அவர்களின் துன்பங்களும் முடிவில்லாது விரிந்து கொண்டே போகின்றன//
ReplyDeleteஆம், உண்மை. நீங்கள் சொல்லும் சாதக பாதகங்கள் எல்லாம் உண்மை.
யதார்தமான வரிகள்! மிகவும் ரசித்து வாசித்தேன் அம்மா! 3 வருடங்களான அனுபவிப்பதை வாசிப்பது போன்ற உணர்வு.... தொடருங்கள்
ReplyDelete